மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு: கொள்ளையடிக்கும் கொள்முதல் நிலையங்கள்..!

மரத்தடி மாநாடு: கொள்ளையடிக்கும்  கொள்முதல் நிலையங்கள்..!
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு: கொள்ளையடிக்கும் கொள்முதல் நிலையங்கள்..!

ஓவியம்: ஹரன்

சைக்கிளில் வெளியே சென்றுவிட்டு நிலத்துப் பக்கம் திரும்பிக் கொண்டிருந்தார் ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். முன்பே வந்துவிட்டிருந்த ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமியும், ‘காய்கறி’ கண்ணம்மாவும் மர நிழலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். சைக்கிளை நிறுத்திவிட்டு, வழிந்த வியர்வையைத் துண்டால் துடைத்தபடியே வந்து அமர்ந்தார் ஏரோட்டி. ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டைத் துவக்கி வைத்தார் வாத்தியார்.

“திண்டுக்கல் மாவட்டத்துல நத்தம், சாணார்பட்டி, தவசிமடை, அஞ்சுகுழிப்பட்டி பகுதிகள்ல அதிகளவுல புளி சாகுபடி நடக்குது. புளி சீசன் ஆரம்பிச்சா, திண்டுக்கல் நாகல்நகர் பகுதியில வாராவாரம் திங்கள்கிழமை புளி விற்பனைக்கான சந்தை கூடும். இந்த வருஷம் சீசன் ஆரம்பிச்சு முதல் சந்தை போன அஞ்சாம் தேதி கூடினது. சுத்துப்பட்டுக் கிராமங்கள்ல இருந்து கிட்டத்தட்ட இருநூறு விவசாயிகள் புளியை விற்பனைக்காகக் கொண்டு வந்திருந்தாங்க. விவசாயிகள், கொட்டை எடுத்த புளிக்கு 200 ரூபாய்னும், கொட்டை எடுக்காத புளிக்கு 140 ரூபாய்னும் விலை சொல்லிக்கிட்டிருந்தாங்க. சந்தை கூடின கொஞ்ச நேரத்துலேயே ஆந்திரா, கர்நாடகா மாநிலங்கள்ல இருந்து 5 லாரிகள்ல 50 டன் புளியை, வியாபாரிகள் கொண்டுவந்து இறக்குனாங்க. அவங்க கொட்டை எடுத்த புளியைக் கிலோ 120 ரூபாய்னு விலை சொல்லவும், உள்ளூர் புளிக்கு விலை இறங்கிடுச்சு. அதனால, கொட்டை எடுக்காத புளி விலையும் கிலோ 60 ரூபாய் அளவுக்கு இறங்கிடுச்சு. அதனால, திண்டுக்கல் விவசாயிகளும் வியாபாரிகளும் புளியை இருப்பு வெச்சு விற்பனை செய்யலாம்னு முடிவு பண்ணிருக்காங்க” என்றார் வாத்தியார்.

மரத்தடி மாநாடு: கொள்ளையடிக்கும்  கொள்முதல் நிலையங்கள்..!

“ஏன்தான் இப்படிப் பண்றாங்களோ...” என்று வருத்தப்பட்ட ஏரோட்டி, ஒரு செய்தியைச் சொன்னார்.

“விதையைப் பரிசோதனை செஞ்சபிறகு தான் விதைக்கணும்னு வேளாண் துறை சார்பா விவசாயிகள்கிட்ட சொல்லிட்டு ருக்காங்க. அரசு பரிசோதனை மையங்கள்ல விதைப் பரிசோதனைக்கு 30 ரூபாய்தான் கட்டணம் வாங்குறாங்க. எந்தப் பயிர்ச் சாகுபடியா இருந்தாலும், வாங்கின விதைகள்ல கொஞ்சத்தை எடுத்துப் பரிசோதனை பண்ணிப் பார்த்துட்டா, விதையோட தரத்தைக் கண்டுபிடிச்சுடலாம்.

