
ஓவியம்: ஹரன்
தோட்டத்தில் இருந்த காகிதக்குப்பைகளை எடுத்து ஒரு மூலையில் போட்டு எரித்துக் கொண்டிருந்தார் ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். மரத்தடியில் அமர்ந்து அவருடன் பேசிக்கொண்டிருந்தார் ‘காய்கறி’ கண்ணம்மா. சற்று நேரத்தில் வந்து சேர்ந்த ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி, “பேங்க்ல கொஞ்சம் வேலை இருந்துச்சு. அதான் லேட்” என்று விளக்கம் கொடுத்தவாறே வந்து கருங்கல்லின்மீது அமர்ந்து, ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டை ஆரம்பித்து வைத்தார்.
“திண்டுக்கல் மாவட்டம், பழைய வத்தலக்குண்டுங்கிற கிராமத்தைச் சேர்ந்த சங்கர்கணேஷ், மாலத்தீவுல வாத்தியார் வேலை பார்த்துட்டுருக்கார். இவருக்கும் இன்ஜினீயரிங் படிப்பு முடிச்ச கலைச்செல்விங்கிற பொண்ணுக்கும் போன ஜனவரி 19-ம் தேதி, சென்றாயப்பெருமாள் கோயில்ல கல்யாணம் நடந்துச்சு.
அது முடிஞ்சவுடனே பொண்ணு, மாப்பிள்ளை ரெண்டு பேரும் வரவேற்பு நிகழ்ச்சிக்காகக் கிளம்பினாங்க. வழக்கமா புதுப்பொண்ணு, மாப்பிள்ளையைக் கார்லதான கூட்டிட்டுப் போவாங்க. ஆனா, இவங்க ரெண்டு பேரும் அலங்காரம் செஞ்ச மாட்டு வண்டியில ரெண்டு கிலோ மீட்டர் தூரம் பயணம் செஞ்சு மண்டபத்துக்குப் போனாங்க. ‘சுற்றுச்சூழலைக் காப்பாத்தணும், பாரம்பர்யத்தை மறக்கக் கூடாது, விவசாயம் காப்பத்தப்படணும்’ங்கிற விஷயங்களை எல்லோருக்கும் உணர வைக்கணும்னு இப்படி ஏற்பாடு செஞ்சாங்களாம். அதோட கல்யாணத்துக்கு வாழ்த்த வந்தவங்களுக்கு மரக்கன்றுகளைக் கொடுத்திருக்காங்க” என்றார் வாத்தியார்.
அடுத்த செய்தியை ஆரம்பித்த ஏரோட்டி, “ஜல்லிக்கட்டுப் போராட்ட வெற்றிக்காக மெரினா கடற்கரையில ஒரு நினைவுச் சின்னத்தை அமைக்கணும்னு தமிழக அரசுகிட்ட ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கோரிக்கை வெச்சுருக்காங்க.

இதுக்காக, ‘ஜல்லிக்கட்டு நினைவுச் சின்னம் ஒருங்கிணைப்புக் குழு’னு ஒரு குழுவை அமைச்சுருக்காங்க. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு ஆலோசகரா இருந்த பொன்ராஜ்தான், இந்தக்குழுவுக்கு ஆலோசகர். இவங்க, ‘ஒரு கையெழுத்து... ஒரு ரூபாய், ஒரு கோடி... ஒரு மாதம்’னு இயக்கத்தை ஆரம்பிச்சுருக்காங்க. இந்த இயக்கம் மூலமா ஒரு மாசத்துக்குள்ள ஒரு கோடி மக்களைச் சந்திச்சு கையெழுத்து வாங்கி, அவங்ககிட்ட ஆளுக்கு ஒரு ரூபாய் பெற்று, ஒரு கோடி ரூபாய் சேர்க்கப்போறாங்க. அந்தப்பணத்தை முதலமைச்சர்கிட்ட கொடுத்து நினைவுச்சின்னம் அமைக்கச் சொல்லப் போறாங்களாம். அதோட ஜல்லிக்கட்டுக்காகப் போராடுன இளைஞர்கள் மேல போட்ட வழக்குகளை வாபஸ் வாங்கணும்னும் வலியுறுத்தப் போறாங்களாம்” என்றார்.
