மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு: பங்கனப்பள்ளி மாம்பழத்துக்குப் புவிசார் குறியீடு!

மரத்தடி மாநாடு: பங்கனப்பள்ளி மாம்பழத்துக்குப்  புவிசார் குறியீடு!
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு: பங்கனப்பள்ளி மாம்பழத்துக்குப் புவிசார் குறியீடு!

ஓவியம்: ஹரன்

ல்ல மழை பெய்திருந்ததால், வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சும் வேலையில்லை ‘ஏரோட்டி’ ஏகாம்பரத்துக்கு. அதனால், காலையிலேயே கடைவீதிக்குச் சென்று மாடுகளுக்குத் தேவையான பிண்ணாக்கை வாங்கி வந்துகொண்டிருந்தார். முன்பே தோட்டத்துக்கு வந்துவிட்ட ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமியும் ‘காய்கறி’ கண்ணம்மாவும் ஏரோட்டிக்காகக் காத்திருந்தனர். தோட்டத்துக்கு வந்த ஏரோட்டி பிண்ணாக்கு மூட்டையை அறையில் வைத்துவிட்டு வர, அன்றைய மாநாடு கூடியது.

முதல் செய்தியைச் சொல்லி மாநாட்டை ஆரம்பித்துவைத்தார் வாத்தியார். “ஒரு குறிப்பிட்ட பொருள், குறிப்பிட்ட பகுதியில் அதிகமா உற்பத்தியாகுதுங்கிறதைக் குறிக்கிறதுக்காக ‘புவிசார் குறியீடு’னு கொடுப்பாங்க. விளைபொருள்கள், இயற்கையாகக் கிடைக்கும் பொருள்கள், குறிப்பிட்ட பகுதியில் மட்டும் தயாரிக்கப்படுற கைவினைப் பொருள்கள், இனிப்புப் பண்டங்கள்னு தேர்ந்தெடுத்துப் புவிசார் குறியீடு கொடுத்துட்டுருக்காங்க. டார்ஜிலிங் தேயிலை, திருப்பதி லட்டு, நாக்பூர் ஆரஞ்சுனு நிறைய பொருளுக்கு இந்தியாவில் புவிசார் குறியீடு கொடுத்திருக்காங்க. அந்தவகையில இந்த வருஷம் ஆந்திரா மாநிலத்துல விளையுற ‘பங்கனப்பள்ளி’ மாம்பழத்துக்குப் புவிசார் குறியீடு கொடுத்திருக்காங்க. ‘இது எங்க மாம்பழத்துக்குக் கிடைச்ச பெருமை’னு ஆந்திர விவசாயிகள் சந்தோஷத்தில் இருக்காங்க” என்றார்.

மரத்தடி மாநாடு: பங்கனப்பள்ளி மாம்பழத்துக்குப்  புவிசார் குறியீடு!

“கொஞ்ச நேரம் இருங்க” வந்திடுறேன் என்று சொல்லிவிட்டு, எழுந்து சென்ற காய்கறி, தான் அவித்துக்கொண்டு வந்திருந்த தட்டைப்பயறை, அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த நீரில் அழுத்தி லேசாகச் சூடேற்றிக் கொண்டு வந்தார். அதைச் சாப்பிட்டுக்கொண்டே ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார் ஏரோட்டி. “இந்தப் பேங்க்காரங்க அடாவடியால, இப்போ ஒரு விவசாயி இறந்துபோயிட்டார். திருவண்ணாமலை  மாவட்டம், ‘போந்தை’ங்கிற கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானசேகரன். விவசாயியான இவர், சாத்தனூர்ல இருக்குற ‘ஸ்டேட் பேங்க்’ல, நாலு வருஷத்துக்கு முன்னாடி டிராக்டர் கடன் வாங்கியிருக்கார்.

