மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை: “மண்வீடு கட்டினால் நீண்ட காலம் தாங்குமா?”

நீங்கள் கேட்டவை: “மண்வீடு கட்டினால் நீண்ட காலம் தாங்குமா?”
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்கள் கேட்டவை: “மண்வீடு கட்டினால் நீண்ட காலம் தாங்குமா?”

புறாபாண்டி

‘‘மரபுசார் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மண்வீடு கட்ட விரும்புகிறோம். ஆனால், மண்வீடு தாங்காது, நிலைத்து நிற்காது என்று நண்பர்கள் பயமுறுத்துகிறார்கள். இது சம்பந்தமாக வழிகாட்டுங்கள்?’’

எம்.பாலகுமாரன், சென்னை.  

நீங்கள் கேட்டவை: “மண்வீடு கட்டினால் நீண்ட காலம் தாங்குமா?”

மரபுசார் வீடுகள் கட்டுமான மையத்தைச் சேர்ந்த பொறியாளர் க.இளஞ்சேரன் பதில் சொல்கிறார்.

‘‘என்னுடைய அனுபவத்தில் சிமென்ட் மூலம் கட்டப்படும் வீட்டைக் காட்டிலும் மண்வீடு உறுதியாக இருப்பதைப் பார்த்துள்ளேன். இன்றும்கூடத் தமிழகக் கிராமங்களில் 200 ஆண்டுகளாக இருக்கும் மண்வீடுகளைப் பார்க்க முடியும்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகிலுள்ள தொரப்பள்ளியில் மூதறிஞர் ராஜாஜி பிறந்த இல்லம் சுமார் 140 ஆண்டுகளாக இருந்து வருகிறது. அந்த வீடு இன்றும் வலுவுடன் உள்ளது. மண்சுவர்கள் கான்கிரீட் கட்டடத்தைவிட வலிமையானவை. சரியான மண்ணைத் தேர்வுசெய்து வீடு கட்ட வேண்டும். தேர்வு செய்த மண்ணைச் சரியாகப் பதப்படுத்தி இறுக்க வேண்டும். இதனால், மண்வீடு நீடித்திருக்கும். மரபுவழியில் மண்வீடு கட்டுவதற்குப் பல முறைகள் உள்ளன. மண்ணின் தன்மைக்கேற்ப கடுக்காய், வெல்லம், நெல் உமி, கற்றாழை, வைக்கோல் போன்ற மண்ணை இறுக்கும் தன்மையுள்ள பொருள்களைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து, கால்நடைகளைக்கொண்டு மிதித்தால் இறுகிய மண் கிடைக்கும். அந்த மண்ணைக்கொண்டு வீடு கட்ட வேண்டும்.   

நீங்கள் கேட்டவை: “மண்வீடு கட்டினால் நீண்ட காலம் தாங்குமா?”

மண்ணை இறுக்கமாக்கப் பயன்படும் பொருள்களும் முறைகளும் இடத்துக்கேற்ப மாறுபடும். இறுகிய மண்சுவர் பாறை போன்று காணப்படும். ஆண்டுகள் செல்லச் செல்ல வெயில், குளிர் ஆகியவற்றின் தாக்கத்தினால் மண்சுவர் முழுமையாகப் பாறையின் தன்மையை அடையும். இந்த இறுகிய தன்மையால்தான் பழைய மண்வீடுகள், இன்று ‘ஜே.சி.பி இயந்திரம்’ கொண்டு இடிக்கப்படுகின்றன.

இறுக்கமான தன்மையிருந்தாலும் மண் சுவர்கள் காற்றை உள்வாங்கி வெளியே அனுப்பும் தன்மை கொண்டவை. இதனால்தான் கோடைக்காலங்களில் வெப்பம் வீட்டுக்குள் வராமல் தடுக்கப்படுகிறது. அதேபோல, குளிர்காலங்களில் அதிகக் குளிரும் வீட்டுக்குள் தெரியாது. ஆனால், கான்கிரீட் கட்டடங்களுக்கு மண்வீடுகள் போன்ற தன்மை கிடையாது. இதனால்தான் கான்கிரீட் வீடுகளில் ஏ.சி, மின்விசிறிகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. அதற்கான செலவுகளும் அதிகரிக்கின்றன.