“நினைவுச் சின்னம் அமைக்காட்டியும்கூடப் பரவாயில்லை. அந்தப்பிள்ளைங்கமேல போட்ட வழக்குகளை வாபஸ் வாங்க வேண்டியது ரொம்ப முக்கியம்” என்று சொன்ன காய்கறி, தான் கொண்டுவந்திருந்த அன்னாசிப் பழத்தை நறுக்கி, ஆளுக்கு இரண்டு துண்டுகளை எடுத்துக்கொடுத்தார். “உப்பும், மிளகாய்ப்பொடியும் கொண்டு வந்துருந்தா இன்னும் சுவையா இருக்கும்” என்று சொன்ன வாத்தியார், பழத்தைச் சுவைத்துக்கொண்டே ஒரு செய்தியைச் சொன்னார்.
“கோயம்புத்தூர், திருப்பூர் பகுதிகள்ல இருக்குற விவசாய நிலங்களுக்குப் பாசனம் பண்றதுக்காக, மேற்குத்தொடர்ச்சி மலையில அணைகள் கட்டி உருவாக்குன திட்டம்தான், ‘பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத் திட்டம்’. இதைச் சுருக்கமா பி.ஏ.பி திட்டம்னு சொல்வாங்க.
இந்தத் திட்டத்துக்காகக் கேரள மாநிலத்தோடு ஓர் ஒப்பந்தம் போட்டுருக்காங்க. அந்த ஒப்பந்தப்படி, சோலையாறு அணையிலிருந்து வருஷத்துக்கு 12.3 டி.எம்.சி தண்ணீரும், ஆழியாறு அணையில் இருந்து வருஷத்துக்கு 7.25 டி.எம்.சி தண்ணீரையும் கேரளாவுக்குக் கொடுக்கணும். அதன்படி இந்த வருஷம், ஆழியாறு அணையில இருந்து 5 டி.எம்.சி தண்ணீரைக் கேரளாவுக்குக் கொடுத்துருக்காங்க.
இந்தத் தண்ணீர் பங்கீட்டுக்காக ஆறு மாசத்துக்கு ஒருமுறை, ரெண்டு மாநில அதிகாரிகளும் இணைஞ்சு கூட்டம் நடத்துவாங்க. இந்த ஆய்வுக்கூட்டம், சமீபத்துல திருவனந்தபுரத்துல நடந்துச்சு. இந்தக் கூட்டத்துல, ‘ஆழியாறு அணையிலிருந்து கொடுக்க வேண்டிய மீதித் தண்ணீரை உடனடியாகக் கொடுக்கணும்’னு கேரள அதிகாரிகள் சொல்லியிருக்காங்க. உடனே தமிழக அதிகாரிகள், ‘இந்த வருஷம் கடுமையான வறட்சி, எங்க மாநிலத்துக்குத் தண்ணீர் தேவை’னு சொல்லிருக்காங்களாம்.
ஆனா, கேரள அதிகாரிகள் ‘வறட்சியை எல்லாம் நாங்க பங்கு போட்டுக்க முடியாது, தண்ணீர் கொடுக்குற வழியைப் பாருங்க’னு கடுமையாகச் சொல்லிட்டாங்களாம். அதனால, ‘பிப்ரவரி 14-ம் தேதி வரைக்கும், நொடிக்கு 400 கன அடி தண்ணீரைத் திறந்துவிடுறோம்’னு தமிழக அதிகாரிகள் ஒத்துக்கிட்டதா தகவல்கள் வெளியாகியிருக்கு. ஆனா, அதுபத்தி அதிகாரபூர்வமா தமிழக அதிகாரிகள் யாரும் வாய் திறக்க மாட்டேங்குறாங்களாம். ஏற்கெனவே ஆழியாறு அணையில தண்ணீர் குறைவா இருக்குற சூழ்நிலையில, கேரளாவுக்குத் தண்ணீரைக் கொடுத்துட்டா ஆழியாறு அணையை நம்பியிருக்குற நம்ம விவசாயிகள் கடுமையா பாதிக்கப்படுவாங்க. அதனால, போராட்டத்துல இறங்கலாம்னு விவசாயிகள் முடிவு செஞ்சுருக்காங்களாம்” என்றார்.