ரெண்டு வருஷமா தவறாம தவணையைக் கட்டியிருக்கார். போன ரெண்டு வருஷமா வறட்சியால தவணைகட்ட முடியல. மொத்தம் 2,50,000 ரூபாய் நிலுவை இருக்குதாம். அதனால, அவருக்கு பேங்க்ல இருந்து நோட்டீஸ் வந்திருக்கு. அதுக்கப்புறம் அவர், தவணைகட்டக் கால அவகாசம் வேணும்னு பேங்க்ல கேட்டதுக்குக் கொடுக்க மறுத்துட்டாங்களாம்.

அதில்லாம, ஞானசேகரனோட டிராக்டரைப் பறிமுதல் செய்றதுக்கு மோகன்தாஸ், வெங்கடபதினு ரெண்டு அடியாள்களைப் பேங்க்ல இருந்து அனுப்பியிருக்காங்க. அந்த ரெண்டு பேரும் டிராக்டரை எடுக்க வந்தப்போ, ‘பேங்க் மேனேஜர் இல்லைனா போலீஸைக் கூட்டிட்டு வந்து டிராக்டரை எடுங்க. உங்களை எனக்கு யார்னே தெரியாது’னு சொல்லித் தடுத்திருக்கார் ஞானசேகரன். உடனே அந்த ரெண்டு குண்டர்களும் ஞானசேகரனை அடிச்சதுல அவர் மயக்கமாயிட்டார். தொடர்ந்து நெஞ்சு வலி வந்து அவர் இறந்துபோயிட்டார். இதுமாதிரி எத்தனையோ சம்பவம் நடந்தாலும் பேங்க்காரங்க திருந்தவே மாட்டாங்கபோல” என்று வருத்தத்துடன் சொன்னார்.

“அடப்பாவமே... பேங்க்ல இருந்து அடியாள்களையெல்லாமா அனுப்புவாங்க” என்று வருத்தப்பட்டார் காய்கறி.

அடுத்த செய்தியை ஆரம்பித்த வாத்தியார், “யோவ்... பருவமழை தொடங்கியிருக்குறதால... கால்நடைகளுக்கு ஆந்த்ராக்ஸ், கோமாரி, நுண்ணுயிரிநோய், சப்பை நோய்கள் தாக்காம இருக்கிறதுக்காக, கால்நடைப் பராமரிப்புத்துறை மூலமா இலவசமா தடுப்பூசிபோடப் போறாங்க. மாநிலம் முழுக்க முகாம் அமைச்சு, மொத்தம் நாலு வகையான தடுப்பூசிகள் போடப் போறாங்களாம். ஒவ்வொரு முகாம்லயும் ஒரு கால்நடை மருத்துவர், ஒரு ஆய்வாளர், ஒரு பராமரிப்பு உதவியாளர் இருப்பாங்களாம். விவசாயிகள் அழைச்சிட்டு வர்ற கால்நடைகளைப் பரிசோதிச்சுத் தடுப்பூசி போடுவாங்களாம். மறக்காம ஆடு மாடுகளைக் கூட்டிக்கிட்டுப் போய்த் தடுப்பூசியைப் போட்டுட்டு வந்துடு” என்றார்.

“போட்டுட்டாப் போச்சு. அதைவிட என்ன முக்கியமான வேலையிருக்கு. வருஷம் பூராவும் நமக்கு வருமானத்தைக் கொடுக்குற கால்நடைகளைப் பாதுகாக்க வேண்டியதுதான் நம்மோட கடமை” என்று ஏரோட்டி சொல்லத் தொடங்கும்போது, திடீரென வானம் இருண்டு தூறல்விழ ஆரம்பிக்க... “ஆடு மாடுகளைக் கொட்டகையில அடைச்சுட்டு வந்திடுறேன்” என்று சொல்லிக்கொண்டே எழுந்து ஓடினார் ஏரோட்டி. அத்தோடு அன்றைய மாநாடும் முடிவுக்கு வந்தது.