மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: வயலை மேடாக்கிய எறும்புகள்!

மண்புழு மன்னாரு: வயலை மேடாக்கிய எறும்புகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு: வயலை மேடாக்கிய எறும்புகள்!

மாத்தியோசிஓவியம்: ஹரன்

பேராசிரியர் தொ.பரமசிவன் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வுக்களத்தில, தவிர்க்கமுடியாத ஆளுமை. சுருக்கமா சொல்லணும்னா, தொ.ப, தமிழ் இலக்கிய உலக ‘நம்மாழ்வார்’னுகூடச் சொல்லலாம். நம்ம மண்ணைப் பத்தியும், மக்களைப் பத்தியும் ஆதாரபூர்வமா பேசியும், எழுதியும் வரக்கூடிய தொ.ப, திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில தமிழ்த்துறைத் தலைவராக இருந்தவர். சமீபத்துல தொ.ப இயற்கையைப் பத்தி பேசின, அரிய தகவல் கவனத்துக்கு வந்துச்சு, அதை உங்களோடவும் பகிர்ந்துக்கிறேன்.

‘‘செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணி’
தொல்காப்பியம் எழுதப்பட்ட விதம்னு முன்னுரையில் சொல்றான். செந்தமிழ் இயற்கை சிவணிய நிலம் தமிழ்மக்கள் இயற்கையோடு பொருந்திய வரலாறு, அதுதான் தொல் காப்பியப்பாயிரம், பாயிரம்னா முன்னுரை என்று பொருள்.

மண்புழு மன்னாரு: வயலை மேடாக்கிய எறும்புகள்!

பொதுவா சொன்னா, இங்க இயற்கை வழிபாடு தான் இருந்திச்சு. கடவுள் வழிபாடு இல்ல. இயற்கையோட விளைபொருள்களில் ஒன்னுதான மனுஷன். மனுஷன் தாயை மட்டும் பாக்கல, தாய் மண்ணையும் பாத்திருக்கான். என் உணவுக்கான ஆதாரம் இந்த நிலம்தான். வீட்டுக்குப்பின்னால 3 சென்ட் நிலத்துல காய்கறி போட்டிருக்கீங்க. அந்த இடத்தைப் பின் வீட்டுக்காரன் கேட்கிறான் கொடுப்பீங்களா? காய்கறி விளைஞ்ச அந்த நிலத்தினுடைய மதிப்பும் மரியாதையும் கூடிடும். அந்த மாதிரிதான் நிலமானது உணவளிக்கும் தாய்னு புரிஞ்சுகிட்டான்.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலைங்கிற ஐவகை நிலத்துல அதிகம் பாடப்பட்ட நிலம் முல்லைதான். அதுதான் நாகரிகத்தின் தொட்டில். முல்லை நிலத்துக்காரன்தான் வீட்டுக்குள் அடைந்து கிடக்காமல் தெருவில் நின்று இயற்கையை நேசிச்சான்.

அந்தக் காலத்துல பூச்சிக்கொல்லி மருந்துன்னு எதையும் பயன்படுத்தல. பூச்சிக்கொல்லி மருந்தாகப் பூச்சிகளையேதான் பயன்படுத்தியிருக்காங்க. மாற்றுப் பயிர்முறையைப் பயன்படுத்தியிருக்காங்க. உதாரணமா ஒரு வயலை மேடாக்கணும்னா கம்படிகம்பா வெச்சா வயல் மேடாயிரும்பாங்க.

மண்புழு மன்னாரு: வயலை மேடாக்கிய எறும்புகள்!