விதைப் பரிசோதனை மையங்கள்ல தண்ணீர் உறிஞ்சுற பேப்பர்ல விதையைத் தூவி, குளிர்சாதன அறையில வெச்சுப் பரிசோதனை செய்றாங்க. நெல்லுக்கு ஒரு வாரத்துல முடிவு சொல்லிடுவாங்க.

அவரைக்குப் பத்து நாள்கள்ல முடிவு சொல்வாங்க. நிலக்கடலைக்கு ரெண்டு வாரத்துல முடிவு சொல்வாங்க. இப்படிச் சோதனை முடிவு வர்றதுக்குப் பயிருக்குப் பயிர் நாள்கள் வித்தியாசப்படும். பரிசோதனைக்குக் கொடுக்குற விதைகள்ல 80 சதவிகிதம் முளைச்சுருந்தா அந்த விதையை விதைக்கலாம். அதுக்குக் குறைவா முளைப்புத்திறன் இருந்தா, விதைப்பைத் தவிர்த்துடணும். முப்பது ரூபாயைப் பெரிய செலவாகப் பார்க்காமப் பரிசோதனை செஞ்சுட்டா பின்னாடி வர்ற பிரச்னையைத் தவிர்த்துடலாம்” என்றார் ஏரோட்டி.

“பரவாயில்லையே... நல்ல விஷயமா இருக்கே” என்ற காய்கறி, தான் கொண்டு வந்திருந்த கேழ்வரகுக் கூழில் மோரைக் கலந்து இருவருக்கும் கொடுத்தார். தொட்டுக்கொள்ள வறுத்த மோர் மிளகாயையும் கொத்தவரை வற்றலையும் எடுத்துக்கொடுத்தார்.

“தேவாமிர்தமா இருக்கு” என்று ருசித்துப் பருகியபடியே ஒரு செய்தியைச் சொன்னார், வாத்தியார்.  “போன வருஷம் (2017) வடகிழக்குப் பருவமழை வழக்கத்தைவிடக் குறைவாகக் கிடைச்சதால மாநிலத்துல இருக்குற ஏரி, குளங்கள்ல தண்ணீர் ரொம்பக் குறைவாத்தான் இருக்கு. இருந்த தண்ணீரை வெச்சு சம்பாநெல் சாகுபடி முடிஞ்சுடுச்சு. பல பகுதிகள்ல சம்பாப் பட்டத்துல போட்ட நெல்லுலயும் வறட்சி காரணமா விளைச்சல் இல்லை. இந்த வருஷம் கோடைக்காலத்துல வெயில் தாக்கம் அதிகமா இருக்கும்னு வானிலை ஆய்வு மையம் அறிவிச்சுருக்கு. அதனால, நெல் சாகுபடி செய்றதைத் தவிர்க்கச் சொல்லி வேளாண்மைத்துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு அறிவுறுத்த முடிவு எடுத் திருக்காங்க.

நெல்லுக்குப் பதிலா சிறு தானியங்கள், பருப்பு வகைகளைச் சாகுபடி செய்யுங்கனு விவசாயிகளுக்கு ஆலோசனை சொல்லிட்டுருக்காங்க. இதோட, கூட்டுறவுச் சங்கங்கள், தனியார் உரக் கடைகள்ல நெல் விதை விற்பனையையும் தற்காலிகமா நிறுத்தி வைக்கப் போறாங்களாம்” என்றார்.

“கர்நாடகாவுல இருந்து தண்ணி வாங்கிக் கொடுக்கறதுக்கு முயற்சி எடுக்குறதை விட்டுட்டு, நெல்லைச் சாகுபடி செய்யாதீங்கனு சொல்றது கையாலாகாத தனமா இருக்கு. தற்காலிகமா விதைநெல் விற்பனையை நிறுத்தினா... போர்வெல், கிணறுகள்ல தண்ணி இருக்குற விவசாயிகள்கூட நெல் சாகுபடியில ஈடுபட முடியாது. இதைச் சாக்கா வெச்சுக்கிட்டு வியாபாரிகள் விதைநெல்லைப் பதுக்கிவெச்சு அதிக விலைக்கு விற்பனை செய்யவும் வாய்ப்பிருக்கு” என்ற ஏரோட்டி அடுத்த செய்திக்குத் தாவினார்.

