மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆடுகளில் ஒட்டுண்ணிகள்... உஷார்!

ஆடுகளில் ஒட்டுண்ணிகள்...  உஷார்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆடுகளில் ஒட்டுண்ணிகள்... உஷார்!

மரத்தடி மாநாடுஓவியம்: ஹரன்

வைக்கோல் போரிலிருந்து வைக் கோலை உருவி, கயிறு திரித்துக் கொண்டிருந்தார் ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். முன்னதாகவே வந்துவிட்டிருந்த ‘காய்கறி’ கண்ணம்மா ஏரோட்டியுடன் பேசிக் கொண்டிருந்தார். இவர்களிருக்கும் இடத்தை நோக்கி வந்து சேர்ந்தார் ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. வந்தவுடன் ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டைத் துவக்கி வைத்தார் வாத்தியார்.

“நீலகிரி மாவட்டம், கூடலுார் பகுதியில் தேயிலை, காபி தோட்டங்கள்ல ஊடுபயிரா சப்போட்டா, ஆரஞ்சு, பட்டர்புரூட்னு பழ மரங்களைச் சாகுபடி செஞ்சிருக்காங்க. பல விவசாயிகள் இந்தப் பழ மரங்களைத் தனிப்பயிராவும் சாகுபடி செஞ்சிருக்காங்க. இந்த மலைப்பகுதியில் குரங்குகள் அதிகமா இருக்குதாம். மரங்கள்ல பழங்கள் பழுக்கிற சமயத்துல, குரங்குகள் கூட்டமா மரத்துல ஏறிப் பழங்களைச் சாப்பிட்டுறதால, விவசாயிகளுக்கு நிறைய பாதிப்பு ஏற்பட்டிருக்காம். அதனால, விவசாயிகள் இந்த மாதிரிப் பழ மரங்களோட கீழ்ப்பகுதியில தகரத்தைச் சுத்திக் கட்டி விடுறாங்க. அதனால, குரங்குகள் மரத்துமேல ஏற முடியாம வழுக்கிடும். இதேமாதிரி யுக்தியைச் சில விவசாயிகள் தென்னை மரங்கள்லயும் கடைப்பிடிக்கிறாங்க. அதனால எலி, அணில் மாதிரியான பிராணிகள் மரத்துல ஏறுறதில்லையாம்” என்றார்.

“நல்ல டெக்னிக்காத்தான் இருக்கு. ஆனா, காடுகளுக்குள்ள வாழுற அந்தப் பிராணிகள் இரைக்கு என்ன செய்யும்? அதுகளுக்காக ரெண்டு மூணு மரங்களை விட்டு வெச்சிட்டா நல்லாருக்கும்” என்று யோசனை சொன்ன காய்கறி, கூடைக்குள் இருந்து திராட்சைப் பழங்களை எடுத்துக் கழுவி, ஆளுக்குக் கொஞ்சம் கொடுத்தார்.

ஆடுகளில் ஒட்டுண்ணிகள்...  உஷார்!

அதைச் சாப்பிட்டுக்கொண்டே இன்னொரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார் வாத்தியார்.

