நீங்கள் கேட்டவை - இயற்கை விவசாயத்துக்கு ஏற்றது - விசைத் தெளிப்பானா, கைத்தெளிப்பானா?

புறாபாண்டி, படங்கள்: வீ.சிவக்குமார்
‘‘நகரத்திலிருந்து கிராமத்துக்கு வந்து இயற்கை முறையில் விவசாயம் செய்யத் தொடங்கியுள்ளோம்.

இயற்கை விவசாய நுட்பங்கள் மற்றும் உயிர் உரங்கள், பூஞ்சணங்கள் குறித்த விவரங்களைச் சொல்லுங்கள்?’’
கே.சுப்புலட்சுமி, புவனகிரி.
கோயம்புத்தூரில் உள்ள மத்தியக் கரும்பு இனப்பெருக்கக் கழகத்தின் ஓய்வுபெற்ற மூத்த விஞ்ஞானி முனைவர் எஸ்.ஈஸ்வரமூர்த்தி பதில் சொல்கிறார். ‘‘உலகமே இயற்கை விவசாயத்தை நோக்கிப் பயணம் செய்துகொண்டிருக்கிறது. இயற்கை விவசாயத்தைக் கொஞ்சம் அறிவியல் பார்வையில் தெரிந்துகொண்டால், நாம் எதிர்பார்க்கும் விளைச்சலை எடுக்க முடியும். இயற்கை விவசாயம் செய்பவர்கள், கைத்தெளிப்பான் மூலம்தான் பூச்சிவிரட்டி மற்றும் இடுபொருள்களைத் தெளிக்க வேண்டும். ரசாயனப் பூச்சிக்கொல்லியைப் புகைபோலத் தெளிப்பார்கள். ரசாயனப் பூச்சிக்கொல்லிகளில் தொடுநஞ்சு, ஊடுருவும் நஞ்சு என்று இரண்டு வகை உள்ளன. இந்த நஞ்சுக்குத் தக்கபடி தெளித்தால்போதும். ஆனால், இயற்கைப் பூச்சிவிரட்டியை ‘பவர் ஸ்பிரேயர்’ என்று சொல்லப்படும் ‘விசைத் தெளிப்பான்’மூலம் புகைப்போலத் தெளித்தால் பலன் குறைவாகத்தான் கிடைக்கும். விசைத் தெளிப்பானில் நாசிலை மாற்றி, தண்ணீர் தெளிப்பது மாதிரியும்கூடப் பயன்படுத்தலாம். ஆனாலும், கைத்தெளிப்பான் அளவுக்குப் பலன் கொடுக்காது. இயற்கைப் பூச்சிவிரட்டி செடி முழுவதும் நனைய வேண்டும். அதாவது, செடிகள் குளித்ததுபோல இருக்க வேண்டும். அப்போதுதான், பூச்சி மற்றும் நோய்கள் கட்டுப்படும். எனவே, இயற்கை விவசாயம் செய்பவர்கள் கைத்தெளிப்பானைப் பயன்படுத்துவது நல்லது.