“அடப்பாவிகளா, அவங்க மட்டும் முல்லைப்பெரியாறு விஷயத்துல இவ்வளவு கறாரா இருக்குறாங்க. நம்ம அதிகாரிகள் ஏன் இப்படி விட்டுக்கொடுத்துட்டு வராங்க” என்று கேட்டார் காய்கறி. “அதுல ஏதாவது உள்குத்து அரசியல் இருக்கும். அதையெல்லாம் நம்மள மாதிரி சம்சாரிக கண்டுக்கப்படாது” என்ற ஏரோட்டி அடுத்த செய்திக்குத் தாவினார்.
“இந்த வருஷமும் ‘பிரதம மந்திரி விவசாயிகள் நுண்ணீர்ப் பாசனத் திட்டம்’ தமிழ்நாட்டுல நடைமுறையில இருக்கு. இந்தத் திட்டம் மூலமா சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியமும், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியமும் கொடுக்குறாங்க. இந்தத் திட்டத்துல சரக்கு மற்றும் சேவை வரிக்கும் சேர்த்து மானியம் உண்டு. இந்தத் திட்டத்துல 50 நாள்களுக்குள்ள விண்ணப்பிக்கணும்னு கெடு விதிச்சுருக்காங்க.
நுண்ணீர்ப்பாசனம் அமைக்க விரும்புற சிறு, குறு விவசாயிகள் மானியம் பெறணும்னா, அவங்க கிராமத்துல இருக்குற 15 பேர்கிட்ட கையெழுத்து வாங்கி, நில ஆவணங்களைக் கிராம நிர்வாக அலுவலர்கிட்ட கொடுக்கணும். அதுக்கப்புறம், வருவாய் ஆய்வாளர் சம்பந்தப்பட்ட நிலத்துக்கு வந்து பார்த்துட்டுக் கையெழுத்து போடணும். அதுக்குப்பிறகு, மண்டலத் துணை தாசில்தார், தாசில்தார் ரெண்டு பேரும் கையெழுத்து போட்டுச் சிறு விவசாயி அல்லது குறு விவசாயினு சான்று கொடுப்பாங்க. இந்தச் சான்று இருந்தாதான் நூறு சதவிகித மானியத்தை வாங்க முடியும்.
இந்த வேலைகளையெல்லாம் முடிக்க மாசக்கணக்குல ஆகும்ங்கிறதால நிறைய விவசாயிகள், இந்தத் திட்டத்தை விரும்பலை. அதனால, இலக்கை அடைய முடியாம வேளாண்துறை அதிகாரிகள் கஷ்டப்பட்டுக் கிட்டுருக்காங்க. இலக்கை அடைய முடியாம மானியத்தொகையைத் திரும்ப அனுப்பிட்டா அடுத்தடுத்த வருஷங்கள்ல மத்திய அரசு மானியத் தொகையைக் குறைச்சுடும். அதனால, அரசாங்கம் தலையிட்டு, ‘சீக்கிரமா சான்று கொடுக்கணும்’னு வருவாய்த்துறைக்கு உத்தரவு போடணும்னு வேளாண்மைத் துறையினரும் விவசாயிகளும் கோரிக்கை வைக்கிறாங்க” என்ற ஏரோட்டி,
“மணி பதினொன்றரையாச்சு. தோட்டத்துல வேலை செய்றவங்களுக்கு டீ, வடை வாங்கித்தரணும்’ என்று சொல்லிக்கொண்டே எழுந்து செல்ல மாநாடும் முடிவுக்கு வந்தது.