மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை - வெட்டிவேர் பயிரிட்டால் நிலம் வளமாகுமா?

நீங்கள் கேட்டவை - வெட்டிவேர் பயிரிட்டால்  நிலம் வளமாகுமா?
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்கள் கேட்டவை - வெட்டிவேர் பயிரிட்டால் நிலம் வளமாகுமா?

புறாபாண்டி

நீங்கள் கேட்டவை - வெட்டிவேர் பயிரிட்டால்  நிலம் வளமாகுமா?

‘‘தற்போது, விவசாய நிலம் வாங்கி உள்ளோம். அந்த நிலத்தில் ஏற்கெனவே, அதிகமான அளவுக்கு ரசாயன உரங்கள்  பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த ரசாயன நஞ்சை, வெட்டிவேர் சாகுபடி செய்தால் எடுத்துவிடும் என்று கேள்விப்பட்டேன். இந்தத் தகவல் உண்மையா?’’

கே.குமரகுருபரன், வாலாஜாபாத்.


இந்திய வெட்டிவேர் அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர் சி.கே.அசோக்குமார் பதில் சொல்கிறார்.  ‘‘வெட்டிவேர் தமிழ்நாட்டுக்குச் சொந்தமான பயிர். அதை வெளிநாட்டினர் தலையில் தூக்கி வைத்துக்  கொண்டாடுகிறார்கள்.

நம் மக்களுக்கு இதன் மகிமை தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதிகபட்சமாக மண் அரிப்பைத் தடுக்கவும் கோடைக்காலத்தில் வெப்பத்தைத் தணிக்கவும் வெட்டிவேரைப் பயன்படுத்திவருகிறோம். ஆனால், வெட்டிவேரைத் தமிழ்நாட்டில் இருந்து, அமெரிக்காவுக்கு எடுத்துச்சென்ற ஆராய்ச்சியாளர்கள், மாசுபட்ட நிலத்தை வளமாக மாற்றுவதற்காக உபயோகப்படுத்துகிறார்கள். உலகம் முழுக்க இதைப் பரப்பி வருகிறார்கள். நிலத்தில் படிந்துள்ள பாதரசம், காட்மியம்... உள்ளிட்ட கடின உலோகங்களின் பாதிப்புகளைக்கூட வெட்டிவேர் உறிஞ்சி எடுத்துவிடுகிறது. ரசாயன உரம் தொடர்ந்து பயன்படுத்தப் பட்டதால் வளம் இழந்த நிலங்களையும், செழிக்க வைக்கும் தன்மை வெட்டிவேருக்கு உண்டு. நீங்கள் கேள்விப்பட்ட தகவல் உண்மைதான்.

தொழிற்சாலைக் கழிவு நீரால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட நிலங்களையும், மாசுபட்ட நிலத்தடி நீரினால் வளம் இழந்த நிலங்களையும் வளமாக்கும் வல்லமை, வெட்டிவேருக்கு உண்டு என்பதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

நீங்கள் கேட்டவை - வெட்டிவேர் பயிரிட்டால்  நிலம் வளமாகுமா?

உங்கள் நிலத்தின் பாதிப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பதைப் பொறுத்து, ஆறு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை, நிலத்தில் வெட்டிவேரைச் சாகுபடி செய்ய வேண்டும். இப்படிச் சாகுபடி செய்யப்பட்ட வெட்டிவேரை அறுவடைசெய்து விற்பனையும் செய்யலாம். இந்த வேர்மூலம் பொம்மைகள், பிரஷ்கள், வாசனைத் திரவியங்கள்... எனப் பலவிதமான பொருள்களைத் தயாரிக்க முடியும். தாய்லாந்து, வியட்நாம், சீனா... போன்ற நாடுகள் வெட்டிவேரை மக்களிடம் பரப்புவதற்காகப் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளன. வெட்டிவேர் சம்பந்தமாக உலக அளவில் நடைபெற்று வரும் ஆராய்ச்சித் தகவல்கள்
www.vetiver.org என்ற இணையதளத்தில்  கொட்டிக்கிடக்கின்றன. வெட்டிவேர் சாகுபடி செய்வதால், நல்ல வருமானமும் கிடைக்கும்; நிலமும் வளமாகும். முறையாகச் சாகுபடி செய்தால், ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை வருமானம் எடுக்க முடியும்.’’

தொடர்புக்கு, செல்போன்: 98844 65996.

நீங்கள் கேட்டவை - வெட்டிவேர் பயிரிட்டால்  நிலம் வளமாகுமா?

‘‘வாத்து வளர்க்க விரும்புகிறேன். இது குறித்த தகவல் எங்கு கிடைக்கும்?’’

எம்.நாகபூஷணம், வல்லம்.


கர்நாடக மாநிலம், பெங்களூருவில் செயல்பட்டுவரும் மத்தியக் கோழியின மேம்பாட்டு நிறுவனத்தின் விஞ்ஞானி பதில் சொல்கிறார்.

