மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: பாசனத்துக்கு அணைகள் வேண்டாம், மரங்கள் போதும்!

மண்புழு மன்னாரு: பாசனத்துக்கு அணைகள் வேண்டாம், மரங்கள் போதும்!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு: பாசனத்துக்கு அணைகள் வேண்டாம், மரங்கள் போதும்!

மாத்தியோசிஓவியம்: வேல்

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நினைவில் வாழும் முன்னோடி இயற்கை விவசாயி பாஸ்கர் சாவே, கல்பவிருட்சம் பண்ணை (Kalpavruksh)யை இயற்கை பல்கலைக்கழகம்னு பாராட்டுறாங்க. காந்தியவாதியான பாஸ்கர் சாவே, சில வருஷங்களுக்கு முன்னாடி தேசிய விவசாயிகள் கமிஷனுக்கு (The National Commission on Farmers) தலைவரா இருந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு எழுதிய கடிதம் விவசாயிகள், சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பிரபலமானது. அந்த ஆங்கிலக் கடிதத்தோட சாராம்சத்தை, கடந்த சில இதழ்கள்ல வெளியிட்டுருந்தோம். அதோட நிறைவு பகுதியை, இந்த இதழ்லயும் படிங்க....  

மண்புழு மன்னாரு: பாசனத்துக்கு அணைகள் வேண்டாம், மரங்கள் போதும்!

‘‘அன்புள்ள எம்.எஸ்.சுவாமிநாதன்ஜி,

பசுமைப்புரட்சியால் அதிகரிக்கப்பட்ட ரசாயன உரங்களாலும் அதிகமான பணப் பயிர்களாலும் தண்ணீர்த் தேவை மிகக் கடுமையாக அதிகரித்தது. இமயமலையிலிருந்து உற்பத்தியாகும் ஐந்து நதிகளால் வளமாக்கப்பட்ட பஞ்சாப் மாநிலத்தில் 1952-ம் ஆண்டு பக்ரா நங்கல் அணை கட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெரிய மற்றும் நடுத்தர அணைகள் எனப் பல நூறு அணைகள் இந்தியா முழுவதும் கட்டப்பட்டன.

ஆனால், இப்பொழுது மத்திய அரசு 56 லட்சம் கோடி ரூபாய் செலவில், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்கும் திட்டத்தை ஆராய்ந்து கொண்டிருக்கிறது. இந்தத் திட்டத்தை முன்மொழிந்தவர் துக்ளக் புத்திக் கொண்டவராகத்தான் இருக்க முடியும். எதிர்காலச் சந்ததிகள் பற்றி அக்கறையில்லாதவர்கள்தான், இப்படியெல்லாம் யோசிக்க முடியும்.   

மண்புழு மன்னாரு: பாசனத்துக்கு அணைகள் வேண்டாம், மரங்கள் போதும்!

உலகில் தென் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக அளவு மழைபெரும் நாடு இந்தியா. ஆண்டுச் சராசரி மழையளவு கிட்டத்தட்ட 4 அடி. மண்புழுக்கள் உள்ளிட்ட நன்மை செய்யும் உயிரிகளால் துளையிடப்பட்ட மண்ணாக இருந்தால், இந்த 4 அடி நீரில், 2 அடி நீராவது நிலத்திலும், நிலத்துக்கு அடியிலும் தேங்கியிருக்கும். இதில் நிச்சயமாகக் குறிப்பிட்ட அளவு நீர், நிலத்துக்குள் சென்று நீர்மட்டத்தை உயர்த்தும்.

எனவே, நுண்ணுயிர்கள் கொண்ட மண்ணும், அதன்கீழ் உள்ள நீர்மட்டச் சேமிப்பும், இயற்கை இலவசமாக அளித்த மிகப்பெரிய அணையாகச் செயல்படுகிறது. காடுகளுக்குக் கீழ் உள்ள நிலம்தான், பெய்யும் மழைநீரை வேகத்துடன் சேமிக்கும் ஆற்றல் கொண்டது. அதனால்தான், சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே, இந்தியாவின் பல பகுதிகளில், போதுமான அளவு மழை பெய்யவில்லை என்றாலும், நிலத்தடிநீர் முற்றாக வற்றிப் பாலைவனமாக மாறிவிடவில்லை. இதனால்தான், காடுகளைக் காக்க வேண்டுமென, என்னைப் போன்றவர்கள் கத்திக் கொண்டிருக்கிறோம். காடுகளை அழிப்பதால் மண்ணின் நீர் சேமிக்கும் தன்மை கடுமையாகக் குறைந்துவிடுகிறது. ஓடைகளும் கிணறுகளும் வற்றிப்போய் விடுகின்றன. இந்த அவலம் ஏற்கெனவே இந்தியாவில் பல இடங்களில் நடந்துவிட்டது. இனியும் தொடரக்கூடாது.

மண்புழு மன்னாரு: பாசனத்துக்கு அணைகள் வேண்டாம், மரங்கள் போதும்!



