மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு: ஏக்கருக்கு 9 ரூபாய் இழப்பீடு... - கொதிப்பில் விவசாயிகள்!

மரத்தடி மாநாடு: ஏக்கருக்கு  9 ரூபாய் இழப்பீடு... - கொதிப்பில் விவசாயிகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு: ஏக்கருக்கு 9 ரூபாய் இழப்பீடு... - கொதிப்பில் விவசாயிகள்!

ஓவியம்: ஹரன்

ரத்தடியில் அமர்ந்து கொண்டிருந்தார் ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். அருகில் செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்தார் ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. ‘காய்கறி’ கண்ணம்மா வந்து சேர்ந்ததும், ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டைத் தொடங்கி வைத்தார் வாத்தியார்.

எள் விதைப்புக்காக டிராக்டர்மூலம் நிலத்தை உழுதுகொண்டிருந்தார் ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். டிராக்டரிலிருந்த வானொலியில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த விவாத நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டு வரப்பில் அமர்ந்திருந்தார் ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. ‘காய்கறி’ கண்ணம்மா வந்து சேர்வதற்கும் ஏரோட்டி வேலையை முடிப்பதற்கும் சரியாக இருந்தது. டிராக்டரை ஓரங்கட்டிட்டுக் கை கால்களைக் கழுவிவிட்டு வந்த ஏரோட்டியும் வரப்பில் அமர்ந்துகொள்ள... ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டை ஆரம்பித்து வைத்தார் வாத்தியார்.

“சில வருஷங்களுக்கு முன்னாடி, கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்கள்ல இருந்து சில பகுதிகளைப் பிரிச்சு ஒண்ணா இணைச்சு ‘திருப்பூர்’ மாவட்டத்தை உருவாக்கினாங்க. ஆனால், இன்னமும் நிறைய விஷயங்கள்ல தனி மாவட்டமா செயல்படாமத்தான் இருக்கு திருப்பூர். குறிப்பா, திருப்பூர்ல மாவட்ட வேளாண் விற்பனைக்குழுவை ஆரம்பிச்சு மூணு வருஷமாகியும், துணை இயக்குநர் பணியிடத்தை உருவாக்கவேயில்லை. அதனால, இன்னமும் திருப்பூர் மாவட்டத்துல இருக்குற உழவர் சந்தைகள் எல்லாமே ஈரோடு, கோயம்புத்தூர் மாவட்டங்கள்ல இருக்குற துணை இயக்குநர்களுக்குக் கீழேதான் செயல்பட்டுக்கிட்டுருக்கு.

மரத்தடி மாநாடு: ஏக்கருக்கு  9 ரூபாய் இழப்பீடு... - கொதிப்பில் விவசாயிகள்!

நீரா இறக்க வேளாண் வணிகத் துணை இயக்குநர்கிட்டதான் விவசாயிகள் விண்ணப்பிக்கணும். திருப்பூர் மாவட்டத்துல துணை இயக்குநர் இல்லாததால விவசாயிகள் நீரா அனுமதிக்காக, ஈரோட்டுக்கும் கோயம்புத்தூருக்கும் அலைஞ்சுக்கிட்டு இருக்காங்க. அதுலயும் சரியான எல்லை நிர்ணயம் இல்லாததால, விவசாயிகளை அலைக்கழிக்கிறாங்களாம். அதனால, உடனடியா அதிகாரியை நியமிக்கணும். அல்லது மாற்று வழி சொல்லணும்னு விவசாயிகள் கோரிக்கை வெச்சுருக்காங்க” என்றார்.

“இதே மாதிரிதான்யா இன்னொரு பிரச்னை” என்ற ஏரோட்டி, அந்தச் செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார். “உடுமலைப்பேட்டை, அமராவதி ஆயக்கட்டுப் பகுதிகள்ல வருஷத்துக்கு ரெண்டு போகம் நெல் விளையுது. இப்போ கிட்டத்தட்ட ஏழாயிரம் ஏக்கர் பரப்புல நெல் அறுவடை நடந்துட்டுருக்கு. அறுவடைக்கு முன்னாடி இருந்தே, விவசாயிகள் கொள்முதல் நிலையம் அமைக்கணும்னு கேட்டுருந்ததால, ‘கல்லாபுரம், குமரலிங்கம் பகுதிகள்ல பிப்ரவரி 9-ம் தேதி முதல் தற்காலிகக் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு, ஒரு கிலோ சன்ன ரக நெல் 16 ரூபாய் 60 காசுக்கும், மத்த ரகங்களை 16 ரூபாய்க்கும் கொள்முதல் செய்வோம்’னு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் அறிவிச்சுருந்துச்சு. ஆனா, இப்போ வரைக்கும் கல்லாபுரத்துல கொள்முதல் நிலையத்தை ஆரம்பிக்க வேயில்லை. அதனால, விவசாயிகள் நெல்லைத் தனியார் வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய வேண்டிய சூழல்ல இருக்காங்க. தனியார் வியாபாரிகள் ஒரு கிலோ நெல்லுக்கு 14 ரூபாய் வரைதான் விலை கொடுக்குறாங்களாம். அதனால, நொந்துபோய்க் கிடக்குறாங்க நெல் விவசாயிகள்” என்றார் ஏரோட்டி, கூடையில இருந்து ஆளுக்குக் கொஞ்சம் திராட்சைப் பழங்களை எடுத்துக்கொடுத்தார் காய்கறி. அதைப் பார்த்த ஏரோட்டி “என்ன இது, விதையில்லாத திராட்சையைக் கொண்டு வந்துருக்க. இதைச் சாப்பிடக் கூடாதுனுல்ல சொல்றாங்க” என்றார்.  “இன்னும் நம்ம ஊர்ல விளையுற பன்னீர் திராட்சை சீசன் ஆரம்பிக்கலை. இது கர்நாடகாவுல இருந்து வருது. மொத்தக் காய்கறிக் கடைக்குக் காலையில கணக்கு முடிக்கப் போயிருந்தேன். அப்போ ஒரு கிலோ திராட்சையைக் கொடுத்தாங்க. வேணும்னா சாப்பிடு. இல்லாட்டி விட்டுரு” என்றார் காய்கறி.

“ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரைனு சொல்வாங்க. அது மாதிரி இன்னைக்கு ஒண்ணும் இல்லாததுக்கு இதைச் சாப்பிடுவோம். கொடு கண்ணம்மா” என்று வாங்கிக்கொண்ட வாத்தியார், அவற்றைக் கழுவிவிட்டுச் சாப்பிட்டுக்கொண்டே ஒரு செய்தியைச் சொன்னார்.

“திண்டுக்கல் மாவட்டத்துல போன வருஷம் 39 ஆயிரம் விவசாயிகள், 74 ஆயிரம் ஏக்கர் நிலத்துக்குப் பயிர்க் காப்பீடு செஞ்சுருக்காங்க. எல்லோருமே ‘நேஷனல் அக்ரிகல்ச்சுரல் இன்ஷூரன்ஸ்’ நிறுனத்துலதான் காப்பீட்டு பணம் கட்டியிருக்காங்க. ஒரு ஏக்கர் பருத்திக்கு 935 ரூபாய், ஒரு ஏக்கர் மக்காச்சோளத்துக்கு 285 ரூபாய், ஒரு ஏக்கர் வெள்ளைச்சோளத்துக்கு 132 ரூபாய்னு பிரீமியம் தொகை வசூலிச்சுருக்காங்க. மொத்தமா ஒன்றரைக் கோடி ரூபாய் பிரீமியம் வசூலிச்சுருக்காங்க. போன வருஷம் கடுமையான வறட்சியால எல்லாப் பயிர்களுமே கடுமையா பாதிப்புக்குள்ளாகிடுச்சு. இந்த நிலைமையில வறட்சியால பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரொம்பக் குறைவான அளவுதான் இழப்பீடு வழங்கியிருக்காங்கனு பிரச்னை கிளம்பியிருக்கு.

சில பகுதிகள்ல ஒரு ஏக்கர் பருத்திக்கு 111 ரூபாய்தான் இழப்பீடா அறிவிச்சுருக்காங்க. மத்த சில பகுதிகள்ல ஒரு ஏக்கர் மக்காச்சோளத்துக்கு 9 ரூபாய்ணும் வெள்ளைச்சோளத்துக்கு வெறும் 2 ரூபாய்ணும் அறிவிச்சுருக்குறதால விவசாயிகள் கொதிச்சுப் போய்க் கிடக்குறாங்க.

வழக்கமா காப்பீட்டு நிறுவனங்களோட விதிப்படி, அறுவடை பரிசோதனையில 30 சதவிகிதத்துக்குக் கீழே இழப்பு இருந்தால்தான் இழப்பீடு கொடுப்பாங்க. திண்டுக்கல் மாவட்டத்துல மகசூல் கணக்கெடுப்புல மகசூல் இழப்பு 0.0001 சதவிகிதம்னு பதிவு செஞ்சுருக்காங்க. அதனாலதான் இழப்பீட்டுத்தொகை ரொம்பக் குறைவா இருக்குனு வேளாண்மைத்துறை அதிகாரிகள் சொல்றாங்க. ஆனா, கணக்கெடுப்பே தப்புனு விவசாயிகள் சொல்றாங்க” என்றார்.

அந்த நேரத்தில், ஒரு மாட்டு வண்டி தோட்டத்துக்குள் நுழைந்தது. அதைப் பார்த்ததும், “விதைக்கிறதுக்கு எள் வந்துடுச்சு இறக்கி வெச்சுட்டு வந்துடுறேன்” என்று சொல்லிக்கொண்டே ஏரோட்டி கிளம்ப, மாநாடும் முடிவுக்கு வந்தது.  

சிறுதானியங்களை அறுவடைசெய்யும் கருவி

சிறுதானியப் பயிர்களை நேர்த்தியாக அறுவடைசெய்ய ஒரு கருவியை, உருவாக்கியிருக்கிறது கோயம்புத்தூரில் உள்ள மத்திய வேளாண் பொறியியல் நிறுவனம். நெல் அறுவடைசெய்யும் கருவியின் அடிப்படை வடிவமைப்பைக்கொண்டு, இந்தச் சிறுதானிய அறுவடைக் கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் குதிரைவாலி, வரகு, பனிவரகு, சாமை, தினை ஆகிய ஐந்து தானியங்களை மட்டும்தான் அறுவடை செய்ய முடியும். இது, 35 குதிரைத்திறன்கொண்ட டிராக்டர்மூலம் இயக்கப்படுகிறது.

இக்கருவியின்மூலம், ஒரு நாளில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் சிறுதானியங்களை அறுவடை செய்யலாம். பயிரின் உயரத்துக்கு ஏற்ப வெட்டுச் சட்டக்கத்தியின் உயரத்தையும் கூட்டிக் குறைத்துக்கொள்ள முடியும். இக்கருவி மூலம் அறுவடை செய்யும்போது ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாகத்தான் தானிய இழப்பு இருக்கும்.

தொடர்புக்கு: மத்திய வேளாண் பொறியியல் நிறுவனம், கோயம்புத்தூர்.
தொலைபேசி: 0422 2472624