மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு: கலப்படத் தேங்காய் எண்ணெய்... சரியும் கொப்பரை விலை!

மரத்தடி மாநாடு: கலப்படத் தேங்காய் எண்ணெய்... சரியும் கொப்பரை விலை!
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு: கலப்படத் தேங்காய் எண்ணெய்... சரியும் கொப்பரை விலை!

ஓவியம்: ஹரன்

ளையெடுக்கும் வேலை இருந்ததால் காலையிலேயே தோட்டத்துக்கு வந்துவிட்டார் ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். வியாபாரத்தை முடித்துவிட்டுத் தோட்டத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார் ‘காய்கறி’ கண்ணம்மா. இடையில் அவரோடு சேர்ந்துகொண்டார் ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. தோட்டத்துப் பாதையில் இருவரின் தலைகளையும் பார்த்துவிட்ட ஏரோட்டி, கை கால்களைக் கழுவிவிட்டு அவர்களோடு வந்து அமர்ந்துகொண்டார். ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டை ஆரம்பித்து வைத்தார் வாத்தியார்.

மரத்தடி மாநாடு: கலப்படத் தேங்காய் எண்ணெய்... சரியும் கொப்பரை விலை!

“தென்னையிலிருந்து ‘நீரா’ பானம் இறக்குறதுக்கு அரசாங்கம் கொள்கை ரீதியா அனுமதி கொடுத்துருந்தாலும், விற்பனை செய்றதுக்கான விதிமுறைகளை அமைச்சுக் கொடுக்கலை. அதனால, விவசாயிகள் பல பிரச்னைகளைச் சந்திச்சுட்டுருக்காங்க. இப்போதைக்குக் கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர், அன்னூர், கிணத்துக்கடவு, தொண்டாமுத்துார் பகுதிகள்ல நீரா பானம் விற்பனை செய்யயப்படுது. சோதனைங்கிற பேர்ல நீரா இறக்குற விவசாயிகளுக்கு அடிக்கடி போலீஸ்காரங்க தொந்தரவு கொடுக்குறாங்களாம். அதனால, அரசாங்கமே விற்பனையாளர் கம்பெனியை உருவாக்கி விவசாயிகள்கிட்ட கொள்முதல் செய்யணும். அல்லது கூட்டுறவு நிறுவனத்தை உருவாக்கி விற்பனை செய்யணும்னு விவசாயிகள் கேட்டிட்டிருக்காங்க” என்றார்.

“ஆமா, உற்பத்தியாளர் கம்பெனி அமைச்சுத்தான் நீரா விற்பனை செய்ய முடியும்னு அரசாங்கம் சொல்லுது. அனைத்து ஊர்கள்லயும் இருக்கிற விவசாயிகளுக்கு அது எப்படிச் சாத்தியமாகும்? நீராவுக்கான அனுமதியே ஏதோ கண்துடைப்புக்காகப் போட்ட உத்தரவு மாதிரிதான் இருக்கு” என்ற ஏரோட்டி அடுத்த செய்தியைச் சொன்னார்.

“கழிமுகப் பகுதிகள் மற்றும் கடற்கரை ஓரங்கள்ல இருக்கிற அலையாத்திக் காடுகள்தான் பெரிய அலைகளைத் தடுத்து கடலோரக் கிராமங்களைக் காப்பாத்திட்டுருக்கு. இந்தக் காடுகள் உள்ள பகுதிகள்ல மீன், இறால், நண்டுகள் எல்லாம் இனப்பெருக்கத்துல ஈடுபடும். அதனால, பல்லுயிர்ச்சூழல்ல அலையாத்திக் காடுகளுக்கு முக்கியப் பங்கு இருக்கு. 2004-ம் வருஷம் சுனாமி வந்து நிறைய சேதம் ஏற்பட்ட பிறகுதான் அலையாத்திக் காடுகளோட முக்கியத்துவத்்தை உணர்ந்தது வனத்துறை. அதனால, இந்த மரங்களைப் பெருக்குறதுக்காகப் பல வேலைகளைச் செஞ்சுட்டுருக்கு. அதே நேரத்துல தொழிற்சாலைகளுக்காக அலையாத்திக் காடுகளைப் பெருமளவு அழிக்கிற வேலையும் நடந்துட்டுருக்கு.

