மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை

கால்நடை மூலம் மனிதர்களுக்கு நோய் பரவுமா? புறா பாண்டி படங்கள்: தி. விஜய்

##~##

''கொசுக்களைக் கட்டுப்படுத்த, இயற்கை யுக்தி இருக்கிறதா?''

பச்சைமுத்து, செல்லியம்பாளையம்.

சித்த மருத்துவர் மணிவாசகம் பதில் சொல்கிறார்.

''குளம், குட்டைகளில் நிறைய தவளைகள் இருந்தால்... கொசுக்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். அதாவது, தவளைக்குஞ்சுகளான தலைப்பிரட்டைகளின் உணவே, கொசு முட்டைகள்தான். நீர்நிலைகளில்தான் கொசுக்கள் முட்டையிடும் என்பதால், அவற்றையெல்லாம் தலைப்பிரட்டைகளே கூடுமானவரையிலும் காலி செய்துவிடும். தற்காலத்தில், அதீத ரசாயனப் பயன்பாடு உள்ளிட்ட பல காரணங்களால், தவளைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து கொண்டே இருப்பதால், கொசுக்கள் பெருகி வருகின்றன.

மீண்டும் நீர்நிலைகளில் தவளைகள் பெருகுவதற்கான சூழ்நிலைகளை உருவாக்குவதுதான், கொசுக்களைக் கட்டுப்படுத்த நிரந்தரத் தீர்வாக இருக்கும்.

கொசுக்களை விரட்டுவதற்கு இயற்கை வழிமுறைகள் நிறையேவே உள்ளன. 100 ஓமவல்லி இலைகள், 50 சோற்றுக்கற்றாழை மடல்கள் ஆகியவற்றை எடுத்து அரைத்து சாறு பிழிய வேண்டும். அந்தச்சாறை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து, கொசுக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வாரம் ஒரு முறை தெளித்து வந்தால் கொசுக்கள் ஓடி விடும்.

நீங்கள் கேட்டவை

மாலை நேரங்களில் காய்ந்தத் தும்பை, வேம்பு, நொச்சி ஆகிய இலைகளைக் கொளுத்தி மூட்டம் போட்டு விட்டாலும், கொசுக்கள் ஓடி விடும். குறிப்பாக, மாட்டுக் கொட்டைகைகளில் இம்முறையைக் கடைபிடிக்கலாம்.''

தொடர்புக்கு, செல்போன்: 98435-92039.

''சிறுதானியங்களை மதிப்புக் கூட்டிய பொருட்களாக மாற்றுவதற்கான பயிற்சி எங்கு கிடைக்கும்?''

கே. மல்லிகா, திருச்சி.

மதுரை, மனையியல் கல்லூரியின் விரிவாக்கத்துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் சி.பார்வதி பதில் சொல்கிறார்.

''கம்பு, சோளம், கேழ்வரகு... போன்ற சிறுதானியங்களில் சத்துக்கள் அதிகம் உள்ளன. அவற்றை முறையாக மதிப்புக் கூட்டினால், மக்கள் மத்தியில் வரவேற்பு பெறும். சிறுதானியங்கள் மூலம் சுமார் 26 வகையான மதிப்புக் கூட்டப்பட்ட உணவு வகைகளை தயாரிக்க முடியும்.  இன்றைய உணவுப் பழக்க வழக்கத்துக்கு ஏற்பவும், மாறிவரும் வாழ்க்கை முறைக்கு ஏற்பவும் உடனடி உணவுகள் பலவற்றையும் சிறுதானியங்கள் மூலம் தயாரிக்கலாம்.

பலரையும் பயமுறுத்தி வரும் சர்க்கரை நோய், உடல்பருமன், கேன்சர் போன்ற பல நோய்களுக்குத் தீர்வு... சிறுதானியங்களில்தான் உள்ளன. குறிப்பாக, நார்ச்சத்து மற்றும் மருத்துவ குணம் ஆகியவை சிறுதானியங்களில் நிறைந்துள்ளதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

இன்று பல பெருவணிக நிறுவனங்கள், பலவகையான உடனடி உணவு வகைகளைத் தயாரித்து சந்தைப் படுத்துகின்றன. அவற்றில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் நூடுல்ஸை எடுத்துக் கொள்வோம். இதில் மாவுச்சத்து அதிகம் இருக்கும். நார்ச்சத்து மற்றும் உயிர்ச்சத்து இருப்பதில்லை. இன்றையக் குழந்தைகளே நாளைய எதிர்காலம். எனவே, அவர்களுக்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டியது நமது கடமையாகும். இதனைக் கருத்தில் கொண்டு பல சிறுதானியங்கள் சேர்த்து நூடுல்ஸ் தயாரிக்கலாம். அதேபோல் சத்துநிறைந்த காய்கறிகள் சேர்த்தும் தயாரிக்கலாம்.

