கோமாரி... உஷார்!
##~## |
பாசனத்துக்காக அணை திறக்கப்பட்டிருந்ததால், வரத்துக் கால்வாயில் ஓடிக்கொண்டிருந்த தண்ணீரில் மாடுகளைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார், 'ஏரோட்டி' ஏகாம்பரம்.
வெகு நாட்களுக்குப் பிறகு கால்வாயில் தண்ணீர் வந்த சந்தோஷத்தில் 'வாத்தியார்’ வெள்ளைச்சாமியும் தண்ணீருக்குள் இறங்கி நின்றபடியே, ஏரோட்டியிடம் பேசிக் கொண்டிருந்தார். தூரத்தில் இருந்தே இந்தக் காட்சியை கண்டுவிட்ட 'காய்கறி’ கண்ணம்மாவும் வந்துசேர... அங்கேயே ஆரம்பமானது அன்றைய மாநாடு.
''என்னய்யா இந்தக் கேரளாக்காரங்க இப்படிப் பண்றாங்க. வண்டி, வாகனத்தையெல்லாம் மறிக்கிறாங்களாமே. எங்க ஊர்ல சபரிமலைக்கு மாலை போட்டிருக்குற சாமிகள்லாம் பிள்ளையார் கோவில்ல போய் மாலையை அவுத்துட்டு இருக்காங்க. வொய் திஸ் கொல வெறி?'' என்றபடியே வந்தமர்ந்தார், காய்கறி.
''ம்... இந்த கொலவெறி, உன்னையும் விட்டு வைக்கல போல'' என்று தலையில் அடித்துக் கொண்ட ஏரோட்டி,

''முல்லை-பெரியாறு அணையை வெச்சுக்கிட்டு கேரளா நடத்தற நாடகத்துல இது ஒரு அத்தியாயம்... அவ்வளவுதான். உண்மையிலேயே நம்மளுக்கு மானம், ரோஷம் இருந்தா... இங்கிருந்து கேரளாவுக்கு காய்கறியையும், பாலையும் அனுப்புவோமா? கேரளாவுக்கு எல்லாமே இங்கிருந்துதான் போகுது. இதுகூட பரவாயில்லை. 'தாட்... பூட்’னு குதிச்சுட்டுருக்காங்கள்ல பெரிய பெரிய கட்சிக்காரங்கள்லாம்... அந்தக் கட்சிகளோட பொறுப்புல இருக்குற சிலர்தான் கள்ளத்தனமா ஆத்துல இருந்து மணலை அள்ளி, கேரளாவுக்கு கடத்துறானுங்க. நமக்கே நம்ம மக்கள் மேல அக்கறை கிடையாது. அப்பறம் கேரளாக்காரன் ஆடாம என்ன பண்ணுவான்? இனியும்கூட நம்மூர்காரங்களுக்கு சொரணை வரலைனா... 'தலையெழுத்து'னு தலையில அடிச்சுக்க வேண்டியதுதான்'' என்று பொங்கினார்.
''நீ சொல்லுவய்யா, 'காய் அனுப்பாத, கறி அனுப்பாதே’னு. பிறகு, இங்க விளையுற காயை எங்க கொண்டு போறது... நீயா வாங்கிக்குவே?'' என்று நடுவில் புகுந்து காய்கறி எகிற...
''அட, கண்ணம்மா சொல்றதும் வாஸ்தவம்தானே'' என்று வக்காலத்து வாங்கினார் வாத்தியார்.
''இப்படி விதண்டாவாதம் பேசிப் பேசித்தான்யா நீங்கள்லாம் வீணாப் போறது. உண்மையில பாத்தா நம்ம மாநிலத்துல விளையுற காய் நமக்கே பத்தாது. கேரளா புரோக்கருங்க, அஞ்சு பத்து கூடுதலா கொடுக்குறான்னு, தமிழ்நாட்டு வியாபாரிதான் காயை அங்க மாத்தி விடுறான். அதுலயும் உனக்கு துரோகம் பண்றது நம்ம மாநிலத்து ஆளுங்கதான்யா.
இன்னும் கொஞ்ச நாள் பொறு. அதுக்கும் மலையாளத்தாய்ங்க ஆப்பு வெக்கப் போறாய்ங்க. அங்கயே இப்போ ஏகப்பட்ட மாடுகளை வளர்க்க ஆரம்பிச்சுட்டாய்ங்களாம். அரசாங்கமே, காய்கறி சாகுபடி பண்றதுக்கு மானியத்தைக் கொட்டிக் கொடுக்குதாம். இன்னும் நாலஞ்சு வருஷத்துல இங்கிருந்து எதையும் வாங்க மாட்டானுங்க. அவன், முல்லை-பெரியாறு அணையில தண்ணியை உயர்த்தாம இருக்கிறதுக்கு என்னென்ன செய்யணுமோ... அத்தனையையும் செய்யத் தயாரா இருக்கான். நாமதான் நீதி, நியாயம்னு பேசிக்கிட்டு... இப்படியே போக வேண்டியதுதான். அரசியல்ல இருக்குறவங்க இந்த விஷயத்தைக் கையில வெச்சுக்கிட்டு முடிஞ்ச மட்டுக்கும் ஓட்டுப் பொறுக்கிக்க வேண்டியதுதான்'' மீண்டும் கோபத்தின் உச்சிக்கே சென்றார், ஏரோட்டி.
