மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை - ஒருங்கிணைந்த பண்ணைக்கு உரம் கொடுக்கும் அசோலா!

நீங்கள் கேட்டவை  - ஒருங்கிணைந்த பண்ணைக்கு உரம் கொடுக்கும் அசோலா!
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்கள் கேட்டவை - ஒருங்கிணைந்த பண்ணைக்கு உரம் கொடுக்கும் அசோலா!

புறாபாண்டி

‘‘ஒருங்கிணைந்த பண்ணை வைத்துள்ளோம். இங்கு அசோலாவை எப்படிப் பயன்படுத்தலாம் என்று சொல்லவும்?’’

கே.சிவராமன், அரக்கோணம்.


அசோலா வளர்ப்பில் அனுபவம் வாய்ந்த காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி சுப்பு பதில் சொல்கிறார்.

‘‘கிராமப்புற மக்களால் ‘கம்மல் பாசி’ என்று அழைக்கப்படும் அசோலா ஒவ்வொரு விவசாயி தோட்டத்திலும் இருக்கவேண்டிய, வளர்க்க வேண்டிய உயிரி. அதுவும், இயற்கை விவசாயம் செய்பவர்களுக்கு அசோலா ஓர் அட்சயப்பாத்திரம் என்றே சொல்ல முடியும். மண்ணை வளப்படுத்தும் வேலையை மட்டும் இது செய்வதில்லை. ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்பில்கூட அசோலா முக்கியப் பங்குவகிக்கிறது.

நீங்கள் கேட்டவை  - ஒருங்கிணைந்த பண்ணைக்கு உரம் கொடுக்கும் அசோலா!

தினமும் அரைக்கிலோ அளவுக்கு அசோலாவைப் பால் மாடுகளுக்குக் கொடுத்தால், அதிகபட்சம் 1 லிட்டர் வரை கூடுதல் பால் கிடைப்பதைப் பல விவசாயிகளும் நிரூபணம் செய்துள்ளனர். மேலும், அசோலா கொடுப்பதால் 25% தீவனச் செலவு குறையும். கோழிகளுக்குக் கொடுத்தால் முட்டையிடும் திறன் கூடும். முட்டையின் எடையும் அதிகரிக்கும்.

மீன்களுக்குப் போட்டால் விரைவாக வளரும். ஆடுகளுக்குக் கொடுக்கும்போது ஆட்டின் எடையும் அதிகரிக்கும். ஆடுகளை அச்சுறுத்தும், நீலநாக்கு நோய்களும் அண்டாது. முருங்கைக் கீரையில் வடை, போண்டா செய்து சாப்பிடுவதுபோல, அசோலாவிலும் வடை, போண்டா... போன்ற பலகாரங்கள் செய்து சாப்பிடலாம். புரதச்சத்து மிக்க இந்த உணவைச் சாப்பிடும்படி, உணவியல் வல்லுநர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.

அசோலாவை ஒருமுறை வளர்க்கத் தொடங்கிவிட்டால், பலமுறை வளர்ந்து பலன் கொடுத்துக்கொண்டே இருக்கும். குறைந்த செலவில், எளிய முறையில் அசோலாவை வளர்க்க முடியும். அதற்குத் தொட்டியில் 7 செ.மீ முதல் 10 செ.மீ உயரத்துக்குத் தண்ணீரைத் தேக்கிக் கொள்ளவும். பாலித்தீன் ஷீட் மற்றும் செங்கற்களைப் பயன்படுத்தியும் தரையிலேயே தொட்டியை உருவாக்கிக் கொள்ளலாம். சூரியஒளி படும் இடத்தில் இந்தத் தொட்டி இருக்க வேண்டும் என்பது முக்கியமானது.

நீங்கள் கேட்டவை  - ஒருங்கிணைந்த பண்ணைக்கு உரம் கொடுக்கும் அசோலா!

தொட்டியிலிருக்கும் தண்ணீரில் சாணம் ஒரு கிலோ, பாறைத்தூள் ஒரு கைப்பிடி, அசோலா ஒரு கைப்பிடி போட்டுக் கலக்கிவிடவும். அடுத்த ஒரே வாரத்தில் பத்து மடங்கு அளவுக்கு அசோலா பெருகியிருக்கும். மீண்டும் அசோலா வேண்டுமென்றால், சாணம் மற்றும் பாறைத்தூளைத் தொட்டியில் போட்டால் போதும். அப்படியே பெருக ஆரம்பித்துவிடும்.

நெல் பயிரில் ஏக்கருக்கு 20 கிலோ என்ற அளவில், அசோலாவை இடலாம். நெல் வயலில் பச்சைப் போர்வை போர்த்தியதுபோல படர்ந்திருக்கும். இதனால், நீர் ஆவியாவது தடுக்கப்படும். நெற்பயிரில் ஏற்படும் களைகளும் கட்டுப்படும். வழக்கத்தைவிடக் கூடுதலாக விளைச்சல் கிடைக்கும்.

நன்மை செய்கிறது என்பதால் நெல் அறுவடை வரை அசோலாவை வயலில் வைத்திருக்க வேண்டாம். இரண்டாம் களை எடுக்கும்போது, அசோலாவை வயலிலேயே மிதித்து விட வேண்டும். இதன்மூலம் தழை, மணி, சாம்பல் போன்ற முக்கியமான சத்துகள் பயிர்களுக்குக் கிடைக்கும்.

நீங்கள் கேட்டவை  - ஒருங்கிணைந்த பண்ணைக்கு உரம் கொடுக்கும் அசோலா!