திரும்பத்திரும்பக் கம்பு பயிரிட்டா வயல் மேடாயிரும்னு. இல்லேண்ணா அந்த ஒரு ஏக்கர் நிலத்துக்கும் சமமா மண்ணடிச்சு நிரப்பி மேடாக்க முடியாது. வயல் மேடாக மேடாக என்னாகும். எறும்புக்கு நல்ல இடம் கிடைக்கும். பூச்சிகளுக்கும் நல்ல இடம் கிடைக்கும். மாற்றுப்பயிர வெச்சுத்தான் பூச்சிகளைக் கட்டுப்படுத்தினாங்க. இல்லேண்ணா சங்க காலத்திலிருந்து, இங்க விவசாயம் செய்துகிட்டிருக்கிறதுக்கு, இந்நேரம் பூச்சிகள் எல்லாத்தையும் அழிச்சு முடிச்சிருக்குமே. ஆகலையே, எப்படீன்னா மாற்றுப் பயிர்கள் மாற்று உயிர்களை வெச்சு சமன் செய்திருக்காங்க; உயிரினப் பன்மையைச் சமப்படுத்தியிருக்கான். இயற்கையாகவே உயிர்களிடத்துல இருக்குற ஒரு விஷயம் என்னன்னா பல்லுயிர்ப் பெருக்கத்துக்காகச் செய்து கொள்கிற சமரசம்தான்.

விஜயநகர அரசு, தமிழ் நாட்டுக்குள்ள வந்த பிறகு தான், புஞ்சை நிலத்துக்கும் நஞ்சை நிலத்துக்கும் வேறுபாடு உருவானது. அதுக்கு முன்னால ரெண்டு நிலத்துக்கும் சம மதிப்புதான் இருந்தது. நெல் விளையலேன்னா புல் விளையும்னு இருந்தது. கம்பு, கேழ்வரகு போன்ற உணவுகள்தான் புல்லுணவுகள். தமிழ்நாட்டுல விஜயநகரப்படைகள் மூலமா புதுக்குடியேற்றங்கள் நடந்தன. அவங்க ஆந்திராவுல நல்லா நெல் விளையுற கிருஷ்ணா, கோதாவரி பாய்கிற நிலப்பகுதியிலிருந்து வந்தவங்க. நெல்சோறு கேட்டாங்க. அதுக்காகப் புதிய பயிர் நிலங்களை உண்டாக்கினாங்க. அதுக்கு முன்னால இதே தண்ணிதான இருந்தது. நெல்லு 5 ஆயிரம் வருஷத்துக்கு முந்தி வியட்நாம்ல சம்பாங்கற இடத்தில இருந்து வந்ததுனு சொல்றாங்க.

சம்பாங்கற சொல்லே தென் வியட்நாமைக் குறிக்கும் என்கிற ஒரு வரலாறெல்லாம் இருக்கு. நெல் என்கிற சொல்லே மிகப் பழைமையானது. நெல் என்றாலே சம்பானு ஆகிப்போச்சே. சம்பா தொடர்பான சொற்களையெல்லாம் சேகரிங்க. சம்பா+அளம் = சம்பளம். நெல்லும் உப்பும் கூலியாகக் கொடுத்தா சம்பளம். சம்பளத்துக்கு ஒரு மாற்றுச் சொல் கண்டுபிடிங்க. வியட்நாம்ல எவ்வளவு மழைவீச்சு இருக்கு எவ்வளவு தாவரம் இருக்கு. வருஷம் முழுக்க நெல்லுக்குத் தண்ணீர் நிக்கணும்ல. மற்ற தானியங்களுக்கு அப்படி இல்லீயே. ஆதிவாசிகள் சொல்றான்ல கிழங்கும் தேனும் சாப்பிட்டுக்கிட்டிருந்த எங்களுக்கு அரிசியைக் கொடுத்துக் கெடுத்திட்டீங்களேன்னு. அவனவனுக்குப் பிடிச்ச சாப்பாட்டுக்கு அரசு உத்திரவாதம் அளிக்கணுமே தவிர, அரசுக்கு பிடிச்ச சாப்பாட்ட அவன் தலையில கொண்டுபோய் கட்டக்கூடாது.

மணிமேகலை முழுக்க முழுக்கப் பவுத்தம் சம்பந்தமான நூல்தான். எல்லோருக்கும் சோறுகொடு, எல்லோருக்கும் கல்விகொடு எல்லோருக்கும் மருந்து கொடுனு சொல்லுது. இதைதான ஐக்கிய நாடுகள் சபை, உலகச் சுகாதார நிறுவனம், உலக உழவு உணவு நிறுவனங்களோட அடிப்படை முழக்கமும்கூட. அதைப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னே, இந்த மண்ணுல சொல்லி வெச்சிருக்காங்க.’’