“ராமநாதபுரம் மாவட்டம், ‘மாரந்தை’ங்கிற கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சக்திவேல். போன வருஷம் நெல் சாகுபடியில் பாதிப்பு ஏற்பட்டதால, இவருக்கு 1,02,160 ரூபாய் காப்பீட்டுத்தொகை வந்திருக்கு. ஆனா, இந்தத் தொகையை இவரோட வங்கிக் கணக்குல வரவு வைக்கலையாம். அதனால, இவர் கணக்கு வெச்சிருக்கிற ஓரிவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிச் செயலாளர் ராமலட்சுமிகிட்ட போய் வரவு வைக்கச் சொல்லியிருக்கார். அவங்க, ‘கமிஷன் கொடுத்தாதான் வரவு வைக்க முடியும். ஐம்பதாயிரம் ரூபாய்க்கு ஆயிரம் ரூபாய் கமிஷன் கொடுக்கணும். அதுக்குமேல இழப்பீட்டுத்தொகை இருந்தா கூடுதலா கமிஷன் கொடுக்கணும்’னு சொல்லிருக்காங்க. இதோடு 59 விவசாயிகள் பட்டியலைச் சக்திவேல்கிட்ட கொடுத்து, ‘எல்லார்கிட்டயும் கமிஷன் தொகையை வாங்கிட்டு வாங்க, உடனே வரவு வெச்சுடலாம்’னு சொல்லிருக்காங்க. அதுக்கப்புறம் ரெண்டு மூணுமுறை செல்போன்ல சக்திவேலை அழைச்சும் பேசிருக்காங்க. அதையெல்லாம் செல்போன்ல ரெக்கார்டு பண்ணி வெச்சுக்கிட்டார் சக்திவேல். அந்தச் செல்போன் ஆதாரத்தை வெச்சு கலெக்டர் நடராஜன்கிட்ட புகார் கொடுத்துட்டார் சக்திவேல். உடனே, அதிகாரிகள் மூலமா விசாரிக்க உத்தரவு போட்டிருக்கார் கலெக்டர். விசாரணை செஞ்ச கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முருகேசன், ராமலட்சுமியைத் தற்காலிகப் பணி நீக்கம் செஞ்சுருக்கார்” என்றார் வாத்தியார்.

“சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி கொடுக்காதுனு சொல்ற மாதிரியில்ல இருக்கு” என்றார் காய்கறி.

“அது சரிதான். ஆனா, இந்தம்மா மட்டும் அந்தத் தப்பைச் செஞ்சுருக்கமாட்டாங்க. எல்லா அதிகாரிகளுக்கும் கட்டாயம் பங்கிருக்கும். ஆனா, அந்த அம்மாவைப் பலிகடா ஆக்கிட்டாங்க. அந்த ராமலட்சுமி, சக்திவேல்கிட்ட பேசுறப்போ, ‘எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு அதிகமா செலவாகிடுச்சு. அதனாலதான் உங்ககிட்ட கேட்க வேண்டியிருக்கு’னு சொல்லிருக்காங்க. ஒவ்வொரு மாவட்டத்துலயும் நடத்துற நூற்றாண்டு விழாச் செலவுக்கு, ஒவ்வொரு துறையும் இவ்வளவு பணம் கொடுக்கணும்னு வாய்மொழி உத்தரவு போட்டிருக்காங்களாம். அதனால, அதிகாரிகள் இதைச்சொல்லி வசூல் வேட்டை நடத்துறாங்க. கிடைச்சதுல ஒரு பங்கை, அதிகாரிகள் வெச்சுக்கிட்டு மீதியை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்குக் கொடுக்கிறாங்களாம். இப்படி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்தி அவரைக் கேவலப்படுத்துறதுக்குச் சும்மாவே இருந்துடலாம்” என்ற ஏரோட்டி, அடுத்த செய்திக்குத் தாவினார்.

“ஆடு வளர்க்கிறவங்க அப்பப்போ ஆடுகள்ல புற ஒட்டுண்ணிகள், அக ஒட்டுண்ணிகள் தாக்கியிருக்குதானு கண்காணிச்சுட்டே இருக்கணுமாம். புற ஒட்டுண்ணிகள் காது, வால், கால்களுக்கு இடையே இருக்குமாம். இந்த ஒட்டுண்ணிகள் ஆடுகளோட ரத்தத்தை உறிஞ்சிடுமாம். அதனால, நோய்க் கிருமிகளையும் பரப்புமாம். இந்த ஒட்டுண்ணிகள் தாக்கினா, ஆடுகளுக்கு ரத்தச்சோகை, தோல்பாதிப்புகள் ஏற்படுமாம். ஒட்டுண்ணிகள் தாக்கின ஆடுகள்மேல புங்கன் எண்ணெய் அல்லது வேப்பெண்ணெயைத் தடவிவிட்டா ஒட்டுண்ணிகள் ஒழிஞ்சுடுமாம். ஆட்டுக் கொட்டகையில் சிமென்ட் தளம் அமைச்சா ஒட்டுண்ணிகள் தாக்குதல் குறைவாத்தான் இருக்குமாம்.

