
புறாபாண்டி, படம்: வீ.சக்தி அருணகிரி
‘‘விவசாயத்தில் ஆர்வமுள்ள நண்பர்கள் சேர்ந்து, மீன் பண்ணை வைக்க விரும்புகிறோம். அயிரை மீனுக்கு எப்போதும் நல்ல விலை கிடைக்கும் என்கிறார்கள். அயிரை மீன் வளர்ப்பு குறித்துக் கூடுதல் விவரங்களைச் சொல்லுங்கள்?’’
எஸ்.பி.தியாகராஜன், திருநெல்வேலி.
கன்னியாகுமரி மாவட்டம், பறக்கையில் செயல்பட்டுவரும் வளம்குன்றா நீர் உயிரி வளர்ப்பு மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர் கே.ராவணேஸ்வரன் பதில் சொல்கிறார்.

‘‘விவசாயத்துடன் கால்நடை மற்றும் மீன் வளர்ப்பில் ஈடுபடும்போது கூடுதல் வருமானம் கிடைக்கும். பொதுவாக அயிரை மீன் வித்தியாசமான சிறப்பம்சங்களைக் கொண்டுள்ள ரகமாகும். மீன் இனங்களில் அயிரை மீன் சிறிய உருவ அமைப்பைக் கொண்டது. அதிகபட்சம் 2-3 கிராம் அளவுக்குத்தான் எடையிருக்கும். இதை யாரும் தனியாக வளர்ப்பதில்லை. கெண்டை மீனுடன் கூட்டாகத்தான் வளர்ப்பார்கள். காரணம், அயிரை மீன் குளத்தின் அடியில்தான் இருக்கும். அதுவும் மண்ணுக்குள் புதைந்துகொள்ளும். இதனால், மேல்மட்ட நீரில் வளரும் கெண்டை மீன் ரகத்தைச் சேர்த்து வளர்ப்பதால் கூடுதல் லாபம் கிடைக்கும். அயிரை மீனின் வயது 3-4 மாதங்கள். இதற்குமேல் வளர்த்தாலும் எடை கூடாது; வளர்ச்சியும் இருக்காது. எனவே, நான்கு மாதத்துக்குள் இதை அறுவடை செய்து விற்பனை செய்ய வேண்டும்.

அயிரை மீன்கள் நேரடியாக உணவுப் பொருள்களை உட்கொள்ளாது. மட்கிய உணவுப் பொருள்களை மட்டும்தான் உண்ணும். உருவத்தில் சிறியதாக இருந்தாலும், அயிரை மீன் உண்பதற்கு மிகவும் சுவையாக இருக்கும். இதில் மருத்துவ குணங்களும் உண்டு. இதனால், அயிரை மீனுக்கு எப்போதும் நல்ல விலை கிடைத்துவருகிறது. தற்சமயம், கிலோ 1,500-2,000 ரூபாய் வரை விற்பனையாகிறது. எனவே, தாராளமாக அயிரை மீன் வளர்ப்பில் ஈடுபடலாம். மீன் பண்ணையைத் தொடங்குவதற்கு முன்பு, ஏற்கெனவே செயல்பட்டுவரும் மீன் பண்ணைகளைப் பார்வையிடுவதன்மூலம் அனுபவப் பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.
குறிப்பாக, அயிரை மீன் வளர்ப்பு சம்பந்தமான ஆராய்ச்சி எங்கள் மையத்தில் நடைபெற்றுவருகிறது. மேலும், எங்கள் ஆராய்ச்சி மையத்தில் அயிரை மீன் வளர்ப்பு உள்ளிட்ட பல பயிற்சிகளையும் நடத்தி வருகிறோம். கட்டண அடிப்படையிலான இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ள முன்பதிவு முக்கியம்.’’
தொடர்புக்கு, தொலைபேசி: 04652 286107.

