மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: ஆத்தி மரம் சொல்லும் அதிசயத் தகவல்கள்!

மண்புழு மன்னாரு: ஆத்தி மரம் சொல்லும் அதிசயத் தகவல்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு: ஆத்தி மரம் சொல்லும் அதிசயத் தகவல்கள்!

மாத்தியோசிஓவியம்: ஹரன்

ருமுறை சென்னையிலுள்ள திருவல்லிக்கேணி பாரதியார் நினைவு இல்லத்துல நடந்த இலக்கியக் கூட்டத்துக்குப் போயிருந்தேன். வழக்கமா இலக்கியவாதிங்க கவிதைகள் பாடியும் பழம் பெருமை பேசியும் கூட்டத்தைக் கதிகலங்க வைப்பாங்க. ஆனா, என்னோட அதிர்ஷ்டம் அந்த இலக்கியக் கூட்டத்துல பேசின பேச்சாளர் இயற்கை வளம், மரங்களின் மகத்துவம், அவற்றின் மருத்துவக் குணங்கள்னு பல புதுமையான தகவல்களைச் சொன்னாரு.  

மண்புழு மன்னாரு: ஆத்தி மரம் சொல்லும் அதிசயத் தகவல்கள்!

அதை அப்படியே உங்களுக்குக் கொடுக்கிறேன்.... 

‘‘ஆர்க்காடு, ஆலங்காடு, வேற்காடு, களக்காடு எனக் காடுகள் பெயரில் ஊர்கள் உள்ளன. இவற்றில் ‘ஆர்’ என்பது ‘ஆத்தி’யைக் குறிக்கும் சொல்லாகும். ஆத்தி மலர் மாலையை அணிந்த சோழ மன்னனை ‘ஆரங்கண்ணி சோழன்’ என்று சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் காலத்தில் ‘ஆத்தி மரம்’ நிறைந்த பகுதிதான் இன்றைக்கு ஆர்க்காடு (ஆற்காடு) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

சோழர்களின் முக்கிய ஊராகவும் பாடல் பெற்ற திருத்தலமாகவும் விளங்கும் திருவாரூரில், ஆதி காலத்தில் ஆத்தி மரங்கள் அதிகம் இருந்தமையால்தான் ஆரூர் எனப்பட்டது.

‘காட்டு அத்தி’ என்று அழைக்கப்படும் ஆத்தி மரத்துக்கும் மருத்துவத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. கல்லீரல் வீக்கத்தை நம்மால் உடனடியாக உணரமுடியாது. இது மாதிரியான நோய்களிலிருந்தும் தகாத உடலுறவால் ஏற்படும் நோய்களிலிருந்தும் விடுவிக்கும் மூலிகையாக ஆத்தி மரம் உள்ளது. இதோடு பித்தம், வாதம் போன்றவற்றையும் குணப்படுத்தும்.

இலக்கியங்களில் பாடப்பெற்ற மரங்களில் ஆத்தி மரத்துக்குத் தனி இடம் உண்டு. தமிழகத்தில் ஆத்தி மரம் மலை அத்தி, அரசமந்தம், பேயத்தி என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த மரத்தின் இலை, காய், கனி, பட்டை, வேர் என அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம்  கொண்டவை. மரத்தின் பட்டையிலிருந்து நார் எடுக்கலாம். வீடுகளில் அலங்கார மரமாகவும் வளர்க்கலாம்.

ஆத்தி மரத்தின் வேர் மற்றும் பட்டையை இடித்துத் தண்ணீரில் போட்டுக் காய்ச்சிக் குடித்துவந்தால், கல்லீரலில் ஏற்பட்டிருக்கும் வீக்கம், வலி ஆகியவை இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும். நல்ல பசியை உண்டாக்கும். குடற்புழு மடிந்து போகும். ஆத்திக் கனியை (பழம்) தண்ணீரில்போட்டுக் கொதிக்க வைத்துவிட்டு, பிறகு அந்தத் தண்ணீரால் வாய் கொப்பளித்தால் நாக்கில் ஏற்படும் புண், தொண்டை நோய் ஆகியவை குணமாகும். பித்தம், வாதம் சம்பந்தப்பட்ட நோய்களும் குணமாகிவிடும். சிறுநீரக நோய்களுக்கும் புற்று நோய்களுக்கும் ஆத்தி மரம் மருந்தாகப் பயன்படுகிறது.

இம்மரத்தின் பட்டையைச் சீதபேதி போன்ற பாதிப்புகளுக்கும், காய்ச்சல்களுக்கும், தோல் நோய்களுக்கும், உடல் வீக்கங்களுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும், இந்திரியக் கோளாறுகளுக்கும், தகாத உடலுறவால் ஏற்படும் வெட்டை நோய்களுக்கும், குஷ்ட ரோகத் தடிப்புகளுக்கும் மருந்தாகக் கொடுக்கிறார்கள் வைத்தியர்கள். இதோடு பெண்களுக்கு ஏற்படும் ரத்தப்போக்கை நிறுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. பேதி, மாந்தம், இருமலுக்கு நல்ல மருந்து. நச்சை நீக்குகிறது.

ஆத்தி மரத்தின் காய், சிறுநீர்ப் பெருக்கியாக நோயாளிகளுக்குப் பயன்படுகிறது. மலர், சீதபேதியைக் கட்டுப்படுத்திக் குடற்புழுக்களைக் கொல்கிறது. விதை, விஷக்கடிக்கும் புண்களுக்கும் மருந்தாகிறது. இதன் பட்டையைத் தண்ணீரில்போட்டுக் காய்ச்சி, அந்நீரால் குளித்து வந்தால், உடலில் உள்ள படை நீங்கிவிடும்.

பிற்காலச் சோழர் ஆட்சியில் வணிகம், நிர்வாகம் உள்ளிட்ட காரணங்களுக்காக ராமநாதபுரம் பகுதியில் சோழநாட்டு மக்கள் குடியேறினார்கள். அப்போது, ஆத்தி மரங்களைக் கோயில் தல விருட்சமாக வளர்த்தார்கள். அவை இன்றும் பல கோயில்களில் உள்ளன. தல ஆத்தி மரங்கள், சோழர்கள் விட்டுச்சென்ற அடையாளச் சின்னமாகவும் உள்ளன.

அவ்வையார், ‘ஆத்தி சூடி அமர்ந்த தேவனே’ என்று பாடியுள்ளார். ஆத்தியைப் பெருமைப்படுத்த அவரது நூலுக்கும் ‘ஆத்தி சூடி’ என்றே பெயர் வைத்துள்ளார். குறிஞ்சிப்பாட்டில் 67-வது மலராக ஆத்தி மலரைக் கபிலர் குறிப்பிட்டுள்ளார். நலங்கிள்ளி - பெருங்கிள்ளி போரில் இருவரும் ஆத்தி மலர் சூடியதாக கோவூர்கிழார் எழுதி வைத்துள்ளார். தலைமாலையாக ஆத்தியைச் சூடிய, கரிகால்வளவனின் அழகை, பொருநர் ஆற்றுப்படை பெருமையாகச் சொல்கிறது’’னு ஆத்தி மரத்தைப் பத்தி பல சுவாரஷ்யமான தகவல்களைச் சொல்லி முடிச்சாரு அந்தப் பேச்சாளர்.