சென்னைக்குப் பக்கத்துல இருக்குற பழவேற்காடு, காட்டுப்பள்ளி, அத்திப்பட்டுப் புதுநகர், எண்ணூர், காளஞ்சி பகுதிகள்ல அலையாத்திக் காடுகள் இருக்கு. இந்தப் பகுதிகள்ல இருக்குற அலையாத்திக் காடுகளை அழிச்சுத் தொழிற்சாலைகள் உருவாகிட்டுருக்கு. அதில்லாம வல்லுார் அனல் மின் நிலையத்துல கழிவா வெளியாகுற சாம்பலைக் கொட்டுறதுக்காகவும் அலையாத்திக் காடுகளை அழிச்சுட்டுருக்குறாங்களாம். இதையெல்லாம் நிறுத்தி அலையாத்திக் காடுகளைப் பெருக்க அரசாங்கம் ஏற்பாடு செய்யணும்னு இந்தப்பகுதி மீனவர்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் போராட்டங்களை நடத்திட்டுருக்காங்க. ஆனா, அரசாங்கம்  கண்டுக்க மாட்டேங்குதாம்” என்றார்.

“அதிகார நாற்காலிகள்ல உக்காந்துருக்கறவங்களுக்கு எல்லாம் தலைக்கு மேல கத்தி தொங்கிட்டுருக்கு. அவங்க நாற்காலியைக் காப்பாத்துவாங்களா, மக்களுக்குச் சேவை பண்ணுவாங்களா” என்று நக்கலாகச் சொன்ன காய்கறி, கூடையில் இருந்து ஆளுக்கு இரண்டு தர்பூசணித் துண்டுகளை எடுத்துக்கொடுத்தார்.

“விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதிகள்ல இப்போவே தர்பூசணி அறுவடை ஆரம்பிச்சாச்சு. அங்கயிருந்து தமிழ்நாடு முழுக்க தர்பூசணி பழங்களை விற்பனைக்கு அனுப்பிட்டுருக்காங்க. இப்போதைக்குச் சில்லறை விலையில ஒரு கிலோ 20 ரூபாய்னு விற்பனையாகிட்டுருக்கு. உடலுக்கு நல்ல குளிர்ச்சி தருங்கிறதால நிறைய பேர் இதை விரும்பிச் சாப்பிடுறாங்க” என்று ஒரு தகவலையும் எடுத்துவிட்டார் காய்கறி.

மரத்தடி மாநாடு: கலப்படத் தேங்காய் எண்ணெய்... சரியும் கொப்பரை விலை!

தர்பூசணியைச் சுவைத்தபடியே ஒரு செய்தியைச் சொன்ன வாத்தியார்.

“கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்கள்ல பரம்பிகுளம்-ஆழியாறு திட்டம் (பி.ஏ.பி) மூலமா கிட்டத்தட்ட நாலு லட்சம் ஏக்கர் அளவு நிலங்களுக்குப் பாசன வசதி கிடைச்சுட்டுருக்கு. இந்தத் திட்டத்துல இதுவரை செயல்படுத்தப்படாம இருக்குற ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டங்களையும் நடைமுறைபடுத்தணும்னு கிட்டத்தட்ட 27 வருஷமா விவசாயிகள் கேட்டுட்டுருக்காங்க. ஒவ்வொரு தேர்தல் சமயத்துலயும் அரசியல்வாதிகள் தேர்தல் அறிக்கையில, இந்தத்திட்டத்தைச் செயல்படுத்துவோம்னு சொல்வாங்க. ஆனா, ஆட்சிக்கு வந்தப்புறம் மறந்துடுவாங்க. இந்தத் திட்டங்களை உடனே செயல்படுத்தணும்னு சமீபகாலமா விவசாயிகள் தொடர்ந்து போராடிட்டுருக்காங்க.

