மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: ‘ரசிகமணி’ ரசித்த விவசாய நுட்பம்!

மண்புழு மன்னாரு: ‘ரசிகமணி’ ரசித்த விவசாய நுட்பம்!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு: ‘ரசிகமணி’ ரசித்த விவசாய நுட்பம்!

மாத்தியோசிமண்புழு மன்னாரு, ஓவியம்: ஹரன்

ருமுறை, குற்றால அருவியில கொஞ்சமா தண்ணி கொட்டுற நேரத்துல, எப்படியிக்கும்னு பார்க்கப் போயிருந்தேன். ஏன்னா, அருவியில ஜோரா தண்ணீர் கொட்டும்போது குற்றாலத்தைப் பத்தின கதையை உள்ளூர் மக்கள்கிட்ட பேச முடியாது. இன்னொன்னு அந்தச் சமயத்துல குற்றாலத்து ஆள் யாரு, வெளியூர் ஆள் யாருன்னு பிரிச்சுப் பார்க்க முடியாத அளவுக்குக் கூட்டம் அலைமோதும். அதனாலத்தான், அருவியில கொஞ்சமா தண்ணி கொட்டிக்கிட்டிருந்த சமயத்துல போய்ச்சேர்ந்தேன். ஆள் நடமாட்டம் பெருசா இல்ல.

ஒரு ஓட்டலுக்குச் சாப்பிடப் போனேன். என்னோட பக்கத்து பெஞ்சுல சாப்பிட்டுக்கிட்டிருந்த ஐம்பது வயசு மதிக்கத்தக்க தாடிவைச்ச நபர், ‘‘அடுத்து வர்ற சீசன் நல்லா இருக்கும்னு நினைக்கிறேன். பஞ்சாங்கத்துலகூடத் தென்மேற்குப் பருவமழை நல்லா கிடைக்கும்னு எழுதியிருக்கிறதா படிச்சேன்’’னு குற்றால சீசனுக்கு முன்னறிவிப்புக் கொடுத்தாரு. சாப்பிட்டு முடிஞ்சதும் வெளியில வந்தா, அதே நபர் மரத்தடியில உட்கார்ந்திருந்தாரு. பேச்சுக் கொடுத்துப்பார்த்தேன். ‘‘சொந்த ஊர் இதேதான். இங்குள்ள ஓர் ஆன்மீக ஆசிரமத்துல தன்னார்வலரா இருக்கிறேன். அந்த ஆசிரமத்திலேயே தங்கியிருக்கேன். சீசன் சமயத்துல அருவியில குளிக்க வர்றவங்களுக்கு, ஓட்டல் புடிச்சுக் கொடுக்கிற வேலை செய்வேன்”னு சொன்னவருகிட்ட, குற்றாலம் பத்திக்கேட்டேன்.
 
‘‘இந்தக் குற்றாலத்தைப் பத்திச் சுருக்கமா சொல்லணும்னா, இது மூணு மாசம் ஊரு. சீசன் இருக்கிறப்பத்தான் ஊர் எந்நேரமும் விழிச்சுகிட்டுக் கிடக்கும். அப்பத்தான் எல்லா வியாபாரமும் வேகமா நடக்கும். மூணு மாசத்துல நடக்குற இந்த வியாபாரம்தான், அடுத்த ஒன்பது மாசத்துக்குச் சோறுபோடும்’’னு சொன்னாரு. இங்கதானே தமிழறிஞர் டி.கே.சிதம்பரநாதர் வீடு இருக்குனு கேட்டேன்.

மண்புழு மன்னாரு: ‘ரசிகமணி’ ரசித்த விவசாய நுட்பம்!

அந்தப் பேரைக் கேட்டவுடனே, அவரோட முகத்துல பிரகாசம் தெரிஞ்சது. நான் சின்னப்பையனா இருந்தப்ப, ரசிகமணி அய்யா வீட்டுக்குப் பக்கத்துலதான் குடியிருந்தோம். அந்தச் சமயத்துல நேர்ல பார்த்த காட்சியும் காதுல வந்த சேதியையும் உங்களுக்குச் சொல்றேன். ஒரு காலத்துல இந்தக் குற்றாலத்துக்கு வர்ற பெரிய மனுஷங்க, ரசிகமணி டி.கே.சி வீட்டுக்குப் போகாமா இருக்கமாட்டாங்க.

