மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: மாட்டுக்கு உயிர்கொடுத்த இளநீர்!

மண்புழு மன்னாரு: மாட்டுக்கு உயிர்கொடுத்த இளநீர்!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு: மாட்டுக்கு உயிர்கொடுத்த இளநீர்!

மாத்தியோசிஓவியம்: ஹரன்

சிலர் பேசுறதைக் கேட்டா, அவங்க சொன்ன தகவல் பசுமரத்தாணிபோல நினைவுல தங்கி, நமக்குள்ள மாற்றத்தை உருவாக்கும். ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார் பேச்சைக் கேட்டவங்க, அடுத்த நொடியே இயற்கை விவசாயம் பக்கம் திரும்பிடுவாங்க. சுபாஷ் பாலேக்கர் பேச்சைக் கேட்டால் ஜீரோ பட்ஜெட்டுக்கும் கொடுமுடி டாக்டர் நடராஜன் பேச்சைக் கேட்டால் பஞ்சகவ்யாவுக்கும் மாற ஆர்வம் வந்திடும். அதுபோல, கால்நடை வளர்ப்பு, பால் பண்ணை... சம்பந்தமான தகவலை டாக்டர் வே.ஞானப்பிரகாசம் பேசுறதைக் கேட்டா, அந்தத் துறைமேல ஈர்ப்பு ஏற்பட்டு, அது சார்ந்த துறையில சாதனைசெய்ய வழி கிடைக்கும். சாதரண கால்நடை மருத்துவரா இருந்த டாக்டர் ஞானப்பிரகாசம், தன்னோட உழைப்பு, அறிவு மூலமா, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தோட துணைவேந்தரா முன்னேறி முத்திரை பதிச்சவர். நேர்மைக்கும் கண்டிப்புக்கும் பெயர் பெற்ற இவரோட பேரைக் கேட்டால், இப்பவும்கூட கால்நடைப் பல்கலைக்கழகத்துல பலருக்கும் நடுக்கம் வர்றதைப் பார்த்திருக்கேன்.

இவரோடு பேசும்போது, நம்ம தமிழ்நாட்டுக் கால்நடை வளம், இங்குள்ள வாய்ப்புகள் சம்பந்தமான பல சுவாரஷ்யமான தகவலைச் சொல்வாரு. அவரோட பேச்சுல, ‘வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்’னு ஆண்டாள் பாடி வெச்சிருக்காங்க. குடம் நிறையும் அளவுக்குப் பால் கொடுத்த கால்நடை இனம் தமிழ்நாட்டுல இருந்திருக்கு. அதனாலத்தான், திருப்பாவையில அதை ஆண்டாள் பதிவு செய்திருக்காங்க’’னு அடிக்கடி சொல்றதுண்டு.

மண்புழு மன்னாரு: மாட்டுக்கு உயிர்கொடுத்த இளநீர்!

‘பல்கலைக்கழகத்துல பேராசிரியரா பணிக்கு வர்றத்துக்கு முன்னாடி, கால்நடைப் பராமரிப்புத்துறையில, கால்நடை மருத்துவரா வேலைபார்த்தேன். மயிலாடுதுறை பக்கத்துல உள்ள ஊர்லதான் வேலைகிடைச்சது. பல்கலைக்கழகத்துல, படிச்சதையும் அனுபவம் மூலம் உருவாகும் யோசனைகளையும் பரிசோதிச்சிப் பார்க்க நல்ல வாய்ப்பா இந்த பணி இருந்துச்சி. பிற்காலத்துல, பல்வேறு உயர் பதவிகளுக்கு, இந்த கால்நடை மருத்துவர் அனுபவம் உதவியா இருந்திருக்கு. ஒருமுறை, ராத்திரி 12 மணி இருக்கும், விவசாயி ஒருத்தர் கதவைத் தட்டி அழைச்சாரு. என்ன விஷயம்னு கேட்டேன். ‘மாடு கன்னுப்போடப் போகுது. பனிக்குடம்கூட உடைஞ்சிருச்சி... ஆனா, கன்னுக்குட்டி வெளியில வரல, மாடு ரொம்பவே சிரமப்படுது. அந்த மாட்டை வெச்சித்தான் எங்க குடும்ப நடக்குது. மாட்டையும் கன்னையும் காப்பத்திக் கொடுங்க டாக்டர் ஐயா’னு கையப் புடிச்சிக்கிட்டுக் கதறினாரு. உடனே, மருத்துவம் பார்க்க, புறப்பட்டுப்போனேன். ரொம்ப நேரமா, மாடு சிரம்பட்டுக்கிட்டிருந்திச்சு. அந்தச் சூழ்நிலையில, மாட்டுக்குக் குளுக்கோஸ் ஏத்தணும். ஆனா, அந்தக் குக்கிராமத்துல, குளுக்கோஸ் பாட்டில் கிடைக்க வாய்ப்பில்லை. மயிலாடுதுறைக்கோ, கும்பகோணத்துக்கோ போய்தான் வாங்கிட்டு வரணும். அதுக்குள்ள மாடு தளர்ந்து போயிடும்.

