மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு: கோடைமழை... தென்னைக்கு உரமிட வேண்டிய நேரம்!

மரத்தடி மாநாடு: கோடைமழை... தென்னைக்கு உரமிட வேண்டிய நேரம்!
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு: கோடைமழை... தென்னைக்கு உரமிட வேண்டிய நேரம்!

ஓவியம்: வேல்

காப்பீடு செய்திருந்த பயிர்களுக்கான இழப்பீட்டுத்தொகை, வங்கிக் கணக்குக்கு வரவாகியிருக்கிறதா என்று பார்த்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார், ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். மின் கட்டணம் செலுத்திவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்த ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமியை வழியில் சந்திக்க... இருவரும் பேசிக்கொண்டே தோட்டத்தை நோக்கி நடந்தனர். இவர்கள் வருகையை எதிர்பார்த்துத் தோட்டத்தில் காத்திருந்தார், ‘காய்கறி’ கண்ணம்மா. இருவரும் தோட்டத்துக்கு வந்து சேர்ந்தவுடன், “என்னா ரெண்டு பேரும் ஜோடி போட்டு வாரீங்க” என்று சிரித்துக்கொண்டே கேட்டார், காய்கறி. இருவரும் தாங்கள் பார்த்துவிட்டு வந்த வேலைகள் குறித்துச் சொல்லிவிட்டு, மரத்தடி கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து சற்று இளைப்பாறிக் கொண்டதும்... ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டைத் துவக்கிவைத்தார், வாத்தியார்.  

மரத்தடி மாநாடு: கோடைமழை... தென்னைக்கு உரமிட வேண்டிய நேரம்!

“கால்நடைப் பராமரிப்புத்துறை சார்பில், பால் பண்ணைத் தொழிலை ஊக்குவிக்கிறதுக்காகப் பால் பண்ணை விரிவாக்கத் திட்டத்தைத் தமிழ்நாடு முழுக்கச் செயல்படுத்த போறாங்க. இதுக்கான மானியத்துக்காக 125 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்காங்க. ஒரு பால் பண்ணையின் திட்ட மதிப்பீடு 5 லட்சம் ரூபாய். அதுக்கு 25 சதவிகிதம் மானியம் உண்டு. அதாவது, பால் பண்ணை அமைக்கிறவங்க 3,75,000 ரூபாய் முதலீடு செய்யணும். அரசு மானியமா 1,75,000 ரூபாய் கிடைக்கும். பால் பண்ணை அமைக்கிறதுக்கு 300 சதுர அடி அளவு நிலமும், தீவனப்பயிர்கள் சாகுபடி செய்றதுக்கு ஒரு ஏக்கர் அளவு நிலமும் இருக்கணும். கால்நடைப் பராமரிப்புத்துறையின் பிற திட்டங்கள்ல இதுவரை பயன் அடைஞ்சுருக்கக் கூடாது. அதில்லாம விண்ணப்பிக்கிற சமயத்துல கறவைப்பசுக்கள், எருமை மாடுகள் எதுவும் வெச்சுருக்கக் கூடாது. இந்தத் திட்டத்துல பயனடையுற விவசாயிகள் கூட்டுறவுச் சங்கத்துக்குத்தான் பால் ஊத்தணும். தனியாருக்கு கண்டிப்பா ஊற்றக்கூடாது. இந்தத் திட்டத்துல தாழ்த்தப்பட்டோருக்கும் பழங்குடியினருக்கும் 30 சதவிகிதம் இட ஒதுக்கீடு உண்டு. விண்ணப்பிக்கிற விவசாயிகள்ல தகுதியானவங்களை கலெக்டர் தலைமையிலான குழு தேர்வு செஞ்சு மானியம் கொடுக்கும்” என்றார், வாத்தியார்.

“அதெல்லாம் நமக்கா கிடைக்கப்போகுது. இந்நேரம் கட்சிக்காரங்களுக்குக் கொடுக்குறதுக்கு ஏற்பாடு பண்ணி வெச்சிருப்பாங்க” என்று சொன்ன ஏரோட்டி, அடுத்த செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார்.

