மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: லட்ச ரூபாய் செலவில்... சம்பங்கி தந்த அனுபவப் பாடம்!

மண்புழு மன்னாரு: லட்ச ரூபாய் செலவில்...  சம்பங்கி தந்த அனுபவப் பாடம்!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு: லட்ச ரூபாய் செலவில்... சம்பங்கி தந்த அனுபவப் பாடம்!

மாத்தியோசிஓவியம்: ஹரன்

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் பக்கத்துல இருக்கிற கிராமத்துல, தெரிஞ்ச நண்பர் விவசாயம் செய்யுறாரு. சென்னையில பெரிய கம்பெனியில வேலை பார்த்தாலும் விவசாயம் மீதுள்ள ஆர்வத்துல, இயற்கை விவசாயம் செய்துகிட்டிருக்காரு. சனி, ஞாயிற்றுக்கிழமைகள்ல வயல்ல இறங்கி வேலையும் பார்க்கிறாரு. இதனால, இவங்க நண்பர்கள் மத்தியில ‘வீக் எண்டு விவசாயி’னு இவரைச் செல்லமா அழைக்கிறாங்க. சமீபத்துல, அந்த இளைஞர்கிட்டயிருந்து செல்போன் அழைப்பு வந்தது, ‘‘மன்னாரு ஐயா, என்னோட தோட்டத்துக்கு ஒரு எட்டு வந்துட்டுப் போங்கன்னு அழைச்சாரு. நான் சொல்லப்போற தகவல் எல்லோருக்கும் பாடமா இருக்கும். ஊரைக்கூட்டிச் சொல்றதைவிட, உங்ககிட்டச் சொல்லிட்டா, அது நாடு முழுக்கப் பரவிடும்’’னு பீடிகை போட்டுப் பேசினாரு.

நானும் ஒரு நல்ல நாள்ல, அந்த இளைஞரோட தோட்டத்துக்குக் கிளம்பிப் போனேன். இயற்கையில விளைஞ்ச பப்பாளிப் பழத்தை வெட்டிச் சாப்பிடக் கொடுத்திட்டு, பேசத் தொடங்கினாரு அந்த இளைஞர்.

‘‘நம்மாழ்வார் ஐயா, ‘மரங்களை வளர்க்கக் கூடாது; காடுகளைத்தான் வளர்க்கணும்’னு சொல்லியிருக்காரு. அதன்படி இந்த நிலத்தைக் காடுபோல உருவாக்கிட்டிருக்கேன். ஒரு வருஷத்துக்கு முன்னாடி, மரப்பயிர்களுக்கிடையில சம்பங்கியை ஊடுபயிரா சாகுபடி செய்யுற வேலையில இறங்கினேன்.

திருவண்ணாமலையில் உள்ள விவசாயி ஒருத்தர்கிட்ட, 50 சென்ட் நிலத்துக்குத் தேவையான விதைக்கிழங்கு வாங்கினேன். விதைக்கிழங்கை வாங்கினதோடு, என் வேலையை மட்டும் பார்த்திருக்கணும். அதை விட்டுட்டுச் சம்பங்கி விதைக்கிழங்கை எப்படி நடவுசெய்யலாம்னு ஆர்வக்கோளாறுல கேட்டேன். அந்த விவசாயி பல விதமான ஆலோசனைகளைச் சொன்னாரு. எதுவுமே, நான் கேள்விப்பட்ட மாதிரியே இல்ல. சரி, இவ்வளவு விவரமா பேசறாரே... நிச்சயம் இவர் சொல்ற தொழில்நுட்பம் சரியாத்தான் இருக்கும்னு நினைச்சேன். அந்தப் புண்ணியவான், சொன்னபடி தென்னைநார்க் கழிவை மரக்காணத்திலயிருந்து, ஒரு லாரி நிறைய ஏத்திக்கிட்டு வந்தோம். இதுக்கு மட்டுமே சுமார் 20 ஆயிரம் ரூபாய் செலவானது.

சம்பங்கி நடவுசெய்த கையோடு, அந்தத் தென்னைநார்க் கழிவை 50 சென்ட் நிலம் முழுக்க மூடாக்குப் போட்டுவிட்டோம். ‘இப்படி மூடாக்குப் போடறது மூலமா, களை எடுக்கிற வேலை மிச்சமாகும், தண்ணியும் குறைவா செலவாகும், தென்னை நாரானது மட்கி உரமாவும் மாறும்’னு சொன்னாரு அந்தத் திருவண்ணாமலை விவசாயி.

மண்புழு மன்னாரு: லட்ச ரூபாய் செலவில்...  சம்பங்கி தந்த அனுபவப் பாடம்!

