
மரத்தடி மாநாடு: உச்சத்தில் சோளம்... சரிவில் மக்காச்சோளம்!
அதிகாலையிலேயே தோட்டத்துக்கு வந்துவிட்ட ‘ஏரோட்டி’ ஏகாம்பரம், பக்கத்துத் தோட்டத்தில் ஆழ்துளைக்கிணறு அமைத்துக் கொண்டிருந்ததை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமியும், ‘காய்கறி’ கண்ணம்மாவும் தோட்டத்துக்கு வந்ததைப் பார்த்துவிட்ட ஏரோட்டி வேகமாக நடந்துவந்தார்.
“நேத்து ராத்திரில இருந்து போர் வண்டி ஓடிட்டு இருக்கு. எழுநூறு அடிக்கு மேல போட்டாச்சு. இப்போதான் ஈரம் தென்படுது. இதுக்கிடையில ரெண்டு தடவை ஏதோ கோளாறாகி வண்டி நின்னுபோச்சாம். அதைச் சரி பண்ணி ஓட்டிக்கிட்டு இருக்காங்களாம். ஈர மண்ணு தென்படவும்தான் தோட்டத்துக்காரருக்குக் கொஞ்சம் நம்பிக்கை வந்துருக்கு” என்றார் ஏரோட்டி.
“பாவம் பயிரைக் காப்பாத்த எப்படியெல்லாம் பாடுபட வேண்டியிருக்கு” என்று வருத்தப்பட்ட காய்கறி, கூடையில் இருந்து ஆளுக்கு இரண்டு சோள தோசைகளையும் பருப்புத் துவையலையும் எடுத்துக் கொடுத்தார்.

“சோளத்துக்கு இப்ப ரொம்பக் கிராக்கியாகிடுச்சு. கிலோ 80 ரூபாய் வரை விற்பனையாகுது. விதைச்சோளம் கிலோ 120 ரூபாய் வரை விலை போகுது. ஒரு காலத்துல வீட்டுல மூட்டை மூட்டையா குவிஞ்சு கிடக்கும். அரிசியைச் சாப்பிட ஆரம்பிச்சதும் இதை ஒதுக்கிட்டோம். எல்லோரும் வியாதியஸ்தராக மாறவும் திரும்பச் சிறுதானியம் பக்கம் வர ஆரம்பிச்சிருக்காங்க. அதனாலதான் சோளத்துக்கெல்லாம் மவுசு அதிகமாயிடுச்சு. இப்போ அரிசியைவிடக் கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கு” என்றார் காய்கறி.
சோளதோசையைச் சாப்பிட்டுக் கொண்டே ஒரு செய்தியைச் சொன்னார் வாத்தியார்.
“சோளத்துக்குப் பரவாயில்லை. மக்காச்சோளம், சூரியகாந்திகெல்லாம் விலை சரிஞ்சுகிட்டே இருக்கு. இப்போதான் சூரியகாந்தி பரவலா அறுவடையாகிட்டு இருக்கு. விதைகளைக் காய வெச்சு, சேகரிச்சு விற்பனை செய்ய ஆரம்பிச்சிருக்காங்க விவசாயிகள். மார்ச் மாச ஆரம்பத்துல ஒரு கிலோ சூரியகாந்தி விதை 35 ரூபாய் வரை விற்பனையாகிருக்கு. ரெண்டாவது, மூணாவது வாரத்துல கொஞ்சம் கொஞ்சமா விலை இறங்கி இப்போ கிலோ 28 ரூபாய்னுதான் விற்பனையாகுது. வரத்து குறைவா இருக்குறப்பவே விலை குறையுது. வரத்து அதிகமானா இன்னும் விலை குறைஞ்சுடும்னு விவசாயிகள் கவலையில இருக்காங்க.
