மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரம் செய விரும்பு! - 21 - ‘மேதகு’ மேற்குத் தொடர்ச்சி மலை...

மரம் செய விரும்பு! - 21 - ‘மேதகு’ மேற்குத் தொடர்ச்சி மலை...
பிரீமியம் ஸ்டோரி
News
மரம் செய விரும்பு! - 21 - ‘மேதகு’ மேற்குத் தொடர்ச்சி மலை...

சுற்றுச்சூழல் ‘வனதாசன்’ ரா.ராஜசேகரன், தொகுப்பு: ஆர்.குமரேசன், படங்கள்: எல்.ராஜேந்திரன், வீ.சக்தி அருணகிரி

ந்தியாவின் பெருமை இமயமலை மட்டுமல்ல... ஆறு மாநிலங்களில் வானுயர விரவி நிற்கும் மேற்குத்தொடர்ச்சி மலையும்தான். இதை, இமயமலைக்கு அண்ணன் என்று சொன்னால்கூட மிகையில்லை. மேற்குத்தொடர்ச்சி மலையின் மேல்பகுதியில், லட்சக்கணக்கான ஆண்டுகளாக அரபிக்கடலில் இருந்து வீசிய காற்றும் வான் பொழிந்த மழையும் பட்டுப்பட்டு மழுங்கிக் காணப்படுகிறது. இந்த ஆதாரமே போதும், இந்த மலைத்தொடர் இமயமலைக்கு முன்பே உருவாகியிருக்கும் என்று சொல்வதற்கு. அதனால்தான் இதை அண்ணன் என்று குறிப்பிடுகிறேன். இந்தியத் துணைக்கண்டத்தின் மேற்குப்பகுதியில் அரபிக்கடலுக்கு அருகே அமைந்துள்ள மலைத்தொடரே மேற்குத்தொடர்ச்சி மலை.

இது, கிட்டத்தட்ட 1,600 கிலோமீட்டர் தூரம் நீண்டுள்ளது. இம்மலைத்தொடர், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களின் எல்லையில் உள்ள தபதி (Tapti) ஆற்றுக்குத் தெற்கே துவங்கி... மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்கள் வழியாக நீண்டு, கன்னியாகுமரியில் முடிவடைகிறது.

மரம் செய விரும்பு! - 21 - ‘மேதகு’ மேற்குத் தொடர்ச்சி மலை...


தபதி நதியின் முகத்துவாரத்திலிருந்து (21 டிகிரி வடக்கு அட்சரேகை) தென்னிந்தியாவின் நுனிப்பகுதி வரை (8 டிகிரி வடக்கு அட்சரேகை) நீண்டு செழிக்கும் இம்மலைத்தொடரில், பாலக்காடு கணவாய் அருகே சிறிது இடைவெளி உள்ளது. இம்மலைத்தொடர், இந்திய நிலப்பரப்பில் 5 சதவிகித அளவில் உள்ளது. கிழக்கு மலைத்தொடரும் மேற்கு மலைத்தொடரும் சந்திக்கும் இடத்திலுள்ள தொட்டபெட்டா சிகரம், 2,637 மீட்டர் உயரத்தில் எழுந்து நிற்கிறது. பாலக்காடு கணவாய், மேற்குத்தொடர்ச்சி மலையைச் சுமார் 30 கிலோமீட்டர் தூரம் வரை பிரித்து வைத்தாலும், மீண்டும் ஆனைமலை-பழநிமலைத் தொடராய் வளர்ந்து, உயர்ந்து

மரம் செய விரும்பு! - 21 - ‘மேதகு’ மேற்குத் தொடர்ச்சி மலை...

ஆனைமுடி சிகரத்தை உருவாக்கியுள்ளது. இதுவே தென்னிந்தியாவின் உயரமான சிகரம். இம்மலைகள் சுமார் ஆறாயிரம் அடி உயரத்திலிருந்து தமிழகச் சமவெளிகளுக்கு வனக்கொடைகளை வாரி வழங்கியிருக்கின்றன.

