மரத்தடி மாநாடு: தென்னை மானியம்... இழுத்தடிக்கும் அதிகாரிகள்... கவலையில் விவசாயிகள்!

ஓவியம்: ஹரன்
தானாகவே முளைத்து வளர்ந்திருந்த பரங்கிக்காய்க் கொடியை அருகிலிருந்த மரத்தில் ஏற்றிவிட்டுக் கொண்டிருந்தார் ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். இதைப் பார்த்துக் கொண்டிருந்தார் ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. காய்கறிகளை விற்றுவிட்டு வேகமாக இவர்களிருக்கும் இடத்துக்கு ‘காய்கறி’ கண்ணம்மா வந்துசேர, ஒரு செய்தியைச்சொல்லி அன்றைய மாநாட்டைத் தொடங்கி வைத்தார் வாத்தியார்.

“முன்னாடியெல்லாம் பசு மாட்டோட சாணம், மூத்திரம், குதிரையோட சாணம் எல்லாத்தையும் கிருமி நாசினியாகப் பயன்படுத்துவாங்க. வாசல்ல சாணம் மெழுகி, மூத்திரத்தைத் தெளிச்சுவிட்டா பூச்சி, புழுக்கள் வீட்டுக்குள் அண்டாது. அன்றாடப் பழக்கமா இருந்ததெல்லாம் இப்போ சம்பிரதாயமாகிடுச்சு.
வீடுகள்ல ஹோமம் நடத்திறப்போ மட்டும் கோமூத்திரத்தைத் தெளிச்சுட்டுருக்கோம். இப்போ திரும்பவும் டெங்கு பயத்தால கொசுக்களை ஒழிக்க, குதிரைச்சாணத்தைப் பயன்படுத்த ஆரம்பிச்சிருக்காங்க. குறிப்பா, சேலம் மாவட்டத்தோட பல பகுதிகள்ல கொசுவை ஒழிக்கக் குதிரைச்சாணத்தைப் பயன்படுத்திட்டு இருக்கிறாங்க. குதிரைச்சாணத்தைப் பரவலா தூவிவிட்டா கொசு வர்றதில்லையாம். அதேமாதிரி குதிரைச்சாணத்தை வெச்சுப் புகைமூட்டம் போட்டாலும் கொசுக்கள் ஓடிப்போயிடுதாம். அதனால, சேலம் மாவட்டத்துல குதிரைச்சாணத்துக்குக் கிராக்கியாகிடுச்சாம். நீலகிரி, கொடைக்கானல் மலைகள்லிருந்து குதிரைச்சாணத்தை வரவழைச்சு விற்பனை செய்றாங்க. ஒரு கிலோ சாணத்தை 12 ரூபாய் வரை விற்பனை செய்றாங்க” என்றார் வாத்தியார்.
“பாருடா, குதிரைச்சாணத்துக்கு வந்த கிராக்கியை” என்று ஆச்சர்யப்பட்ட காய்கறி, கூடையிலிருந்த பப்பாளிப்பழத்தைத் துண்டுகளாக நறுக்கி இருவருக்கும் கொடுத்தார். அதைச் சாப்பிட்டுக்கொண்டே ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார் ஏரோட்டி.
“கடந்த நாலஞ்சு வருஷமா நிலவிட்டு இருக்கிற கடுமையான வறட்சியால தென்னை விவசாயம் சுத்தமா நசிஞ்சு போச்சு. அதனால, தேங்காய் உற்பத்தி ரொம்பவும் குறைஞ்சு போயிடுச்சாம். வறட்சியால கருகிப்போன தென்னை மரங்களை எல்லோரும் அழிச்சுட்டு இருக்கிறாங்க. இந்த நிலைமையில விவசாயிகளுக்கு உதவி செய்றதுக்காக, பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை வெட்டிட்டு, புதுத் தென்னங்கன்னுகளை மறுநடவு செய்றதுக்கு மானியம் வழங்குற திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்திருக்கு.