அதே நிலைமையிலதான் மக்காச்சோள விவசாயிகளும் இருக்குறாங்க. கார்த்திகைப்பட்டத்துல விதைச்ச மக்காச் சோளம் இப்போ அறுவடையாகிட்டுருக்கு. வரத்து அதிகமா இருக்குறதால விலை கிடைக்கலை. நம்ம மாநிலத்தைப் பொறுத்தவரைக்கும் மக்காச்சோளத்தைக் கோழித் தீவனத்துக்குதான் அதிகமா பயன்படுத்துறாங்க. முட்டைக்கோழி, கறிக்கோழிப்பண்ணைகள்ல கோடைக்காலம் ஆரம்பிச்சா தீவனக்கொள்முதல் கொஞ்சம் குறையும். அதே நேரத்துல பக்கத்து மாநிலங்கள்ல இருந்தும் குறைஞ்ச விலைக்கு மக்காச்சோளம் வந்துட்டு இருக்கு. அதனாலதான் மக்காச்சோளத்துக்கு விலை இறங்கிடுச்சு. போன மாசம் ஒரு குவிண்டால் 1,300 ரூபாய் வரை விற்பனையாச்சு. இப்போ 1,200 ரூபாய்க்குதான் விற்பனையாகுது” என்றார்.
அடுத்த செய்தியை ஆரம்பித்த ஏரோட்டி, “கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம், காரமடை, அன்னுார், சிறுமுகை, பெரியநாயக்கன்பாளையம் பகுதிகள்ல பரவலா வாழைச் சாகுபடி நடக்குது. அந்தப் பகுதிகள்ல இப்போ நிலவுற தட்பவெப்ப நிலையால, வாழையில இலைப்புள்ளி நோய் தாக்குதல் அதிகமா இருக்குதாம். அதோடு மாவுப்பூச்சி, இலைப்பேன், வெள்ளை ஈ தாக்குதலும் தென்படுதாம். அதுக்கான தீர்வு கேட்டு, சில நண்பர்கள் போன் பண்ணுனாங்க. நான், நம்ம ‘பூச்சியியல் வல்லுநர்’ செல்வத்துக்குப் போன் பண்ணி கான்ஃப்ரன்ஸ் கால் போட்டு, அந்த நண்பர்கள்கிட்ட பேச வேச்சேன். ‘பூஞ்சணத் தாக்குதலால இலைப்புள்ளி நோய் வந்தா டிரைக்கோடெர்மா விரிடி தெளிக்கணும். பாக்டீரியாவால வந்திருந்தா சூடோமோனஸ் தெளிக்கணும். எதனால இந்த நோய் வந்துருக்குனு தெளிவா கண்டுபிடிக்க முடியலைனாலும் பிரச்னை இல்லை. ரெண்டையும் கலந்து தெளிச்சுடலாம். எந்த வகையில இலைப்புள்ளி நோய் வந்திருந்தாலும் குணமாகிடும். ரெண்டையும் கலந்து தெளிக்கிறதால, எதிர்மறை விளைவுகள் எதுவும் வராது. ஒரு லிட்டர் தண்ணிக்குப் பத்து கிராம் சூடோமோனஸ், பத்து கிராம் டிரைக்கோடெர்மா விரிடினு கலந்து தெளிக்கணும். பூச்சிகளை விரட்ட வேப்பங்கொட்டை கரைசலே போதுமானது’னு செல்வம் சொல்லிருக்கார்” என்றார்.