மண்வீடு கட்டும்போது முறையாகச் சாய்வுக் கூரையும், மண்சுவரைச் சுற்றி சாய்வுதளமும், திண்ணையும் அமைத்து மண் வீடுகளின் வாழ்நாளை நீட்டிக்கலாம். வீடுகட்டத் தண்ணீர் தேங்காத இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வீட்டிலிருந்து சுமார் பத்து அடி தொலைவில் மழைநீர் ஓடும்படி வழி அமைக்கவேண்டும். இவ்வாறு செய்வதால், கீழ்ச்சுவரில் ஈரம் தாக்காமல் இருக்கும். இப்படித்தான் நம் முன்னோர்கள் மரபுசார் பொருள்களைக்கொண்டு பல தலைமுறைகள் வாழ்ந்துள்ளனர்.   

நீங்கள் கேட்டவை: “மண்வீடு கட்டினால் நீண்ட காலம் தாங்குமா?”

அந்தப் பகுதியில் கிடைக்கும் பொருள்களைப் பிரதானமாகக் கொண்டுதான் மண் வீடுகள் அமைக்க வேண்டும் என்பதை மறந்துவிட வேண்டாம். மண்ணை அடிப்படையாகக்கொண்டு மரபுசார் வீடுகள் கட்ட 100 சதுர அடிக்கு உத்தேசமாக ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலவாகும். தமிழ்நாட்டைவிட கேரளாவில் இந்த மரபுசார் வீடுகள் கட்டுவது அதிகரித்து வருகிறது என்பது கவனிக்கதக்கது. இன்றைய காலக்கட்டத்தில் கிராமம், நகரம் என்ற பாகுபாடு இல்லாமல், அனைத்து இடங்களிலும் மண் வீடுகள் கட்டி வாழலாம். மண்வீட்டில் வாழத் தொடங்கும்போது, ஏற்கெனவே உள்ள உடல்நலக் குறைபாடுகள் நீங்குவதை உணர முடியும். மனிதன் வாழ்வதற்கு மண் வீடுகள்தான் ஏற்றவை. நம் முன்னோர்கள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து சென்றதற்கு உணவு மட்டுமல்ல, அவர்கள் வாழ்ந்த மண் வீடும் முக்கியப் பங்கு வகித்தது.’’ 

நீங்கள் கேட்டவை: “மண்வீடு கட்டினால் நீண்ட காலம் தாங்குமா?”



தொடர்புக்கு, செல்போன்: 96551 49888.


‘‘பால் பண்ணை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். அடிப்படையான தகவல்களைச் சொல்லவும்?’’

கே.மகேஸ்வரி, வாழப்பாடி.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி பதில் சொல்கிறார்.

‘‘பால்பண்ணையைத் தொடங்கும் முன்பே ஆலோசனைகளைக் கேட்பதற்குப் பாராட்டுகள். பால்பண்ணையை வெற்றிகரமாக நடத்திச் செல்ல, சில அடிப்படையான விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.

ஐந்து மாடுகளுக்கு ஒரு ஏக்கர் என்ற கணக்கில் தீவனப் பயிர்களைச் சாகுபடி செய்ய வேண்டும். 100 மாடுகளுக்கு 20 ஏக்கர் அளவுக்கு நிலம் தேவைப்படும். தீவனச் சாகுபடி நிலமும் பால் பண்ணையும் அருகருகே இருக்க வேண்டியது அவசியம்.
 
நிலத்தில் அரைப்பங்கு கம்பி நேப்பியர் ஒட்டுப்புல்லையும், கால் பங்கு கோ.எப்.எஸ்-29 தீவனச் சோளத்தையும், கால் பங்கு வேலி மசால் தீவனத்தையும் சாகுபடி செய்ய வேண்டும். இதுபோக, வரப்புகளில் சவுண்டல், கிளரிசீடியா... போன்ற மரவகை தீவனங்களும் இருக்க வேண்டும்.

