மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு: மரம் வளர்த்தால் மதிப்பெண்... அமைச்சர் தகவல்!

மரத்தடி மாநாடு:  மரம் வளர்த்தால் மதிப்பெண்...  அமைச்சர் தகவல்!
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு: மரம் வளர்த்தால் மதிப்பெண்... அமைச்சர் தகவல்!

ஓவியம்: ஹரன்

ரப்போரத்தில் அமர்ந்து நாளிதழ் படித்துக்கொண்டிருந்தார் ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. வயலில் வேலை செய்து கொண்டிருந்தார் ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். வியாபாரத்தை முடித்துவிட்டு வந்த ‘காய்கறி’ கண்ணம்மா “இன்னிக்கு அடிக்கிற வெயிலைப் பார்த்தா, மழை ஊத்தப்போகுதுனு நினைக்கிறேன். வாங்கய்யா அதுக்குமுன்னே  கொட்டகையில் போய் உக்காந்துக்கலாம்” என்று வாத்தியாரைப் பார்த்து அழைத்தார்.

மூவரும் கொட்டகையை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். “மழை பெஞ்சும் புண்ணியம் இல்லையே கண்ணம்மா” என்ற வாத்தியார், ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டை ஆரம்பித்துவைத்தார்.

“போன வருஷம் தென்மேற்குப் பருவமழையும் வடகிழக்குப் பருவமழையும் நமக்குச் சரியா கிடைக்கல. அதனாலதான் கடும் வறட்சி ஏற்பட்டுச்சு. ஆனா, இந்த வருஷம் ஓரளவுக்கு நல்லாவே மழை பெஞ்சுட்டிருக்கு. சராசரியா 32 சென்டிமீட்டர் அளவுக்கு மழை கிடைச்சிருக்கு. போன 26 வருஷத்துல கிடைச்ச சராசரி மழையளவைவிட இது அதிகமான அளவு. ஆனா, கிடைச்ச மழையில பெரும்பாலான தண்ணீர் வீணாத்தான் போயிருக்கு. நிலத்தடி நீர்மட்டம் உயரவே இல்லையாம். அணைகள், ஏரிகள்ல நீர்மட்டம் அதிகரிச்சிருக்கு. ஆனா, நிலத்தடி நீர்மட்டம் உயராததால பெரும்பாலான ஆழ்துளைக் கிணறுகள், திறந்தவெளிக் கிணறுகள் எல்லாம் இன்னமும் தூர்ந்து போய்த்தான் கிடக்குதாம்.

மரத்தடி மாநாடு:  மரம் வளர்த்தால் மதிப்பெண்...  அமைச்சர் தகவல்!

பொதுப்பணித்துறைக்குக்கீழ இயங்குற நீர்வள விவரக்குறிப்பு மையம் மூலமா... தமிழ்நாட்டுல இருக்குற 3,280 கிணறுகள், 1,559 போர்வெல்கள்னு கணக்கெடுத்து, அதுல நிலத்தடி நீர்மட்ட அளவை ஆய்வு செஞ்சுருக்காங்க. அந்த ஆய்வு முடிவின்படித் தஞ்சாவூர் மாவட்டத்துல மட்டும்தான் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிச்சிருக்குதாம். மத்த மாவட்டங்கள்ல போன வருஷம் இருந்ததைவிட இந்த வருஷம் நீர்மட்டம் குறைஞ்சுதான் இருக்காம். அதாவது, ஒரு மீட்டர் அளவிலிருந்து 3 மீட்டர் அளவு வரை நீர்மட்டம் குறைஞ்சுருக்குதாம். மூணு வருஷமாவே கடுமையான வறட்சி நிலவுனதாலதான், இந்த வருஷம் சராசரியைவிட அதிக மழை கிடைச்சும் நீர்மட்டம் உயரலையாம். அடுத்து வடகிழக்குப் பருவ மழை அதிகளவுல கிடைச்சா மட்டும்தான் நீர்மட்டம் உயர வாய்ப்பிருக்குதாம்” என்றார்.

