
சுற்றுச்சூழல் ‘வனதாசன்’ ரா.ராஜசேகரன், தொகுப்பு: ஆர்.குமரேசன், படம்: வீ.சிவக்குமார்
பசித்துக் கிடந்த பயிர்களுக்கு உயிர் உணவாக, வறண்டு கிடந்த நிலங்களுக்குத் தாகம் தீர்க்கும் நீராக...

மனம் குளிர நீர் வார்த்துச் சென்றுள்ளது தென்மேற்குப் பருவமழை. பல பகுதிகளில் கன மழையாகவும் சில பகுதிகளில் மித மழையாகவும் பெய்ந்துள்ளது. நீண்டகால வறட்சியை விரட்டியடித்த தென்மேற்குப் பருவமழைக்கு நன்றி சொல்லி, அடுத்து வரவிருக்கும் வடகிழக்குப் பருவமழைக்கு வரவேற்பு கொடுக்கத் தயாராகுவோம்.
‘அடுத்து பெய்யவிருக்கும் வடகிழக்குப் பருவமழை, சராசரி அளவைவிடக் கூடுதலாகக் கிடைக்கலாம்’ என்கிறார்கள் வானிலை வல்லுநர்கள். இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு, விவசாயிகள் தங்களின் தரிசு நிலங்களிலும் காலி இடங்களிலும் மரக்கன்றுகளை வைக்க வேண்டும். மரக்கன்றுகள் நடுவதற்கு இது சரியான தருணம். கடுமையான வறட்சியைத் தாங்கி வளரும் சில வகை மரங்களைத் தரிசு நிலங்களில் நட்டு வைத்தால், அடுத்த மழையில் செடிகள் உயிர் பிடித்துக்கொள்ளும். வடகிழக்குப் பருவமழையைத் தொடர்ந்துவரும் பனிக்காலத்தில் செடிகள் ஓரளவு தங்களைத் தக்க வைத்துக்கொள்ளும். எனவே மரக்கன்றுகள் நடவுசெய்ய நினைப்பவர்களுக்கு, இது அற்புதமான காலம்.

சிலர் ஏதாவதொரு மரத்தை வளர்த்து உடனடியாகப் பணக்காரர் ஆக வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், இன்றுவரை ‘பணம் காய்க்கும் மரம்’ என ஒன்று கண்டுபிடிக்கப்படவில்லை. ‘அகர் மரம் வளர்த்தால் குபேரன் ஆகலாம். அமெரிக்கா தேக்கு, ஆப்பிரிக்கா தேக்கு மரங்களை வளர்த்தால் கோடீஸ்வரன் ஆகலாம்’ எனச் சிலர் ஆசை காட்டுவார்கள். அதோடு, ‘தண்ணீர் தேவையில்லை, கவாத்துச்செய்ய வேண்டியதில்லை, பராமரிப்புத் தேவையில்லை, ஐந்தே ஆண்டுகளில் வருமானம்...’ என்றெல்லாம் சொல்லி நம்மை மசியவைக்கப் பார்ப்பார்கள் வியாபாரிகள். ஆனால், எதையும் நம்பாமல் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டியது அவசியம்.
மரங்களில் நீண்டகால மரங்கள், குறுகிய கால மரங்கள் என இரு வகைகள் உள்ளன. தேக்கு, குமிழ், வேங்கை, வாகை, கடம்பு, சந்தனம், செஞ்சந்தனம், ஆச்சா, தடசு போன்றவை நீண்டகால மரங்கள். இவற்றிலிருந்து வருமானம் பார்க்கக் குறைந்தபட்சம் 20 ஆண்டுகளாவது காத்திருக்க வேண்டும். சவுக்கு, பெருமரம், மலைவேம்பு போன்றவை குறுகியகால மரங்கள். இவற்றில் ஆறு ஆண்டுகளுக்குள் வருமானம் எடுத்துவிட இயலும். ஆனால், இரண்டு ரக மரங்களையுமே நட்டு வைத்து வேளாண் காடுகளாக மரங்கள் வளர்ப்பதுதான் சிறந்த முறை.மரக்கன்றுகளை வரிசைக்கு வரிசை 5 மீட்டர், செடிக்குச் செடி 4 மீட்டர் என்ற இடைவெளியில் நடவுசெய்தால், ஊடுபயிர்ச் சாகுபடிக்கு இடம் கிடைக்கும். நிலக்கடலை, உளுந்து, பாசிப்பயறு, எள், சோளம் உள்ளிட்ட பயிர்களை ஊடுபயிர்களாகச் சாகுபடி செய்யலாம்.
நம் மண்ணில் இயல்பாக வளரும் தன்மையுடைய மரங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அடுத்ததாக நம் மண்ணுக்கேற்ற வணிகரீதியான மரங்களைத் தேர்வு செய்யலாம். இப்படி நடவு செய்துவிட்டுக் காத்திருந்தால், குழந்தைகளின் எதிர்காலத்துக்கு உதவிசெய்யும். அதோடு, சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும்.