மத்தியப்பகுதியில் ஏலமலை, தேவர்மலை, வருஷநாடு, ஆண்டிப்பட்டி மலைகளும் சேர்ந்து கம்பம் பள்ளத்தாக்கை வளமாக்குகின்றன. தென் தமிழ்நாட்டில் அகத்தியர்மலை, மகேந்திரகிரிமலை, திருநெல்வேலி, குற்றாலம் மலைகள் சேர்ந்து... அப்பர் கோதையாறு, மணிமுத்தாறு, தாமிரபரணி ஆகிய ஆறுகளுக்கு நீராதாரமாய் அமைந்து தமிழ்நாட்டை வளப்படுத்துகின்றன. அதிக மழையும் அதிக தட்பவெப்பமும் கொண்ட பூமத்தியரேகைப் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில்தான், ‘பல்லுயிர்ப்பரவல்’ சிறப்பாக நடைபெற்றுவருகிறது. அத்தகைய சூழல் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அமைந்துள்ளதால், இங்கு மழைக்காடுகளும் பல்லுயிரினப் பெருக்கமும் இயற்கையாக அமைந்துள்ளன.

பூமியின் பரப்பில் இரண்டு சதவிகிதத்துக்கும் குறைவாகவே இந்த மழைக்காடுகள் இருக்கின்றன. இக்காடுகள், பலவிதமான தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் வாழ்விடங்களாக உள்ளன. உலகில் எங்கும் காணக்கிடைக்காத சில அபூர்வத் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் இம்மழைக்காடுகளில் உள்ளன. உலகின் 12 நாடுகள், மிகப்பெரிய பல்லுயிர்ப்பரவல் நாடுகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் இந்தியாவும் ஒன்று. இமயமலைத் தொடரின் கிழக்குப்பகுதியும் மேற்குத்தொடர்ச்சி மலையும்தான் இந்தப் பல்லுயிர்ப் பரவலுக்கு முக்கியக் காரணம்.

மேற்குத்தொடர்ச்சி மலைகளில் 490 மர வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 308 மர வகைகள் மட்டுமே காணக்கூடியவை. 75 பேரினங்களைச் சேர்ந்த 245 வகையான ஆர்கிட் தாவர வகைகளும் 1,500-க்கும் மேற்பட்ட இருவித்திலைத் தாவரங்களும் இங்குள்ளன. இம்மலைத்தொடரில், 12 வகையான பாலூட்டிகள், 89 வகையான ஊர்வன, 87 வகையான நிலநீர்வாழ்வன மற்றும் 104 வகையான மீன்கள் வாழ்கின்றன. இவற்றில் பல இம்மலைத்தொடரில் மட்டுமே வாழக்கூடியவை. சிங்கவால் குரங்கு, நீலகிரி லங்கூர், நீலகிரி வரையாடு, பறக்கும் அணில், மலபார் கிரே, ஹார்ன்பில் போன்றவை இம்மலைத்தொடரில் மட்டுமே உள்ள அரியவகைப் பிராணிகள். இங்குள்ள பூக்கும் தாவரங்களில் 205 தாவரங்கள் அழியும் தருவாயில் உள்ளன.

இம்மலைத்தொடர் தற்போது, ‘யுனெஸ்கோ’ அமைப்பின் உலகப் பாரம்பர்ய பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அரபிக்கடலில் இருந்து வரும் தென்மேற்குப் பருவக்காற்றைக் குளிர்வித்து, மொத்த மழைப்பொழிவில் 40 சதவிகிதத்தைத் தமிழ்நாட்டுக்கு அளிக்கிறது இம்மலைத்தொடர்.

மரம் செய விரும்பு! - 21 - ‘மேதகு’ மேற்குத் தொடர்ச்சி மலை...

இயற்கை நமக்களித்த கொடைதான் காடுகள். காடுகள் விலை மதிப்பிட முடியாத சொத்து. பூமியில் மனிதன் உள்பட பல உயிரினங்கள் வாழ்வதற்கு ஆதாரமாகக் காடுகள் இருந்து வருகின்றன. நாம், ஆக்ஸிஜனைச் சுவாசித்துக் கரியமிலவாயுவை வெளியிடுகிறோம். அதை மரங்கள் சுவாசித்து அனைத்து உயிர்களுக்கும் தேவையான ஆக்சிஜனை உற்பத்திசெய்கின்றன. இலவசமாகக் கிடைப்பதால், இதன் அருமை நமக்குத் தெரிவதில்லை. மனிதன் இல்லாமல் மரங்களால் வாழ முடியும். ஆனால், மரங்கள் இல்லாமல் மனிதனால் வாழமுடியாது.