“ஆமாய்யா, அதெப்படி உயரும்” என்று கேட்ட ஏரோட்டி, “மழைத்தண்ணி பூமிக்குள்ள போறதுக்கு எந்த வழியும் ஏற்படுத்தித் தர்றதில்லை. சிமென்ட் கட்டடம், தார்சாலைனு போட்டுப் பூமியோட மேற்பகுதியை அடைச்சாச்சு. இருக்குற மண்லயும் பிளாஸ்டிக் குப்பைகள் அடைச்சுக் கிடக்கு. அப்புறம் எப்படிப் பூமிக்குள்ள தண்ணி போகும். மழைநீர்ச் சேகரிப்புங்குறது கிராமத்துல தோட்டங்கள்ல மட்டும்தான் செய்யணும்னு நகரவாசிகள் நினைக்கிறாங்க. அப்படிக் கிடையாது. ஒவ்வொருத்தரும் தன்னோட வீட்டுல கிடைக்கிற மழைத்தண்ணியைப் பூமிக்குள்ள அனுப்ப முயற்சி செஞ்சாத்தான் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த முடியும்” என்ற ஏரோட்டி தொடர்ந்தார்...

“நம்ம தோட்டத்துக்குள்ள விழுற தண்ணி, தோட்டத்தைவிட்டு வெளியே போகக் கூடாதுனு நம்மாழ்வார் ஐயா அடிக்கடி சொல்வார். அதுமாதிரியான ஏற்பாடுகளை ஒழுங்கா நாம செயல்படுத்தல. மோட்டாரைப் போட்டுவிட்டுட்டுக் காலாட்டிக்கிட்டு உக்காந்திருந்த நாமெல்லாம், இப்போதான் தண்ணியில்லாத கொடுமையை அனுபவிச்சுட்டுருக்கோம். இனியும் நாம மழைநீர்ச் சேகரிப்புக்கு ஏற்பாடு பண்ணலைனா அவ்வளவுதான்” என்றார் ஆதங்கத்துடன். சற்றுநேரம் அமைதிநிலவ... கூடையிலிருந்து ஆளுக்கு இரண்டு மலை வாழைப்பழங்களை எடுத்துக்கொடுத்தார் காய்கறி.

அதைச் சாப்பிட்டுக்கொண்டே ஒரு செய்தியைச்சொல்ல ஆரம்பித்தார் வாத்தியார். “பட்டு வளர்ச்சித்துறையோட மண்டல அலுவலகம், சேலம் மாவட்டத்துல இயங்கிக்கிட்டிருக்கு. கோயம்புத்தூர், தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரினு 19 மாவட்டங்கள்ல மட்டும் விரிவாக்க உதவி இயக்குநர் அலுவலகங்கள் இயங்கிட்டிருக்கு. மத்த மாவட்டங்கள்ல பட்டுத் தொழில்நுட்ப மையங்கள் மட்டும்தான் இருக்கும். இதுமாதிரி தமிழ்நாடு முழுக்க மொத்தம் 105 பட்டுத் தொழில்நுட்ப மையங்கள் இருக்கு. இந்த மையங்கள்ல வேலை செய்ற இளநிலை ஆய்வாளர்கள்தான் கிராமங்கள்ல கள ஆய்வு செய்வாங்க. விவசாயிகள்கிட்ட துறை சார்பான திட்டங்களை எடுத்துச்சொல்லிப் பட்டுப்புழு வளர்ப்புக்கு மாத்துவாங்க.

மல்பெரியைச் சாகுபடி செய்ற விவசாயிகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்றதும் இவங்கதான். ஆனா, தமிழ்நாடு முழுக்க மொத்தம் 339 இளநிலை ஆய்வாளர்கள் பணியிடம் காலியா இருக்குதாம். அதை நிரப்புறதுக்கு அரசாங்கம் முயற்சியே எடுக்கலையாம். அதனால, தமிழ்நாட்டுல மத்திய, மாநில அரசின் மானியத்திட்டங்களை அறிமுகப்படுத்துற வேலைகள் மந்தமா இருக்கு. இதோடு தங்களுக்குத் தேவையான தகவல்கள் கிடைக்கிறதில்லைனு விவசாயிகள் மத்தியில் புகார் கிளம்பியிருக்கு” என்றார்.

