மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரம் செய விரும்பு! - 22 - காடுகள் காடுகளாகவே இருக்கட்டும்... மலைகள் மலைகளாகவே இருக்கட்டும்!

மரம் செய விரும்பு! - 22 - காடுகள் காடுகளாகவே இருக்கட்டும்...  மலைகள் மலைகளாகவே இருக்கட்டும்!
பிரீமியம் ஸ்டோரி
News
மரம் செய விரும்பு! - 22 - காடுகள் காடுகளாகவே இருக்கட்டும்... மலைகள் மலைகளாகவே இருக்கட்டும்!

சுற்றுச்சூழல்‘வனதாசன்’ ரா.ராஜசேகரன், தொகுப்பு: ஆர்.குமரேசன்

யற்கை பூமிக்குக் கொடுக்கும் கொடை மழை. வாராது வரும் அந்த மாமழையை நாம் முறையாகச்

மரம் செய விரும்பு! - 22 - காடுகள் காடுகளாகவே இருக்கட்டும்...  மலைகள் மலைகளாகவே இருக்கட்டும்!

சேமிப்பதில்லை. ‘மனிதர்களால் பயனிருக்காது’ எனத் தெரிந்த இயற்கை, மழையைச் சேகரிக்கும் பணியையும் தானே செய்துவருகிறது. பன்னெடுங்காலமாக அப்பணியைச் செய்துவருபவைதான் வனங்கள். குறிப்பாக ‘சோலைக்காடுகள்’ என அழைக்கப்படும் ‘வெயில் அறியா பொதும்புகள்’ மழை நீர் சேகரிப்புப் பணியை மிக அற்புதமாகச் செய்துவருகின்றன. இந்தச் சோலைக்காடுகளில் பெய்யும் மழை நீர், புல் மற்றும் சிறு செடிகளால் உறிஞ்சப்பட்டு, பிறகு கொஞ்சம் கொஞ்சமாகக் கசிந்து, சிற்றோடையாக மாறும். இப்படிக் காடுகளுக்குள் உருவாகும் சிற்றோடைகள்தான் அருவியாகவும், ஆறாகவும், வற்றாத ஜீவ நதிகளாகவும் உருவெடுக்கின்றன. இந்த நீராதாரத்துக்கான முக்கியக் காரணிகளில், சோலைக்காடுகளும் பெரும்பங்கு வகிக்கின்றன.

சாதாரணக் காடுகளுக்கும் சோலைக் காடுகளுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. பலவிதப் புற்கள், பூண்டுகள், வானுயர்ந்த மரங்கள், குத்துச் செடிகள், கொடிகள்... எனப் பலவிதமான தாவரங்கள் மண்டியிருக்கும் காடுகள்தான் சோலைக்காடுகள். இக்காடுகளில் வெயில் அதிகமாக இருக்காது. இங்கு நிலவும் சீதோஷ்ணநிலை பல்லுயிர் பெருக்கத்துக்கு மிகவும் ஏற்றது. மண் வளத்திலும் மழை வளத்திலும் உச்சபட்ச வளர்ச்சியடைந்த தாவரங்களின் தொகுப்புதான் சோலைக்காடுகள். ஒரு சோலைக்காடு உருவாக ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும். சோலைக்காடுகளில் மனித நடமாட்டமே இருக்காது. விலங்குகள் மட்டுமே சுதந்திரமாகச் சுற்றித்திரியும்.

மரம் செய விரும்பு! - 22 - காடுகள் காடுகளாகவே இருக்கட்டும்...  மலைகள் மலைகளாகவே இருக்கட்டும்!

தமிழ்நாட்டின் வனங்களில் சோலைக்காடுகள் தனிச்சிறப்புப் பெற்றவை. இவை மேற்குத் தொடர்ச்சி மலையில் மிக உயர்ந்த பகுதிகளிலும், அதிக மழைவளம் பெறும் பகுதிகளிலும், நல்ல வடிகால் வசதியுள்ள பகுதிகளிலும் காணப்படுகின்றன. சோலைக்காடுகள் 1935-ம் ஆண்டிலேயே ஹெச்.ஜி.சாம்பியன் (H.G.Champion) என்ற வனவியல் அறிஞரால் அறியப்பட்டு, வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவர்தான், இந்தியா, பர்மா (மியன்மர்) போன்ற நாடுகளில் உள்ள வனங்களை வகைப்படுத்தியவர்.

தமிழ்நாட்டில் ஆனைமலைக் குன்றுகளில் ‘டாப்சிலிப்’ அருகே காணப்படும் கரியன்சோலை, உலக அளவில் சிறந்த காடுகளில் ஒன்று. வெயில் நுழையாத அளவுக்கு அடர்த்தியாகவும் உயரமாகவும் மரங்களைக்கொண்டது. பல்வேறு உயிரினங்களைக்கொண்ட மிகுதியான உயிரிப் பன்மயம் கொண்டதாக உள்ளது. பசுமை மாறாக் காடுகளின் வகையைச் சேர்ந்தது.

