மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு: கலப்பட வேப்பம் பிண்ணாக்கு... - அலட்டிக்கொள்ளாத மாவட்ட நிர்வாகம்!

மரத்தடி மாநாடு: கலப்பட வேப்பம் பிண்ணாக்கு... - அலட்டிக்கொள்ளாத மாவட்ட நிர்வாகம்!
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு: கலப்பட வேப்பம் பிண்ணாக்கு... - அலட்டிக்கொள்ளாத மாவட்ட நிர்வாகம்!

ஓவியம்: வேல்

‘வாத்தியார்’ வெள்ளைச்சாமியும் ‘ஏரோட்டி’ ஏகாம்பரமும் காலையிலேயே தோட்டத்துக்கு வந்துவிட்டனர். ஆடு மாடுகளை மேய்ச்சலுக்காக அவிழ்த்துவிட்டு வந்தார் ஏரோட்டி. அதுவரை மரத்தடியில் அமர்ந்து செய்தித்தாள்களை வாசித்துக் கொண்டிருந்தார் வாத்தியார். சற்று நேரத்தில் ‘காய்கறி’ கண்ணம்மா வந்துசேர, மூவரும் மரத்தடியில் அமர்ந்தனர்.

“என்ன கண்ணம்மா, வியாபாரத்தை மாத்திட்டபோல இருக்கு. காய்கறிகளைக் காணோம்” என்று கேட்டார் ஏரோட்டி.

“ஆமாய்யா... சீசனுக்கேத்த மாதிரி மாத்திக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். பக்கத்துத் தோட்டத்துக்காரர் பனைமரங்கள்ல இருந்து பதநீர் இறக்குறார். அவர்கிட்ட நுங்கையும், பதநியையும் வாங்கி விற்பனை செய்யலாம்னு முடிவு பண்ணிட்டேன்” என்ற காய்கறி, ஆளுக்குக் கொஞ்சம் பதநீரை டம்ளர்களில் ஊற்றிக் கொடுத்தார்.

மரத்தடி மாநாடு: கலப்பட வேப்பம் பிண்ணாக்கு... - அலட்டிக்கொள்ளாத மாவட்ட நிர்வாகம்!

அவர்கள் குடித்தவுடன், கூடையிலிருந்து ஆளுக்கு இரண்டு நுங்குகளை எடுத்துக் கொடுத்த காய்கறி, “நுங்கு சீசன் களைகட்ட ஆரம்பிச்சுடுச்சு. எங்களுக்குச் சின்ன வயசா இருக்குறப்போ, ரூபாய்க்கு அஞ்சு நுங்கு கொடுப்பாங்க. இப்போ ஒரு நுங்கு அஞ்சு ரூபாய்னு விற்பனை செய்றோம். மக்கள் இயற்கை பக்கம் திரும்பியிருக்குறதால விலை பத்திக் கவலைப்படாம நுங்கு, பதநீரையெல்லாம் சாப்பிட ஆரம்பிச்சுட்டாங்க. கொண்டு வந்த எல்லாமே விற்பனையாகிடுச்சு. உங்களுக்காகக் கொஞ்சம் நிறுத்தி வெச்சுக் கொண்டுவந்தேன். நுங்கு சாப்பிட்டா உடம்பு சூடு தணியும். அம்மை மாதிரியான நோய்களும் வராது. நுங்கைத் தோலோடு சாப்பிட்டா வயித்துப்புண்ணெல்லாம் ஆறிடும். நுங்குக்குள்ள இருக்கிற தண்ணீரையும் நுங்குத்தோலையும் வியர்குரு இருக்குற இடத்துல தடவினா குணமாகிடும்” என்றார்.

நுங்கை ருசித்துக்கொண்டே ஒரு செய்தியைச் சொன்னார் வாத்தியார்.