தமிழ்மொழிமேல இருந்த ஆர்வம் காரணமா திருக்குறள், பெரிய புராணம், காஞ்சிபுராணம்னு பல தமிழ் இலக்கியங்களைக் கற்றவர். கற்றது மட்டுமில்லாம, அது சம்பந்தமா மத்தவங்களுக்குச் சுவைபடச் சொல்லக்கூடியவர்.

நம்ம நாட்டுப்புறப் பாடல்ல பொருளாதாரம், காதல், வரலாறு, ஈகை என எல்லாமே இருக்குதுனு, ஆதாரத்தோடு அடிச்சுச் சொன்னவரு. பல மேடைகள்ல, நாட்டுப்புறப் பாடல்களோட பெருமையைச் சொல்லிச் சொல்லி, அதைப் பல்கலைக்கழகம் வரையிலும் கொண்டுபோய்ச் சேர்த்தார். குற்றாலம் சம்பந்தமான அரிய தகவலுள்ள ‘குற்றாலக் குறவஞ்சி’ நூலைப் பிரபலப்படுத்தியதும் ரசிகமணிதான். வழக்கறிஞராகப் பதிவு செய்திருந்தாலும் வழக்குகளுக்காக நீதிமன்றம் பக்கம் போகாம, தமிழுக்காகவே வாழ்ந்த ரசிகமணி ‘இலக்கியச் சங்கம்’ங்கிற அமைப்பைத் தொடங்கினாரு. அதைத்தான், பிற்காலத்துல ‘வட்டத்தொட்டி’னு தமிழ் அறிஞர்கள் அழைச்சாங்க. வாழ்க்கையை ஒரு கொண்டாட்டமாகவே வாழ்ந்தாரு ரசிகமணி. தன்னைச் சந்திக்க வர்ற நண்பர்களுக்குச் சுவையான செய்திகளும் அறுசுவை விருந்தும் கொடுக்கிறது வழக்கம். ரசிகமணி வீட்டுத் தோசை பத்திக் கல்கி ஒரு கட்டுரையே எழுதியிருக்காரு. வட்டத்தொட்டி இலக்கிய நிகழ்ச்சிக்கு வர்ற நண்பர்களை, தன்னோட தோட்டத்துக்கு அழைச்சுக்கிட்டுப் போவாரு. அங்கே இருக்கிற தென்னை, பலா மரங்களைக் காட்டி

‘சூழ மேதி இறங்குந் துறையிற்
சொரியும் பாலைப் பருகிய வாளை
கூழை வாசப் பலாவினிற் பாயக்
கொழும் பலாக்கனி வாழையிற் சாய
வாழை சாய்ந்தொரு தாழையிற் றாக்க’
ங்கிற குற்றாலக் குறவஞ்சிப் பாடலைக் குரல் எடுத்துப் பாடிக் காட்டுவாராம். தென்னை மரத்துல இருந்து இளநீர், பலா மரத்துமேல விழ... பலாப்பழம் அதன்கீழே இருக்கிற வாழையின்மீது விழ..... வாழை அதுக்குக் கீழே இருந்த பயிர்மேலே விழுதுங்கிற பாட்டுக்கான விளக்கத்தையும் ரசிச்சு ரசிச்சு சொல்லுவாரு. அதன்பிறகு, தன்னோட தோட்டத்துல காய்ச்சுத் தொங்கும் பலாப்பழத்தை அறுத்து, வாழை இலையில போட்டு, வயிறு நிறையச் சாப்பிடச் சொல்வாராம்’னு சொல்லி முடிச்சாரு அந்தத் தாடிக்காரர். இப்பத்தான் வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிங்க, நிலத்துல மூணு வகை, நாலு வகை ஊடுபயிர்ச் சாகுபடி செய்தா ஒரு பயிர் கைவிட்டாலும், இன்னொரு பயிர்ல லாபம் கிடைக்கும்னு சொல்லிக்கிட்டிருக்காங்க.

இந்த அருமையான தகவலைப் பல நூறு வருஷத்துக்கு முன்னாடியே பாட்டாவே, நம்ம முன்னோர்கள் பாடி வெச்சதை மீட்டெடுத்த ரசிகமணிக்கும் தகவலைச் சொன்ன தாடிக்காரருக்கும் மனசார நன்றி சொல்லிட்டு நடையைக் கட்டினேன்.