நீங்கள் கேட்டவை: “மண்வீடு கட்டினால் நீண்ட காலம் தாங்குமா?”

மாடுகளுக்கான கொட்டகை, கிழக்கு மேற்காக அமைக்கப்பட வேண்டும். அப்போதுதான் போதுமான அளவுக்குக் காற்றும் சூரிய வெளிச்சமும் கிடைக்கும். அதிக வெப்பம் பால் உற்பத்தியையும் மாடுகளின் உடல் நலத்தையும் பாதிக்கும். அதனால், கோடைக்காலத்தில் மாட்டுக்கொட்டகையின் வெளிப்புறம், உட்புறங்களில் சிறிய ஸ்பிரிங்க்ளர் மூலம் நீர் தெளித்து வெப்பத்தைக் குறைக்க வேண்டும். பால்பண்ணைக்கு அருகிலேயே உரிமையாளரின் வீடும் இருப்பது நல்லது. அப்போதுதான் நேரடிக் கண்காணிப்பில் லாபகரமாக நிர்வாகம் செய்ய முடியும். பாலை நேரடியாக விற்பதன்மூலம், கூடுதல் லாபம் கிடைக்கும்.

தொலைபேசியில் அழைத்தால் அவசர உதவிக்குக் கால்நடை மருத்துவர் வரும் வகையில் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். பால்பண்ணைத் தொழிலை ஊக்கப்படுத்த, அவ்வப்போது மத்திய-மாநில அரசுகள் மானியமும் வழங்கிவருகின்றன. உங்கள் கிராமத்துக்குச் சேவை வழங்கும் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கியை அணுகினால் கடன், மானியம் போன்ற விவரங்கள் குறித்து அறிந்துகொள்ள முடியும்.   

நீங்கள் கேட்டவை: “மண்வீடு கட்டினால் நீண்ட காலம் தாங்குமா?”

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்களில் நடத்தப்படும் பால்பண்ணை மற்றும் கறவைமாடு வளர்ப்பு குறித்த பயிற்சியிலும் திறன் மேம்பாட்டுப் பயிற்சியிலும் கலந்துகொண்டு பயன்பெறவும். இந்தப் பயிற்சி முடித்தவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ், வங்கிக் கடனுதவி மற்றும் பிற அரசுத் திட்டங்களைப் பயன்படுத்திக்கொள்ள உதவியாக இருக்கும்.’’

தொடர்புக்கு, தொலைநிலைக் கல்வி இயக்ககம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால் பண்ணை, சென்னை-51 தொலைபேசி: 044 24320411.

‘‘தேனீ வளர்ப்பு சம்பந்தமாகப் பயிற்சி பெற விரும்புகிறேன், யாரைத் தொடர்புகொள்வது?’’

பிரதீப்குமார், @இணையதளம்.


‘‘மாதந்தோறும் முதல்வாரத்தில் கோயம்புத்தூரிலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் தேனீ வளர்ப்பு சம்பந்தமான பயிற்சி வகுப்புகள் நடந்து வருகின்றன. தேனீ வளர்ப்பு குறித்த அடிப்படைத் தகவல்கள் முதல் தொழில் தொடங்கி நடத்தும் நுட்பங்கள் வரை கற்றுக் கொடுக்கப்படுகின்றன. மிகக் குறைந்தளவில் பயிற்சிக்கட்டணம் வாங்கப்படுகிறது.

தொடர்புக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் பூச்சியியல் துறை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வளாகம், மருதமலை ரோடு, கோயம்புத்தூர் – 641 003.

தொலைபேசி: 0422 6611214,  2431222.

நீங்கள் கேட்டவை: “மண்வீடு கட்டினால் நீண்ட காலம் தாங்குமா?”

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக் கொண்டிருக்கிறார்.

உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’,  பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்குத் தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும்,
99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும்  அனுப்பலாம்.