நெல் சாகுபடியைப் பொறுத்தவரை, மூன்று போகம் அசோலாவைத் தொடர்ந்து இடுபொருளாகப் பயன்படுத்தி வந்தால், அந்த வயலில் நல்ல விளைச்சல் கிடைக்கும். மண்வளமும் பெருகிவிடும்.

அடுத்த போகத்தில் எந்தப் பயிரைச் சாகுபடி செய்தாலும், நல்ல விளைச்சல் கிடைக்கும். இந்த அற்புதமான உயிர் உரத்தை, விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். முதல்முறை அசோலா வளர்க்கும்போது சிலருக்குச் சரியாக வளராது. அடுத்தமுறை சாணம், பாறைத்தூள்... போன்றவற்றைச் சரியான அளவில் பயன்படுத்தினால், நிச்சயம் சிறப்பாக வளர்ந்து பலன் கொடுக்கும். எனவே, முதல் முயற்சியில் தடை ஏற்பட்டால் தயங்கி விட்டுவிட வேண்டாம்.’’

தொடர்புக்கு, செல்போன்: 96006 12649.

‘‘எங்களின் நெல் வயலில் எலித்தொல்லை அதிகமாக உள்ளது. அதைக் கட்டுப்படுத்த வழிசொல்லுங்கள்?’’

எம்.கணபதி, மணப்பாறை.


திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த, வேளாண் துறையிலிருந்து ஓய்வுபெற்ற, உதவி வேளாண் அலுவலர் வெ.ரெங்கசாமி பதில் சொல்கிறார்.

‘‘எலித்தொல்லையைக் கட்டுப்படுத்த சில நுட்பங்களைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். சாதாரணமாக 20 எலிகள் ஒன்று சேர்ந்தால், ஒரு ஏக்கர் நெல் வயலில் 50% அளவுக்குக்கூட நஷ்டத்தை உண்டுபண்ணிவிடும். எனவே, எலிகளின் எண்ணிக்கையைக் கணித்துவிட்டு, எதுவும் செய்யாமலிருந்தால் நஷ்டம் ஏற்படும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

நெல் வயலின் வரப்புகளில்தான் எலிகள் வளை(குழி) தோண்டித் தங்கியிருக்கும். ஆகையால், வரப்புகளின் அகலத்தைக் குறைத்தால், எலிகள் வயலில் தங்க முடியாத நிலை உருவாகும். எனவேதான் வரப்புகளின் உயரம் ஓர் அடியாகவும் அகலம் ஒரு சாணாகவும் இருக்க வேண்டும் என்பது அனுபவ உண்மை.

கோட்டான்... போன்ற பறவைகள் எலிகளைப் பிடிக்க வசதியளிக்கும் வகையில், ஒரு ஏக்கருக்கு 10 இடங்களில் மட்டைக் குச்சிகளை ‘T ’ வடிவில் ஊன்றி வைக்கலாம். இந்தக் குச்சிகள் ஆறு அடி உயரம் உள்ளவையாக இருக்க வேண்டும். ஒரு பகுதியில் ஒருவர் மட்டும் நெல் சாகுபடி செய்யும்போது, அக்கம் பக்கத்திலுள்ள வயல்களிலிருந்து எலிகள் உணவுக்காக அந்த வயலுக்கு வரும். அடுத்து கரும்புத் தோட்டங்களுக்கருகில், நெல் சாகுபடி செய்யும்போது எலிகளின் தொல்லை அதிகமாக இருக்கும். கரும்புத் தோட்டத்தில் வளைகள் தோண்டி எலிகள் தங்கிக்கொண்டு, உணவுக்காக மட்டும் நெல் வயலுக்குள் வந்து சேதம் செய்யும். ஆகையால், கரும்பு வயலுக்கருகில் நெல் சாகுபடி செய்தால், எலிகளைக் கட்டுப்படுத்தும் பணிகளை வேகமாகச் செய்ய வேண்டும்.

எலிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வரப்போரங்களில் புதினா நடவு செய்தால், அந்த வாசனைக்கு வயலில் எலிகள் இறங்காது. நொச்சி மற்றும் எருக்கன் செடிகளை வயலைச் சுற்றி வேலிப்பயிராக நடலாம். எக்காரணம் கொண்டும் எலிகளைக் கட்டுப்படுத்த விஷக் கொல்லிகளைப் பயன்படுத்த வேண்டாம். விஷக்கொல்லிகளை வைத்தால் எலிகள் மட்டுமல்ல, மண்ணுக்கு நன்மை செய்யும் மண்புழுக்கள் தொடங்கி, ஏராளமான நுண்ணுயிரிகளும் பாதிக்கப்படும்.’’

நீங்கள் கேட்டவை  - ஒருங்கிணைந்த பண்ணைக்கு உரம் கொடுக்கும் அசோலா!

‘‘இயற்கை முறையில் மா, கொய்யா... போன்ற பழவகைப் பயிர்களைச் சாகுபடி செய்துள்ளோம். இதை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய விரும்புகிறோம். இது சம்பந்தமான தகவல் எங்கு கிடைக்கும்?’’

எம்.சுகுணா, சேலம்.

தஞ்சாவூரில், இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப மையம் (Indian Institute of Food Processing Technology) செயல்பட்டுவருகிறது. இங்கு மா, கொய்யா... போன்ற பழ வகைகள் மற்றும் உணவுப் பொருள்களை மதிப்புக் கூட்டும் தொழில்நுட்பங்கள் குறித்த விவரங்கள் கிடைக்கும். இந்த மையத்தில் நடத்தப்படும் பயிற்சி மற்றும் கருத்தரங்குகளில் கலந்துகொண்டால், விளைபொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும் திறனை வளர்த்துக் கொள்ளமுடியும்.’’

தொடர்புக்கு: 04362 228155, 226676.