இயற்கைப் பூச்சிவிரட்டிகளைத் தெளிக்க மாலை நேரமே ஏற்றது. சூரிய ஒளிபட்டால், இயற்கைப் பூச்சிவிரட்டியின் வீரியம் குறையும். இதனால், மாலை நேரத்தில் மட்டுமே பூச்சி விரட்டியைத் தெளிக்க வேண்டும். பொதுவாக நன்மைசெய்யும் பாக்டீரியா, பூஞ்சணம், வைரஸ்... போன்றவை நம் நிலத்தில் இருந்து கொண்டே இருக்க வேண்டும். இவை நிலத்தில் தங்கியிருக்க வேண்டுமென்றால், அவற்றின் உணவான கரிமப்பொருள் என்று சொல்லப்படும், மட்குகள் நிலத்தில் நிறைய இருக்க வேண்டும். கரிமப்பொருள் குறைவாக உள்ள நிலத்தில், பூச்சி மற்றும் நோய்கள் தாக்குவதற்குக் காரணம் நன்மை செய்யும் உயிர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதுதான். இதனால், பாதிப்பு அதிகமாக இருக்கும். அதேசமயம், கரிமப் பொருள்கள் அதிகமாக இருக்கும் நிலத்தில் பூச்சி மற்றும் நோய்கள் தாக்கினால், அதை நன்மைசெய்யும் உயிரிகள் கட்டுப்படுத்திவிடும். உயிர் உரங்கள் மற்றும் பூஞ்சணங்கள் பற்றியும், விவசாயிகள் அறிந்து கொள்வது அவசியமாகும். இவை பயிர்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பதுடன், வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படுகின்றன.
அசோஸ்பைரில்லம் என்பது உயிர் உரமாகும். இது காற்றிலுள்ள தழைச்சத்தைக் கிரகித்துப் பயிருக்குக் கிடைக்கச்செய்யும். அசோஸ்பைரில்லத்தைப் பயறு வகைப்பயிர்களைத் தவிர மற்ற அனைத்துப் பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். குறிப்பாக நெல், கம்பு, சோளம், பருத்தி மற்றும் காய்கறி பயிர்களுக்குப் பயன்படுத்தும்போது, மகசூல் 20 முதல் 40 சதவிகிதம் அதிகரித்து, மண்ணின் வளத்தைக் கூட்டும்

