
மாத்தியோசிஓவியம்: ஹரன்
சமீபத்துல ஒரு பொக்கிஷம் கைக்குக் கிடைச்சது. பொக்கிஷம்னு சொன்னவுடனே தங்கம், வைரம்னு நினைச்சிடாதீங்க. 1950-ம் வருஷம் வாக்குல, தமிழக வேளாண்மைத் துறை வெளியிட்ட ‘மேழிச்செல்வம்’ங்கிற இதழ் நண்பர் மூலமா வந்து சேர்ந்துச்சு. அதைத்தான் பொக்கிஷம்னு சொன்னேன். அந்த இதழைப் புரட்டிப் பார்க்கும்போது, 65 வருஷத்துக்கு முன்ன, தமிழ்நாட்டுல எப்படி விவசாயம் நடந்துச்சுன்னு தெளிவா புரிஞ்சிக்க முடிஞ்சது.
அந்தக் காலத்துல, மேழிச்செல்வம் (‘மேழி’ என்றால் ‘கலப்பை’) இதழுக்குச் சந்தா கட்டி படிக்கிற விவசாயிகளுக்கு, ஊருக்குள்ள நல்ல மரியாதை இருந்திருக்கு. வேளாண்மைத்துறை விரிவாக்கப் பணியாளர்களும், மேழிச்செல்வம் படிக்கிற விவசாயிகள்கிட்டதான், புதுமையான தொழில்நுட்பங்களைச் செய்துபார்க்கச் சொல்வாங்களாம். ஓர் இதழோட விலை மூன்று அணா.

ஒவ்வொரு இதழ்லயும், ‘தழை எரு போடுங்க, சஸ்பேனியா வளருங்க.... கிளரிசீடியா நடுங்க’னும் ‘தாளுரம் வளர்ப்போர், தானியம் குவிப்பார்’னும் பல நல்ல விஷயங்களைத் தகவலா அந்த இதழ்ல விதைச்சிருக்காங்க. கூடவே, ரசாயன உரம் சம்பந்தமான செய்திகளையும் தூவிவிட்டிருக்காங்க. பெரும்பாலும், விவசாயிகளோட அனுபவங்கள்தான் அதிகமா இருந்தது. அந்த அனுபவங்களைப் படிக்கும்போது, சிலிர்ப்பாகவும் வியப்பாகவும் இருந்தது.
திருத்துறைப்பூண்டி தாலுக்கா, பிரிஞ்சுமூலை கிராமத்தைச் சேர்ந்த சு.வைரக்கண்ணு என்கிற விவசாயி, ‘பசுந்தழை கம்போஸ்ட் உரத்தின் பயன்’ங்கிற தலைப்பில அனுபவக் கட்டுரையை எழுதியிருக்காரு. அரசாங்கம் சொன்னபடி, கம்போஸ்ட் எரு தயாரிச்சு, இனாம் வாங்கியிருக்காரு. உப்பு நிலத்தை கம்போஸ்ட் உரம்போட்டு வளமா மாத்தியிருக்காரு. அதை அவரோட வார்த்தையிலேயே சொல்றதைக் கேளுங்க.
‘‘எனக்கு உப்புத் திடலை ஒட்டி மூன்று மா நிலங்கள் உள்ளன. இதில் குறுவைச் சாகுபடி மட்டும்தான் செய்வேன்.‘மா’வுக்கு மூன்று, நான்கு கலங்குகளுக்குமேல் கண்டதில்லை. ஆனால், கம்போஸ்ட் எரு, பசுந்தாள் உரம் போட்ட பிறகு, நெற்பயிர்கள் சிறப்பாக உள்ளன. பல மிராசுதாரர்கள் பயிரைப் பார்த்துவிட்டு, மாவுக்கு 14 கலம் காணும் என்று சொல்கிறார்கள். எனக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. ஓர் ஆண்டில் கம்போஸ்ட் எரு, பசுந்தாள் உரம் போட்டதால், இந்த நல்ல மாற்றம் கிடைத்துள்ளது. இந்தத் தகவலை எல்லோருக்கும் சொல்ல வேண்டும் என்பதால், எழுதியுள்ளேன்’’னு அனுபவத்தைத் தெளிவா சொல்லியிருக்காரு.
