மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரம் செய விரும்பு! - 16 - தேக்கைவிடக் கடினமான ஆச்சா மரம்!

மரம் செய விரும்பு! - 16 - தேக்கைவிடக் கடினமான ஆச்சா மரம்!
பிரீமியம் ஸ்டோரி
News
மரம் செய விரும்பு! - 16 - தேக்கைவிடக் கடினமான ஆச்சா மரம்!

சுற்றுச்சூழல்‘வனதாசன்’ ரா.ராஜசேகரன் - தொகுப்பு: ஆர்.குமரேசன் - படங்கள்:தே.தீட்ஷித்

ருத்துவப் பயன்பாடு மற்றும் மரச்சாமான்கள் செய்யப் பயன்படக்கூடிய ஆயிரக்கணக்கான மரவகைகள் காடுகளில் உள்ளன. அவற்றில் பலவற்றை நாம் உபயோகப்படுத்துவதே இல்லை. அப்படி ஒரு வகை மரம்தான் ‘ஆச்சா’ மரம். இதன் ஆங்கிலப் பெயர் ‘ஹார்டுவிக்கியா பினாட்டா’ (Hardwickia Binata). இம்மரத்தை நம்மில் பலர் இன்னமும் அறியாமல் இருக்கக்கூடும். இது மிகவும் வலிமையான மரம். இந்த ஆச்சா மரத்தில்தான் நாதஸ்வரம் செய்யப்படுகிறது. இம்மரத்தைப்பற்றி ராமாயணத்தில்... வாலி வதையின்போது, வாலி தனது உயிரை ஏழு மறா மரங்களில் ஒழித்து வைத்திருந்ததாக எழுதப்பட்டிருக்கிறது. அந்த மறா மரம்தான் ஆச்சா.   

மரம் செய விரும்பு! - 16 - தேக்கைவிடக் கடினமான ஆச்சா மரம்!

இந்த மரத்தின் வைரப்பகுதி கறுஞ்சிவப்பு நிறத்திலிருக்கும். இது தேக்கு மரத்தை விடவும் கடினமானது. இதன் அடர்த்தி மிகவும் அதிகம். நீரில் போட்டால் பாறையைப்போல மூழ்கிவிடும். ஒரு கன மீட்டர் மரத்தின் எடை சுமார் 1,150 கிலோ அளவில் இருக்கும். இவ்வளவு வலிமையாக இருப்பதால், தச்சர்கள் இம்மரத்தை உளி கொண்டு செதுக்குவது கடினம். இப்படிக் கடினமாக இருப்பதால், இதை யாரும் பயன்பாட்டுக்குச் சிபாரிசு செய்வதில்லை. இந்த மரத்தை ‘வேலைக்கு ஆகாது’ என்று ஒதுக்கி விடுகிறார்கள்.

மரம் செய விரும்பு! - 16 - தேக்கைவிடக் கடினமான ஆச்சா மரம்!



‘எங்க நிலத்துல என்ன போட்டாலும் வரமாட்டேங்குது. மழையில்ல, தண்ணியில்ல, நிலம் பாறையா இருக்கு, மண் செம்புரையா இருக்கு’ என வருத்தப்படும் விவசாயிகளுக்கு, இயற்கை அளித்துள்ள அருள்கொடைதான் ஆச்சா மரம்.  செம்மண், கரிசல்மண்... என அனைத்து வகையான மண்ணிலும் வளரும் அற்புதமான மரம் இது. மேலும், இம்மரத்தின் இலைகள் கால்நடைகளுக்கு நல்ல தீவனமாக இருப்பதால், விவசாயிகளுக்கு உதவக்கூடிய மரமாகவும் இருக்கிறது. ஆனால், இது குறித்த விழிப்பு உணர்வு நம்மிடையே இல்லை என்பதுதான் வருத்தமான விஷயம்.

மரம் செய விரும்பு! - 16 - தேக்கைவிடக் கடினமான ஆச்சா மரம்!

கிராமங்களில் உள்ள புறம்போக்கு நிலங்கள், மேய்ச்சல் நிலங்கள் ஆகியவற்றில் ஆச்சா, சவுண்டல் (சூபாபுல்), அகத்தி போன்ற மரங்களை நெருக்கமாக நடவு செய்து... இவற்றின் இலைகளைக் கால்நடைகளுக்குத் தீவனமாகக் கொடுத்துப் பயனடையலாம். இதனால், கால்நடைகளுக்குச் சரிவிகித உணவு கிடைப்பதுடன், தீவனத்துக்கான செலவும் குறையும். புன்செய் நிலங்கள், கற்கள், பாறைகள் நிறைந்த நிலங்களில் வெள்வேல், குடைவேல் மரங்கள் நன்கு வளரும். இதனுடன் ஆச்சா மரங்களையும் நடவு செய்து வளர்க்கலாம். வெள்வேல், குடைவேல் மரங்களின் நெற்றுகள் மற்றும் ஆச்சா மரத்தின் இலைகளை உண்ணும் கால்நடைகளின் வளர்ச்சி நன்றாக இருப்பதுடன், பாலின் அளவும் தரமும் அதிகரிக்கும். பால் பண்ணை வைத்திருப்பவர்கள், தங்கள் நிலத்தின் வரப்போரங்களில் ஆச்சா மரங்களை வளர்க்கலாம்.  