“கோயம்புத்தூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட பெரியதடாகம் பகுதி, மலைக்குப் பக்கத்துல காட்டை ஒட்டின பகுதியில இருக்குது. இந்தப்பகுதியில நிறைய செங்கல் சூளைகள் இருக்கு. பல தொழிலாளர்கள் வேலை செய்றாங்க. காட்டை ஒட்டி இருக்கிறதால, அடிக்கடி யானைகள் வந்துடுமாம். இதனால, இந்தப்பகுதியில யானைக்கும் மனிதர்களுக்கும் அடிக்கடி மோதல் ஏற்படுதாம். யானைகளால் மிதிபட்டு நிறைய பேர் இறந்து போயிருக்காங்களாம். இந்தப் பிரச்னைக்கு முடிவு கட்டுறதுக்காக, கோயம்புத்தூர் மாவட்ட வனத்துறை மூலமா, வனப்பகுதியில ஒரு ‘சைரன் சுழல் விளக்கு’ அமைச்சிருக்காங்க. யானைகள் நடமாட்டத்தை யாராவது பார்த்தாங்ன்னா... உடனே ‘1800 4254 5456’ இந்த நம்பருக்கு போன் பண்ணித் தகவல் சொல்லணும். உடனே, வனத்துறை அலுவலர்கள் சம்பந்தப்பட்ட பகுதியில் வசிக்கிற இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்கள், வனத்துறையினர்னு 200 பேருக்கு யானை நடமாட்டம் பத்தின தகவலை செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் மூலமா அனுப்பிடுவாங்க. அதே நேரத்துல சைரன் சுழல் விளக்கும் இயங்க ஆரம்பிச்சுடும். சைரனோட சத்தம் 3 கிலோமீட்டர் சுற்றளவுக்குக் கேட்கும். இதனால, மக்கள் உடனடியா பாதுகாப்பான இடத்துக்குப் போயிடலாம். அதுக்குள்ள சம்பந்தப்பட்ட வன அலுவலர்கள் வந்து யானைகளை விரட்டுற வேலைகளையும் ஆரம்பிச்சுடுவாங்க. இதுமூலமா யானைகள், மனிதர்களைத் தாக்குறது பெருமளவு குறைய வாய்ப்பிருக்குனு சொல்றாங்க” என்றார் வாத்தியார்.

அடுத்த செய்தியைச் சொல்லிய ஏரோட்டி, “தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக நுாற்புழுவியல் துறை பேராசிரியர்கள், விவசாயிகளுக்கு நூற்புழுத் தாக்குதலைத் தவிர்க்க, ஓர் ஆலோசனை சொல்லிருக்காங்க. ‘நூற்புழுக்கள் மண்ணுல வசிக்கக்கூடிய நுண்ணுயிர்கள். முதுகெலும்பில்லாத பல செல் உயிரினங்கள்தான் இந்தப்புழுக்கள். இந்த நூற்புழுக்கள், வேரின் சாற்றுக் குழாய் அமைப்புல அதிகப் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால, வேரோட உறிஞ்சு தன்மை பாதிக்கப்பட்டுப் பயிர்கள், மண்ணுல இருக்கிற சத்துகளை எடுக்க முடியாம போயிடும். பெரும்பாலும் பண்ணையில் பதியன் முறையில உற்பத்தி பண்ற நாற்றுகள் மூலமாத்தான் அதிகளவுல நூற்புழுக்கள் பரவுது. இதனால, பதியன் நாற்று வாங்கி நடவு செய்ற விவசாயிகள் கவனமா இருக்கணும். நாற்றுகளைப் பரிசோதனை செஞ்சு வாங்கினா நூற்புழுத் தாக்குதல்ல இருந்து தப்பிக்கலாம்’னு அந்தப் பேராசிரியர்கள் சொல்லியிருக்காங்க” என்றார்.

அடுத்த செய்திக்குத் தாவிய வாத்தியார், “கோயம்புத்தூர் அடுத்த அன்னூர் பகுதியில், துடியலுார் கூட்டுறவு விவசாயச் சேவா ஸ்தாபனம் (டியூகாஸ்) இயங்கிட்டிருக்கு. இங்க விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருள்களை விற்பனை செய்றாங்க. இவங்க சப்ளை பண்ற வேப்பம் பிண்ணாக்கில் கலப்படம் இருக்குதுனு ரொம்ப நாளா விவசாயிகள் மத்தியில குற்றச்சாட்டு இருக்கு. ஏழெட்டு மாசத்துக்கு முன்னாடி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்துலகூட, இந்தப் பிரச்னை பத்தின விவாதம் நடந்துச்சு. அப்போ வேப்பம் பிண்ணாக்கை ஆய்வக பரிசோதனை பண்ணி ‘கலப்படம் இல்லை’னு மாவட்ட நிர்வாகம் சார்பா சொன்னாங்க. ஆனா, விவசாயிகள் வேறு ஆய்வகத்துல சோதனை செஞ்சு கலப்படம் இருக்குனு நிரூபிச்சாங்க. அதை மாவட்ட நிர்வாகம் ஏத்துக்கலை. அதுக்கடுத்து, கொஞ்ச நாள் வேப்பம் பிண்ணாக்கு விற்பனையை நிப்பாட்டி வெச்சிருந்தாங்க.

