மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் தேங்காய், கொப்பரை... - அதிக விளைச்சல் தரும் கர்நாடக முந்திரி!

மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் தேங்காய், கொப்பரை... - அதிக விளைச்சல் தரும் கர்நாடக முந்திரி!
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் தேங்காய், கொப்பரை... - அதிக விளைச்சல் தரும் கர்நாடக முந்திரி!

ஓவியம்: வேல்

சித்திரை மாத புழுதி உழவு ஓட்டி வைப்பதற்காக டிராக்டரை வரச் சொல்லியிருந்தார், ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். அதற்காகக் காலையிலே தோட்டத்துக்குக் கிளம்பிக்கொண்டிருந்த ஏரோட்டியுடன் நாளிதழ் சகிதமாக இணைந்துகொண்டார், ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. ஏரோட்டி, உழவு வேலைகளைக் கவனிக்க... மரத்தடியில் அமர்ந்து நாளிதழ் வாசித்துக் கொண்டிருந்தார், வாத்தியார். காலை வியாபாரத்தை முடித்துவிட்டு ‘காய்கறி’ கண்ணம்மா வந்து சேர்வதற்கும், ஏரோட்டி வேலைகளை முடித்துவிட்டு வருவதற்கும் சரியாக இருந்தது.

ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டைத் துவக்கி வைத்தார் வாத்தியார்.

“தெலங்கானா மாநிலம், மெஹபூப் நகர்ல 700 வருஷம் பழைமையான ஆலமரம் ஒண்ணு இருக்குது. இந்த மரம்தான் உலகளவுல இரண்டாவது பெரிய, பழைமையான மரம்னு சொல்றாங்க. அந்தப்பகுதி மக்கள் அந்த மரத்துமேல ரொம்பப் பாசம் வெச்சிருக்காங்க. சமீபத்துல அந்த மரத்துல பூச்சித்தாக்குதல் ஏற்பட்டுருக்காம். அதைச் சரி செய்யணும்னு அந்தப்பகுதி மக்கள் அரசு அதிகாரிகள்கிட்ட கோரிக்கை வெச்சிருக்காங்க. உடனடியா வனத்துறை மூலம் அந்த மரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்திருக்காங்க.

மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் தேங்காய், கொப்பரை... - அதிக விளைச்சல் தரும் கர்நாடக முந்திரி!

மரத்துல உடைஞ்சு தொங்குன கிளைகளை ஒட்டவெச்சுக் கட்டியிருக்காங்க. நோயாளிகளுக்குக் குளுக்கோஸ் ஏத்துற மாதிரி, மரக்கிளைகள்ல ட்ரிப் மூலமா மருந்துகளைச் செலுத்திட்டிருக்காங்க. இன்னும் மூணு மாசம் இப்படிச் சிகிச்சை கொடுப்போம்னு சொல்லிருக்காங்களாம்” என்றார்.
“மரத்துக்கு வைத்தியமா? ஆச்சர்யமா இருக்கே” என்ற காய்கறி கூடையிலிருந்து ஆளுக்கு ஒரு மாம்பழத்தை எடுத்துக் கொடுத்தார். அதைச் சாப்பிட்டுக்கொண்டே ஒரு செய்தியைச் சொன்னார் ஏரோட்டி.

“கேரளாவுல கொப்பரை உற்பத்தி குறைஞ்சுடுச்சாம். அதனால, கேரள மாநில சந்தையில் தேங்காய் எண்ணெய் விலை அதிகரிச்சுருட்டுருக்காம். இதனால, தமிழகத்துல தேங்காய், கொப்பரை விலை அதிகரிக்கறதுக்கு வாய்ப்பு இருக்குதாம். சமீபகாலமாகவே கொப்பரைக்கு இங்க நல்ல விலை கிடைச்சுட்டுருக்கு. விலையும் கொஞ்சம் கொஞ்சமா அதிகரிச்சுட்டே இருக்கு. மார்ச் மாசம் ரெண்டாவது வாரத்துல ஒரு கிலோ கொப்பரை 132 ரூபாய் வரை விற்பனையாகி இருக்காம். தேங்காய்க்கும் இன்னும் விலை உயர வாய்ப்பிருக்காம். அதனால, ஜூன் மாசம் வரைக்கும் தேங்காய்க்கும், கொப்பரைக்கும் நல்ல விலை கிடைக்கும்னு சொல்றாங்க” என்றார் ஏரோட்டி.

அடுத்த செய்தியைச் சொல்ல ஆரம்பித்த வாத்தியார், “கர்நாடகா மாநிலம், புட்டூர் நகர்ல முந்திரி ஆராய்ச்சி இயக்குநரகம் இருக்குது. இந்த மையத்துல ஒரே வருஷத்துல காய்ப்புக்கு வந்து மகசூல் தரக்கூடிய ‘கத்தால் ஹெச்-130’ என்ற புது முந்திரி ரகத்தைக் கண்டுபிடிச்சுருக்காங்க.

இந்த ரகத்துல சீக்கிரமாவே பூ பிடிச்சுடுமாம். நவம்பர் மாதம் பூ பிடிக்கத் தொடங்கி ஏப்ரல், மே மாதங்களில் பழமாகுமாம். ஒவ்வொரு முந்திரிப்பருப்பும் 13 கிராம் அளவுல இருக்குதாம். அடர் நடவு முறைக்கும் ஏற்ற ரகமாம் இது. கர்நாடக மாநிலத்துல நிறைய விவசாயிகள் இதைச் சாகுபடி செஞ்சு நல்ல மகசூல் எடுத்துட்டுருக்காங்களாம். இந்த ரக முந்திரிக் கன்றுகள், தமிழக விவசாயிகளுக்கும் கிடைக்கிறதுக்குத் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கணும்னு முந்திரி விவசாயிகள் கேக்குறாங்க” என்றார்.

