மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரம் செய விரும்பு! - 20 - பனை கொடுக்கும் பயன்கள்!

மரம் செய விரும்பு! - 20 - பனை கொடுக்கும் பயன்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
மரம் செய விரும்பு! - 20 - பனை கொடுக்கும் பயன்கள்!

சுற்றுச்சூழல்‘வனதாசன்’ ரா.ராஜசேகரன், தொகுப்பு: ஆர்.குமரேசன்

யன்பாட்டின்அடிப்படையிலும் பண்பாட்டின் அடிப்படையிலும் சில வகை மரங்களை வளர்த்து வந்துள்ளனர் நம் முன்னோர். அவற்றில் ஒரு மரத்தை மட்டும் பல வகைகளில் பயன்படும் என்று கருதி அனைத்து இடங்களிலும் நட்டுவைத்து வளர்த்துள்ளனர். அந்த மரம்தான் தமிழகத்தின் பாரம்பர்ய மரமான பனை. இம்மரத்தை ‘பொதுநலத்தின் அடையாளம்’ என்றுகூடச் சொல்லலாம். ஏனெனில், அந்தக்காலத்தில் இம்மரத்தை நட்டவர்கள் யாரும் தங்களுக்காக நடவுசெய்யவில்லை. வருங்காலச் சந்ததிகளுக்காகத்தான் நடவுசெய்தனர். ஆனால், நகரமயமாக்கலில் பனைமரங்கள் பழங்கதைகளாகி வருவதுதான் வேதனை.

‘உச்சி சலசலக்கும், உடல் நீண்டு இருக்கும். நிறம் கருத்திருக்கும். நிமிர்ந்து பார்த்தால் கழுத்து வலிக்கும். அது என்ன?’ என்று கேட்கும் கரிசல்காட்டுக் குரலுக்கு, ‘காணாமல் போன பனை’ என்றுதான் பதில் சொல்ல வேண்டியுள்ளது. ‘பனங்காட்டு நரி, சலசலப்புக்கு அஞ்சாது’ என நெஞ்சு நிமிர்ந்து நின்ற பனங்காடுகளை, இன்றைக்குப் பார்க்க முடியவில்லை. இதை விவசாயத்துறையும் கண்டுகொள்வதில்லை, வனத்துறையும் கண்டுகொள்வதில்லை. காலுக்கடியில் இருக்கும் புதையலைப் புரிந்துகொள்ளாமல், உலகெங்கும் பிச்சையெடுத்த கதைக்கு நாம்தான் சிறந்த உதாரணம். பத்து சதுர மீட்டர் இடத்தில், ஆண்டுக்கு 200 லிட்டர் பதநீர், 10 ஓலைகள், ஒன்றரை கிலோ தும்பு, இரண்டரை கிலோ ஈர்க்கு என்று பலவற்றையும் அள்ளிக்கொடுக்கக்கூடிய மரம் பனை. சாப்பிடுவதற்குக் கிழங்கும், கோடைக்கு நுங்கும் பனைமரத்திலிருந்து கிடைக்கின்றன. பாசனம் செய்யாமலேயே, கரும்புக்கு இணையாகச் சர்க்கரை தரக்கூடிய மரம் பனை.

மரம் செய விரும்பு! - 20 - பனை கொடுக்கும் பயன்கள்!

பனையிலிருந்து இவ்வளவு பயன்கள் கிடைத்தாலும், அம்மரத்தை அழிப்பதில் உள்ள தீவிரம், வளர்ப்பதில் இல்லை என்பதுதான் உண்மை. பனைமரத்துப்பட்டி, பனங்குடி, பனையூர் என ஊர்ப் பெயர்களில் மட்டுமே தற்போது பனை வாழ்ந்துகொண்டிருக்கிறது. பண்டைய நாகரிகம், வரலாறு பேசும் அநேக நூல்கள் பனை ஓலையில் எழுதப்பட்டவையே. காகிதம் கண்டுபிடிப்பதற்கு முன்பே, பண்டைய தமிழர்கள் பனை ஓலையைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். அந்த வகையில் பனை, தமிழர்களின் வாழ்வில் ஓர் அங்கம்.