இப்போ திரும்பவும் வேப்பம் பிண்ணாக்கு விற்பனையை ஆரம்பிச்சிருக்காங்க. அதுலயும் கலப்படம் இருக்குறதா சந்தேகப்பட்ட காளிசாமிங்கிறவர், கலெக்டருக்குக் கடிதம் அனுப்பினார். உடனே, வேளாண் துறை அலுவலர்கள், அந்தக் கூட்டுறவுச் சங்கத்துல இருந்து பிண்ணாக்கை மாதிரி எடுத்துத் திருச்சியில் இருக்கிற அங்கக உரப் பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பினாங்க. அந்த ஆய்வு முடிவுல, ‘வேப்பம்பிண்ணாக்குக்கு உரிய பண்புகள் இதில் இல்லை’னு சொல்லிட்டாங்க. ஆனாலும் சம்பந்தப்பட்ட கூட்டுறவுச் சங்கத்துப் பணியாளர்கள் மேலயோ, வேப்பம்பிண்ணாக்கு சப்ளை செஞ்ச நிறுவனத்து மேலயோ இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படலை. இன்னமும் அந்தக் கூட்டுறவுச் சங்கம் அதே நிறுவனத்துல கொள்முதல் பண்ணி, வேப்பம்பிண்ணாக்கை விற்பனை செஞ்சுட்டுதான் இருக்கு. விவரமறியாத விவசாயிகள் வாங்கிட்டுப் போயிட்டுதான் இருக்காங்களாம்” என்றார்.

அந்த விஷயத்தை ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்ததால் தலையாட்டி ஆமோதித்த ஏரோட்டி, “இதே டியூகாஸ் கூட்டுறவுச் சங்கம் பத்தி இன்னொரு செய்தியும் வந்துச்சுய்யா. தமிழகம் முழுக்கக் கூட்டுறவுச் சங்கத் தேர்தல் பணிகள் நடந்திட்டுருக்கு. அதுல ஆளும்கட்சிக்காரங்க அராஜகம் அதிகளவுல இருக்கு. வேறு கட்சிக்காரங்களோ கட்சி சாராத உறுப்பினர்களோ மனுத்தாக்கல்கூடச் செய்ய முடியாத நிலை இருக்கு. இந்த டியூகாஸ் கூட்டுறவுச் சங்கத்துலயும் இதே நிலைதான். இந்தச் சங்கத்துல ஓட்டுப்போட தகுதியுடைய உறுப்பினர்கள் பட்டியல்ல, பல குளறுபடி இருக்குதாம். பட்டியல்ல 80 வயசு, 100 வயசைக் கடந்த உறுப்பினர்கள்லாம் இருக்குறாங்களாம். அதிகபட்சமா 140 வயசுல ஒரு உறுப்பினர் இருக்கிறதாவும் குறிப்பிடப்பட்டிருக்காம். பல உறுப்பினர்கள் இறந்துபோன நிலையிலேயும் அவங்களை உறுப்பினர் பட்டியல்ல இருந்து நீக்காம இருக்குறாங்களாம். அதனால, புதிய உறுப்பினர் பட்டியல் தயாரிச்ச பிறகுதான் தேர்தல் வைக்கணும்னு, மற்ற உறுப்பினர்கள் கோரிக்கை வெச்சுருக்காங்க. ஆனா, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் அதைக் கண்டுக்கவேயில்லையாம்” என்றார்.

வெயில் உச்சிக்கு ஏறி இருந்ததால், ‘ஆடு மாடுகளுக்குத் தண்ணிக் காட்டிட்டு வர்றேன்’ என்று சொல்லியபடியே எழுந்து சென்றார் ஏரோட்டி. அத்தோடு அன்றைய மாநாடும் முடிவுக்கு வந்தது.