மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு: வியாபாரிகள் கூட்டு... பருத்தி விவசாயிகளுக்கு வேட்டு!

மரத்தடி மாநாடு: வியாபாரிகள் கூட்டு...  பருத்தி விவசாயிகளுக்கு வேட்டு!
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு: வியாபாரிகள் கூட்டு... பருத்தி விவசாயிகளுக்கு வேட்டு!

ஓவியம்: ஹரன்

“கன்னியாகுமரியில இருக்கிற எங்க சொந்தக்காரங்க ளோட வாழை மரங்கள் எல்லாம் புயலுக்கு சாய்ஞ்சு போயிடுச்சாம்” என்று வருத்தத்தோடு ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமியிடம் சொல்லிக் கொண்டிருந்தார் ‘ஏரோட்டி’ ஏகாம்பரம்.  இவர்கள் இருக்கும் இடத்தை நோக்கி அரக்கப் பறக்க வந்து சேர்ந்தார் ‘காய்கறி’ கண்ணம்மா. காய்கறி வந்தபிறகு, ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டைத் துவக்கி வைத்தார் வாத்தியார்.

“ஐக்கிய நாடுகள் சபையோட சுற்றுச்சூழல்துறை, காற்று மாசுபடுறதால வர்ற பாதிப்புகள் பத்தி ஓர் ஆய்வு செஞ்சிருக்கு. தெற்கு ஆசியாவில் மேற்கொண்ட இந்த ஆய்வுல, 1 கோடியே 22 லட்சம் குழந்தைகள், மாசுபட்ட காற்றால பாதிக்கப்படுறாங்கனு தெரிஞ்சுருக்கு.

இப்படி மாசுபட்ட காற்றைச் சுவாசிக்கிறப்போ, நுரையீரல் பாதிப்புக்குள்ளாகிறதோடு மூளை வளர்ச்சியும் பாதிக்கப்படுதுனு கண்டு பிடிச்சிருக்காங்க. அதனால, நச்சுக்காற்று வீசுகிற இடங்களுக்குக் குழந்தைகளை அழைச்சுட்டுப் போகக் கூடாதுனு சொல்லியிருக்காங்க” என்றார்.

மரத்தடி மாநாடு: வியாபாரிகள் கூட்டு...  பருத்தி விவசாயிகளுக்கு வேட்டு!

“அப்படின்னா நம்ம நாடு இருக்கிற நிலைமைக்குக் குழந்தை பிறந்ததுமே மூக்குல முகமூடியைப் போட்டுவிட்டாதான ஆகும்” என்ற ஏரோட்டி அடுத்த செய்தியை ஆரம்பித்தார்.

“தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலூகாவுல டி.சுப்பையாபுரம்னு ஓர் ஊர் இருக்கு. அங்க மானாவாரியா பாசிப்பயறு, உளுந்துனு சாகுபடி செய்றாங்க. இந்தப் பயிர்களுக்கு இடையில இருக்கிற களைகளை அழிக்கக் களைக்கொல்லிகளைத்தான் பெரும்பாலான விவசாயிகள் பயன்படுத்துறாங்க.

விளாத்திகுளம் யூனியன் ஆஃபிஸ் வளாகத்துல செயல்படுற ‘தூத்துக்குடி பயிர் உற்பத்தியாளர் கம்பெனி’யில் இருந்து... ‘பியூசி ப்ளஸ்’ங்கிற களைக்கொல்லியை ஒரு லிட்டர் 1,610 ரூபாய்னு வாங்கி, 19 விவசாயிகள் பயன்படுத்தியிருக்காங்க. மொத்தம் 152 ஏக்கர் நிலத்துல இதைத் தெளிச்சிருக்காங்க. வழக்கமா அஞ்சு நாள்ல இலைகள் கலர் மாறிக் காய ஆரம்பிச்சுடுமாம். ஆனா, தெளிச்சு 13 நாள் வரையிலும் பலன் இல்லாததால, அந்த 19 விவசாயிகளும் களைக்கொல்லி வாங்கின கடையிலபோய் கேட்டிருக்காங்க. ஆனா, கடைக்காரங்க கண்டுக்கவே இல்லையாம். அது போலியான களைக்கொல்லினு பாதிக்கப்பட்ட விவசாயிகள் சொல்றாங்க. இதுபத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகள் கலெக்டர்கிட்ட புகார் கொடுத்திருக்காங்க” என்றார் ஏரோட்டி.