பணியினையும் செய்கிறது.
பாஸ்போ பாக்டீரியா... இதுவும் உயிர் உரம்தான். நிலத்தில் மணிச்சத்து உரத்தை மூட்டை மூட்டையாகக் கொட்டினாலும், அவை முழுமையாகப் பயிர்களுக்குக் கிடைக்காது. இப்படி மண்ணில் கரையாத நிலையில் உள்ள மணிச்சத்தை, பயிர்கள் எடுத்துக்கொள்ளும் வகையில் மாற்றிக் கொடுக்கும் பணியினைப் பாஸ்போ பாக்டீரியா செய்துவருகிறது. இதைப் பயன்படுத்துவதால், 30 சதவிகிதம் வரை கூடுதல் மகசூல் எடுக்க முடியும்.
சூடோமோனஸ்... பயிர்களைத் தாக்கும் பூஞ்சணங்கள் மற்றும் பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. பயிர்களில் நோயை உண்டாக்கும் பூஞ்சணங்களைக் கட்டுப்படுத்தி நோய் வராமல் பாதுகாக்கின்றது. வேர் அழுகல், கிழங்கு அழுகல், தண்டு அழுகல், வாடல் நோய், இலைப்புள்ளி நோய்கள், இலை கருகல்... போன்ற நோய்களைக் கட்டுப்படுத்தும் தன்மைகொண்டது. 10 லிட்டர் தண்ணீரில் 200 மில்லி சூடோமோனஸ் திரவம் மற்றும் 200 மில்லி புளித்த மோரைக் கலந்து தெளித்தால், வைரஸ் (நச்சுயிரி) நோயைக் கட்டுப்படுத்தலாம். பயிர்களின் வேர்களைத் தாக்கும் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்துகிறது.
வேம் (VAM- வெஸிகுலார் அர்பஸ்குலார் மைக்கோரைசா) என்பது பயிர்களுக்குத் தேவையான மணிச்சத்து, கந்தகம், துத்தநாகம் மற்றும் சுண்ணாம்புச் சத்தை மண்ணிலிருந்து கிரகித்துப் பயிர்களுக்குத்தரும் வேர் உட்பூஞ்சையாகும். இதை, காய்கறிப் பயிர்கள், பழவகைகள், மரக்கன்றுகள்,தென்னை, மலைத்தோட்டப் பயிர்கள் மற்றும் எல்லா வகை நாற்றங்கால் பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.
வேரைத் தாக்கும் பூஞ்சண நோய்களிலிருந்தும் பயிரைப் பாதுகாக்கும். இதைப் பயன்படுத்துவதால், 15 சதவிகிதம் வரை மகசூல் அதிகரிக்கும். வறட்சியைத் தாங்கும் தன்மையும் பயிர்களுக்குக் கொடுக்கக் கூடியது. டிரைக்கோடெர்மா விரிடி... பயிர்களில் மண், நீர், விதையின் மூலம் பரவும் அழுகல் மற்றும் வாடல் நோய்களைக் கட்டுப்படுத்தும் உயிர் பூஞ்சணக்கொல்லியாகும்.
நோய்களை உண்டாக்கும் பூஞ்சணங்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி, வேருக்குப் பாதுகாப்புக் கவசமாக அமைகின்றது. இதை அனைத்துப் பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.
பயிர்களில் உண்டாகும் வேரழுகல், நாற்றழுகல், வாடல் நோய்களைக் கட்டுப்படுத்தும் தன்மைகொண்டது.
டிரைக்கோகிரமா முட்டை ஒட்டுண்ணி... இது குளவி இனத்தைச் சேர்ந்தது. பயிர்களுக்குத் தீமைசெய்யும் பூச்சியின் முட்டைக் கருவைத் தின்றுவிடும். அதை முட்டைப் பருவத்திலே அழிப்பதால் பயிர்களில் சேதம் ஏற்படுவது தடுக்கப்படும். இந்த ஒட்டுண்ணியை நெல், கரும்பு, பருத்தி, காய்கறிப் பயிர்கள், பயறு வகைகள் மற்றும் மானாவாரிப் பயிர்களில் பயன்படுத்தலாம். டிரைக்கோகிரமா முட்டை ஒட்டுண்ணியைக் குருத்துப் புழு, இளங்குருத்துப்புழு, இடைக்கணுப்புழு, தண்டுப்புழு, காய்த்துளைப்பான் மற்றும் அமெரிக்கன் காய்ப்புழு போன்ற புழுக்களின் முட்டைப் பருவத்தைக் கட்டுப்படுத்தும் தன்மைகொண்டது.
இந்த முட்டை ஒட்டுண்ணியை ஏக்கருக்கு 5 மில்லி அட்டை பயன்படுத்தலாம். 1 மில்லி அட்டையிலிருந்து சுமார் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் குளவிகள் வரை பொரித்து வெளிவரும்.
மேலும், பெசிலியோ மைசிஸ் என்ற பூஞ்சணம், நூற்புழுவைக் கட்டுப்படுத்தும். ஏக்கருக்கு 2 கிலோ போதுமானது. 100 கிலோ தொழு உரத்தில் கலந்து பயன்படுத்தலாம். பவேரியா பேசியானம் என்ற பூஞ்சணத்தை 10 லிட்டர் தண்ணீருக்கு 100 கிராம் என்ற அளவில் கலந்து தெளித்தால் காய்ப்புழு, இலையை உண்ணும் புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.
இப்படி இயற்கை இடுபொருள்கள், பூச்சி விரட்டிகள், நன்மைசெய்யும் பூஞ்சணங்கள் நிறைய உள்ளன. எல்லாவற்றுக்கும் இயற்கை இடுபொருளைக் கடையில் வாங்கித்தான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் கிடையாது. நம் விவசாயிகள் தயாரிக்கும் பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம்.. போன்ற இடுபொருள்களில் நன்மைசெய்யும் நுண்ணுயிர்கள் ஏராளமாக உள்ளன. தேடுதலும், ஆர்வமும் இருந்தால் இயற்கை விவசாய நுட்பங்கள் மூலம் இயற்கை விவசாயத்தில் வெற்றி பெற முடியும்.’’
விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக் கொண்டிருக்கிறார்.

உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்குத் தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும்,
99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.