நீங்கள் கேட்டவை

அடுத்ததாக, அனைவரும் விரும்பி உண்பது பேக்கரி உணவுப் பதார்த்தங்கள். இன்று பல விசேஷங்களில் பேக்கரிப் பொருட்கள்தான் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவையெல்லாம் பெரும்பாலும், நம் உடல்நிலைக்குக் கேடு ஏற்படுத்தக்கூடியவைதான். இதே பொருட்களை... சோளம், கேழ்வரகு, மற்றும் கம்பு சேர்த்து, இனிப்பாகவும் காரமாகவும் உள்ள பேக்கரி பொருட்களைத் தயாரிக்கும்போது... அவற்றின் தரம் உயர்வதோடு, சத்துக்கள் நிறைந்தவைகளாகவும் அவை வடிவமெடுக்கும்.

இதேபோன்று உடனடி சட்னி மிக்ஸ், சாதப் பொடி, பருப்புப் பொடி, மசாலா வகைகள், மூலிகை சேர்த்து தயாரிக்கப்பட்ட மசாலா வகைகள் என்று பலவகையான உடனடி உணவு வகைகளைத் தொழில் ரீதியாகச் செய்யலாம். இன்று ஆரோக்கியம் பற்றிய விழிப்பு உணர்வு அதிகமாக உள்ளது. இந்நிலையில் சிறுதானிய உணவுப் பொருட்களை தயாரிப்பதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். வாழ்க்கைத் தரம் மற்றும் பொருளாதாரமும் மேன்மையடையும்.

விவசாயிகள், பெண்கள், சுயஉதவிக் குழுக்கள், வேலையில்லாத பட்டதாரிகளுக்கு அவர்களின் தொழில் திறனை மேம்படுத்தும் வகையில்... உடனடி உணவுகளைச் சத்தான முறையில் தயாரிக்கும் முறை பற்றி, எங்கள் கல்லூரியில் பயிற்சி கொடுத்து வருகிறோம். பயிற்சி பெற விரும்புகிறவர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.''

தொடர்புக்கு: முதல்வர், மனையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை-625104. தொலைபேசி: 0452-2424684, செல்போன்: 94422-19710.

''பத்திரப் பதிவு செய்யாமல், கடந்த 50 ஆண்டுகளாக 34 சென்ட் நிலத்தைப் பயன்படுத்தி வருகிறேன். அதற்கு 'யூ.டி.ஆர்’ பட்டா வாங்கியுள்ளேன். தற்போது, பக்கத்து நிலத்துக்காரர் எனது நிலத்துக்கு உரிமை கோருகிறார். சட்டப்படி இதில் அவருக்கு உரிமை உண்டா?''

ப.சி.அரசு, பட்டுக்கோட்டை.

உயர் நீதிமன்ற வழக்கறிஞர் என். ரமேஷ் பதில் சொல்கிறார்.

''பெரும்பாலான  விவசாய நில உரிமைப் பிரச்னைகள், 'யூ.டி.ஆர்.’ என்று அழைக்கப்படும் 'பதிவு புதுப்பித்தல்’ (updated Register) சம்பந்தப்பட்டதாக உள்ளன. பட்டா என்பது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நில உரிமையாளர்கள் அரசுக்கு முறையாக வரி செலுத்த உருவாக்கப்பட்ட ஆவணங்களில் ஒன்று. அதில் நில உரிமையாளர் பெயர், நிலத்தின் சர்வே எண்... உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றிருக்கும்.

நீங்கள் கேட்டவை

ஒரு விவசாய நிலம் யாருடைய அனுபவத்தில் உள்ளது என்பதற்கு பட்டாதான் அடிப்படை ஆவணம். நில அனுபவத்தின் அடிப்படையில் யூ.டி.ஆர். பட்டா 1980-களில் வழங்கப்பட்டன. அப்போது சில தவறுகள் நிகழ்ந்துள்ளன. 'யூ.டி.ஆர்.' பட்டாக்கள் வழங்கப்பட்டபோது, சில விவசாயிகள் தங்களின் நிலத்துக்குப் பக்கத்தில் உள்ள நிலங்களையும், தங்கள் நிலம் என்று யூ.டி.ஆர். பட்டா பெற்றுக் கொண்டார்கள். அந்த நிலத்துக்கு நீண்ட காலம் வரியும் செலுத்தி வருகிறார்கள். ஒரு கட்டத்தில் நில உரிமையாளர்கள் உண்மையைக் கண்டுபிடிக்கும்போது பிரச்னைகள் வருகின்றன. இந்த பிரச்னையை தாலூகா அலுவலகத்துக்கு எடுத்துச் செல்ல கூடாது. சிவில் நீதிமன்றத்தில்தான் வழக்கு தொடுக்க வேண்டும். அந்த நிலம் தங்களுடையதுதான் என்று உரிய ஆவணங்களுடன் நிரூபித்தால்தான் வழக்கு சாதகமாக முடியும்.''