மண்ணுக்கேற்ற மரங்களை எப்படித் தெரிந்துகொள்வது என்று கவலைப்பட வேண்டியதில்லை. உங்கள் நிலத்தைச்சுற்றி 360 கோணத்தில் பார்வையைச் சுழலவிடுங்கள். உங்கள் பார்வையில் படும் இடங்களில் அதிகளவு எந்த மரங்கள் இருக்கின்றனவோ, அவைதான் உங்கள் மண்ணுக்கேற்ற மரங்கள். அவற்றுக்கு முதலிடம் கொடுங்கள். ஆறுமாத வயதுடைய கன்றுகளாக வாங்கி நடவுசெய்ய வேண்டியது அவசியம்.
தண்ணீர் வசதியுள்ள நிலங்களில் எப்போது வேண்டுமானாலும் நடவு செய்யலாம். ஆனால், மானாவாரி நிலங்களில் பருவமழைக்காலங்களில் மட்டுமே நடவுசெய்ய வேண்டும். பருவமழை தொடங்குவதற்கு முன்பாக அல்லது பருவமழையின் ஆரம்பகட்டத்தில் நடவு செய்வது சிறந்தது.
பொதுவாக மரக்கன்று நடவுக்கு மூன்றடி சதுரம், மூன்றடி ஆழம் என்ற அளவில் குழிகள் எடுக்க வேண்டும். குழிகள் எடுத்தபிறகு நன்கு ஆறவிட்டு, குழியில் பாதியளவுக்குமேல் மண்ணை நிரப்ப வேண்டும். பிறகு ஒவ்வொரு குழியிலும் 2 கிலோ மண்புழு உரம், 50 கிராம் வேர் வளர்ச்சிப் பூஞ்சணம் (வேம்), 20 கிராம் அசோஸ்பைரில்லம், 20 கிராம் பாஸ்போ பாக்டீரியா ஆகியவற்றைக் கலந்து கொட்டி, அதன்மீது மண்கொண்டு மூட வேண்டும். பிறகு கைகளால் மண்ணைப் பறித்துக் கன்றை நடவுசெய்ய வேண்டும். மழைக்காலத்தில் நடவுசெய்யும் பயிர்களுக்கு மாதம் இரண்டு முறை தண்ணீர் கொடுத்தால் போதுமானது.
நடவுசெய்த 2-ம் ஆண்டில் மரத்தைச் சுற்றி மூன்று அடி விட்டத்துக்குக் களைகளை அகற்றி, மண்ணைக் கொத்திவிட வேண்டும். மரங்களின் பக்கக் கிளைகளை மட்டும், தண்டுப்பகுதிக்குக் காயம் ஏற்படாதவாறு கவாத்துச்செய்ய வேண்டும். அவ்வப்போது கவாத்துச்செய்தால்தான் மரம் நேராக வளர்ந்து நடுப்பகுதி பருக்கும். இதன்மூலம் நமக்குத் தரமான தடிமரங்கள் கிடைக்கும்.
கவாத்தின்போது இலைகள் முழுவதையும் அகற்றிவிடக் கூடாது. போதுமான அளவு இலைகள் இருந்தால்தான் மரங்கள் தங்களுக்குத் தேவையான உணவைத் தயாரிக்க முடியும். அனைத்து மரங்களுக்கும் போதுமான இடைவெளியும் சூரிய ஒளியும் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வன விரிவாக்க மையங்கள் செயல்படுகின்றன. இம்மையங்களில் தேவையான ஆவணங்களைக்கொடுத்து மரக்கன்றுகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம். சிறு குறு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 200 மரக்கன்றுகள் வரை இலவசமாகக் கிடைக்கும்.
அம்மையங்களிலேயே தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளும் கிடைக்கும். வரக்கூடிய வடகிழக்குப் பருவமழையைச் சரியாகப் பயன்படுத்தித் தரிசு நிலங்களையெல்லாம் பசுமைக் காடுகளாக்குவோம்.
- வளரும்