அதைத் தலையாட்டி ஆமோதித்த ஏரோட்டி, “நம்ம மாநிலத்துலதான் இவ்வளவு மந்தமா இருக்குறாங்க. ஆனா, கர்நாடகா மாநிலத்துல பட்டுப்புழு வளர்ப்புல பின்னி எடுக்குறாங்க. இந்தியாவோட மொத்த  பட்டு உற்பத்தில 60 சதவிகித அளவு கர்நாடகா மாநிலத்துலதான் உற்பத்தியாகுது. கர்நாடகாவுல தண்ணி வசதி குறைவா இருக்குற இடங்கள்லகூட விவசாயிகள் பெரியளவுல பட்டுப்புழு வளர்ப்புல ஈடுபடுறாங்களாம். பல இடங்கள்ல கழிவுநீரைப் பயன்படுத்திக்கூட வெற்றிகரமா மல்பெரிச் சாகுபடி செய்றாங்களாம். அந்தளவுக்கு அந்த மாநில அரசாங்கம் விவசாயிகளுக்குத் தேவையான உதவிகளைச் செஞ்சு கொடுத்துட்டிருக்கு. சமீபத்துல மதுரைல நடந்த ஒரு விழாவுல மத்தியப் பட்டு வாரிய ஆராய்ச்சி மைய விஞ்ஞானி ஹனுமந்த் ராயப்பாதான் இந்தத் தகவலைச் சொல்லிருக்கார்” என்றார்.

அடுத்த செய்தியை ஆரம்பித்த வாத்தியார், “இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பு சார்பா சென்னையில் தமிழகப் பள்ளி முதல்வர்கள் மாநாடு நடந்துச்சு. அதுல கலந்துகிட்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ‘பள்ளி மாணவர்களுக்கு இயற்கை ஆர்வத்தையும் சமூகப் பொறுப்பையும் உருவாக்கறதுக்காக அரசுப் பள்ளிகள்ல மரம் வளர்க்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தப்போறோம். மரம் வளர்க்குற மாணவர்களுக்குப் பள்ளி இறுதித் தேர்வுல ஐந்து மதிப்பெண்கள் கொடுக்கலாமானு ஆலோசனை செஞ்சுட்டிருக்கோம். சீக்கிரம் இந்தத்திட்டத்தை அறிமுகப்படுத்துவோம்’னு சொல்லிருக்கார்” என்றார்.

“நல்ல திட்டமா இருக்கே. தமிழ்நாட்டுல கிட்டத்தட்ட ஒரு கோடி மாணவர்கள் இருப்பாங்களே. ஒரு மாணவருக்கு, வருஷத்துக்கு ஒரு மரம்னு வெச்சுக்கிட்டாலே ஒரு கோடி மரத்தை வளக்கலாம். இதுமூலமா சீக்கிரமே தமிழ்நாடு பசுமையாகிடும். ஆனா, அதுக்கு இடவசதி, தண்ணீர் வசதியெல்லாம் வேணுமே. அதை எப்படிச் சமாளிக்கப் போறாங்கனு தெரியலை. மத்த திட்டங்கள் மாதிரி இதையும் கிடப்புல போடாம உருப்படியான வழிவகைகளைச் செஞ்சாங்கன்னா நல்லா இருக்கும்” என்று ஏரோட்டி சொல்லிக்கொண்டிருக்கும்போதே, ‘சடசட’வெனத் தூறல் விழ ஆரம்பித்தது.

“ஆடு, மாடுகளைக் கொட்டில்ல அடைச்சுட்டு வந்திடுறேன்’’ என்று சொல்லிக்கொண்டே ஏரோட்டி எழுந்து ஓட, மாநாடும் முடிவுக்கு வந்தது.