வயதான மரங்கள், வறட்சியால் பாதிக்கப்பட்ட மரங்கள், நோய்த் தாக்குதல் ஏற்பட்ட மரங்கள்னு பிரச்னை இருக்குற மரங்களை வெட்டுறதுக்கு, ஒரு மரத்துக்கு ஆயிரம் ரூபாய் மானியம் கொடுக்குறாங்க. அந்த இடத்துல புதுக் கன்னுகளை நடவு செய்ய, ஒரு கன்னுக்கு 30 ரூபாய் மானியம் கொடுக்குறாங்க. நடவு செஞ்ச பிறகு வருஷத்துக்கு 8,500 ரூபாய் (ஒரு ஹெக்டேருக்கு) னு ரெண்டு வருஷம் வரை பராமரிப்புக்காக மானியம் கொடுக்கிறாங்க. கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரினு நாலு மாவட்டங்கள்ல இந்த மானியத்திட்டம் செயல்பாட்டுல இருக்கு. இதுக்காக 20 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்காங்க.
பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்துல 300 ஹெக்டேர் நிலத்துல இருக்கிற 9 ஆயிரம் மரங்களை வெட்டி அப்புறப்படுத்த 1.26 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்காங்க. அதேபோல், வடக்கு வட்டாரத்துல 600 ஹெக்டேருக்கும் ஆனைமலை வட்டாரத்துல 500 ஹெக்டேருக்கும் சேர்த்து, மொத்தம் அஞ்சு கோடி ரூபாய் ஒதுக்கியிருக்காங்க. மரங்களை வெட்டினதும் உடனடியா மானியம் கிடைச்சுடும்னு வேளாண்மைத்துறை பணியாளர்கள் வந்து சொன்னதை நம்பி, பொள்ளாச்சிப் பகுதியில் நிறைய பேர் மரங்களை வெட்டி, பெயின்ட் அடிச்சு குறி போட்டு வெச்சிருக்காங்க. ஆனா, களப்பணியாளர்கள் வந்து பார்வையிட்டு வெட்டுன மரங்களை போட்டோ எடுத்து அனுப்பினதுக்கப்புறம்தாம் மானியத்தொகை கிடைக்குமாம். மரங்களை வெட்டி ரெண்டு மாசமாகியும் களப்பாணியாளர்கள் கணக்கெடுப்புக்கு வரவேயில்லையாம். அதனால, வெட்டின மரங்களை அப்படியே தோப்புலபோட்டு வெச்சிருக்காங்களாம். மரங்களையும் கறையான் அரிக்க ஆரம்பிச்சுட்டதால, பிரயோஜனமில்லாமப் போயிடும்னு விவசாயிகள் கவலைப் பட்டுக்கிட்டு இருக்கிறாங்க.
வேளாண் அலுவலர்கள்கிட்ட இதபத்திக் கேட்டா, ‘இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோங்க. தென்னை மரங்கள்ல பாதிப்பு ஏற்படுத்துற வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்துற வேலையில இருக்கோம். சீக்கிரம் கணக்கெடுத்து மானியம் வாங்கிக் கொடுத்திடுவோம்’னு சொல்றாங்களாம்” என்றார் ஏரோட்டி.
“ஆமாய்யா, தென்னையில வெள்ளை ஈக்களால நிறைய பாதிப்பு இருக்கறது உண்மைதான்” என்ற வாத்தியார், “ஏற்கெனவே வறட்சியால தென்னை விவசாயம் ரொம்பப் பாதிப்பு. இப்போ கொஞ்சம் மழை பெஞ்சதுல சந்தோஷமானாங்க. அடுத்து புதுப்பிரச்னை. இந்த வெள்ளை ஈ பிரச்னை தமிழகம் முழுக்கவே இருக்கு. கோயம்புத்தூர், ஈரோடு, நாமக்கல், கன்னியாகுமரி மாவட்டங்கள்ல அதிகளவு இருக்கு. வேளாண்மை அலுவலர்கள், அதுக்கான ஒட்டுண்ணிகளை விவசாயிகளுக்கு விநியோகம் செஞ்சுட்டு இருக்குறாங்க” என்றார்.
அந்த நேரத்தில் கிராமத்தங்கல் பயிற்சித் திட்டத்தில் ஊருக்குள் களப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளாண் கல்லூரி மாணவிகள், ஏரோட்டியைச் சந்திப்பதற்காக வந்தனர். அவர்களோடு பேச ஏரோட்டி செல்ல, அத்தோடு அன்றைய மாநாடு முடிவுக்கு வந்தது.
