
ஓவியம்: ஹரன்
பருவமழையின் உபயத்தால் வேலியோரத்தில் தளதளவென முளைத்துக் கிடந்த செடிகளிலிருந்து ஆடுகளுக்குத் தழை ஒடித்துக் கொண்டிருந்தார் ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். அருகிலிருந்த பாறையில் அமர்ந்திருந்தார் ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. வியாபாரத்தை முடித்துவிட்டு ‘காய்கறி’ கண்ணம்மா வந்து சேர, வெட்டிய தழைகளைக் கட்டாகக் கட்டி வைத்துவிட்டு, வியர்வையைத் துடைத்தபடியே அவர்களுக்கு அருகே வந்து அமர்ந்தார் ஏரோட்டி.

வழக்கம்போல ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டை ஆரம்பித்து வைத்தார் வாத்தியார். “கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர், ஆனைமலை, சூலூர், பெரிய நாயக்கன்பாளையம் பகுதிகள்ல அதிகளவுல சின்ன வெங்காயம் சாகுபடி நடக்குது. வழக்கமா இந்தப் பகுதியில சின்ன வெங்காயத்தை அறுவடை செஞ்சவுடனே பட்டறைப் போட்டுப் பாதுகாப்பா சேமிச்சு வெச்சுடுவாங்க. வெங்காயத்துக்கு நல்ல விலை கிடைக்கிறப்போ விற்பனை செய்வாங்க.
அந்தமாதிரி கிட்டத்தட்ட ஐந்நூறு விவசாயிகளுக்குமேல பட்டறைப் போட்டு சின்ன வெங்காயத்தைச் சேமிச்சு வெச்சிருந்திருக்காங்க. பதினஞ்சு நாளா தொடர்ந்து அந்தப்பகுதியில மழை பெய்ஞ்சதால வெங்காயப் பட்டறையெல்லாம் தண்ணில நனைஞ்சி, வெங்காயம் அழுகிப் போயிடுச்சாம். கிட்டத்தட்ட ஆயிரம் டன் அளவு வெங்காயம் வீணாகியிருக்கும்னு சொல்றாங்க. சின்ன வெங்காயத்துக்கு நல்ல விலை கிடைச்சுட்டு இருக்குற சூழ்நிலையில, இந்த மாதிரி அழுகி வீணாகிப் போயிடுச்சேன்னு ரொம்பக் கவலையா இருக்காங்க விவசாயிகள்” என்றார்.
“மழையால வீணாபோச்சுன்னா இழப்பீடு கிடைக்காதா” என்று கேட்டார் காய்கறி.
“அதாவது காப்பீடு பண்ணியிருந்து அறுவடை பண்ணாம வயல்லயே மழையில நனைஞ்சு பயிர் அழுகி வீணாகிப் போனாதான் இழப்பீடு கிடைக்கும். அறுவடை பண்ணிச் சொந்த நிலத்துல சேமிச்சு வெச்சுருக்குறப்போ பாதிப்பு ஏற்பட்டா இழப்பீடு கிடைக்காது. அதேநேரத்துல, வேளாண்மைத் துறைக்குச் சொந்தமான கிடங்குகள்ல விளைபொருள்களைச் சேமிச்சு வெச்சு, அங்கே இந்தமாதிரி பாதிப்பு ஏற்பட்டா வேளாண்மைத்துறையே இழப்பீடு கொடுக்கும்” என்று விளக்கிச் சொன்ன ஏரோட்டி, அடுத்த செய்தியை ஆரம்பித்தார்.
“கோயம்புத்தூர் பகுதியில் மழை அதிகமாகப் பெய்றதால, நொய்யலாற்றுல தண்ணி அதிகமா ஓடுது. ஆத்துல தண்ணி வர்றதைப் பயன்படுத்திக்கிட்டு திரும்பவும் சாயத் தொழிற்சாலைக் கழிவுகளைக் கலந்துவிட ஆரம்பிச்சுட்டாங்க. அதில்லாம சாக்கடைக்கழிவு, இறைச்சிக் கழிவு எல்லாத்தையும் ஆத்துல கலந்து விடுறாங்க. திருப்பூர் நடராஜா தியேட்டர் பாலத்துக்குப் பக்கத்துல, வெள்ளை நிறத்துல நுரையோட தண்ணி ஓடுனதைப் பார்த்து, ஊர் மக்கள் அதிர்ச்சி ஆகியிருக்காங்க. உடனே மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்குத் தகவல் கொடுத்திருக்காங்க.