இதுக்கிடையில போன டிசம்பர் மாதம் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘இதுவரைக்கும் பல்வேறு காரணங்களால ஆனைமலையாறு, நல்லாறு திட்டங்களைச் செயல்படுத்த முடியலை. உடனடியா, மூத்த அதிகாரிகள், மூத்த பொறியாளர்கள் அடங்குன வல்லுநர் குழுவை அமைச்சு இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவோம்’னு மேடையில சொன்னார். சொல்லிட்டுப் போய்க் கிட்டத்தட்ட ஒன்றரை மாசமாகியும் அதுக்கான எந்த வேலைகளுமே இதுவரை நடக்கலை. ஒரு அரசாணைகூட இதுவரை வெளியிடப்படலை. அதனால, விவசாயிகள் கொந்தளிச்சுப்போய் இருக்குறாங்க” என்றார்.

அடுத்த செய்திக்குத் தாவிய ஏரோட்டி, “தமிழ்நாட்டுல தேங்காய் வரத்து ரொம்பக் குறைவா இருக்குறதால, ரெண்டு மூணு மாசத்துக்கு முன்னாடி கொப்பரை விலை கிலோ 150 ரூபாய் அளவுல இருந்துச்சு. ஆனா, திடீர்னு 130 ரூபாய்க்குக் குறைஞ்சிடுச்சு. கிட்டத்தட்ட ஒரு மாசமா 140 ரூபாயைத் தாண்டாமத்தான் விற்பனையாகிட்டுருக்கு. வரத்தே இல்லாத சூழ்நிலையிலும் கொப்பரைக்கு விலை ஏறாததால அதிருப்தியில் இருக்குறாங்க விவசாயிகள். வியாபாரிகள் சிண்டிகேட் போட்டுக்கிட்டு விலையை ஏறவிடாமச் செய்றாங்கனு ஒரு குற்றச்சாட்டு இருக்கு. அதே நேரத்துல, ‘மார்க்கெட்ல விற்பனை செய்யப்படுற தேங்காய் எண்ணெய்ல ‘பாம்கர்னல் ஆயிலை’ கலந்துதான் பல கம்பெனிகள் விற்பனை செய்றாங்க. அதனாலதான் கொப்பரைக்கு விலை கிடைக்கலை’னும் விவசாயிகள் சொல்றாங்க. எவ்வளவு பாம்கர்னல் ஆயில் இறக்குமதி ஆகுது, அதை எந்தெந்த நிறுவனங்கள் வாங்கிப் பயன்படுத்துறாங்கனு அரசாங்க அதிகாரிகள் ஆய்வு செஞ்சு, நடவடிக்கை எடுத்தாத்தான் சுத்தமான தேங்காய் எண்ணெய் மார்க்கெட்டுக்கு வரும். கொப்பரைக்கும் உரிய விலை கிடைக்கும்னு விவசாயிகள் சொல்றாங்க” என்றார்.

“யோவ், இன்னொரு விஷயம்யா, கொஞ்ச நாளைக்கு முன்னாடி பசு மாடுகளுக்கு அடையாள அட்டை கொடுக்கறது பத்தி நாம பேசுனோம்ல, அதை இப்போ நடைமுறைப்படுத்த போறாங்கய்யா” என்ற வாத்தியார்,

“ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மாநிலங்கள்ல ‘பசுக்கடத்தலைத் தடுக்குறோம்’னு சொல்லிக்கிட்டுப் பசு மாடுகளைக்கொண்டு வர்றவங்களை எல்லாம் பிடிச்சு அடிச்சுட்டுருந்தாங்க. இந்த மாதிரி பிரச்னைகளைத் தடுக்குறதுக்காக மாடுகளுக்கு அடையாள அட்டை வழங்கலாம்னு மத்திய அரசு முடிவு செஞ்சுருந்துச்சு. இப்போ முதல் கட்டமா 4 கோடி பசுக்களுக்கு அடையாள அட்டை வழங்கலாம்னு மத்திய அரசாங்கம் முடிவெடுத்திருக்கு. அதுக்காக 50 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்காங்க. ஆதார் அட்டை மாதிரி பசுக்களுக்கும் பசுவைப்பத்தின விவரங்களோடு தனிச்சான்றிதழ் கொடுக்கப் போறாங்களாம்” என்றார்.

அந்தநேரத்தில், தோட்டத்தில் களை எடுத்துக்கொண்டிருந்த ஆள்கள் சத்தம் போட, எழுந்து ஓடினார் ஏரோட்டி. அத்தோடு அன்றைய மாநாடும் முடிவுக்கு வந்தது.