‘‘ஆடுகள், மாடுகள், நாட்டுக்கோழிகள் வளர்த்து வருகிறோம். மரத்தழைகளைப் பசுந்தீவனமாகப் பயன்படுத்தலாமா?’’
ஜே.குணவதி, திருக்கழுக்குன்றம்.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி பரசுராமன் பதில் சொல்கிறார்.
‘‘என்னுடைய அனுபவத்தில் மரத்தழைகளைக் கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தி வருகிறேன். நல்ல பலன் கிடைத்துவருகிறது. பசுந்தீவனம் கிடைக்காத தருணத்தில் மரத்தழைகள் சிறந்த தீவனமாகப் பயன்படுகின்றன. இவை, மற்ற தீவனங்களைக் காட்டிலும் ஊட்டச்சத்து மிகுந்ததாக விளங்குகின்றன. விஞ்ஞானிகள் ‘மரத் தழைகளில் பொதுவாக 20 முதல் 40 சதவிகித உலர்பொருள், 10 முதல் 15 சதவிகிதப் புரதச்சத்து மற்றும் 40 முதல் 65 சதவிகித அளவு செரிமானமாகக்கூடிய ஊட்டச்சத்துகள் உள்ளன. சவுண்டல் (சூபாபுல்), அகத்தி போன்ற மரத்தழைகள் 30 சதவிகிதப் புரதச்சத்தை அளிக்கக்கூடியவை’ என மரத்தழைகளைப் புகழ்ந்து சொல்கிறார்கள். மரத்தழைகளைத் தீவனத்தின் ஒரு பகுதியாகப் பயன்படுத்துவதன்மூலம் தீவனச் செலவு கணிசமாகக் குறைகிறது. வன்னி, கருவேலம் மற்றும் கொருக்காப்புளி போன்றவை வறண்ட பகுதிகளிலும் நன்றாக வளரக்கூடியவை. இவற்றின் தழைகள் மற்றும் காய்கள் இப்பகுதிகளிலுள்ள ஆடுகளின் தீவனத் தேவையை நிறைவேற்றுகின்றன.
மரத்தழைகளில் உள்ள புரதச்சத்து, இரைப்பையில் நுண்ணுயிர்களால் அவ்வளவாகச் சிதைக்கப்படுவதில்லை. அப்படிச் சிதைக்கப்படாத புரதம் சிறுகுடலில் செரிமானமாக்கப்படுவதால் சிறந்த பயனைக் கொடுக்கிறது. மரங்களின் காய்களிலும் புரதச்சத்து மிகுந்து காணப்படுகின்றது. மரத்தழைகளில் சுண்ணாம்புச்சத்து மற்ற தீவனங்களைக் காட்டிலும் இரண்டிலிருந்து மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. உயிர்ச்சத்து ‘ஏ’ தேவைக்குமேல் அதிகமாக மரத்தழைகள் மூலம் கிடைக்கின்றது. அகத்தி, முருங்கை, ஆச்சா போன்ற மரங்களின் தழைகள் இரும்புச்சத்தை அதிகம் கொண்டுள்ளன.

மரத்தழைகளிலுள்ள ஊட்டச்சத்து விகிதங்கள் வறட்சியினால் பாதிக்கப்படுவதில்லை. ஆகையால், வறட்சிக் காலங்களிலும் ஊட்டச்சத்து நிறைந்த சிறந்த பசுந்தீவனமாக மரத்தழைகளைப் பயன்படுத்தலாம். நார்ச்சத்தைக் குறைவாகவும் புரதச்சத்தை அதிகமாகவும் கொண்ட சவுண்டல் (சூபாபுல்), அகத்தி போன்ற மரத்தழைகளை வெயிலில் உலரவைத்து, அரைத்துக் கோழித் தீவனத்தின் ஒரு பகுதியாகச் சேர்த்துக் கொடுத்தால் தீவனச் செலவு குறையும்.
இதனால், முட்டையின் மஞ்சள் கரு, அதிக மஞ்சள் நிறம் கொண்டதாக விளங்குகிறது. கோடைக் காலங்களில் கோழிகளுக்கு அகத்தி இலைகளை நறுக்கிக் கொடுப்பதன்மூலம், கோடை வெப்பத்தின் பாதிப்பைத் தவிர்க்கலாம். மரத் தழைகளைப் பயன்படுத்தும்போது, முக்கியமான ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மர இலைகளில் இயற்கையாகவே நச்சுப் பொருள்கள் உள்ளன. இவற்றைப் போக்க, சூரிய ஒளியில் குறைந்தபட்சம் அரைமணி நேரம் காய வைத்தால் நச்சுத்தன்மை நீங்கிவிடும். இதன்பிறகு, தழைகளைக் கால்நடைகளுக்குக் கொடுக்கலாம்.’’
‘‘வாழைச் சாகுபடி செய்து வருகிறோம். மதிப்புக் கூட்டும் தொழில்நுட்பங்கள் பற்றிய விவரங்கள் எங்கு கிடைக்கும்?’’
ஆர்.சிதம்பரம், காரைக்குடி.
‘‘இந்திய அளவில் தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம், திருச்சியில் செயல்பட்டு வருகிறது. இங்கு வாழைக்காய், பழம், நார்... உள்ளிட்டவற்றை மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பங்கள் கிடைக்கும்.’’
தொடர்புக்கு: தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம், தோகைமலை ரோடு, தாயனூர் அஞ்சல், திருச்சி- 620102.

தொலைபேசி: 0431 2618125.
விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக் கொண்டிருக்கிறார்.
உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்குத் தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும்,
99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.