மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: ‘சிறியதே அழகானது’

மண்புழு மன்னாரு: ‘சிறியதே அழகானது’
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு: ‘சிறியதே அழகானது’

மாத்தியோசிஓவியம்: ஹரன்

ண்பர் ஒருத்தர், தனியார் நிறுவனத்துல உயர் பதவியில இருக்காரு. அவரோட பதவிக்கு நிகரா உள்ளவங்க விதவிதமான கார்ல வருவாங்க. ஆனா, இவர் மட்டும் பத்து வருஷத்துக்கு முன்னாடி வாங்குன மோட்டார் பைக்குலதான் வருவாரு.

 சமீபகாலமா அதுவும் கிடையாது. ஏன்னு விசாரிச்சேன். ‘‘சென்னையில, மெட்ரோ ரயில் விட்டிருக்காங்க. பொது வாகனத்துல பயணம் செய்யும்போது, சுற்றுச்சூழலுக்குத் தீமை ஏற்படாது. ரயில் பயண நேரத்துல நல்ல புத்தகங்களைப் படிக்கலாம். இதோ பாருங்க, இந்தப் புத்தகத்தைப் படிச்சு முடிச்சுட்டேன். நிச்சயம் நீங்க படிக்கணும்”னு சொல்லி, அந்தப் புத்தகத்தை அன்பளிப்பா கொடுத்திட்டு, மெட்ரோ ரயில்ல ஏறக் கிளம்பிட்டாரு.

‘சிறியதே அழகு’ பெயருக்கு ஏத்தமாதிரி, புத்தகமும்கூடச் சின்னதா இருந்துச்சு. ‘ஸ்மால் இஸ் பியூட்டிஃபுல்’ங்கிற (Small Is Beautiful) இந்தப் புத்தகத்தோட ஆங்கிலப் புத்தகத்தை ஏற்கெனவே படிச்சிருக்கேன். ஆனாலும், அன்னைத் தமிழ் மொழியில படிக்கும்போது ஏற்பட்ட அனுபவம் தனிதான்.

மண்புழு மன்னாரு: ‘சிறியதே அழகானது’

இந்தப் புத்தகத்தோட ஆசிரியர் இ.எஃப்.ஷூமாஸர் (E.F.Schumacher) ஜெர்மனி நாட்டுல பிறந்தவரு. பொருளாதார நிபுணராவும், இயற்கை விவசாய ஆதரவாளராவும், பத்திரிகையாளராவும், இங்கிலாந்து நாட்டுல உள்ள மிகப்பெரிய இயற்கை வேளாண்மை அமைப்பான சாயில் அசோஷியேஷன் தலைவராவும் இருந்திருக்காரு. இந்தப் பல்துறை அறிவும் அனுபவம்தான் ‘சிறியதே அழகு’ பிறக்குறதுக்குக் காரணமா இருந்திருக்கு. 1973-ம் ஆண்டு ‘சிறியதே அழகு’ புத்தகத்தை ஷுமாஸர் வெளியிட்ட சமயம், அதை யாரும் மதிக்கல.

ஆனா, அடுத்த 10 வருஷத்துல, இயற்கை ஆர்வலர்களுக்கும் மாற்றுப் பொருளாதாரச் சிந்தனையாளர்களுக்கும் புனிதநூல் மாதிரி கொண்டாடுனாங்க. இந்தப் புத்தகத்தை உலகின் 100 சிறந்த புத்தகங்களில் ஒன்றா ‘டைம்ஸ்’ பத்திரிகை தேர்ந்தெடுத்திருக்கு. மகாத்மா காந்தியடிகளோட கிராமப் பொருளாதரக் கொள்கை, புத்தரின் அகிம்சை கொள்கை ஆகியவற்றில் ஷூமாஸருக்குப் பிடிப்பு அதிகம். அதைப் புத்தகம் முழுக்கப் பார்க்க முடியுது. இனி, ‘சிறியதே அழகு’ புத்தகத்துல ஷூமாஸர் சொல்லியிருக்கிற தகவல்களைச் சிறு துளி அளவுல சுவைச்சுப் பார்க்கலாம் வாங்க....