“கடலுார் மாவட்டத்துல சம்பாப் பட்டத்துல கிட்டத்தட்ட ரெண்டரை லட்சம் ஏக்கர் பரப்புல நெல் சாகுபடி நடக்கும். அதனால, வருஷா வருஷம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பா மாவட்டம் முழுவதும் பரவலா நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறப்பாங்க.

இந்தக் கொள்முதல் நிலையங்கள் மூலமா வருஷத்துக்கு ஒரு லட்சம் டன் அளவுக்கு நெல்லைக் கொள்முதல் செஞ்சு பொது விநியோகத் திட்டத்துக்குப் பயன் படுத்திக்குவாங்க. இந்த வருஷம் சம்பாப் பட்டத்துல போட்ட நெல் ஜனவரி மாசம் அறுவடையாக ஆரம்பிச்சது. அதுக்காக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பா மாவட்டம் முழுவதும் 106 இடங்கள்ல நேரடிக் கொள்முதல் நிலையங்களைத் திறந்தாங்க. இந்த மையங்கள்ல ஒரு கிலோ சன்ன ரக நெல்லுக்கு 16 ரூபாய் 60 பைசானும் ஒரு கிலோ மோட்டா ரக நெல்லுக்கு 16 ரூபாய்னும் விலை நிர்ணயிச்சுருந்தாங்க.

விளைஞ்ச நெல்லைக் கொண்டுவந்த விவசாயிகள் கிட்ட... ‘நெல்லோட ஈரப்பதம் 17 சதவிகிதத்துக்குள்ள இருக்கணும். நெல்லை 40 கிலோ மூட்டைகள்ல மாத்திக் கொடுக்கணும். ஒரு மூட்டைக்கு நாப்பது ரூபாய் கமிஷனும் நெல்லைத் தூத்துறதுக்கு மூட்டைக்கு அஞ்சு ரூபாயும் கொடுக்கணும்’னு அதிகாரிகள் கெடுபிடி காட்டுறாங்களாம். அதோட விவசாயிகள்கிட்ட இருந்து நெல்லை வாங்கிட்டுப் பதினஞ்சு நாள் கழிச்சுதான் விவசாயிகளோட பேங்க் அக்கவுன்ட்ல பணத்தை வரவு வெக்கிறாங்களாம். இதனால, விவசாயிகள் கொள்முதல் மையம் போறதுக்குத் தயங்குறாங்களாம்.

இதைத்தெரிஞ்சுக்கிட்ட வியாபாரிகள், விவசாயிகளோட நிலத்துக்கே நேரடியா வந்து உடனடியா பணத்தைக் கொடுத்துக் கொள்முதல் பண்ணிட்டு இருக்குறாங்களாம். ஆரம்பத்துல கொள்முதல் நிலையம் கொடுத்த விலையைவிட அதிகமாகக் கொடுத்த வியாபாரிகள், இப்போ படிப்படியா விலையைக் குறைச்சுட்டாங்களாம். ஆனாலும், கொள்முதல் நிலையத்துக்குக் கொண்டு போறதைவிட, இது பரவாயில்லைங்கிற மனநிலையில இருக்குறாங்களாம் விவசாயிகள்.

அரசாங்கக் கொள்முதல் நிளையங்கள்ல இந்தக் குளறுபடிகளைச் சரி செஞ்சாத்தான் எங்களுக்கு நன்மை கிடைக்கும். இல்லாட்டி ஒரு பிரயோஜனமும் இல்லைனு விவசாயிகள் சொல்றாங்க” என்று ஏரோட்டி சொல்லிக் கொண்டிருக்கும்போதே வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் சத்தம் போட்டு ஏரோட்டியை அழைத்தனர். அவர் துண்டை உதறிக்கொண்டே எழுந்து செல்ல மாநாடும் முடிவுக்கு வந்தது.