“இயற்கை விவசாயத்துல களைகளை எப்படி மூடாக்காகப் பயன்படுத்தலாம்னு நம்மாழ்வார் ஐயா, பாலேக்கர் ஐயா மாதிரியானவங்க எத்தனையோ மேடையில பேசியிருக்காங்க. அப்படியிருந்தும் ஏன்தான் இப்படியெல்லாம் நடக்குதோ தெரியலை” என்று வருத்தப்பட்ட காய்கறிக் கூடையில் இருந்து, ஆளுக்கு இரண்டு பன்னீர் கொய்யா காய்களை எடுத்துக்கொடுத்தார்.

அதைச் சாப்பிட்டுக்கொண்டே ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார் வாத்தியார்.  “வனவிலங்குகளைக் கண்காணிக் கிறதுக்காகவும் வேட்டையாடுவதைத் தடுக்கிறதுக்காகவும் ‘டுரோன்’ங்கிற கேமராவைப் பயன்படுத்துறாங்க. இந்த கேமரா மூலமா காட்டுத்தீ பரவுறது, வன விலங்குகள் ஊடுருவுறது, வனவிலங்கு வேட்டை மாதிரியான விஷயங்களைக் கண்காணிச்சு தடுக்க முடியும். அது மாதிரியான அஞ்சு கேமராக்களைத் தமிழ்நாட்டுக்குக் கொடுத்திருக்கு மத்திய வன அமைச்சகம். அந்த கேமராக்களை ஓசூர், கூடலுார், கோயம்புத்தூர், கொடைக்கானல், திருநெல்வேலினு அஞ்சு ஊர்கள்ல சந்தேகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகள்ல பயன்படுத்துறாங்க. ஆனா, வனத்துறை ஊழியர்களுக்கு இந்தக் கருவிகளைக் கையாள்றதுக்கான பயிற்சி முறையாகக் கொடுக்கப்படலையாம். அதனால, தமிழ்நாட்டுல வனத்துறை ஊழியர்களுக்கு இது சம்பந்தமான பயிற்சி கொடுக்க முடிவு செஞ்சிருக்காங்க.

இந்த கேமராக்கள் மூலமா ராத்திரியும் பகல்லயும் கண்காணிச்சா, குடியிருப்புப் பகுதிகளுக்குள்ள யானைகள் வர்றதைத் தடுத்துட முடியும். காடுகளை ஆக்கிரமிக்கிறது, சட்டவிரோதமாகக் கட்டடங்கள் கட்டுறதுனு எல்லா விஷயங்களையும் கண்காணிச்சுத் தடுக்க முடியும். அதே நேரத்துல, தமிழகத்துல இருக்கிற காடுகளுக்கு அஞ்சு கேமராவெல்லாம் பத்தாது. அதிகளவுல கேமரா இருந்தாதான் வேலையாகும்னு வனத்துறை அதிகாரிகள் தரப்புல சொல்றாங்க” என்றார்.