மரம் செய விரும்பு! - 16 - தேக்கைவிடக் கடினமான ஆச்சா மரம்!

இது அற்புதமாக வளரும் மரம். வறண்ட சூழ்நிலையிலும் சிறப்பாக வளரும் தன்மையுடையது. இதன் இலை வளர்ச்சியைவிட,மரத்தின் வளர்ச்சி அபாரமாக இருக்கும். குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற ஓர் ஆய்வில் வறட்சியைத் தாங்கி வளரும் மரங்களான கருவேல், வாகை, வேம்பு, புங்கன் போன்றவற்றோடு ஆச்சா மரத்தையும் நடவுசெய்து ஆய்வு செய்தார்கள். சோதனை அடிப்படையில் இம்மரங்களைப் பத்து ஆண்டுகள் வரை வளர்த்துப் பார்த்ததில்... மற்ற வகை மரங்களைவிட ஆச்சா மரத்தின் வளர்ச்சி அதிகளவில் இருந்தது தெரியவந்திருக்கிறது. இதன்மூலம் வறட்சியைத் தாங்கி வளரும் மரங்களில் சிறந்த மரம் ஆச்சா என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.   

மரம் செய விரும்பு! - 16 - தேக்கைவிடக் கடினமான ஆச்சா மரம்!

இதன் மரப்பட்டையிலிருந்து உறிக்கப்படும் நாரை, பதப்படுத்தாமலேயே பயன்படுத்த முடியும். இம்மரக் கட்டைகளைப் பயன்படுத்திக் காகிதம் தயாரிக்க முடியும். இம்மரத்தை நேரடி விதைப்பு, நாற்று நடவு ஆகிய முறைகளில் வளர்க்கலாம் என்றாலும்... நேரடி விதைப்புதான் சிறந்தது. இதன் நெற்றுகளை நீண்ட நாள்கள் வைத்திருந்து நடவு செய்யக் கூடாது. உடனடியாக விதை நேர்த்திசெய்து விதைத்துவிட வேண்டும். வரவிருப்பது மழைக்காலம் என்பதால், அதிகளவில் ஆச்சா மரங்களை நடவு செய்தால், எதிர்காலத்தில் நல்ல பயன் கிடைக்கும்.

- வளரும் 

மழை மறைவுப் பிரதேசங்களுக்கு ஏற்ற மரம்

ச்சா மரம், நீர் தேங்காத அனைத்து இடங்களிலும் வளரும் தன்மையுடையது. மேலும் பாறை இடுக்குகள், இறுகிய மண் வகைகள் ஆகியவற்றிலும் வளரக்கூடியது. திருச்சி மாவட்டத்தில் எம்.ஆர்.பாளையம், பாடலூர் ஆகிய பகுதிகளில் வனத்துறை சார்பாக நடவு செய்யப்பட்ட ஆச்சா மரங்கள், தற்போது நன்றாக வளர்ந்து நிற்கின்றன. 300 மில்லிமீட்டர் வரை மழையளவு உள்ள பகுதிகளில் செழிப்பாகவும், 600 மில்லி மீட்டர் வரை மழையளவு உள்ள இடங்களில் மிகவும் செழிப்பாகவும் ஆச்சா மரம் வளரும். மழை மறைவுப் பிரதேசங்களுக்கும் ஆச்சா ஏற்ற மரம்.

இதன் கன்றை நடவு செய்ததிலிருந்து மூன்று ஆண்டுகள் வரை, வேர் வளர்ச்சி இருக்கும். வேர் வளரும் காலங்களில் செடியின் வளர்ச்சிக் குறைவாகத்தான் இருக்கும். நான்காம் ஆண்டிலிருந்து மரத்தின் வளர்ச்சி அபாரமாக இருக்கும். வறட்சிக் காலங்களில் இதன் இலைகள் உதிர்ந்திருந்தாலும், தண்டின் வளர்ச்சிச் சிறப்பாக இருக்கும்.

பத்து அடி இடைவெளியில் ஆச்சா கன்றுகளை நடவு செய்தால், சர்வ சாதாரணமாக 70 அடி முதல் 80 அடி உயரம் வரை வளரும். இது நீண்ட நாள்கள் வளரக்கூடிய மரம். இசைக் கருவிகள், ரயில் தண்டவாளங்களில் பதிக்கப்படும் கட்டைகள், சுரங்கங்களின் தூண்கள், உத்திரங்கள், கடைசல்கள், பொம்மைகள் ஆகியவற்றைத் தயாரிக்க ஆச்சா மரக்கட்டைகள் பயன்படுகின்றன.