ஆறுகள் அனைத்தும் மலைகளில்தான் உற்பத்தியாகின்றன. ஆக, மனிதனின் நீராதாரமாக இருப்பவை, மலைகளும் மழைக்காடுகளும்தான். விவசாயத்திலும் காடுகளின் பங்கு அளப்பரியது. காடுகளில் உள்ள எண்ணற்ற பறவைகள், தேனீக்கள், பூச்சிகள், புழுக்கள் விவசாயத்துக்கு உதவுகின்றன. நாம் பயிரிடும் பயிர்களோடு ஒப்பிடும்போது... காடுகளில் வளரும் அதே வகைப் பயிர்கள் அதிக வீரியமாக, சத்துகள் அடங்கியதாக இருக்கின்றன.

மலைகளில் இருக்கும் ஒவ்வொரு செடிக்கும் தனித்தனிக் குணங்களும் மருத்துவப் பயன்பாடுகளும் உள்ளன. அவற்றில் 40 சதவிகித அளவைத்தான் நாம் பயன்படுத்திவருகிறோம். இன்று தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் நவீன மருந்துகளுக்கு அடிப்படையான பொருள்கள், காடுகளில்தான் கிடைக்கின்றன.

மேற்குத்தொடர்ச்சி மலைப் பாதுகாப்பு குறித்த கஸ்தூரி ரங்கன் அறிக்கையில்... ‘மலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். மணல் குவாரிகள், சுரங்கப்பணிகள் தடை செய்யப்பட வேண்டும். 20 ஆயிரம் சதுரமீட்டருக்குமேல் கட்டுமானம் கூடாது. ‘வளர்ச்சி’ என்ற பெயரில்... அணை கட்டுதல், சாலை அமைத்தல், கல்வி நிறுவனங்கள் அமைத்தல் போன்ற அனைத்துவிதமான கட்டுமானப் பணிகளையும் தடைசெய்ய வேண்டும்’ என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால், அவற்றில் பெரும்பாலானவை இப்போது வரை அறிக்கையாக மட்டுமே இருப்பதுதான் வேதனை.

மரம் செய விரும்பு! - 21 - ‘மேதகு’ மேற்குத் தொடர்ச்சி மலை...

மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர், மூன்று மண்டலங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. முதல் மண்டலத்தில் 4,156 கிராமங்கள் அடங்கியுள்ளன. இவற்றில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய எட்டு மாவட்டங்களில் உள்ள 135 கிராமங்களும் அடக்கம். இந்தப் பகுதிகளில், ‘புதிதாகப் பட்டா வழங்கக் கூடாது. வளர்ச்சித்திட்டங்கள் எதையும் செயல்படுத்தக்கூடாது. வன நிலங்களை வேறு பணிகளுக்குப் பயன்படுத்தக் கூடாது’ எனக் கடுமையான சட்டதிட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஆனால், அரசியல்வாதிகளும் அதிகார வர்க்கத்தினரும் இந்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்தவிடாமல் இருக்கிறார்கள்.

மலைப்பகுதியில் ஆயிரம் மீட்டர் உயரத்துக்குமேல் உள்ள பகுதிகளை, வன விலங்குகளுக்காகவும் தாவரங்களுக்காகவும் விட்டுவிட வேண்டும். நம் வீட்டுப் படுக்கை அறைக்குள் எப்படி விலங்குகளை அனுமதிக்க மாட்டோமோ... அதேபோல, அவற்றின் வீடுகளிலும் நாம் நுழையக் கூடாது. ‘கொடிய மிருகம்’ எனக் கானுயிர்களைச் சொல்லும் மனிதன், ஒரு நிமிடம் சிந்திக்க வேண்டும். விலங்குகளின் வாழ்விடத்தை, வாழ்வாதாரத்தை அபகரித்துக்கொள்ளும் நம்மை விடவா அவை கொடிய மிருகங்கள்?

நண்பர்களே, கடல் கடலாகவே இருக்கட்டும். மலை மலையாக இருக்கட்டும். காடு காடாகவே இருக்கட்டும். அப்போதுதான் மனிதன் மனிதனாக வாழ முடியும்.

‘ஞாயிறு போற்றுதும்; ஞாயிறு போற்றுதும்
திங்களைப் போற்றுதும்; திங்களைப் போற்றுதும்
மாமழை போற்றுதும்; மாமழை போற்றுதும்’


என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சிலப்பதிகாரத்தில் இயற்கையைப் பற்றிக் கடவுள் வாழ்த்து சொன்ன பழந்தமிழர்போல, மேற்குத்தொடர்ச்சி மலையைப் போற்றிப் பேணிக்காப்போம்.

- வளரும்