அடுத்த செய்திக்குத் தாவிய வாத்தியார், “ஜெயலலிதா ஆரம்பிச்சு வெச்ச விலையில்லா ஆடு மாடுகள் வழங்குற திட்டம், இப்போ வரைக்கும் முறையா செயல்படாமத்தான் இருக்கு. ஆரம்ப காலங்கள்ல பக்கத்து மாநிலங்கள்ல இருந்து ஆடு மாடுகளை வாங்கிட்டு வந்து கொடுத்தாங்க அதிகாரிகள். நம்ம ஊர் சீதோஷ்ண நிலைமையைத் தாங்க முடியாம நிறைய இறந்துபோச்சு. முதல் முதல்ல மாடுகள் இறந்தது, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலையில இருக்குற பூலத்தூர் பகுதியிலதான். இது குளிர் அதிகமா இருக்குற பகுதி. இந்தப்பகுதி விவசாயிகளுக்கு ஆந்திராவுல இருந்து பசு மாடுகளை வாங்கிக் கொடுத்தாங்க. அதுல நிறைய மாடுகள் இறந்துபோச்சு. அந்தச் சமயத்துல ‘ஜூனியர் விகடன்’ புத்தகத்துல இதைப்பத்தி எழுதியிருந்தாங்க. அந்தச் செய்தியை அப்படியே ஒரு ஆங்கில நாளிதழ்ல மொழிபெயர்த்து போட்டிருந்தாங்க. அந்தச் செய்தியை முரசொலி பத்திரிகையிலும் ஒரு பக்கத்துக்கு வெளியிட்டாங்க. அது மாநிலம் முழுக்க பெரிய அதிர்வை உண்டு பண்ணுச்சு. அடுத்தடுத்து தேனி, திருச்சி மாவட்டங்கள்லயும் மாடுகள் இறந்துபோச்சு. அந்த மாதிரி சம்பவம் நடந்து இத்தனை வருஷம் கழிச்சு இப்போவும் அதே மாதிரி தப்பைச் செஞ்சுருக்காங்க கால்நடைப் பராமரிப்புத் துறை அதிகாரிகள். கொடைக்கானல் தாலூகா, குண்டுபட்டி கிராமம் பி.காலனி பகுதியில, இருபத்தாறு பேருக்கு விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்துல ஆளுக்கு நாலு ஆடுகள் கொடுத்திருக்காங்க.
மொத்தமா கொடுத்த நூத்தி நாலு ஆடுகள்ல ஒரு வாரத்துலேயே அம்பது ஆடுகள் செத்துப் போச்சு. இந்த ஆடுகளை முறையா அடக்கம் செய்யாம திறந்தவெளி குப்பை மேட்டுல தூக்கிப் போட்டுருக்காங்கபோல. அதனால, அந்த ஊர்ல இருக்குற மத்த ஆடுகளுக்கும் நோய் தாக்கி பல ஆடுகள் செத்துப்போச்சாம்.
மார்ச் மாச ஆரம்பத்துல இருந்து இருபதாம் தேதிக்குள்ள மொத்தம் 130 ஆடுகள் செத்துப் போச்சாம். அடுத்தடுத்து ஆடுகள் இறந்துட்டுருக்கறதால, அந்தப்பகுதி விவசாயிகள் ஆந்த்ராக்ஸ் நோயா இருக்கும்னு பயந்துட்டுருக்காங்க. ஆனா, கால்நடைப் பராமரிப்புத்துறை அதிகாரிகள், ‘ஆந்த்ராக்ஸ் நோய் இருக்க வாய்ப்பில்லை. இறந்த ஆடுகள்ல இருந்து மாதிரி எடுத்துச் சோதனைக்கு அனுப்பியிருக்கோம்.
சோதனை முடிவு வந்தால்தான் என்ன நோய்னு தெரியும்’னு சொல்றாங்களாம். ஆனா, ‘விலையில்லா ஆடுகள் வந்தபிறகுதான் எங்க ஆடுகளுக்கு நோய் வந்துச்சு. வெளி மாநிலங்கள்ல இருந்து ஆடுகளை வாங்கிட்டு வந்து கொடுத்ததுல, இந்தக் குளிரைத் தாங்க முடியாமத்தான் ஆடுகள் இறந்துபோச்சு’னு அந்தப்பகுதி விவசாயிகள் சொல்றாங்க” என்றார்.
அந்த நேரத்தில் அவர்களை நோக்கி வந்த பக்கத்துத்தோட்ட விவசாயி, “ஊத்து தென்பட்டுடுச்சு. தண்ணி பொங்கி வந்துட்டுருக்கு” என்று சந்தோஷமாகச் சொல்லவும், மூவரும் அந்தக் காட்சியைக் காண எழுந்து சென்றனர். மாநாடும் அத்தோடு முடிவுக்கு வந்தது.