மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: பஞ்சாப் ரகசியம்... பனியும் புகையும்!

மண்புழு மன்னாரு: பஞ்சாப் ரகசியம்... பனியும் புகையும்!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு: பஞ்சாப் ரகசியம்... பனியும் புகையும்!

மாத்தியோசிஓவியம்: ஹரன்

மீபத்துல பஞ்சாப் மாநிலத்துக்குப் போயிருந்தேன். ஜலந்தர் ரயில்வே ஸ்டேஷனைவிட்டு இறங்கினா, எதிர்ல இருக்கிற ஆட்கள் முகம்கூட தெரியாத அளவுக்கு, பனியும் புகையும் கலந்து இருந்தது. காலையில 10 மணிக்கு மேலதான் சூரியன் எட்டிப்பார்த்துச்சு. ஆனாலும், பனி விலகின மாதிரி தெரியல. அடிக்கிற குளிருக்குச் சூடா டீ குடிக்கலாம்னு ஓட்டலுக்குப் போனா, ஜம்போ டம்ளர்ல (அரை லிட்டர் இருக்கும். ஆனா, தண்ணியா இருந்துச்சு.) டீயைக் கொடுத்து அசர வெச்சாங்க. டீ குடிச்ச கையோடு ஜலந்தர்ல இருந்து, கபூர்தலாவுக்கு வண்டி ஏறினா, போற வழி முழுக்க நத்தைங்க மாதிரி வண்டிங்க நகர்ந்துகிட்டிருந்துச்சு.

கபூர்தலாவுல இருக்கிற சர்தார்ஜி நண்பரிடம் ஊருக்கு வந்து சேர்ந்த தகவலைச் சொன்னேன். வழக்கமா பஞ்சாபி விவசாயிங்க, மளிகைக் கடைக்குச் சர்க்கரை வாங்கப் போனாலும், டிராக்டரை எடுத்துக்கிட்டுதான் போவாங்க. ஆனா, இந்தமுறை டிராக்டரைப் பார்க்கிறது அபூர்வமா இருந்துச்சு. அந்தப் பஞ்சாபி நண்பரும் மோட்டார் சைக்கிள்ல வந்து, தன்னோட கிராமத்துல இருக்கிற வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போனாரு. ஜம்போ டம்ளர்ல அருமையான டீயும் சூடான சப்பாத்தியும் பரிமாறினவருகிட்ட “வழக்கத்தைவிட அளவுக்கு அதிகமா பனி+புகைமூட்டம் இருக்குது. பஞ்சாப்ல இருக்கிற புகைமூட்டம், டெல்லி வரையிலும் இருக்குதேனு...” பீடிகை போட்டுப் பேச்சை ஆரம்பிச்சேன்.

‘‘தமிழ்நாடு மாதிரி தண்ணீர் பஞ்சம், பஞ்சாப் மாநிலத்தில் கிடையாது. ஐந்து நதிகள் ஓடுவதால், இந்தப் பகுதிக்குப் பஞ்சாப் என்று பெயர் வந்தது.

மண்புழு மன்னாரு: பஞ்சாப் ரகசியம்... பனியும் புகையும்!

இந்த மாநிலத்தோட முதன்மைத் தொழில் விவசாயம்தான். விவசாயம் சம்பந்தமாக எந்தத் தொழில்நுட்பம் வந்தாலும், அதை உடனே எங்கள் பகுதியில் செயல்படுத்திப் பார்ப்போம். இதனால்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பசுமைப்புரட்சித் திட்டத்தைக் கொண்டு வந்துபோது, பஞ்சாப் விவசாயிகள் முதலில் ஆதரவு தெரிவித்தார்கள். அதன் கொடும் பலனை, இப்போது பலவிதமாக அறுவடை செய்துகொண்டிருக்கிறோம். பசுமைப்புரட்சியால் சூழ்நிலை மட்டுமல்ல, வாழ்வியலும் மாறிப்போய்விட்டது.