சிறுதானியச் சாகுபடி சம்பந்தமான கட்டுரையில சொல்லியிருக்கிற தகவல் அருமையா இருந்தது. ஆனா, அதுல குறிப்பிட்டிருக்கிற ரகங்களைத்தான் இப்போ கண்ணுல பார்க்க முடியுல.
செங்கற்பட்டு ஜில்லா-வெள்ளைச் சோளம்
சேலம் ஜில்லா-மக்கட்டைச் சோளம், வெள்ளைச் சோளம்
வட ஆற்காடு ஜில்லா- வெள்ளைச் சோளம்
கோயம்புத்தூர் ஜில்லா- சின்ன மஞ்சள் சோளம், செஞ்சோளம்
-இப்படி மாவட்டத்துக்குத் தக்கபடி பாரம்பர்ய ரகச் சோளங்களைப் பயிர் செய்யலாம்னு கட்டுரை எழுதியிருக்காங்க. கம்போஸ்ட் தயாரிப்புச் சம்பந்தமான கட்டுரைகளும் அதிகமா வெளியிட்டிருக்காங்க. கம்போஸ்ட் தயாரித்தால், இனாம்ங்கிற (இதை மானியம், பரிசுனு எப்படி வேணும்னாலும் சொல்லலாம்)அறிவிப்பைப் படிக்கும்போது ஆச்சர்யமா இருந்தது.

‘‘தழை, தாள், குப்பை, கூழம், புல், பூண்டு, செத்தை சருகு, சாணம், மூத்திரம் ஆகியவற்றை எருக்குழியில் அடுக்கடுக்காகப் போட்டு, மண் பரப்பி மூடினால், சிறந்த கம்போஸ்ட் உரமாகும். இரண்டு வண்டி பாரம் கம்போஸ்ட் உரம் (ஒரு டன் கம்போஸ்ட்) தயாரிப்பிற்கு ரூபாய் ஒன்று வீதம், தலைக்கு ரூபாய் 50 வரை (அப்போ, ஒரு பவுன் 50 ரூபாய்க்குத்தான் வித்திருக்கு. இன்னிக்கு ஒரு பவுன் விலை ரூ.20 ஆயிரத்தை தாண்டியிருக்கு) இனாம் கொடுக்கப்படும். மற்ற விவரங்கள், விவசாய டிமான்ஸ்ட்ரேட்டரிடம் (வேளாண் விரிவாக்க அலுவலரைத்தான், இப்படிச் சொல்றாங்க) கேட்கவும்.’’
‘‘உங்கள் வயல், வரப்பில் ‘கிளரிசீடியா’ எரு தழைச் செடி வளர்க்கிறீரா?’’ என்ற செய்தி இப்படி நீளுது.
‘இரண்டாண்டில் வளர்ந்து நிலைத்துத் தழைக்கும்!
ஆண்டுதோறும் வேண்டும் தழை கொடுக்கும்!
வரப்பில் ஆழமாக வேர்விட்டு வளரும்!
நிழலடி கொடுக்காது!
வயலின் மேல் வேர் விட்டு வளரும்
நெற்பயிரைக் கெடுக்காது!
அநேகர் வரப்பில்
வளர்க்கிறார்!
நிறைய பசுந்தழை எடுக்கிறார்’னு கவிதையா, பாடலா, கட்டுரையான்னு கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு எழுதியிருந்தாலும், சொல்ல வந்த தகவலை எளிமையா சொல்லியிருக்காங்க.
இது 65 வருஷத்துக்கு முன்னாடி சொன்ன தகவலா இருந்தாலும், இக்காலமில்லை, எக்காலத்துக்கும் இது பொருத்துமா இருக்கும். இயற்கை உரங்கள்தான், மண்ணுக்கும் மக்களுக்கும் நல்லதுங்கிற வாசகம், மேழிச்செல்வத்தைப் படிச்சு முடிச்ச பிறகும், மண்டைக்குள்ள சுத்திக்கிட்டே இருந்துச்சு.