‘‘காந்தியடிகள் சொன்னதைப்போல ‘அதிக உற்பத்தியால் உலகின் ஏழைகளுக்கு உதவ முடியாது. ஆனால், பெரும்பான்மையான மக்களால் உற்பத்தி செய்வதன்மூலமே உதவ முடியும். அதிக அளவு உற்பத்தித் தொழில்நுட்பமுறை வன்முறையானது; சுற்றுச்சூழலைப் பாதிக்கக் கூடியது; புதுப்பிக்கப்படாத ஆற்றல்களைப் பயன்படுத்தி, மனித இனத்தை நெருக்கடிக்குள்ளாக்க கூடியது. ஆனால், பெரும்பான்மையான மக்களால் உற்பத்திசெய்யப்படும் முறையோ, அனுபவத்தினால் உண்டான நவீன அறிவுடன், ஓரிடத்தில் குவியாமல் சுற்றுச்சூழலுக்கு இணக்கமான, மனிதனை இயந்திரங்களுக்கு அடிமையாக்காமல் அவனையே முழுமையாகப் பயன்படுத்தும் முறையாகும். இதை ‘இடைத்தரமான தொழில்நுட்பம்’ அல்லது ‘மக்கள் தொழில்நுட்பம்’ என்று அழைக்கலாம்.

நிபுணர்களைவிடச் சாதாரண மனிதர்களே மனிதத் தன்மையுடன் விஷயத்தை அணுகுவார்கள் என்பதால் சாதாரண மனிதர்களின் மீதே, எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நவீன விவசாயத்தில் பயன்படுத்தும் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி விஷங்கள் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த வகை ரசாயன விஷங்களைப் பயன்படுத்தாமல் அதிக விளைச்சலைப் பெறும் விவசாயிகள் அநேக நாடுகளில் உள்ளனர். இயற்கை வேளாண்மைக்கு ஆதரவாகச் செயல்படும் தன்னார்வக் குழுக்களோ, இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளோ, அரசாங்கங்களின் ஆதரவையோ அங்கீகாரத்தையோ பெற முடியவில்லை. அவர்கள் நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இணையாக இல்லை என்று மறுதலிக்கப்படுகிறார்கள். இயற்கை விவசாய முறை நவீன உலகிற்கு எதிரான திசையில் உள்ளது. ஆனால், இயற்கை விவசாயம்தான், மண்ணுக்கும் மக்களுக்கும் நல்லது. இந்த அடிப்படை விஷயத்தைப் புரிந்துகொண்டால், இயற்கை விவசாயத்தைப் புறந்தள்ள மாட்டோம்.

ஒரு சமுதாயத்தில் நிலம் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதை வைத்தே அதன் எதிர்காலம் அமைகிறது, இன்று, நிலம் வணிகக் காரணங்களால் பெரிதும் நாசமடைந்து வருகிறது. மனிதன் தனக்குக் கிடைத்துள்ள தொழில்நுட்பத்தின் வழியே இயற்கையின் எஜமானன்போலத் தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறான். இது தற்காலிகமான ஒன்றே, மனிதன் எந்த அளவுக்குத் தொழில்நுட்பத்தில் மேம்பட்டாலும், அவன் இயற்கையின் குழந்தையே! ஒருபோதும் அவனால் இயற்கையின் எஜமானன் ஆக முடியாது. இயற்கை விதிகளை மீறும்போது அது திருப்பி அடிக்கும். உத்யோகத்தைப்போல விவசாயி வாரம் இரண்டுநாள் விடுப்பு எடுத்துக்கொள்ள முடியாது, அது ஐந்து நாள் வேலையில்லை. ஆகவே, விவசாய வேலை என்பதும், உத்யோகம் என்பதும் ஒன்றானதில்லை. வாரம் முழுக்க வேலை செய்பவன் குறைவாகச் சம்பாதிப்பதும், ஐந்து நாள் உத்யோகம் செய்பவன் அதிகம் சம்பாதிப்பதும் முரண்பாடாக உள்ளது’’னு இ.எஃப்.ஷூமாஸர், இந்தக் காலத்துக்கும் பொருத்தமா எழுதி வெச்சிருக்காரு.