மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை - இ.எம் எங்கு கிடைக்கும்... என்ன விலை?

நீங்கள் கேட்டவை - இ.எம் எங்கு கிடைக்கும்...  என்ன விலை?
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்கள் கேட்டவை - இ.எம் எங்கு கிடைக்கும்... என்ன விலை?

புறாபாண்டி, படங்கள்: வீ.சிவக்குமார். ஓவியம்: ஹரன்

‘‘இ.எம் திரவத்தை 100 லிட்டராகச் செறிவூட்டுவது எப்படி, இ.எம் தாய் திரவம் எங்கு கிடைக்கும்?’’

நீங்கள் கேட்டவை - இ.எம் எங்கு கிடைக்கும்...  என்ன விலை?



ச.சீத்தாராமன், செங்கானங்கொல்லை, ஆர்.வளர்மதி, காஞ்சிபுரம்.


இ.எம் தொழில்நுட்பத்தைத் தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தியவரும், விஞ்ஞானியுமான முனைவர் அ.உதயகுமார் பதில் சொல்கிறார்.

‘‘சமீப காலத்தில், இ.எம் என்ற இரண்டு வார்த்தை விவசாயிகள் மத்தியில் பிரபலமாகியுள்ளது. அதன் புண்ணியம் பசுமை விகடனையே சேரும். முதலில் செறிவூட்டப்பட்ட இ.எம் குறித்துப் பார்ப்போம். ஒரு லிட்டர் இ.எம் தாய் திரவத்திலிருந்து 20 லிட்டர் விரிவுபடுத்தப்பட்ட இ.எம் தயாரிக்கலாம் எனச் சிலர் சொல்கிறார்கள். இது நிறுவனங்களுக்குச் சாதகமானது. ஆனால், ஒரு லிட்டர் இ.எம் தாய் திரவத்திலிருந்து 100 லிட்டர் விரிவுபடுத்தப்பட்ட இ.எம் தயாரிக்கலாம். 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிரம்மில், 100 லிட்டர் இ.எம் தயாரிக்கக் கூடாது. அப்படிச் செய்யும்போது, டிரம்மில் உள்ள காலி இடத்தில் வாயுக்கள் உருவாகும். 

நீங்கள் கேட்டவை - இ.எம் எங்கு கிடைக்கும்...  என்ன விலை?

இது இ.எம் கரைசலின் வீரியத்தைப் பாதிக்கும். டிரம்களை நன்றாகச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். டீசல் மற்றும் ரசாயனங்கள் பயன்படுத்திய டிரம்களைத் தவிர்ப்பது நல்லது. அதேபோலச் செறிவூட்டப்பட்ட இ.எம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தண்ணீர், குளோரின் கலக்கப்படாத சுத்தமான தண்ணீராக இருக்க வேண்டும். குளோரின் கலந்த கார்ப்பரேஷன் தண்ணீர் மட்டுமே கிடைக்கும் சூழ்நிலையில், அந்தத் தண்ணீரை நான்கு நாள்கள் வைத்திருந்து பிறகு பயன்படுத்தலாம். 100 லிட்டர் கொள்ளளவுகொண்ட ஒரு பிளாஸ்டிக் டிரம்மை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் 94 லிட்டர் தண்ணீரை ஊற்ற வேண்டும். ஐந்து கிலோ வெல்லத்தைச் சேர்க்க வேண்டும். வெல்லத்துக்குப் பதிலாக 5 கிலோ மொலாசஸ் அல்லது கழிவுச் சர்க்கரையைக் கரைத்து ஊற்றலாம்.

நீங்கள் கேட்டவை - இ.எம் எங்கு கிடைக்கும்...  என்ன விலை?

இவையிரண்டும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருந்தாலோ கிடைப்பது அரிதாக இருந்தாலோ, வெள்ளைச் சர்க்கரையைப் பயன்படுத்தலாம். இதில், ஒரு லிட்டர் இ.எம் தாய் திரவத்தைக் கலக்க வேண்டும். இந்தக் கரைசலை நன்கு கலக்கி, வெளிக்காற்று உள்ளே போகாமல் இருக்குமாறு, மூடிவைக்க வேண்டும். இந்த டிரம்மீது நேரடியாக வெயில்படக் கூடாது. மாட்டுக்கொட்டகை, திண்ணை போன்ற நிழலான இடங்களில் வைத்துக்கொள்ளலாம். தினமும் மூடியைத் திறந்து, உடனே மூடிவிட வேண்டும். கலக்கத் தேவையில்லை. ஏழு நாள்கள் இப்படிச் செய்தால் போதும். எட்டாவது நாள் பயன்பாட்டுக்குத் தயாராகிவிடும். நாம் தயாரித்துள்ள செறிவூட்டப்பட்ட இ.எம், பயன்பாட்டுக்கு உகந்ததுதானா என்பதைச் சில அறிகுறிகள் மூலமாக அறிந்துகொள்ளலாம். எட்டாவது நாளில் டிரம்மில் உள்ள செறிவூட்டப்பட்ட கரைசலிலிருந்து நல்ல மணம் வரும். அப்படி வந்தால் அது பயன்பாட்டுக்கு ஏற்றது. மாறாக, துர்நாற்றம் வீசினால், அதைப் பயன்படுத்தக் கூடாது. அதிகபட்சம் 90 நாள்கள் வரை இருப்பு வைக்கலாம்.