அவரை ஆசுவாசப்படுத்தும் விதமாக கூடையில் இருந்து இளஞ்சிவப்பு வண்ணத்தில் சில பழங்களை எடுத்த காய்கறி, இருவரிடமும் கொடுத்தார்.
''என்னா இது புது தினுசா இருக்கு'' என்றவாறே அதை சுவைக்க ஆரம்பித்தார், ஏரோட்டி.
''திராட்சைப்பழம்தான்யா... கலிஃபோர்னியாவுல இருந்து வருதாம். கிலோ 240 ரூபா. பெரிய பெரிய கடைகள்லயெல்லாம் இது இப்போ நல்லா விற்பனையாகுதாம். மொத்த வியாபாரி ஒருத்தர் என்கிட்டயும் கொஞ்சத்தைக் கொடுத்து விக்கச் சொன்னார்'' என்றார், காய்கறி.
''நான் சொன்னேன்ல. நம்ம ஆளுங்களைப்பத்தி. இதுதான் தெரிஞ்சுக்கோ. உள்ளூர் திராட்சை கிலோ முப்பது, நாப்பது ரூபாய்க்குதான் விக்குது. அதை யாரும் வாங்கித் திங்க மாட்டாங்க. ஆனா பாரு வெளிநாட்டுல இருந்து வந்தா... கண்ணை மூடிக்கிட்டு இவ்வளவு பணத்தைக் கொடுத்து வாங்கித் திம்பாங்க. அதுதான் நம்ம மக்கள்'' என்ற ஏரோட்டி,
''நான் இதைத் திங்க மாட்டேன். நீயே வெச்சுக்கோ’' என்று காய்கறியிடமே திரும்பக் கொடுத்தார்.
''ஏது... ஏது... இன்னிக்கு ஏரோட்டி ஒரு முடிவோடத்தான் இங்க வந்திருக்க போல...'' என்று காய்கறி கொஞ்சம் கிர்றடிக்க...
''ம்க்கும்... இவுரு பெரிய வ.உ.சி. பேரன்... சுதேசி பழத்தைத்தான் திம்பாரு. விதேசி பழத்தையெல்லாம் திங்க மாட்டாரு. எங்கிட்ட கொடு கண்ணம்மா, நான் திங்குறேன்'' என்று அந்தப் பழத்தை தான் சுவைக்க ஆரம்பித்தார் வாத்தியார்.
''ஏன் வாத்தியாரய்யா சும்மா ஏரோட்டியை சீண்டிக்கிட்டு இருக்கீங்க. அத விட்டுத்தள்ளுங்க'' என்று அடக்கினார், காய்கறி.
''சரி, இதெல்லாம் கெடக்கட்டும்... ஒரு முக்கியமான விஷயம் இருக்கு. கவனமா கேளு... ஆடு, மாடுகளுக்கெல்லாம் கோமாரி நோய் வந்துக்கிட்டிருக்காம். 'வாய்ச்சப்பை’, 'கால்கட்டு’னெல்லாம் சொல்வாங்கள்ல... அதே நோய்தான். ஆடு, மாட்டுக்கெல்லாம் இப்பவே தடுப்பூசி போட்டுடு. மாடுகளுக்கு காய்ச்சல் வந்தாலோ... வாய், நாக்கு, மடி, காம்புலயெல்லாம் கொப்புளம் வந்தாலோ... கவனமா இருக்கணும். எச்சில் வழிஞ்சுக்கிட்டே இருந்தாலும் பாத்துக்கணும். இதெல்லாந்தான் கோமாரி நோய்க்கு அறிகுறி. நோய் ரொம்ப முத்தினா... உசுரைக் காப்பாத்த முடியாம போயிடுமாம்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தோட மரபுசார் மூலிகை வழி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் தஞ்சாவூர்ல இருக்கு. அதோட பேராசிரியர் புண்ணியமூர்த்தி இந்த நோய்க்கு இயற்கை வைத்திய முறையையும் சொல்லிக் கொடுக்கறார். இயற்கை வைத்தியம் வேணும்னா... அவரோட செல்போன் நம்பர் 98424-55833... குறிச்சு வெச்சுக்கோ'' என்றார், வாத்தியார்.
அந்த நிமிடம் வரையிலும் கோபம் அடங்காமலே இருந்த ஏரோட்டி, ''நேரமாச்சு, மாடுகளுக்குத் தீவனம் வெக்கணும்'' என்றபடியே விருட்டென்று கிளம்ப, மாநாடும் முடிவுக்கு வந்தது.