மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு: பட்டு விவசாயிகளுக்குப் பரிசுத் திட்டம்!

மரத்தடி மாநாடு: பட்டு விவசாயிகளுக்குப்  பரிசுத் திட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு: பட்டு விவசாயிகளுக்குப் பரிசுத் திட்டம்!

ஓவியம்: ஹரன்

ன்று அதிகாலையிலேயே ஏரோட்டியின் தோட்டம் களைகட்டியிருந்தது. தனியார் தொலைக்காட்சியில் இருந்து ‘பாரம்பர்ய பொங்கல் விழா’ படப்பிடிப்புக்காக வந்திருந்தனர். பட்டுச்சேலை கட்டிவந்த காய்கறி கண்ணம்மா, பொங்கல் வைத்துக் கொண்டிருந்தார்.

மாடுகளைக் குளிப்பாட்டி அலங்காரம் செய்து நிறுத்தி வைத்திருந்தார் ஏரோட்டி ஏகாம்பரம். நின்றபடி படப்பிடிப்பைப் பார்த்துக்கொண்டிருந்தார் ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. பொங்கல் பொங்கும் சமயத்தில், பெண்கள் குலவைச் சத்தம் எழுப்பியும், ‘பொங்கலோ பொங்கல்’ என்று சத்தமிட்டும் வழிபட்டனர். அடுத்து அனைவருக்கும் பொங்கல் பரிமாறினார் காய்கறி. ஒரு வழியாகப் படப்பிடிப்புக் குழுவினர் வேலைகளை முடித்துவிட்டுக் கிளம்ப, ‘அப்பாடா’ என்று சொல்லியபடி வந்தமர்ந்தார் காய்கறி. ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டை ஆரம்பித்து வைத்தார் வாத்தியார்.

மரத்தடி மாநாடு: பட்டு விவசாயிகளுக்குப்  பரிசுத் திட்டம்!

“போன 2016-ம் வருஷம், நவம்பர் மாசம் ஐந்நூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாதுன்னு பிரதமர் அறிவிச்சார். அதுக்கடுத்து, பயிர்க்கடன் தேவைப்படுற விவசாயிகள், அவங்க வசிக்கிற எல்லையில் இருக்கிற மத்தியக் கூட்டுறவு வங்கியில் புதுக் கணக்குத் தொடங்கித்தான் கடன் வாங்கணும்னு அறிவிச்சாங்க. அதனால கிராமங்கள்ல இருக்கிற தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள்ல கடன் வாங்க முடியாத சூழ்நிலை இருந்துச்சு. இதுக்காக மத்தியக் கூட்டுறவு வங்கிக் கிளைகளுக்கு விவசாயிகள் அலைஞ்சுட்டு இருந்தாங்க. இதை மாத்தி பழையபடியே கடன் கொடுக்கணும்னு பல விவசாயிகள் கோரிக்கை வெச்சதுக்கப்புறம் தமிழக அரசு, ‘தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள்ல விவசாயிகள் பயிர்க்கடன் வாங்கிக்கலாம்’னு அறிவிச்சிருக்கு. ஆனாலும், பல தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள்ல பயிர்க்கடன் முறையாகக் கொடுக்கிறதில்லைனு புகார் சொல்றாங்க விவசாயிகள்.

அதேபோல, முன்ன பயிர்க்கடன் வாங்கின விவசாயிகள் வருஷத்துக்கு ஒருமுறை வட்டியை மட்டும் கட்டி கடனை நீட்டிக்கிற வசதி இருந்துச்சு.  ஆனா,  இப்போ  முழுத்தொகையையும் வட்டியோட கட்டிட்டுதான் புதுப்பிக்க முடியும்னு கூட்டுறவுத்துறை அதிகாரிகள் சொல்றாங்க. இந்த நடைமுறையை மாத்தணும்னு விவசாயிகள் கோரிக்கை வெச்சிருக்காங்க” என்றார். “ஆமா, மொத்தமா கட்டணும்னா விவசாயிகள் பணத்துக்கு எங்க போவாங்க?” என்று கேட்டார் காய்கறி. அடுத்து ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார் ஏரோட்டி. “பட்டு வளர்ச்சித்துறை மூலமா அதிகப் பட்டுக்கூடு உற்பத்தி செய்ற விவசாயிகளுக்கான போட்டியை அறிவிச்சிருக்காங்க. மாநில அளவுல மூணு பரிசுகளையும் மாவட்ட அளவுல மூணு பரிசுகளையும் கொடுக்கப் போறாங்களாம். மாநில அளவுல முதல் பரிசு ஒரு லட்ச ரூபாய், இரண்டாம் பரிசு 75 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசு 50 ஆயிரம் ரூபாய்னு அறிவிச்சிருக்காங்க. அதேபோல மாவட்ட அளவுல முதல் பரிசு 25 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசு 20 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசு 15 ஆயிரம் ரூபாய்னு அறிவிச்சிருக்காங்க.

போட்டியில கலந்துக்க விரும்புற விவசாயிகள், முட்டை தொகுதிகள் வாங்கினதுக்கான ரசீது, இளம் புழுக்கள் வாங்கினதுக்கான மைய ரசீது, பட்டுக் கூடுகள் விற்பனை செய்த ரசீது என மூன்றையும் விண்ணப்பத்தோடு இணைச்சு அனுப்பணும். 2017 ஏப்ரல் மாசத்துல இருந்து 2018 மார்ச் மாசம் வரை கணக்குப் பண்ணுவாங்களாம்” என்றார்.

அந்த நேரத்தில் தை மாத விதைப்புக்காக விதைக்கடலை மூட்டைகள் ஏற்றிய மினி லாரி வர, அதை இறக்கிப் பத்திரப்படுத்துவதற்காக எழுந்து ஓடினார் ஏரோட்டி. அத்துடன் மாநாடும் முடிவுக்கு வந்தது.