ஐம்பது ஏக்கர் வைத்துள்ள விவசாயி, டிராக்டர் வாங்கி விவசாயம் செய்யலாம். ஆனால், ஐந்து ஏக்கர் வைத்துள்ளவர்களுக்கும் கடன் கொடுத்து, டிராக்டர் வாங்கச் சொன்னார்கள். வீட்டுக்கு வீடு டிராக்டர் நின்றது. ஐந்து ஏக்கர் நிலத்தில் ஆண்டு முழுவதும் உழவு ஓட்டிக் கொண்டிருக்க முடியுமா? லட்சக்கணக்கில் வாங்கிய வங்கிக் கடனால், வட்டி குட்டிப் போட்டுப் பெருகியது.

சொத்தை வித்துக் கடனை அடைக்கும் நிலைக்குப் பல விவசாயிகள் தள்ளப்பட்டார்கள். இந்தப் பாதிப்புக்குப் பிறகுதான் புத்தி வந்தது. உடனே, எல்லோரும் மாறிவிட்டார்கள் என்று நினைத்துவிட வேண்டாம். கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறார்கள். இப்போது, விவரம் தெரிந்த விவசாயிகளின் வீடுகளில் பவர் டில்லர்கள், களையெடுக்கும் சிறிய இயந்திரங்களை வாங்கி வைத்துள்ளோம். இதுவே, சிறு குறு விவசாயிகளுக்குப் போதுமானது. இதுபோன்ற சிறிய கருவிகளின் விலையும் குறைவாக உள்ளது. டிராக்டர்கள் வந்த பிறகு, மாடு வளர்ப்பு குறைந்து போனது. இதனால், நெல், கோதுமை வைக்கோலின் அருமை மறந்துபோனது.

காலையில் பனிமூட்டம் அதிகமாக இருந்ததை அனுபவித்திருப்பீர்கள். எங்க மாநில விவசாயிகள் எரிக்கும் விவசாயக் கழிவுகளும் புகையும் உங்களை எரிச்சல் அடைய வைத்திருக்கும். ஆனால், இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகள் நெல்லின் வைக்கோல், இலை தழைகளை எரிக்கமாட்டோம். அதைப் பயனுள்ள வகையில் பயன்படுத்திவருகிறோம். காலையில் டீ குடித்திருப்பீர்கள். ஜம்போ டம்ளர் நிறைய டீ குடித்திருந்தாலும், தண்ணீரைக் குடித்ததுபோல இருந்திருக்கும். ஏன் தெரியுமா? இங்குள்ள விவசாயிகள் மாடுகளுக்குப் பசுந்தீவனங்களை மட்டுமே  கொடுக்கிறார்கள். உலர் தீவனங்களான வைக்கோல், சோளத்தட்டை... போன்றவற்றைக் கொடுப்பதில்லை. இதனால், மாடுகள் லிட்டர் கணக்கில் பால் கொடுத்தாலும், அதில் கொழுப்புச்சத்து குறைவாக இருக்கிறது.

மண்புழு மன்னாரு: பஞ்சாப் ரகசியம்... பனியும் புகையும்!

பாலில் கொழுப்புச்சத்து குறைவாக இருந்தால், தண்ணீர்போல நீர்த்துப்போய் இருக்கும். ஆனால், எங்கள் மாடுகளுக்குப் பசுந்தீவனங்களுடன், உலர் தீவனங்களையும் கலந்து கொடுக்கிறோம். இதனால், எங்கள் வீட்டு டீயின் சுவை தூக்கலாகவே இருக்கும். மாடுகளுக்குச் சிறந்த தீவனமாகவும் மண்ணுக்கு நல்ல உரமாகவும் பயன்படும் வைக்கோல் மற்றும் இலை தழைகளை முறையாகப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு நஷ்டம் வரவே வராது. பஞ்சாப் விவசாயிகள் பசுமைப்புரட்சியிலிருந்து மீண்டு, இயற்கை விவசாயத்துக்குத் திரும்பும் காலம் வந்துகொண்டிருக்கிறது. அப்போது, பனி மட்டும்தான் இருக்கும், புகையிருக்காது ஜி’’னு சொல்லி முடிச்சாரு, அந்த சர்தார்ஜி.