மண் தரை இருந்தா பாதிப்பு அதிகமா இருக்க வாய்ப்பு இருக்குதாம். வயித்துக்குள்ள இருக்கிற குடற்புழு, தட்டைப்புழு, நாடாப்புழு, உருண்டைப்புழு மாதிரியான புழுக்கள்தான் அக ஒட்டுண்ணிகளாம். இந்த ஒட்டுண்ணிகளால வயிறு ஊதிப்போதல், எடை குறைதல், தாடை வீக்கம், கழிச்சல், முடி உதிர்தல், கண்கள் வெளிர்தல் மாதிரியான நோய்கள் வருமாம். கால்நடை மருத்துவர் பரிந்துரைப்படி தவறாம குடற்புழு நீக்க மருந்து கொடுத்துட்டு வந்தா, புழுக்கள் ஒழிஞ்சுடுமாம். இந்த ஒட்டுண்ணிகளைக் கவனிக்காம விட்டுட்டா, ஆடு வளர்ப்புல அதிகளவு நஷ்டம் ஏற்பட்டிடுமாம். இந்தத் தகவலைக் கோயம்புத்தூர் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் சிவக்குமார் தெரிவிச்சுருக்கார்” என்றார் ஏரோட்டி.

ஆடுகளில் ஒட்டுண்ணிகள்...  உஷார்!

அடுத்த செய்தியை ஆரம்பித்த வாத்தியார், “கடலூர் மாவட்டத்துல இருக்கிற வீராணம் ஏரி தமிழ்நாட்டுல இருக்கிற பெரிய ஏரிகள்ல ஒண்ணு. இந்த ஏரி மூலமா கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் ஏக்கர் பரப்புக்குப் பாசன வசதி கிடைச்சிட்டுருக்கு. 2000-ம் வருஷத்துல இருந்து சென்னை மாநகர மக்களுக்கு இந்த ஏரித்தண்ணியைத்தான் குடிநீருக்காகக் குழாய் மூலமா அனுப்பிட்டிருக்காங்க.

பாக்குறதுக்குக் கடல் மாதிரி இருக்கும் இந்த ஏரி. இந்த ஏரியில 32 பாசன வாய்க்கால்கள், மதகுகள் இருக்கு. பொதுப்பணித்துறை அதிகாரிகள், இந்த 32 மதகுகள்லயும் கூண்டு அமைச்சுப் பூட்டுப் போட்டுட்டாங்க. அதிகாரிகளுக்குத் தெரியாம விவசாயிகள் தண்ணியைத் திறந்து விட்டுடுவாங்கனுதான் இப்படிப் பூட்டுப் போட்டிருக்காங்களாம். இதுக்கு வீராணம் பகுதி விவசாயிகள் கடுமையா எதிர்ப்புத் தெரிவிச்சிருக்காங்களாம். அடுத்து விவசாயிகளைத் திரட்டிப் போராட்டம் நடத்தலாம்னு இருக்காங்களாம்” என்றார்.

அந்த நேரத்தில் நிலக்கடலை வயலில் பக்கத்து தோட்டத்துக்காரரின் ஆடுகள் புகுந்துவிட நாய்கள் குரைத்தன. ஆடுகளை விரட்டுவதற்காக ஏரோட்டி கம்பை எடுத்துக்கொண்டு ஓட, அத்துடன் அன்றைய மாநாடும் முடிவடைந்தது.