இ.எம் தாய் திரவம் லிட்டர் ரூ.400 முதல் ரூ.600 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. இதைத் தமிழ்நாட்டில் உள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், விவசாயிகளுக்கு விற்பனை செய்ய முன்வரவேண்டும். தற்போது, இ.எம் மூலம் தனியார் நிறுவனங்கள்தான் கொள்ளை லாபம் பெற்றுவருகின்றன. இ.எம் திரவம் தேவைப்படுபவர்களும் அதை வாங்கி விற்பனை செய்ய விரும்பும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களும் இந்த எண்ணில் தொடர்புகொள்ளவும்.’’

தொடர்புக்கு, செல்போன்: 97877 87432.

‘‘இனிப்பு மக்காச்சோளம் (ஸ்வீட் கார்ன்) சாகுபடி செய்ய விரும்புகிறோம். இதன் விவரங்களைச் சொல்லவும்?’’

எம்.ரவிவர்மன், விருதாச்சலம்.


தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் சிறுதானியங்கள் துறை விஞ்ஞானி பதில் சொல்கிறார்.

‘‘இனிப்பு மக்காச்சோளம் அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் மிகவும் பிரபலமாக உள்ள காய்கறிப் பயிராகும். இது, இந்தியா மற்றும் இதர ஆசிய நாடுகளில்  தற்போது வேகமாகப் பிரபலமடைந்து வருகிறது. இதன் கதிர்கள் இளம்பருவத்தில் அறுவடை செய்யப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது. இனிப்பு மக்காச்சோளம் சாதாரண மக்காச்சோளத்தைவிட இனிப்புத் தன்மையில் மேம்பட்டு இருக்கிறது. இதனால், மகரந்தச் சேர்க்கை நடந்த 18 - 21 நாள்களுக்குப் பின்னர், இனிப்பு மக்காச்சோளத்தின் மணிகள், மக்காச்சோளத்தின் மணிகளைக் காட்டிலும் மிகவும் இனிப்பாக உள்ளது. இதன் மொத்த இனிப்புத் தன்மை 25-30 சதவிகிதமாகும்.

இனிப்பு மக்காச்சோளம் மிகக் குறைந்த வயதுடையதால் (75-80 நாள்கள்) பலபயிர் மற்றும் ஊடுபயிராகப் பயிரிட மிகவும் உகந்ததாகும். தானியங்களில் மாவுச்சத்து இல்லாத காரணத்தினால் மணிகள் மிகவும் சுருங்கியதாகக் காணப்படும். இரண்டு முதல் மூன்று மடங்கு இனிப்புடையது. அதனால், சூப்பர் ஸ்வீட் கதிர்கள் 10 நாள்கள் வரை இனிப்புத் தன்மை மாறாமல், மிகக் குறைந்த வெப்பநிலையில் சேமித்து வைக்கலாம். ஹெக்டேருக்கு 10 கிலோ விதை தேவைப்படும். இனிப்பு மக்காச்சோளம் குளிர் காலங்களான டிசம்பர் - ஜனவரியைத் தவிர ஆண்டு முழுவதும் பயிரிடலாம்.

நீங்கள் கேட்டவை - இ.எம் எங்கு கிடைக்கும்...  என்ன விலை?

கதிரில் உள்ள மணிகளை அழுத்தும்போது பால் போன்ற திரவம் வெளிப்படும். இதை 2 நாள்கள் கழித்து அறுவடை செய்தால் கதிரின் இனிப்புத் தன்மை வேகமாகக் குறையும். கதிர்களின் மணிகள் வெள்ளை, மஞ்சள் அல்லது இரண்டும் கலந்த நிறத்தில்  இருக்கும். ஆனால், மணிகளின் நிறத்திற்கும் கதிரின் இனிப்புத் தன்மைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. மாலை அல்லது அதிகாலை நேரத்தில் அறுவடை செய்ய வேண்டும். ஹெக்டேருக்கு 66,000 கதிர்கள் கிடைக்கும்.

அறுவடை செய்யப்பட்ட கதிர்களை வெயில்படாத மற்றும் குறைந்த வெப்ப நிலையில் சேமிப்பதன்மூலம் அவற்றின் சுவை மாறாமல் பாதுகாக்கலாம். அறுவடைசெய்த கதிர்களை உடனடியாக விற்பனைசெய்யும் இடத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டும். இனிப்பு மக்காச்சோளத்தைப் பச்சையாகவும் வேகவைத்து உப்பு சேர்த்தும் சாப்பிடலாம். இனிப்பு மக்காச்சோளத்தை அறுவடை செய்த பின்பு செடிகள் பச்சையாக இருப்பதால், அவற்றைப் பசுந்தீவனமாகப் பயன்படுத்தலாம். ஹெக்டேருக்கு 250-400 குவிண்டால் தட்டை அறுவடை செய்யலாம்.’’

தொடர்புக்கு, தொலைபேசி: 0422 2450507.

நீங்கள் கேட்டவை - இ.எம் எங்கு கிடைக்கும்...  என்ன விலை?

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக் கொண்டிருக்கிறார்.

உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’,  பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்குத் தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும்,
99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும்  அனுப்பலாம்.