மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: ‘பட்டம் தப்பினால் நட்டம்!’

மண்புழு மன்னாரு: ‘பட்டம் தப்பினால் நட்டம்!’
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு: ‘பட்டம் தப்பினால் நட்டம்!’

மாத்தியோசிஓவியம்: ஹரன்

திருச்சியிலிருந்து சென்னைக்குப் போற ரயில், விழுப்புரம் ஜங்ஷன்ல நின்னது. வெள்ளை வேட்டி, சட்டைப் போட்ட அஞ்சு பேர் ஏறினாங்க. அவங்களைப் பார்த்தவுடனே, விவசாயிகள்னு தெரிஞ்சது. சென்னையில நடக்குற நிகழ்ச்சியில கலந்துக்கத்தான், போறாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டேன்.
அந்தக் குழுவிலிருந்த மூத்த நபர், ஜன்னலில் தெரிந்த பயிர்களைப் பார்த்தபடி, ‘‘இப்பவெல்லாம் யாருங்க பட்டம் பார்த்துச் சாகுபடி செய்றாங்க’’னு ஆதங்கப்பட்டு, பட்டம் சம்பந்தமான பேச்சை ஆரம்பிச்சாரு. ரயிலில் கூட்டம் அவ்வளவாக இல்லை. அதனால, சவுகர்யமாக உட்கார்ந்தபடி பேச்சுக் கச்சேரியைத் தொடர்ந்தாரு.

‘‘சித்திரைப் பட்டம், வைகாசிப் பட்டம்னு தமிழ் மாசங்கள்ல, பன்னிரண்டும் பட்டங்கள்தான். அந்தக் காலத்துல ‘பட்டம் தப்பினா, நட்டம்’னு சொல்லி, பட்டம் தவறிடாம விதைப்பு செய்வாங்க. பட்டம்ங்கிறது ஏதோ வெறும் வார்த்தை கிடையாது. பருவநிலையை மையமா வெச்சு, எந்தப் பயிருக்கு, எந்தப் பட்டம் சரியா இருக்கும்னு அனுபவ ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிச்சிருக்காங்க.

மண்புழு மன்னாரு: ‘பட்டம் தப்பினால் நட்டம்!’

பாசன வசதி உள்ளவங்க சித்திரைப் பட்டத்துல கொள்ளு, எள், மிளகாய்... விதைக்கலாம். ஆடிப்பட்டத்துல தானியப் பயிர்கள் சாகுபடி செய்யலாம். காய்கறிச் சாகுபடிக்கும் இந்தப் பட்டம் அருமையா இருக்கும். ஆடிப்பட்டத்துல மானாவாரியா சிறுதானியம் விதைக்கிறதும் வழக்கம். பட்டத்தைக் கெட்டியா பிடிச்சுக்கிட்டு விதைச்சா, விளைச்சலும் நல்லா இருக்கும். மண்வளமும் கெடாது. ஒரு பட்டத்துல நெல்லு நட்டா, அடுத்த பட்டத்துல, அதே நிலத்துல உளுந்து விதைக்கலாம். உளுந்துன்னு சொல்லும்போது, எனக்கு ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வருது. எங்க சொந்தக்காரர் ஒருத்தர், திண்டிவனம் பக்கத்துல விவசாயம் செய்றாரு. மனுஷன் கொஞ்ச விவரமான ஆளு. ஒவ்வொரு வருஷமும் உளுந்துச் சாகுபடியை விடாமச் செய்துக்கிட்டிருக்காரு.

ஒரு கல்யாண வீட்டுல, ரெண்டு பேரும் பக்கத்துல பக்கத்துல உட்கார்ந்து சாப்பிட்டோம். அப்போ உளுந்து ரகசியத்தை அவர்கிட்ட கேட்டேன். ‘உளுந்து, விவசாயிகளையும் விவசாயத்தையும் வாழ வைக்கும் பயறு வகைப் பயிர். உளுந்துச் சாகுபடி செய்யும்போது, காத்துல உள்ள தழைச்சத்தை இழுத்து நிலத்தை வளப்படுத்தும். அடுத்து, உளுந்து விலை, அவ்வளவு சீக்கிரமா கீழே இறங்காது. விலை இறங்கினாலும், அது ஏறும் வரையிலும் சேமிச்சு வைக்க முடியும்.