மண்புழு மன்னாரு: மாட்டுக்கு உயிர்கொடுத்த இளநீர்!

அவசர உதவி செஞ்சிக்கிட்டே... அந்த விவசாயி தோட்டத்துல இருந்த தென்னை மரத்துலயிருந்து, இளநீரைக் கயிறு கட்டி  கீழே இறக்கச் சொன்னேன். ‘மாட்டோட உயிர் ஊசுலாடிக்கிட்டிருக்கு... இந்த நேரத்துல இவருக்கு இளநீர் கேக்குதா?’னு அந்த விவசாயி நினைச்சிருக்கலாம். இளநீரை வெட்டித் தரச்சொல்லி, மாட்டு உடம்புல குளுகோஸ்போல ஏத்தினேன். இளநீரை அவசர காலத்துல, குளுகோஸூக்குப் பதிலா, பயன்படுத்தலாம். ஆனா, இளநீர் மரத்திலிருந்து கீழே விழுந்தா கலங்கிடும். அதைப் பயன்படுத்த முடியாது. அதனாலத் தான், கயிறுக்கட்டி இறக்கச்சொன்னேன். (மனிதர்களுக்கும் குளுகோஸ் கிடைக்காத சமையத்தில், இதே முறையில் அவசர சிகிச்சைக் கொடுக்கலாம்). கொஞ்ச நேரத்திலேயே, மாடு தெளிவாகி, கன்னு போட்டுச்சு.... அந்த விவசாயியோட குடும்பமே, கையெடுத்துக் கும்பிட்டு நெகிழ்தாங்க’’னு டாக்டர் ஞானப்பிரகாசம்,  சொல்லிய கால்நடை மருத்துவ அனுபவங்கள், ஏராளம், ஏராளம்..

பத்து வருஷத்துக்கு முன்னாடி ஈமுக்கோழி பிரச்னை வந்த நேரம். ஈமுக்கோழி வளர்ப்பு சம்பந்தமா, தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்துல நடந்த நிகழ்ச்சியில நம்ம ‘சிங்கம்’மும் ஒரு பேச்சாளர். மேடையேறி மைக் பிடிச்சவர், “ஈமு கோழிகளின் தாயகமான ஆஸ்திரேலியாவில்கூட ஈமுகோழி வளர்ப்பு தள்ளாடிக் கொண்டுதான் இருக்கிறது. என்னடா இது, எடுத்ததுமே எதிர்மறையாகப் பேசுகிறானே... என்று நினைத்துவிட வேண்டாம். ஆஸ்திரேலியாவில் 1994-ம் ஆண்டு 1,330 ஈமுகோழிப் பண்ணைகள் இருந்தன. இப்போது வெறும் 130 பண்ணைகள்தான் உள்ளன. பண்ணையை இப்படித்தான் நடத்தவேண்டும் என்ற சட்ட திட்டங்கள்கூட அங்கு உண்டு. அப்படியிருந்தும் பண்ணைகள் ஏன் குறைந்துவிட்டன என்பதைச் சிந்திக்க வேண்டும்’’னு எச்சரிக்கை மணி அடிச்சாரு. இதுக்கு பிறகுதான், அரசாங்கமும் விழிச்சுக்கிட்டு நடவடிக்கை எடுத்ததெல்லாம் வரலாறு.