ஆண் பனையில் திரட்சியான தடிமனான பூந்தண்டு உருவாகும். இந்தப் பூக்களைத் துள்ளுப்பூக்கள் என்பார்கள். இவை மஞ்சள் நிற மகரந்தத்தை உதிர்த்து, காற்றிலே மிதக்கவிடும். அதேநேரம் பெண் பனையில் பூக்கள் குரும்பையாக உருவாகும். காற்றிலே மிதந்துவரும் மகரந்தம், குரும்பையில் விழுந்து மகரந்தச்சேர்க்கை நடைபெறும். பனையின் பூக்கும் காலம் இடத்துக்கு இடம் மாறுபடும். தொடர்ந்து பெண் பனைகளில் காய்கள் உருவாகும். அவை ஒன்று முதல் மூன்று கண்களை உடைய காய்களாக வளர்ச்சி பெறும்.

இளங்காய்கள் ‘நுங்கு’ எனப்படும். நுங்கு முற்றியவுடன் கொட்டைகளுடன் கனிந்து பழமாகும். ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் இப்பழங்கள் மரத்திலிருந்து உதிர்கின்றன.

மரம் செய விரும்பு! - 20 - பனை கொடுக்கும் பயன்கள்!

பனையின் இளம் ஓலைகளைக்கொண்டு பெட்டி, பைகள், பாய்கள், விசிறிகள், கூடைகள், பூக்கள், மாலைகள், தட்டிகள், தொப்பிகள் எனப் பல வகையான பொருள்கள் செய்யப்படுகின்றன. குடிசைத்தொழிலாக உற்பத்திசெய்யப்படும் இந்தப் பொருள்கள், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. தமிழகத்தில் ராமேஸ்வரம், கன்னியாகுமரி, ராமநாதபுரம், மகாபலிபுரம், கீழக்கரை, மணப்பாடு, பழவேற்காடு, மாத்தூர், காரைக்குடி ஆகிய ஊர்களில் பனைப்பொருள்கள் தயாரிக்கும் கைவினைக் கலைஞர்கள் இருக்கிறார்கள்.

ஈர்க்கு (குச்சிகள்)

ஓலைகளின் முதுகுப்புறத்திலுள்ள நரம்புகளுக்கு ஈர்க்குகள் என்று பெயர். ஒரு ஓலையிலிருந்து 50 முதல் 60 ஈர்க்குகள் கிடைக்கும். ஓர் ஆண்டில், ஒரு பனை மரத்திலிருந்து இரண்டரை கிலோ ஈர்க்குகள் கிடைக்கும். இதைக்கொண்டு முறம், தட்டு ஆகியவற்றைச் செய்யலாம். முற்றிய ஈர்க்குகள் துடைப்பம்செய்யப் பயன்படுகின்றன. மட்டைகளைத் தட்டி வெள்ளையடிக்கப் பயன்படுத்தலாம். ஓலைகளின் உட்பகுதிகளில் உள்ள நரம்புகளைக்கொண்டு காற்றோட்ட முள்ள கூடைகள் செய்யலாம். இக்கூடைகளில் வெங்காயம், காய்கறிகள், பழங்கள் போன்ற விளைபொருள்களைக் கெடாமல் எடுத்துச்செல்லலாம்.

பத்தல்

மட்டையை மரத்துடன் இணைத்துக் கொண்டிருக்கும் பகுதியை ‘பத்தல்’ என்பார்கள். இதை அடித்துச் சீவினால் பனந்தும்பு கிடைக்கும். இதை நீரில் ஊறப்போட்டால் வலுவாகும். தும்பைக் கொண்டு பல்வேறு வகையான ‘பிரஷ்’கள் செய்யலாம். தும்பு தயாரிக்கும்போது, ‘திப்பி’ என்ற கழிவுப்பொருள் கிடைக்கும். இதை எரிபொருளாகப் பயன்படுத்தலாம். நாகர்கோவில், கன்னியாகுமரி போன்ற ஊர்களில் திப்பிகள்மூலம் பொம்மைகளைச் செய்கிறார்கள்.