‘‘இந்தியாவில் கோழி வளர்ப்புக்கு அடுத்தபடியாக வாத்து வளர்ப்பு முக்கியமானதாக உள்ளது. கேரளாவை ஒப்பிடும்போது வாத்து இறைச்சி, வாத்து முட்டை குறித்த விழிப்பு உணர்வு தமிழ்நாட்டில் குறைவாகத்தான் உள்ளது. இதனால், இங்கு வாத்து வளர்ப்புத் தொழில் பெரிய அளவில் வளரவில்லை. இதன் முட்டை மற்றும் இறைச்சிக்கான விற்பனை வாய்ப்புக் குறைவாகத்தான் உள்ளது. வாத்து முட்டை மற்றும் இறைச்சியைச் சாப்பிடுவது தரக்குறைவானது என்கிற எண்ணம் உள்ளது. ஆனால், கேரளாவில் வாத்து முட்டைக்கும் இறைச்சிக்கும் நல்ல விற்பனை வாய்ப்பு உள்ளது. வாத்து முட்டை ரூ.10-15 வரையிலும் விற்பனையாகி வருகிறது.

வாத்து இறைச்சி, கோழி இறைச்சியைவிடச் சற்றுக் கடினத்தன்மை கொண்டது. ஆனால்,  ருசியாகவும் சத்துகள் நிறைந்ததாகவும் இருக்கும். வழக்கமாக, வாத்து முட்டையிடத் தொடங்கிய முதல் ஆண்டு மட்டும்தான், முட்டை உற்பத்தி நன்றாக இருக்கும். அதன்பிறகு படிப்படியாக முட்டை உற்பத்தித் திறன் குறையும். ஆனால், ‘காக்கி கேம்பெல்’ ரகத்தில் இரண்டாவது வருடத்தில்கூட முட்டை உற்பத்தி குறையாது. இந்தக் காக்கி ‘கேம்பெல்’ எனும் வாத்து ரகம் முட்டை உற்பத்திக்கும், ‘பெக்கின்’ எனும் ரகம் இறைச்சிக்கும் ஏற்றது. காக்கி கேம்பெல் ஒரு முட்டை சுழற்சியில், 300 முட்டைகள் வரை தரக்கூடிய தன்மைகொண்டது. முட்டை உற்பத்தியில் மிகச்சிறந்த இனம் இது. இறைச்சி ரகமான பெக்கின், இந்தியச் சூழ்நிலைக்கு மிகவும் சிறப்பாக வளர்கிறது. குறைந்தளவே தீவனத்தை உண்டு, தரமான இறைச்சியை உற்பத்தி செய்யக் கூடியது.

வாத்து வளர்ப்பில் உள்ள நுட்பங்களை, அவ்வப்போது பயிற்சிப் பட்டறைகள் நடத்தியும் கற்றுக்கொடுத்து வருகிறோம்.’’

தொடர்புக்கு:

THE DIRECTOR, CENTRAL POULTRY DEVELOPMENT
ORGANISATION,
(SOUTHERN REGION), Ministry of Agriculture, Department of Animal Husbandry & Dairying, Government of India, HESARAGHATTA, BANGALORE-560088,
Telephone Nos: 080 28466226,
080 28466236.


‘‘சிறுதானியங்களை மதிப்புக்கூட்டி உணவுப் பொருளாகத் தயாரிக்க விரும்புகிறோம். இதற்கான பயிற்சி எங்கு கிடைக்கும்?’’

எம்.பிரசன்னா, பேரூர்.

நீங்கள் கேட்டவை - வெட்டிவேர் பயிரிட்டால்  நிலம் வளமாகுமா?

‘‘தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில், சிறுதானிய உணவு வகைகள் தயாரிப்புக்கான பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. சிறிய தானியம் என்றாலும், இதில் சத்துகள் ஏராளம். அரிசிச் சோறு சாப்பிடுவதுதான் நாகரிகம் என்று நினைக்கிறோம். ஆனால், சிறுதானியங்களில் அதிகச் சத்துகள் உள்ளன. சிறுதானியங்களைப் பயன்படுத்தி முறுக்கு, அதிரசம், புட்டு... எனப் பாரம்பர்ய உணவுகள் தயாரிக்கலாம். சிறுதானியங்களைக்கொண்டு பிரட், நூடுல்ஸ்... போன்ற அடுமனை உணவுகள் மற்றும் உடனடியாகத் தயாரித்துச் சாப்பிடும் ‘ரெடி டூ ஈட்’ உணவு வகைகள் தயாரிக்கவும், கட்டண அடிப்படையில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.’’

தொடர்புக்கு:

பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லூரி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-3. தொலைபேசி: 0422 6611340

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக் கொண்டிருக்கிறார்.

நீங்கள் கேட்டவை - வெட்டிவேர் பயிரிட்டால்  நிலம் வளமாகுமா?

உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’,  பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்குத் தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும்,
99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும்  அனுப்பலாம்.