மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு: மண்வள அட்டைக்குத்தான் உரம்... கிடுக்கிப்பிடி போடும் மத்திய அரசு!

மரத்தடி மாநாடு: மண்வள அட்டைக்குத்தான் உரம்... கிடுக்கிப்பிடி போடும் மத்திய அரசு!
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு: மண்வள அட்டைக்குத்தான் உரம்... கிடுக்கிப்பிடி போடும் மத்திய அரசு!

ஓவியம்: வேல்

திண்ணையில் அமர்ந்து நாளிதழ் படித்துக்கொண்டிருந்தார், ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. வியாபாரத்தை முடித்துவிட்டு வந்த ‘காய்கறி’ கண்ணம்மா, திண்ணையில் கூடையை இறக்கி வைத்து விட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டார். பரவலாக மழை பெய்திருந்ததால், நிலத்தில் கோடை உழவு செய்து கொண்டிருந்தார் ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். காய்கறி வந்திருப்பதைப் பார்த்த ஏரோட்டி, டிராக்டர் ஓட்டுநரிடம் விவரங்களைச் சொல்லிவிட்டு, கை கால்களைக் கழுவிவிட்டு வர... அன்றைய மாநாடு கூடியது.  

மரத்தடி மாநாடு: மண்வள அட்டைக்குத்தான் உரம்... கிடுக்கிப்பிடி போடும் மத்திய அரசு!

“நியூஸ் பேப்பர்ல என்னய்யா விசேஷ செய்தி போட்டிருக்காங்க” என்று காய்கறி கேட்க, ஒரு செய்தியைச் சொல்லி மாநாட்டை ஆரம்பித்து வைத்தார் வாத்தியார்.

‘விவசாயிகளோட வருவானத்தை இரண்டு மடங்காக்க நடவடிக்கைகள் எடுப்போம்’னு தொடர்ந்து பிரதமர் மோடி சொல்லிட்டே இருக்கார்ல. அதைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவர்றதுக்கான பல வேலைகளை மத்திய அரசு செஞ்சுட்டுருக்கு. சமீபத்துல பிரதமர் தலைமையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்துச்சு. அந்தக்கூட்டத்துல விவசாயத் துறையையும், அதோட தொடர்புள்ள மற்ற துறைகளையும் மேம்படுத்துறதுக்கு, 11 திட்டங்களை ஒருங்கிணைக்கிற புதிய திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்திருக்கு.

அந்தத்திட்டத்துக்கு, ‘பசுமைப் புரட்சி - கிரிஷோண்ணதி யோஜனா’னு பேர் வெச்சிருக்காங்க. அந்தத் திட்டம் 2020-ம் வருஷம் வரைக்கும் செயல்பாட்டுல இருக்கும். இந்தியா முழுக்கச் செயல்படுத்தப்போற இந்தத் திட்டத்துக்காக மத்திய அரசு, 33 ஆயிரத்து 269 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருக்கு.

இந்தப் புதுத் திட்டத்துல, ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சித் திட்டம், மத்திய உணவு பாதுகாப்புத் திட்டம், தேசிய நிலைத்து நீடிக்கவல்ல விவசாயத் திட்டம் மூணையும் ஒருங்கிணைக்கப் போறாங்க. இதில்லாம விதைகள் மற்றும் இடுபொருள் வழங்கும் திட்டம், விவசாயத்தை இயந்திரமயமாக்கும் திட்டம், பயிர்கள் பாதுகாப்பு திட்டம்னு 11 திட்டங்களை உள்ளடக்கி இந்தப் புதுத்திட்டம் செயல்படும்னு சொல்லிருக்காங்க” என்றார், வாத்தியார்.

“கேக்கறதுக்கு நல்லாத்தான் இருக்கு. விவசாயிகள் முன்னேறினா சரி” என்ற ஏரோட்டி ஒரு செய்தியைச் சொன்னார்.

“திருப்புவனம் பக்கத்துல இருக்குற அம்பலத்தாடிங்கிற கிராமத்துல 1979-ம் வருஷம்... மதுரைக்கு அருகேயுள்ள விரகனூர் மதகு அணையில இருந்து வெள்ளக்கால்வாய் வழியாக விருதுநகர், சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்குப் பயன் கிடைக்கிறதுக்காகச் ‘சமரணை’ங்கிற அணைகட்ட நிலங்களைக் கையகப்படுத்துனாங்க.