தொடர்புக்கு,செல்போன்: 87544-79844.

''ஆடு, மாடு... போன்ற கால்நடைகள் மூலம் மனிதர்களுக்குப் பரவும் நோய்கள் எவை?''

ஆர். குணசேகரன், சங்ககிரி.

சேலம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழத்தின், பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர். முனைவர் ஆ. துரைசாமி பதில் சொல்கிறார்.

''பல நோய்கள் கால்நடைகள் மூலம் மனிதர்களுக்குப் பரவுகின்றன. இறைச்சி மற்றும் பால் மூலமாகவும் நோய் உண்டாக்கும் கிருமிகள் பரவுகின்றன. 'கறந்த பால் குடித்தால் சத்து’ என்று பலர் நினைக்கிறார்கள். அது தவறான கருத்து. மாட்டுக்கு உண்டாகியிருக்கும் பல நோய்கள், பாலைக் குடிப்பவர்களுக்கும் தொற்ற வாய்ப்புகள் உள்ளன. உதாரணமாக, காசநோய் தாக்கியிருக்கும் மாட்டின் பாலைக் காய்ச்சாமல் குடித்தால்... மனிதர்களுக்கும் காசநோய் பரவும்.

ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கினால், மாடுகள் திடீர், திடீரென செத்து விழும். நோய் தாக்கி இறந்த மாடுகளின் மூக்கு, வாய், ஆசனவாய்... போன்ற துவாரங்களில் இருந்து உறையாத ரத்தம் வரும். இந்த அறிகுறிகள் தென்பட்டால், கால்நடை மருத்துவரின் உதவியுடன், இறந்த மாடுகளை ஆழமான குழி வெட்டி, சுண்ணாம்புத்தூள் போட்டு புதைத்துவிட வேண்டும்.

நீங்கள் கேட்டவை

எலிக்காய்ச்சல் தாக்கப்பட்ட எலிகளை... நாய், பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகள் உண்டுவிடும். இதனால், அந்த நோய் வளர்ப்புப் பிராணிகளுக்குத் தொற்றிக் கொள்ளும். இவற்றின் சிறுநீர் மூலமாக மனிதர்களுக்கும் தொற்ற வாய்ப்புள்ளது. குறிப்பாக, காலில் காயம் உள்ளவர்கள் தண்ணீரில் நடக்கும்போது, எலிக்காய்ச்சல் கிருமிகளின் தொற்று ஏற்படும். எனவே, மழைக் காலங்களில் கவனமாக நடக்கவும்.''

தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், 5/136, ஸ்டேட் பாங்க் ஆபீஸர்ஸ் காலனி-2, சேலம்-636004. தொலைபேசி: 0427-2440408.

 'சென்னையில், வீட்டுத் தோட்டம் அமைக்க எங்கு பயிற்சி கொடுக்கிறார்கள்?'

 எஸ். கலாதேவி, கோட்டூர்புரம்

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் 'நகர்ப்புறத் தோட்டக்கலை வளர்ச்சி மையம்’ அண்ணாநகரில் செயல்பட்டு வருகிறது. இங்கு வீட்டுத் தோட்டம், காளான் வளர்ப்பு... போன்றவற்றுக்குப் பயிற்சி கொடுத்து வருகிறார்கள்.

நகர்ப்புறத் தோட்டக்கலை வளர்ச்சி மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், புதிய எண்-44 (பழைய எண்-37), 6-வது அவென்யூ, அண்ணா நகர், சென்னை-600040.

தொலைபேசி: 044-26263484

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே 'புறா பாண்டி' சும்மா 'பறபற'த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை

 'நீங்கள் கேட்டவை'

பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்கு தபால் மூலமும் pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும்  PVQA (space) உங்கள் கேள்வி (space) உங்கள் பெயர் டைப் செய்து 562636 என்ற எண்ணுக்கு செல்போன் மூலமும் அனுப்பலாம்.