ஒரு ஏக்கரில் உங்களின் ரசாயன முறைப்படி சாகுபடி செய்யப்படும் கரும்புக்குத் தேவையான தண்ணீர் மூலம், 25 ஏக்கர் சோளம், கம்பு மற்றும் மக்காச்சோளம் சாகுபடி செய்யலாம். சர்க்கரை ஆலைகளும் மிக அதிக அளவில் நீரைப் பயன்படுத்துகின்றன. விதைப்பிலிருந்து மதிப்பு கூட்டுவது வரை சுத்திகரிக்கப்பட்ட ஒவ்வொரு கிலோ சர்க்கரைக்கும் 2 ஆயிரத்திலிருந்து 3 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகின்றது. இந்த நீரைப் பயன்படுத்தி, இயற்கை விவசாய முறையில் 200 கிலோ சத்துமிக்கக் கம்பு மற்றும் சோளம் போன்ற சிறுதானியங்களை விளைவிக்க முடியும்.

நிலத்தின் மண் சற்றே ஈரப்பதமாக இருக்கும்போதுதான் பயிர்களின் மகசூல் நன்றாக இருக்கும். தேவைக்கதிகமான நீர்ப்பாசனம் அது வேர்கள் சுவாசிக்கத் தேவையான காற்றை வெளியேற்றி, வேர் அழுகலை உண்டாக்கும். எங்கள் கல்பவிருட்சா பண்ணையின் பாசனம், ரசாயனப் பண்ணைகளின் நீர்ப்பாசன அளவைக் காட்டிலும், மிகமிகக் குறைவாகவே உள்ளது. பண்ணையில் உள்ள மரப்பயிர்களுக்கு மூடாக்கு போட்டுள்ளோம். இதனால், பருவமழையின்போது கிடைக்கும் அதிகபட்ச நீர், நிலத்தில் சேமிக்கப்படுகிறது. ஆகவே கல்பவிருட்சாவில் சேமிக்கப்படும் நீரின் அளவு, மழையற்ற மாதங்களில் நீர்ப்பாசனத்திற்காகக் கிணற்றிலிருந்து எடுக்கப்படும் நீரின் அளவைவிடப் பல மடங்கு கூடுதலானது என்பது குறிப்பிடத்தக்கது.  

மண்புழு மன்னாரு: பாசனத்துக்கு அணைகள் வேண்டாம், மரங்கள் போதும்!

சுருக்கமாகச் சொன்னால், எங்கள் பண்ணைக்குத் தண்ணீரைப் பூமியிலிருந்து உறிஞ்சி எடுக்காமல், அதை அதிகப்படுத்தும் பணியைச் செய்கிறோம் (நுகர்வோராக இல்லாமல் உற்பத்தி செய்பவராக இருக்கிறது).

மரப்பயிர்கள் முக்கியமானது. நிலத்தில் 30% மரங்கள் இருக்க வேண்டும். மரங்களை நடுவதன் மூலம் கிடைக்கும் பலவகையான பயன்தரும் விளைபொருள்கள், அதனைச் சார்ந்து வாழும் பெருவாரியான மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் உதவும். ஒன்றுக்கும் உதவாத தரிசான நிலங்களைக்கூட, 10 ஆண்டுகளுக்குள் பயனுள்ளதாக மாற்றிவிட முடியும். குறைந்த ஆயுள் உடைய மரங்கள், நடுத்தர ஆயுள் உடைய மரங்கள் மற்றும் நீண்ட ஆயுள் உடைய மரங்களை மாற்றி மாற்றி நடுவதன் மூலம், நீண்ட ஆயுள் உள்ள மரப்பயிர்கள் தரும் விளைபொருள்கள் கிடைக்கும் வரை, விவசாயிக்குத் தடையின்றி வருமானம் கிடைக்கத் திட்டமிட முடியும். மரப்பயிர்களின் இலை, தழை, சருகுகள்... மூடாக்கு போட உதவும். இதன் மூலம் மண் வளத்தை மீட்டெடுக்க முடியும். ஒருகட்டத்தில் மண்வளமாகி, நலமாகிவிடும்.

இப்போது இந்தியாவுக்குத் தேவை. பல்லுயிர்களுக்குப் பலன் கொடுக்கும் இயற்கை வழி விவசாயம், மரப்பயிர் சாகுபடி, காடுகளை உருவாக்குதல்... போன்றவைதான். நிச்சயம், இவற்றையெல்லாம் பரிசீலிப்பீர்கள், கவனத்தில் கொண்டு கொள்கை முடிவு எடுப்பீர்கள் என நம்புகிறேன். சுவாமிநாதன்ஜி, எனது கடிதம் குறித்து, கேள்விகள் இருப்பின் தாராளமாக விளக்கம் கேட்டுக் கடிதம் எழுதவும். பல ஆண்டுகளாக நான் கல்பவிருட்சா பண்ணைக்கு இயற்கை வழி விவசாயத்தில் ஆர்வமுடைய பசுமை ஆர்வலர்களை, இரு கைகூப்பி அழைத்துக்கொண்டிருக்கிறேன். நீங்களும் என் பண்ணைக்கு வந்தால், மகிழ்வேன்.

அன்புடன்,

பாஸ்கர் சாவே.’’


-இப்படி, அந்தக் கடிதம் முடியுது. ஆனா, நம்ம சிந்தனையைத் தொடங்கிவைக்குது.