“அந்த மாதிரி ரகங்களை அறிமுகப்படுத்துனா முந்திரி விவசாயிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். குறிப்பா கடலூர் மாவட்டத்துல புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரொம்ப உதவியா இருக்கும்” என்று சொன்ன ஏரோட்டி அடுத்த செய்திக்குத் தாவினார்.

“தேனி மாவட்டத்துல திராட்சைச் சாகுபடி நடக்குது. இதனால, கம்பம் பகுதியில் ஒயின் தொழிற்சாலையையும், திராட்சை ஆராய்ச்சி நிலையத்தையும் அமைச்சாங்க. ஆனா, அந்தப்பகுதிகள்ல விளையுற திராட்சைப்பழம், ஒயின் தயாரிப்புக்கு ஏத்ததா இல்லைங்கிறதால, ஒயின் தொழிற்சாலை கொள்முதல் செய்யலை.

இதனால, ஏமாற்றமாகிப்போன விவசாயிகள், ‘திராட்சைப்பழத்தை மதிப்புக்கூட்டறதுக்கு ஏற்பாடு செய்யுங்க’னு திராட்சை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள்கிட்ட ரொம்பநாளா கோரிக்கை வெச்சுருந்தாங்க. ஒருவழியா ஆராய்ச்சி நிலையம் சார்பா கம்பம் பகுதியில திராட்சையிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கறதுக்காக 2 கோடி ரூபாய்ல ஒரு திட்ட வரைவு தயாரிச்சு வேளாண் துறை அனுமதிக்காக அனுப்பியிருக்காங்க.

ஜாம், கூஸ், ட்ரைபுரூட்னு தயாரிக்கிற மதிப்புக்கூட்டல் தொழிற்சாலையை அமைச்சா விவசாயிகளுக்குக் கட்டுபடியான விலை கிடைக்கும். ஆனா, வேளாண் அமைச்சகம் ஒப்புதல் கொடுத்தாதான் இது சாத்தியமாகும். அதுக்காகத் திராட்சை விவசாயிகள் காத்திட்டுருக்காங்க” என்று ஏரோட்டி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, உழவு வேலைக்கு வந்த நபர்கள் சத்தம் போட்டு அழைத்தனர். ஏரோட்டி எழுந்துச் செல்ல, அன்றைய மாநாடு முடிவுக்கு வந்தது.

மூலிகைத் தாவர வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை

தேசிய மூலிகை வாரியம், மூலிகை சார்ந்த நிறுவனங்களுக்கு நிதியுதவி மற்றும் மானியம் வழங்கிவருகிறது. தமிழக மூலிகைத்தாவர வாரியத்தில், மூலிகைச் சாகுபடி செய்யும் விவசாயிகள், மூலிகைச் சேகரிப்போர், மூலிகை வர்த்தகர்கள், மூலிகை ஏற்றுமதியாளர்கள், மூலிகை மருந்து உற்பத்தியாளர்கள் ஆகியோர் உறுப்பினர்களாகச் சேர்ந்து பயனடையலாம்.

தமிழக மூலிகை வாரியத்தில் உறுப்பினராகச் சேர்வதற்கான பதிவு தற்போது தொடங்கியுள்ளது. அடுத்த ஆண்டு (2019) மார்ச், 31-ம் தேதி வரை பதிவு செய்துகொள்ளலாம். பதிவு செய்யக் கட்டணம் உண்டு.

உரிய ஆவணங்களோடு தமிழக மாநில மூலிகைத் தாவர வாரிய அலுவலகத்தில் நேரில் அல்லது தபாலில் விண்ணப்பம் செய்யலாம். இந்த உறுப்பினர் பதிவை மூன்று ஆண்டுகளுக்கு, ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். இது தொடர்பான விவரங்களை www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

வேளாண் படிப்புக்கு நுழைவுத்தேர்வு

.சி.ஏ.ஆர் (ICAR) எனப்படும், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின்கீழ் செயல்படும் வேளாண் பல்கலைக்கழகங்களில் வேளாண்மை, பொறியியல், தோட்டக்கலை, கால்நடை, மீன்வள அறிவியல் உள்படப் பல்வேறு பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. இளநிலைப் படிப்புக்கான இடங்கள் 15 சதவிகித இடஒதுக்கீட்டில் நிரப்பப்படுகின்றன. முதுநிலைப்படிப்பு மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கான இடங்கள் 25 சதவிகித இடஒதுக்கீட்டு முறையில் நிரப்பப்படுகின்றன.

இதற்காக ஒவ்வோர் ஆண்டும், தேசிய அளவில் வேளாண் நுழைவுத் தேர்வை நடத்துகிறது ஐ.சி.ஏ.ஆர். இந்தாண்டுக்கான, இளநிலைப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு வருகிற மே மாதத்தில் நடக்கவுள்ளது. அவற்றுக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் மாதக் கடைசி வாரத்தில் வெளியிடப்பட உள்ளன.

இதுகுறித்த தகவல்களை, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் இணையதளத்தில் (www.icar.org.in) தெரிந்துகொள்ளலாம். வேளாண் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், அரசு உதவித்தொகையுடன் படிக்க, இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.