பன்னாடை

மரத்தில் பத்தலை ஒட்டி இருக்கும் சல்லடை போன்ற அகலமான பாகத்துக்கு ‘பன்னாடை’ என்று பெயர். இவற்றை இணைத்து மறைப்புத் தட்டிகள் செய்யலாம்.

மட்டை

பத்தலுக்கும் ஓலைக்கும் நடுவேயுள்ள காம்புப் பகுதியே மட்டை. இதன் இரு ஓரங்களும் கறுப்பு நிறத்தில் கூர்மையாக இருக்கும். கூர்மையான ஓரப்பகுதிகளைச் சிறிது மட்டைப் பகுதியுடன் சீவியெடுத்து ‘கறுக்கு’ என விற்பனை செய்கின்றனர். கூர்மைப் பகுதிகளை நீக்கிவிட்டு, கறுக்குகள்மூலம் நார் உற்பத்திசெய்ய முடியும். இந்த நார் மிகவும் வலுவாக இருக்கும். நார் எடுத்த பிறகு, எஞ்சிய பகுதி காகிதம் செய்யப் பயன்படுகிறது. பனை நாருக்கு வெளிநாடுகளில் தேவையிருப்பதால், அதிகளவில் ஏற்றுமதியாகிறது. கறுக்குகளை இணைத்து வேலியாகவும் பயன்பெறலாம். பாளைகளைச் சுற்றி மூடியிருக்கும் பகுதியை ‘பீலி’ என்பார்கள். இதை மொத்தமாகக் கட்டித் துடைப்பமாகப் பயன்படுத்தலாம். ஆண் பாளையின் பூந்தண்டு எரிபொருளாகப் பயன்படுகிறது. ஆண் பூக்கள் மருத்துவத்திலும் பயன்படுகின்றன.

பதநீர்

பருவ காலங்களில் ஆண் மற்றும் பெண் பாளைகளை இடுக்கி, நுனியில் சீவினால் அதிலிருந்து வடியும் இனிப்பான திரவமே பதநீர். இதை உட்புறம் சுண்ணாம்பு தடவிய மண்கலயத்தில் சேகரிப்பார்கள். இந்தக் கலயங்களை மரத்திலேயே கட்டி வைத்திருப்பார்கள். சுண்ணாம்பு தடவிச் சேகரித்தால் பதநீர். சுண்ணாம்பு தடவாமல் சேகரித்தால் அது புளித்து ‘கள்’ளாக மாறிவிடும். பதநீர், ஊட்டச்சத்து நிரம்பிய ஆரோக்கியப் பானம். கள், போதை தரும் பானம் என்பதால் இது தடை செய்யப்பட்டுள்ளது.

பனை வெல்லம்

ஏழரை லிட்டர் பதநீரைக் காய்ச்சினால் ஒரு கிலோ வெல்லம் கிடைக்கும். ஒரு மரத்திலிருந்து ஆண்டுக்கு 25 முதல் 60 கிலோ வரை வெல்லம் எடுக்கலாம். இது அருமையான உணவுப்பண்டம். மனித உடலுக்குத் தேவையான அனைத்து உலோகங்களும் இதில் இருக்கின்றன. தமிழ்நாட்டிலிருந்து ஆண்டுக்கு சுமார் 20 ஆயிரம் டன் பனைவெல்லம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பனை வெல்ல உற்பத்தியில் தமிழகத்துக்கு அடுத்த இடத்தில் மேற்கு வங்காளம் மாநிலம் உள்ளது.

மரம் செய விரும்பு! - 20 - பனை கொடுக்கும் பயன்கள்!