79-ம் வருஷம் ஆரம்பிச்சு 86-ம் வருஷம் அணையைக் கட்டி முடிச்சுட்டாங்க. இந்த அணைக்காக விருதுநகர் மாவட்ட விவசாயிகள்கிட்ட இருந்து எடுக்கப்பட்ட புன்செய் நிலங்களுக்கு உடனடியா இழப்பீடு கொடுத்துட்டாங்க. அதே நேரத்துல சிவகங்கை மாவட்ட விவசாயிகள்கிட்ட இருந்து எடுக்கப்பட்ட நிலங்கள், நன்செய் நிலங்கள்ங்கிறதால எவ்வளவு இழப்பீடுனு, தலைமைச் செயலாளர்தான் முடிவு செய்ய முடியும்னு பொதுப்பணித்துறை அலுவலர்கள் சொல்லிட்டாங்க. இந்த மாதிரி மொத்தம் 65 விவசாயிகளுக்கு இழப்பீடு கொடுக்காம வெச்சிருந்தாங்க. அந்த 65 விவசாயிகளும் கிட்டத்தட்ட 38 வருஷத்துக்கு மேல போராடிக்கிட்டு இருக்குறாங்க. இன்னமும் அவங்களுக்கு இழப்பீடு கிடைச்ச பாடில்லை.

ஒருவழியா போன டிசம்பர் மாசம் அவங்ககிட்ட பேச்சுவார்த்தை நடத்தி ஒரு ஏக்கர் நிலத்துக்கு 1 லட்சத்து 11 ஆயிரம் கொடுக்குறதுனு முடிவு பண்ணினாங்க. இதுக்காகப் பொதுப்பணித்துறையில இருந்து நிதி ஒதுக்கி, அந்த நிதியை மாவட்ட கலெக்டரோட கணக்குல வரவும் வெச்சாச்சு. ஆனாலும் நாலு மாசமா அந்தப்பணத்தைப் பைசல் பண்ணாம இழுத்தடிச்சுட்டுருக்கார், சிவகங்கை மாவட்ட கலெக்டர். அந்த 65 பேர்ல பத்து பேர் இறந்து போயிட்டாங்க. அவங்க வாரிசுகள் பணத்துக்காக அலைஞ்சுட்டுருக்காங்க பாவம்” என்று வருத்தப்பட்டார், ஏரோட்டி.

“என்னய்யா கொடுமையா இருக்கு. இன்னிக்கெல்லாம் அந்த நிலத்தோட மதிப்பு எத்தனை லட்சம் இருக்கும். ஒரு லட்ச ரூபாயை வாங்குறதுக்கு இவ்வளவு போராட்டமா?” என்று ஆதங்கப்பட்ட காய்கறி, தானே தயார் செய்து எடுத்து வந்திருந்த எலுமிச்சைச் சாற்றை இருவருக்கும் ஊற்றிக் கொடுத்தார். மண்ணால் செய்யப்பட்டிருந்த தண்ணீர் பாட்டிலில் ஊற்றி ஈரத்துணி சுற்றிக்கொண்டு வந்திருந்ததால் மிகவும் குளிர்ச்சியாக இருந்தது, எலுமிச்சைச் சாறு.

“வெயில் காலத்துக்கு ஏத்த பானம் இது. தாகம் தீர்க்குறதுக்குப் பாட்டில்ல விக்கிற கண்டதையும் குடிக்காம, இதைக் குடிச்சா உடம்புக்குக் குளிர்ச்சி. விவசாயிகளுக்கும் பிரயோஜனமா இருக்கும். வெயில் காலம் ஆரம்பிச்ச உடனேயே எலுமிச்சை விலை சர்ர்னு ஏறிடுச்சு. ஒரு பெரிய எலுமிச்சம்பழம் பத்து ரூபாய்க்கு மேல விற்பனையாகுது” என்றார், காய்கறி.