உளுந்துச் செடிகள், கால்நடைகளுக்கு அருமையான தீவனம். நம்ம நிலத்துல உளுந்து விதைக்கும்போது, அதைச் சமையலுக்கும் அடிக்கடி பயன்படுத்துவோம். உளுந்துல புரதச்சத்து உண்டு. நம்மள மாதிரி, வயல்ல இறங்கி விவசாயம் செய்யுற ஆள்களுக்கு, புரதச்சத்து அவசியம். அதை உளுந்து வடை, உளுந்து களி, உளுந்து உருண்டைனு வித விதமா பலகாரம் செஞ்சும் சாப்பிடலாம்’னு சொன்னாரு. இந்த உளுந்து ரகசியத்தைத் தெரிஞ்ச பிறகு, நானும் உளுந்துச் சாகுபடி செய்யத் தொடங்கிட்டேன்’னு ரெண்டாவது நபர் சொல்லி முடிச்சாரு. அதுக்குள்ள, சோள வயல், வழியில தெரிஞ்சுது.

‘‘சோளம் விதைக்கையில… சொல்லிப்புட்டு விதை’னு சொல்வாங்க. இதுக்கு என்ன அர்த்தம்னு, இப்ப உள்ள இளசுகளுக்குத் தெரியாது. கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தா அதென்ன… சோளம் விதைக்கும்போது மட்டும் சொல்லிப்புட்டு விதைக்கச் சொல்றாங்கனு கேள்வி எழும். பொதுவா இளஞ்சோளப் பயிர்கள்ல விஷத்தன்மை இருக்கும். அதை, ஊர்ல இருக்கிற ஆடு மாடுங்க கடிச்சா… சொக்கிப்போய்ச் சுருண்டு விழுந்துடும். கொஞ்சம் கவனிக்காமவிட்டா, வாயில்லாத அந்த ஜீவன்களோட உசுரைக் காப்பாத்தறது ரொம்பவே கஷ்டம். அதனாலதான், சோளம் விதைச்சா, ஊரு முழுக்கச் சொல்லி வைக்கணும்னு பாட்டாவே பாடி வெச்சாங்க’’னு மூன்றாவது நபர் இந்த அருமையான தகவலைச் சொன்னாரு.

‘‘சென்னையில போன வேலை முடிஞ்சதும், பாரிமுனைக்குப் போய்க் கைத்தெளிப்பான் ஒண்ணு வாங்கணும்’’னு இளைமையா இருந்த நான்காவது நபர் பேசினாரு. அதுக்குள்ள முதலாவது மூத்த நபர், ‘‘உன்கிட்டத்தான் பவர் ஸ்பிரேயர் (விசைத் தெளிப்பான்) இருக்கே. அப்புறம் எதுக்குக் கைத்தெளிப்பான்’’னு கேட்டாரு. ‘‘இப்போ, இயற்கை விவசாய முறையில காய்கறிச் சாகுபடி செய்ய ஆரம்பிச்சிட்டேன். அதுக்கு, பஞ்சகவ்யா, பூச்சிவிரட்டினு தெளிக்கப் பவர் ஸ்பிரேயர் சரியா வராது. ஏன்னா, இயற்கை விவசாய இடுபொருளைச் செடிங்க மேல குளிப்பாட்டி விட்டமாதிரி தெளிக்கணும். பவர் ஸ்பிரேயர் புகை மாதிரி தெளிக்கும். இது இயற்கை விவசாயம் செய்யுற விவசாயிகளுக்குச் சரிப்படாது’’னு வேகமா சொல்லி முடிச்சாரு.

‘‘இப்போ எங்க பார்த்தாலும் ‘இயற்கை விவசாயம், ஆர்கானிக் காய்கறி’னு இயற்கை ஆதரவு பிரசாரம் அதிகமாயிருக்குதே’’னு ஆபீசர் மாதிரியிருந்த சக பயணி, அந்த விவசாயிங்க மேல கேள்வியை வீசினாரு. அவரோட தோற்றத்தைப் பார்த்ததும், அவங்க பேச தயங்கினாங்க.

சரியா சொன்னீங்க ஐயா. உடம்புக்குச் சத்தான மோர் விக்கிறவன், மோர்... மோரேனு கூவி கூவித்தான் விக்கணும். சாராயம் விக்கிறவன் சத்தமில்லாமல் விற்பனை செய்யுற சூழ்நிலைத்தான் இருக்குன்னு, சிரிச்சுக்கிட்டே சொன்னேன். கண்ணாடிப் போட்ட கண்ணு வழியா, என்னை ஏற இறங்க பார்த்துட்டு, கையில வெச்சிருந்த இங்கிலீஷ் புத்தகத்துல தன்னை மறைச்சிக்கிட்டாரு, அந்த ஆபீசர்.