இக்காடுகளைப் போலவே மலைச் சரிவுகளிலும், காற்றால் பாதிக்கப்படாத உயர்ந்த பகுதிகளிலும், மலைகளின் இடுக்குகளிலும், மண்வளத்தோடு வடிகால் வசதியுடைய பகுதிகளிலும் அடர்ந்த சோலைக்காடுகள் உள்ளன. இவற்றில் கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள மதிகெட்டான்சோலை, பாம்பார்சோலை, கூக்கால்சோலை ஆகியவை முக்கியமானவை. நீலகிரி மலைப்பகுதியில் உள்ள டைகர்சோலை, பியர்சோலை, தொட்டபெட்டாசோலை, படிக்கட்டுச்சோலை மற்றும் கோத்தகிரியில் உள்ள லாஸ்வுட் சோலை ஆகியவையும் முக்கியமான சோலைக்காடுகள். கன்னியாகுமரி பகுதியிலும் சோலைக்காடுகள் உள்ளன.

மரம் செய விரும்பு! - 22 - காடுகள் காடுகளாகவே இருக்கட்டும்...  மலைகள் மலைகளாகவே இருக்கட்டும்!

‘மலைப்பகுதியில் ஈரக்குளிர் பிரதேச காடுகள்’ என்ற வன வகையில், சோலைக்காடுகள் வகைப்படுத்தப் பட்டுள்ளன. இங்கு அதிகபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 9 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும். கொடைக்கானல் மலையில் பேரிஜம் ஏரி செல்லும் பாதையில், இருபக்கங்களிலும் மதிகெட்டான்சோலை அமைந்துள்ளது. இது, மிகவும் அடர்த்தியானது. இதற்குள் நுழைபவர்கள் இதன் பிரமாண்டத்திலும் அங்கு விளைந்து கிடக்கும் மூலிகைகள் மற்றும் புற்களிலிருந்து வரும் நறுமணத்திலும் மதிமயங்கி விடுவார்கள்.

இங்குள்ள மரங்களில் இருக்கும் சில பூச்சிகள் சுரக்கும் திரவங்களும் மதியை மயக்கும் மணமுடையவை. எனவே உள்ளே நுழைந்தால் பல்வேறு நறுமணங்களின் கலவையால், மதி மயங்கி, வெளியேற வழி தெரியாமல் உள்ளேயே சுற்றிச் சுற்றி வருவார்கள். சில நேரங்களில் இவர்களை மீட்கச் செல்லும் மீட்புக் குழுவினரும் மதிமயங்கிவிடுவது உண்டு. தற்போது, ஆங்காங்கே கேமராக்களை வைத்து, இக்காடுகளைக் கண்காணித்து வருகிறார்கள் வனத்துறையினர். பழநி மலையில் இருக்கும் முருகனின் சிலை நவபாஷணங்களைக் கொண்டு செய்யப்பட்டது. அந்தச் சிலையை வடித்த போகர் எனும் சித்தர், கொடைக்கானல் சோலைக்காடுகளில் இருந்துதான் மூலிகைகளைச் சேகரித்திருக்கிறார். இதேபோலப் பத்து மூலிகைகள்கொண்ட தச பாஷாணங்களின் கலவைமூலம், ஒரு முருகன் சிலையைப் போகர் வடித்திருக்கிறார். அச்சிலை, கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள பூம்பாறை கிராமத்தில் நிறுவப் பட்டுள்ளது.

சோலைக்காடுகளில் சுமார் அறுபது சதவிகித மூலிகைகள் மற்றும் அவற்றின் பயன்கள்தான் இதுவரை அறியப்பட்டுள்ளன. சித்தர்கள் சொல்லியிருக்கும் பல்வேறு அபூர்வ மூலிகைகள் இன்னும் அறியப்படாமல் உள்ளன. சோலைக்காடுகள் ஈரப்பதமாகவே இருப்பதால், எளிதில் தீப்பிடிப்பதில்லை. முற்காலத்தில் கொடைக்கானல் மற்றும் நீலகிரி மலைப்பகுதிகள் முழுவதுமே புல்வெளி மற்றும் சோலைக்காடுகளாகத்தான் இருந்துள்ளன.

ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகு, சோலைக்காடுகளும் புல்வெளிகளும் அழிக்கப்பட்டு... யூகலிப்டஸ், பைன், வாட்டில் போன்ற தாவரங்கள் நடப்பட்டுள்ளன. மலையில் இயற்கையாக விளைந்து வந்த தேக்கு மரங்கள் மற்றும் மிளகு, ஏலக்காய் போன்றவற்றைக் கொள்ளையடித்தனர் வெள்ளையர்கள். இப்படிப்பட்ட செயல்களால் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அழகே பாழ்பட்டுப் போய்விட்டது. காபி, தேநீர் ஆகியவற்றின் தேவைக்காகக் மலைகளில் இருந்த சோலைக்காடுகள் அழிக்கப்பட்டுவிட்டது. சோலைக்காடுகளை அழிக்க முடிந்த மனிதர்களால், எப்பாடுபட்டாலும் ஒரு சோலைக்காட்டை உருவாக்க முடியாது. இக்காடுகளை இயற்கையால் மட்டுமே உருவாக்க முடியும். சோலைக்காடுகள் அழிந்ததால்தான் வறட்சி தலைதூக்கிவருகிறது.