அடுத்த செய்திக்குத் தாவிய ஏரோட்டி, “தமிழ்நாட்டுல சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்கள்ல பருத்தி அதிகமா விளையுது. இப்போ பருத்தி அறுவடைக் காலங்கிறதால மார்க்கெட்டுக்கு அதிகளவுல வரத்தாகிட்டிருக்கு. குறிப்பா, கூட்டுறவு விற்பனைச் சங்கம், அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு அதிகளவுல விவசாயிகள் பருத்தியைக் கொண்டுவர்றாங்க. ஆனா, விற்பனைக்கூடங்கள்ல வியாபாரிகள்தான் பருத்திக்கான விலையை நிர்ணயம் செய்றாங்களாம். வியாபாரிகள் கூட்டுச் சேர்ந்து சிண்டிகேட் போட்டுக்கிட்டு, குறைஞ்ச விலைக்குப் பருத்தியைக் கேக்குறாங்களாம். அதனால, பருத்திக்கு அரசாங்கமே விலை நிர்ணயம் செய்யணும்னு விவசாயிகள் எதிர்பார்க்கிறாங்க. ஒரு கிலோ பருத்திக்கு 70 ரூபாய் கிடைச்சாத்தான் கட்டுபடியாகுமாம். ஆனா, 55 ரூபாய்க்கு மேல வியாபாரிகள் விலை கொடுக்கிறதில்லையாம்” என்றார். “ரோடுகள்ல அங்கங்க ஓலைக்கொட்டான் வெச்சு, குறைஞ்ச விலைக்குக் கருப்பட்டி விக்கிறாங்கள்ல அதை வாங்கலாமா” என்று கேட்டார் காய்கறி.

“அதை வாங்கிடாத கண்ணம்மா. அந்த மாதிரி கருப்பட்டியில பெரியளவுல அயோக்கியத்தனம் பண்றாங்க. இயற்கை ஆர்வலர்கள் பலரும், இப்போ ஜீனியைத் தவிர்த்துட்டு நாட்டுச்சர்க்கரை, கருப்பட்டினு பயன்படுத்த ஆரம்பிச்சிருக்காங்க. அதனால, பனங்கருப்பட்டிக்குத் தேவை அதிகரிச்சுட்டே இருக்கு. ஆனா, அந்தளவுக்கு உற்பத்தி இல்லை.

இப்போ ஒரு கிலோ ஒரிஜினல் கருப்பட்டி கிட்டத்தட்ட முந்நூறு ரூபாய் அளவுல விற்பனையாகுது. ஆனா, இப்படி ரோடுகள்ல விக்கிறவங்க கிலோ நூறு ருபாய் அளவுல விலை வெச்சுக் கொடுக்குறாங்க. இந்த விலை எப்படிக் கட்டுபடியாகும்னு யோசிச்சுப் பார்க்கணும். ஒரு பொருளுக்குத் தேவை அதிகமாச்சுனா அதுல போலியானது வர ஆரம்பிச்சுடும்ல. அது மாதிரிதான் இதுவும்” என்றார்.

அந்த நேரத்தில் ‘சடசட’வெனத் தூறல் விழ ஆரம்பிக்க மூவரும் எழுந்து கொட்டகைக்குள் ஓடினர். அத்தோடு மாநாடும் முடிவுக்கு வந்தது.

விதைகள் பயிற்சி!

கோயம்புத்தூரில் உள்ள வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனத்தில் டிசம்பர் 14 மற்றும் 15-ம் தேதிகளில் ‘விதைகளைக் கையாளுதல் மற்றும் நர்சரி தொழில்நுட்பம்’ என்ற பயிற்சி நடைபெற உள்ளது. தேக்கு, சந்தனம், வில்வம், மலைவேம்பு உள்ளிட்ட தாய் மரங்களிலிருந்து விதைகளைத் தேர்ந்தெடுத்தல், விதை நேர்த்தி, விதைகளைக் கையாளும் முறைகள், நர்சரியில் மரக்கன்றுகள் உற்பத்தி, விதைப் பாதுகாப்பு, விதைகளில் பூச்சி மேலாண்மை, தரமான விதைகளுக்குச் சான்று வழங்குவது குறித்தான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. பயிற்சிக் கட்டணம் உண்டு.

தொடர்புக்கு, செல்போன்: 94871 69036