குருத்துப்பூச்சி, வெள்ளை ஈக்கள்... கவனம்!
சம்பா நெல் சாகுபடியில், பூச்சித்தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை அறிவித்துள்ளது திருவள்ளூர் மாவட்டம் திரூரில் இயங்கிவரும் வேளாண் அறிவியல் நிலையம். அந்த அறிக்கையில், “திருவள்ளூர் அடுத்த கீழானூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், தற்போதைய சம்பா பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிரில் குருத்துப்பூச்சித் தாக்குதல் அதிகமாக உள்ளது. நாற்று நடும்போது, நாற்று நுனியைக் கிள்ளி நட வேண்டும்.
இதனால், குருத்துப்பூச்சிகளின் முட்டைகள் அழிக்கப்பட்டுவிடும். அதேபோல, ஆரம்ப காலகட்டத்தில் வயலில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவற்றைக் கடைப்பிடித்தால் குருத்துப்பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். மேலும், நாற்று நடவுசெய்த 28, 35 மற்றும் 42-ம் நாள்களில் டிரைகோடெர்மா ஜப்பானிக் முட்டை ஒட்டுண்ணியை ஒரு ஹெக்டேருக்கு 5 சி.சி வீதம் இலைகளின் கீழ்ப்புறத்தில் கட்டியும் குருத்துப்பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்” என்று தெரிவித்துள்ளது.
பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய வேளாண் உதவி இயக்குனர் வெங்கடாசலம், தென்னையில் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த சில ஆலோசனைகளைச் சொல்லியுள்ளார்.
“இந்த ஈக்களுக்குப் பெயர் ‘ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ’. நாட்டு ரகத் தென்னை மரங்களைவிட வீரியரகத் தென்னை மரங்கள்தாம் இந்த ஈக்களால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. தென்னை மட்டுமில்லாமல் மரவள்ளி, பப்பாளி, சப்போட்டா, செம்பருத்தி, எலுமிச்சைப் பயிர்களையும் இந்த வெள்ளை ஈக்கள் தாக்கியுள்ளன. தோப்புக்குள் ஆங்காங்கே மஞ்சள்நிற பாலித்தீன் ஒட்டுப்பொறிகளை வைத்தால் வெள்ளை ஈக்கள் கட்டுப்படும். அதோடு, ‘கிரைசோபெர்லா’ இரைவிழுங்கிகளை, தோப்புக்குள் விட்டும் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தலாம்.
இயற்கையாகத் தென்னந்தோப்புக்குள் வரும் தட்டான் பூச்சிகள், வெள்ளை ஈக்களை அழிக்கின்றன. அதனால், பூச்சிக்கொல்லிகளைத் தவிர்த்து, நன்மை செய்யும் பூச்சிகளை அதிகரிக்க வைத்தால், இயற்கையாகவே வெள்ளை ஈக்களின் தாக்குதலைக் கட்டுக்குள் வைக்க முடியும்” என்றார்.
தவறும் விளக்கமும்!
கடந்த 25-10-17 பசுமை விகடன் இதழில் ‘பயிற்சி... ஆலோசனை... கடனுதவி... பட்டையைக் கிளப்பும் பயிற்சி மையம்’ என்ற கட்டுரை இடம்பெற்றிருந்ததது. அதில் பக்கம் 59-ல் ‘தமிழ்நாட்டிலுள்ள கிராம சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மையங்கள்’ என்ற அட்டவணையில் சேலம், பெரம்பலூர் ஆகிய பயிற்சி மையங்களின் தொலைபேசி எண்கள் தவறாக இடம்பெற்றுவிட்டன. சேலம் 0427 2274478, பெரம்பலூர் 04328 277896 என்ற தொலைபேசி எண்களே சரியானவை. தவறான தகவல் இடம்பெற்றமைக்கு வருந்துகிறோம்.
-ஆசிரியர்
இந்த இதழில் ‘இ.எம்’ தொடர் இடம் பெறவில்லை.