மரம் செய விரும்பு! - 22 - காடுகள் காடுகளாகவே இருக்கட்டும்...  மலைகள் மலைகளாகவே இருக்கட்டும்!
மரம் செய விரும்பு! - 22 - காடுகள் காடுகளாகவே இருக்கட்டும்...  மலைகள் மலைகளாகவே இருக்கட்டும்!

இருக்கிற சோலைக்காடுகளையாவது அழிக்காமல் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் நம் ஒவ்வொருவருக்கும் வர வேண்டும். அவற்றைக் காப்பது வனத்துறையின் கடமை மட்டுமல்ல, நம் ஒவ்வொருவருடைய கடமையும்கூட. இயற்கையை நேசிப்பவர்கள் அனைவரும் அதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

மலைகளும் காடுகளும் மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானவை அல்ல. அவற்றில் வாழும் கோடானுகோடி ஜீவராசிகளுக்கும் சொந்தமானவை. சுற்றுலா என்ற பெயரில் சோலைக்காடுகளுக்குச் செல்ல நேர்ந்தால், ஒரு விருந்தாளியைப்போல் சென்றுவிட்டு வர வேண்டும். அங்கு ஒரு புல்பூண்டுக்குக்கூடத் தொந்தரவு இல்லாமல் நம் நுழைதலும் வெளியேறுதலும் இருக்க வேண்டும். சுத்தமான காற்றும் தண்ணீரும் உங்கள் பேரக் குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், சோலைக்காடுகளைத் தொந்தரவு செய்யாதீர்கள்.

ஏற்கெனவே சில ஆண்டுகளுக்குமுன் ‘வாழ்க மரம்... வளர்க பணம்’ என்ற தொடர் மூலமாக உங்களுடன் தொடர்பிலிருந்தேன். கடந்த 21 இதழ்களாக ‘மரம் செய விரும்பு’ என்ற இந்தத்தொடர் மூலமாக... நமது பாரம்பர்ய மரங்கள், வனங்கள் குறித்து எழுத்து மூலமாக உங்களுடன் பயணிக்கும் வாய்ப்பை வழங்கியது, ‘பசுமை விகடன்’. இத்தொடரைப் படித்த பலர், மரம் வளர்ப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக என்னிடம் தெரிவித்துவருகிறார்கள். சில இடங்களுக்கு என்னை நேரில் அழைத்து மரக்கன்றுகளை நடவுசெய்ய வைத்தார்கள். இதுபோன்ற செயல்பாடுகள், எனக்குள் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தின.

நான் கல்லூரி நாள்களில் இருந்தே விகடன் வாசகன் என்றாலும், பசுமை விகடனின் வீச்சு என்னைப் பிரமிக்க வைக்கிறது. வெளிநாட்டில் இருந்து பலர் தொலைபேசி மூலமாகத் தொடர்புகொண்டு, என் கட்டுரை குறித்துப் பாராட்டுகிறார்கள். விளக்கங்களையும் ஆலோசனைகளையும் கேட்கிறார்கள்.

கடல் கடந்தும் சூழலுக்காகச் சேவையாற்றும் பசுமை விகடனுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இத்தனை இதழ்களாக என்னுடன் பயணித்த அத்தனை அன்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி. மரம் வளர்ப்பு தொடர்பாக எழும் சந்தேகங்களுக்கு என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். நான் கற்ற கல்வியையும் அனுபவத்தையும் உங்களிடம் சொல்லத் தயாராக இருக்கிறேன். இத்தொடரைப் படித்த ஒவ்வொருவரும் ஒரே ஒரு மரத்தையாவது நடவுசெய்ய வேண்டும் என்பது என் ஆசை.

மலைகள் மலைகளாகவே இருக்கட்டும், காடுகள் காடுகளாகவே இருக்கட்டும், கடல்கள் கடல்களாகவே இருக்கட்டும். முன்னேற்றம் என்ற பெயரில் தாயின் மார்பை அறுத்து எறிந்துவிட்டு, பவுடர் பாலைத் தேட வேண்டாம்.

வாழ்க மரங்கள்... வளர்க மரம் வளர்க்கும் எண்ணங்கள்!

நன்றி.

- நிறைவுற்றது.

தொடர்புக்கு,
வனதாசன் ரா.ராஜசேகரன்,
செல்போன்: 94424 05981.