அந்த வாரிய அலுவலர்கள் வந்து தண்ணியைச் சோதனை பண்ணிக் கார அமிலத்தன்மை அதிகமா இருக்கிறதைக் கண்டுபிடிச்சுக் கழிவுகள் கலக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தி இருக்காங்க. கோயம்புத்தூர், திருப்பூர் மாநகராட்சி அமைப்புகள், ஆத்துல கழிவு நீரைக் கலந்து விடுறதாலதான் ஆத்துத் தண்ணில நுரை வருதுனும் சொல்லிருக்காங்க” என்றார்.
அதைத் தலையாட்டி ஆமோதித்த வாத்தியார், “இதுக்கெல்லாம் கேரளாதான் சரி. ஆத்துல கைப்பிடி மண்ணை எடுக்கவிட மாட்டாங்க. நீர்நிலைகளை ஆக்கிரமிக்கவிட மாட்டாங்க. போன வாரம்கூட நீர்நிலைகளை அசுத்தம் செய்றவங்களைத் தண்டிக்கிற வகையில, கேரள சட்டசபையில ஒரு சட்டத்திருத்தம் கொண்டுவந்திருக்காங்க. மாநிலத்துல யாராவது நீர்நிலைகளை அசுத்தம் செஞ்சா, அவங்களுக்கு மூணு வருஷம் சிறைத்தண்டனை அல்லது ரெண்டு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும்னு கொண்டு வந்த சட்டத்திருத்தத்துக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கு” என்றார்.
கூடையிலிருந்து ஆளுக்கு ஒரு கொய்யப்பழத்தை எடுத்துக் கொடுத்த காய்கறி, “கொய்யாப் பழ சீசன் ஆரம்பிச்சு ஒரு மாசம் ஆகிடுச்சு. இப்போதான் சூடுபிடிக்க ஆரம்பிச்சுருக்கு. இன்னும் ரெண்டு மாசத்துக்குச் சீசன் இருக்கும். இப்போ ஒரு கிலோ கொய்யா எண்பது ரூபாய் வரை விற்பனையாகுது” என்றார்.
கொய்யாப்பழம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே தோட்டத்துக் குள்ளிருந்து நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டதால், “என்னானு பார்த்துட்டு வாரேன்” என்று ஏரோட்டி எழுந்து ஓட, அன்றைய மாநாடு அத்துடன் முடிவுக்கு வந்தது.
இயந்திரங்கள் வாங்க மானியம்!
வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டத்தின்கீழ், விவசாயிகளுக்கு டிராக்டர், பவர் டில்லர், களை எடுக்கும் இயந்திரம், கலப்பைகள், விதைக்கும் கருவி போன்ற இயந்திரங்களை, வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் மானியத்தில் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இத்திட்டத்தில்... சிறு குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், பழங்குடி மற்றும் ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்த விவசாயிகளுக்கு 50 சதவிகித மானியம் உண்டு. இப்பட்டியலில் இல்லாத மற்ற விவசாயிகளுக்கு 40 சதவிகிதம் வரை மானியம் கிடைக்கும். டிராக்டர் வாங்க அதிகபட்சம் 1,25,000 ரூபாய் மானியம் கிடைக்கிறது. இதுபோன்ற இயந்திரங்கள் வாங்க விரும்பும் விவசாயிகள், வேளாண் பொறியியல் துறை அங்கீகாரம் பெற்ற உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து மானிய உதவியுடன் வாங்கிக்கொள்ள முடியும்.
மேலும் டிராக்டர், பவர் டில்லர், களை எடுக்கும் இயந்திரம், விதைக்கும் கருவி விசைத்தெளிப்பான்கள், டிராக்டர் அல்லது பவர் டில்லர் மூலம் இயக்கப்படும் சுழல் கலப்பை மற்றும் அனைத்துவித கலப்பைகள், லேசர் மட்டக்கருவி, துளையிடும் கருவி, கழிவுகளைத் தூளாக்கும் கருவி, வைக்கோலைக் கட்டுகளாக்கும் கருவி போன்ற அனைத்து வகை வேளாண் கருவிகளையும் சலுகை விலையில் வாடகைக்கு வழங்குகிறது. இதற்காக அனைத்து ஒன்றியங்களிலும் வேளாண்மை இயந்திரங்கள் வாடகை மையம் அமைக்கப்பட்டு வருகிறது. விவசாயக் குழுவினர் மற்றும் தொழில் முனைவோர் இந்த வாடகை மையங்களை அமைக்கலாம். இந்த மையத்துக்கு இயந்திரங்கள், கருவிகள் வாங்க 10 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. இதுகுறித்த தகவல்கள் தேவைப்படுவோர், அந்தந்த மாவட்ட வேளாண் பொறியியல் மையங்களை அணுகவும்.