அடடே அடடேன்னு... அவர் சொன்னதை வேதவாக்க எடுத்துக்கிட்டுச் செய்தேன். ஒரு மாசம், ரெண்டு மாசம்னு கடந்து, கடைசியில ஆறு மாசம் கழிந்தும் சம்பங்கிச் செடியில பூவே வரல. செடியும் ஏதோ நோய் வந்த மாதிரி இருந்துச்சு. திரும்பவும், அந்தத் திருவண்ணாமலை விவசாயிக்கு போன் போட்டேன். உயிர் பூஞ்சணக் கொல்லிகளை ஊறல்போட்டு, தண்ணியில கலந்து விடுங்கனு, வாய்க்கு வந்ததை அடிச்சுவிட்டாரு. அதையும் செய்தேன். இதுக்குள்ள பத்து மாசம் ஓடிப்போயிடுச்சு. அந்த 50 சென்ட் சம்பங்கி நிலத்துல, அரைக்கிலோ பூ கிடைக்கிறதே அதிசயமா இருந்துச்சு. எல்லா செலவையும் கூட்டிக் கழிச்சு பார்த்தா, ஒரு லட்ச ரூபாய்க்குப் பக்கமா வந்துடுச்சு.

சம்பங்கிச் சாகுபடியில தவறு நடந்திருக்குன்னு, மண்டைக்குள்ள உரைக்க ஆரம்பிச்சது. அந்தச் சமயத்துல இயற்கை விவசாயத்துல பழம் தின்னு கொட்டை போட்ட முன்னோடி விவசாயி, குடும்ப நிகழ்ச்சிக்கு வந்தாரு. சம்பங்கிச் சாகுபடியின் சோகக் கதையை அவர்கிட்டே சொன்னேன். ‘தேங்காய் நாரை நிலத்துக்கு எப்போதும் நேரடியா பயன்படுத்தக் கூடாது. தேங்காய் நாரிலுள்ள உப்புக்களோட செறிவு, அளவுக்கு அதிகமான லிக்னின்.... எல்லாம் சேர்ந்து பயிரோட வளர்ச்சியைப் பாதிக்கும். இ.சி (EC)னு சொல்ற எலெக்ட்ரிகல் காண்டக்டிவிட்டி (Electrical Conductivity)யைக் குறைக்க, தென்னை நாரைப் பலமுறை தண்ணீரில் அலசி எடுக்கணும்.

தென்னைநார்க் கட்டிகளை உருவாக்கும்போது, தண்ணியில பலமுறை அலசி, உப்புத் தன்மையைக் குறைச்சுத்தான் கொடுக்கிறாங்க. சில வெளிநாட்டுக் கம்பெனிங்க, தென்னை நார்க்கட்டிகளைத் தண்ணில சுத்தம் செய்து, உப்புத் தன்மை இல்லாமத்தான் ஏற்றுமதி செய்யணும்னு கட்டுப்பாடும் விதிச்சிருக்காங்க.

நீங்கள், சம்பங்கிச் சாகுபடி செய்யும்போது, தென்னை நார்க்கழிவை மூடாக்கா போட்டதுதான், சம்பங்கிச் சாகுபடி பாதிக்கப்பட்டதுக்கு முக்கியக் காரணம். அதனால, அந்த நிலத்துல நெல் பயிருக்குத் தண்ணி நிறுத்தி வைக்கிற மாதிரி, தண்ணிக்கட்டி வெச்சு வடிச்சிவிடுங்க. இதுபோல மூணுமுறை செய்யும்போது தென்னைநார்க் கழிவு மூலம் உருவான உப்புத்தன்மை மண்ணுல குறைஞ்சிடும். அப்புறம் புதுசா சம்பங்கிச் சாகுபடி செய்யுங்க. அருமையா மகசூல் கொடுக்கும்’னு சொன்னாரு.

அடுத்த நாளே, அந்த வேலையில இறங்கினேன். இந்தமுறை நிறைய இயற்கை உரம், இ.எம் திரவம்னு சம்பங்கி வயலுக்குக் கலந்து கட்டிக் கொடுத்தேன். இப்போ நல்லா பூ பூக்கத் தொடங்கிடுச்சு. என்னோட ஒரு லட்ச ரூபாய் நஷ்டம் வேறு யாருக்கும் வந்திடக் கூடாது. என்னோட நஷ்டம் மத்த விவசாயிகளுக்குப் பாடமா இருக்கட்டும்’’னு கையெடுத்துக் கும்பிட்டபடி சொன்னாரு அந்த ‘வீக் எண்டு விவசாயி’.