“எலுமிச்சைச் சாறு குடிச்சா தாகம் தணியுறதோடு உடம்புல நீர்ச்சத்து குறையாம இருக்கும். எலுமிச்சையில வைட்டமின் சி, வைட்டமின் பி 6, வைட்டமின் ஏ, வைட்டமின் இ, நியாசின், தயமின், காப்பர், கால்சியம், பொட்டாசியம், ஜிங்க், இரும்பு, பாஸ்பரஸ்னு பல சத்துகள் இருக்கு. தொடர்ந்து எலுமிச்சைச் சாறு குடிச்சா நோய் எதிர்ப்பு சக்தி கூடும். சிலர் இதைக்குடிச்சா சளி பிடிக்கும்னு சொல்வாங்க. அது தவறான கருத்து. உண்மையில் எலுமிச்சை, சளியைக் குணமாக்கும். காலையில வெறும் வயித்துல குடிச்சா உடம்புல இருக்குற பித்தத்தைச் சமன்படுத்தும்” என்றார், வாத்தியார்.

அடுத்த செய்திக்குத் தாவிய ஏரோட்டி, “திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை பக்கத்துல இருக்குற ஆத்துக் கிணத்துப் பட்டியைச் சேர்ந்தவர் பொன்ராஜ். இவர் பதினஞ்சு வருஷத்துக்கு மேல மல்பெரி சாகுபடி செஞ்சு, வெண்பட்டுக்கூடு உற்பத்தி செஞ்சுட்டுருக்கார். இவர், ஒரு ஹெக்டேர் பரப்புல மல்பெரி சாகுபடி செஞ்சுருக்கார். இவரை 2016-17-ம் வருஷத்துல ‘மாநில அளவில் வெண்பட்டுக்கூடு உற்பத்தியில் சிறந்து விளங்கும் விவசாயி’னு பட்டுவளர்ச்சித் துறை தேர்வு செஞ்சுருக்கு. அந்த வருஷத்துல இவர், 2,762 கிலோ பட்டுக்கூடுகளை உற்பத்தி செஞ்சுருக்கார். தமிழகத்துலேயே அதிகளவு பட்டுக்கூடுகளை உற்பத்தி செஞ்சது இவர்தாங்கிறதால, இவரைச் சிறந்த விவசாயியா தேர்வு செஞ்சுருக்காங்க. சமீபத்துல, சேலத்துல நடந்த அரசு விழாவுல இவருக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசை முதலமைச்சர் பழனிசாமி கொடுத்திருக்கார்” என்றார்.

“இன்னொரு முக்கியமான சேதிய்யா...” என்று இடைமறித்த வாத்தியார், “இப்போ ஆதார் அட்டை இருந்தாத்தான் உரம் வாங்க முடியும்னு சட்டம் அமல்ல இருக்குதுல்ல. அடுத்து உரம் வாங்குறதுக்கு இன்னொரு புது முறையை அமல்படுத்த போறாங்க. இனிமே நினைச்ச அளவுக்கெல்லாம் உரத்தை வாங்கிப் பயன்படுத்த முடியாது. நிலத்தோட மண்ணைப் பரிசோதனை பண்ணி மண் பரிசோதனை மையத்துல பரிந்துரைக்கிற அளவு உரத்தைதான் மானியத்துல வாங்க முடியும். ஒவ்வொரு முறை உரம் வாங்குறப்போவும் மண்ணைப் பரிசோதனை செஞ்சு... மண்வள அட்டையைக் காட்டிதான் உரம் வாங்க முடியும். இதனால ‘அதிகளவிலான ரசாயன உரப்பயன்பாடு குறையும். இயற்கை இடுபொருள்கள் பயன்பாடு அதிகரிக்கும். மானியத்துக்காகச் செலவு செய்ற கோடிக்கணக்கான ரூபாய் மிச்சமாகும்’னு கணக்குப் போட்டிருக்குதாம் மத்திய அரசு” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே உழவு செய்து கொண்டிருந்த ஆள்கள் ஏரோட்டியை அழைக்க... எழுந்து ஓடினார், ஏரோட்டி. அத்துடன் மாநாடும் முடிவுக்கு வந்தது.