மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: பறவைகள் கொடுக்கும் ‘இயற்கைப் பரிசு!’

மண்புழு மன்னாரு: பறவைகள் கொடுக்கும் ‘இயற்கைப் பரிசு!’
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு: பறவைகள் கொடுக்கும் ‘இயற்கைப் பரிசு!’

மாத்தியோசிஓவியம்: ஹரன்

‘‘செங்கல்பட்டுக்குப் பக்கத்துல இருக்கிற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தைப் பார்க்கப் போகிறோம். நீங்களும் எங்களோடு வரமுடியுமா?’’னு நண்பர் ஒருத்தர் அழைப்புவிடுத்தாரு. இயற்கை ஆர்வலரான அந்த நண்பர், வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகத்துல பேராசிரியரா இருக்காரு. விடுமுறையில சென்னை வந்திருந்தார். அவரோட ஆசையை நிறைவேத்த, ஒரு சுபதினத்தில வேடந்தாங்கலுக்குப் புறப்பட்டுப் போனோம். அந்தப் பக்கம் பலமுறை பயணம் போயிருந்தாலும், எப்பவாவது நண்பர்கள் வந்தா மட்டும்தான், சரணாலயத்துக்குள்ள போறது வழக்கம்.

மண்புழு மன்னாரு: பறவைகள் கொடுக்கும் ‘இயற்கைப் பரிசு!’

‘‘உலகிலேயே உயர்தரமான இயற்கை உரம்னா, அது பறவைகள் எச்சம்தான். கால்நடைகளோட கழிவைவிடச் சிறந்தது. காரணம், பறவைகள் சிறுநீரையும் மலத்தையும் சேர்த்து வெளியே தள்ளுது. அதனால, அதோட கழிவுல நைட்ரஜன் சத்து அதிகமா இருக்கும். பறவைகள் சரணாலயத்துக்குப் பக்கத்துல உள்ள விவசாயிகளுக்கு இது இயற்கையாகக் கிடைக்கும் பரிசுதான். பறவைகள் எச்சம் கலந்த நீரை விவசாயத்துக்குப் பயன்படுத்தும்போது, நல்ல விளைச்சல் கிடைக்கும்’’னு முன்னுரை கொடுத்த பேராசிரியர், தன்னோட லேப்டாப்பைத் திறந்து காட்டி, மேலும் சில குறிப்புகளையும் சொன்னாரு.

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டிலிருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்தப் பறவைகள் சரணாலயம் உலக அளவுல புகழ்பெற்றது.

தமிழ்நாட்டுல இருக்கிற பறவைகள் சரணாலயங்கள் வரிசையில வேடந்தாங்கல் பழைமையானது. சுமார் 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட, இந்தச் சரணாலயம் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலும் பார்வையாளருக்குத் திறந்திருக்கும். ஏன்னா, இந்த நேரத்துலதான், இதமான தட்பவெப்பச் சூழல் இருக்கும். குளிர்ப்பிரதேச நாடுகளிலிருந்து மிகவும் அரிதான பறவை இனங்கள் ஆண்டுதோறும் இங்கே வந்து சேருது. சுமார் 4 ஆயிரத்துக்கும் மேல அதுகளோட எண்ணிக்கை இருக்கும். வெளிநாட்டுப் பறவைகள் பல ஆயிரம் கிலோமீட்டர் கடந்து, இங்கே வர்றத்துக்கு முக்கியக் காரணம், இனப்பெருக்கம் செஞ்சு குஞ்சுகள பெருக்கிட்டு, சொந்த நாட்டுக்குப் போயிடும். உடம்புல சூடு இருந்தாதான், இனப்பெருக்கம் நல்லபடியா நடக்கும். சந்ததிகளும் ஆரோக்கியமா இருக்கும். அதனாலதான், வெப்ப நாடான நம்ம ஊரைத் தேடி அந்தப் பறவைகள் வருது’’னு நண்பர் சொல்லி முடிக்கவும், வேடந்தாங்கல் வரவும் சரியா இருந்துச்சு. வெளிநாட்டுல இருந்து எடுத்து வந்த, பைனாகுலர் மூலமா, பறவைகளைப் பார்த்துப் பார்த்து ரசிச்சாரு. ரெண்டு மணி நேரத்துல, ‘‘சரிவாங்க வீட்டுக்குப் போகலாம்’’னு கூப்பிட்டாரு.

மண்புழு மன்னாரு: பறவைகள் கொடுக்கும் ‘இயற்கைப் பரிசு!’

பேராசிரியர் பெருந்தகையே, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை ரெண்டு, மூணு மணி நேரத்துல பார்த்துட முடியாது. காலையில பறவைகள் இரைத்தேடி வலசை போறதும், மாலை 5 மணிக்கு மேல, அதுங்க கூட்டுக்கு வந்து சேர்றதும் பார்க்க கண் கோடி வேணும். பறவைகள் சரணாலயம் இருக்கிறதால, சுற்றுவட்டாரத்துல தொழிற்சாலைகள் கிடையாது. இதனால, சுத்தமான காற்று இங்கு கிடைக்குது. இது இரண்டாவது ‘இயற்கைப் பரிசு’. காற்று, மண், நீர் சுத்தமா இருக்கிறதால, இந்தப் பகுதியில இயற்கை விவசாயப் பண்ணைகளும், பயிற்சி மையங்களும் உருவாகுது. இது  மூன்றாவது பரிசுனு சொன்னேன். ‘‘அட, கேட்கவே மகிழ்ச்சியா இருக்கு. இப்படி அற்புதமான தகவல் சொல்வீங்கன்னுதான், உங்களைக் கூட்டிவந்தோம். மாலை வரையிலும் இருக்கலாம். பணம் எடுக்கணும், பக்கத்துல ஏ.டி.எம் இருக்குமானு கேட்டாரு பேராசிரியர். விசாரிச்சுப் பார்த்தோம், 10 கிலோமீட்டர் தூரத்துக்கு ஏ.டி.எம் கிடையாதுன்னு சொன்னாங்க. அந்தச் சமயத்துல, வெளியூர்ல இருந்து வந்த வயதான சுற்றுலாப் பயணி ஒருத்தர் மயக்கம் போட்டு விழுந்தாரு. பக்கத்துல மருத்துவமனை இருக்கான்னு தேடினா, அதுவும் 10 கிலோமீட்டர் போனாத்தான் உண்டுன்னாங்க. ஒரு வழியா முதலுதவி செஞ்சு, ஊருக்கு அனுப்பி வெச்சோம்.

அந்தப் பகுதி ஜூனியர் விகடன் நிருபரை செல்போன்ல, கூப்பிட்டு இந்தத் தகவல்களைச் சொன்னேன். அடுத்த அரை மணி நேரத்துல, நிருபர் போனுல அழைச்சாரு. ‘‘இந்த விஷயத்தைக் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கவனத்துக்குக் கொண்டுபோனோம். ‘இயற்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல், ஏ.டி.எம் இயந்திரம், மருத்துவ உதவி மையம்... விரைவாக அமைக்கப்படும். இந்த வசதிகள் மூலம், சுற்றுலாப் பயணிங்க மட்டுமில்லாமல், சுற்றுவட்டார கிராம மக்களும் பயன்பெறுவார்கள்’னு மாவட்ட  ஆட்சியர்  சொன்னதா சொன்னாரு நிருபர். நல்லது நடந்தா சரிதான்னு வானத்தைப் பார்த்தோம். வலசை போன பறவைங்க, கூட்டுக்குத் திரும்பி வந்த அழகைப் பார்க்கப் பார்க்க இனிமையா இருந்துச்சு.