பனங்கற்கண்டு

பதநீரிலிருந்து சர்க்கரையுடன் கற்கண்டும் தயாரிக்கலாம். 100 லிட்டர் பதநீரிலிருந்து 5 கிலோ கற்கண்டு, 3 கிலோ சர்க்கரை, 8 கிலோ கழிவுப்பாகு (மொலாசஸ்) கிடைக்கும்.

நுங்கு, பனம்பழம்

20 வயதுடைய பனைமரம் ஆண்டுக்கு ஆறு முதல் பத்துக் குலைகள் வரை தள்ளும். இதன் மூலம் 50 முதல் 200 காய்கள் வரை கிடைக்கும். பனம்பழத்தை அப்படியே சாப்பிடலாம். சிலர் பழத்தைச் சுட்டு, வதக்கிச் சாறெடுத்தும் சாப்பிடுவார்கள். இதன் சாற்றை மாவுடன் பிசைந்து மணமுள்ள பணியாரம் தயாரிப்பதும் உண்டு. பனம் பழத்திலிருந்து ஸ்குவாஷ், ஜாம் போன்றவற்றையும் தயாரிக்கலாம். இதில், வைட்டமின் சி மற்றும் கால்சியம் ஆகியவை உள்ளன.

மரம் செய விரும்பு! - 20 - பனை கொடுக்கும் பயன்கள்!

பனங்கிழங்கு

பனங்கொட்டைகளை மேடான இடத்தில் நெருக்கமாக விதைத்து, கிழங்குகளை உற்பத்தி செய்வார்கள். கிழங்கை வேகவைத்து உண்ணலாம். பனங்கிழங்கிலிருந்து மாவும் தயாரிக்கலாம்.

பனைமரம்

பனை, நன்கு முற்றிட 80 ஆண்டுகள் ஆகும். மற்ற மரங்களைப்போல் வைரப்பகுதி, நடுப்பகுதியில் உருவாவதில்லை. பனையில் வைரப்பகுதி வெளிப்பகுதியில் உருவாகும். இந்த வைரப்பகுதி கனமாகவும் வலுவாகவும் இருக்கும். ஒரு கன மீட்டர் மரம், 850 முதல் 1,100 கிலோ வரை எடை இருக்கும். பனைமரத்தூணுக்கு அதிர்ச்சி தாங்கும் திறன் அதிகம். பனை மரச்சட்டங்கள் கரையான்களால்  எளிதில் அரிக்கப்படுவதில்லை.

கிராமங்களில் குளங்களைச் சுற்றிப் பனைமரங்களை நட்டு வைத்திருப்பார்கள். அது கரையைப் பலப்படுத்த, நம் முன்னோர்கள் கையாண்ட முறை. கரைகளில் பனைகளை விதைக்கும்போது பத்தடி இடைவெளியில் விதைக்க வேண்டும். ஆளுக்குப் பத்துப் பனை விதைகளை நட்டாலே... நம் மாநில மரம் காக்கப்படுவதோடு, நம்முடைய கொள்ளுப் பேரன்களுக்கு நுங்கும் பதநீரும் கிடைக்கும்.

- வளரும்

பனை நடுவோம்..!

பனைமரம் அழிவின் விளிம்பில் இருந்தாலும், சமீபகாலமாகப் பனைமரத்தைப் பற்றிய விழிப்பு உணர்வு அதிகரித்துவருகிறது. மீண்டும் மக்கள் பனை பொருள்களைத் தேடித்தேடி வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பனை நடவுப் பணியைத் தன்னார்வலர்கள் முன்னெடுத்துக் கொண்டு செல்கிறார்கள்.

பனையைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் இளைய தலைமுறையினரிடம் அதிகரித்து வருவது ஆறுதலான செய்தி. தன்னார்வலர்கள் மூலம் இந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட
50 ஆயிரம் பனை விதைகள் பல்வேறு இடங்களில் நடப்பட்டுள்ளன. பனையின் பயனைப் பள்ளிக் குழந்தைகளிடம் கொண்டுசென்றால், இன்னும் பல தலைமுறைகளுக்குப் பனைமரங்கள் தழைத்துச் செழிக்கும்.