“தமிழ்நாட்டில் மொத்தம் 278 வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்பாட்டுல இருக்கு. வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் கீழ் மாவட்டங்கள்ல செயல்படுற விற்பனைக்குழுக்கள் ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களைக் கண்காணிக்கிற பணிகளைச் செய்யுது. வேளாண் விற்பனைக்கூடங்கள்ல விவசாயிகள் விளைபொருள்களை இருப்பு வெச்சுக்க முடியும். விவசாயிகளோட விளைபொருள்களை வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் சார்பா ஏலம் நடத்தி விற்பனை செய்தும் கொடுக்கிறாங்க. இப்படி ஏலம் நடத்துறப்போ, அதில் ஏலம் எடுக்குறதுக்காகக் கலந்துக்குற வியாபாரிகள், பங்குத்தொகை செலுத்தணும். 

மரத்தடி மாநாடு: கோடைமழை... தென்னைக்கு உரமிட வேண்டிய நேரம்!

இதுவரைக்கும், எந்தெந்த விற்பனைக்கூடத்துல ஏலத்துக்குக் கலந்துக்குறாங்களோ, அந்தந்த விற்பனைக்கூடங்கள்ல தனித்தனியா பங்குத்தொகை செலுத்த வேண்டியிருந்துச்சு. அந்த நடைமுறையை இப்போ மாத்தியிருக்காங்க. தேசிய வேளாண் சந்தை திட்டத்துல ‘ஒன்றுபட்ட ஒற்றை உரிமம்’னு அறிமுகப்படுத்தி இருக்குறாங்க. இந்த உரிமம் வாங்கின வியாபாரிகள், தமிழ்நாட்டில் இருக்குற அத்தனை விற்பனைக் கூடங்கள்லயும், பங்குத்தொகை செலுத்தாமலே ஏலத்துல கலந்துக்க முடியும். எல்லா ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள்லயும் இந்த உரிமம் வாங்க விண்ணப்பிக்கலாம். இந்த உரிமத்துக்கான கட்டணம் 600 ரூபாய். இந்த உரிமத்தை மூணு வருஷத்துக்கு ஒரு தடவை புதுப்பிக்கணுமாம்” என்றார்.

காய்கறி, தான் கொண்டு வந்திருந்த தர்பூசணிப்பழத்தை நறுக்கித் துண்டுகளாக்கி, ஆளுக்குக் கொஞ்சம் கொடுத்தார். அவற்றைச் சுவைத்துக்கொண்டே ஒரு செய்தியைச் சொன்னார், வாத்தியார்.

“இப்போ பரவலா கோடைமழை பெய்ஞ்சுட்டு இருக்குறதால, தென்னை மரங்களுக்கு உரம் வைக்கச் சொல்லி பரிந்துரை செஞ்சுருக்கு, தென்னை வளர்ச்சி வாரியம். ‘மழை பெய்றப்போ, உரம் போட்டா பாசனம் செய்ய வேண்டியதில்லை. அதனால, அதிக குரும்பைகள் உருவாகும். ஒரு மரத்துக்கு, வருஷத்துக்குக் கட்டாயம் 50 கிலோ தொழுவுரத்தோடு பரிந்துரைக்கப்படுற பேரூட்டச் சத்துக்கான உரங்களைக் கொடுக்கணும். பேரூட்டச் சத்துக்கான உரங்களைக் கொடுத்த 30 நாள்களுக்குப் பிறகு, 50 கிராம் போரக்ஸ், 500 கிராம் மக்னீசியம் சல்பேட் கொடுக்கணும்.

அழுகல் அல்லது வாடல் நோய் இருந்தால், ஒரு மரத்துக்கு 50 கிராம் டிரைகோடெர்மா விரிடி நுண்ணுயிர் உரத்தைத் தொழுஉரம் அல்லது இயற்கை இடுபொருள்களோடு கலந்து கொடுக்கணும். ரசாயன உரங்களோடு நுண்ணுயிர் உரங்களைக் கலந்தா நுண்ணுயிரிகள் இறந்துடும். ஒரு வருஷத்துக்கான உரத்தை ரெண்டாகப் பிரிச்சு ஆறு மாசத்துக்கு ஒருமுறை கொடுத்தால் நல்ல பயன் கிடைக்கும். தென்னை மரத்தின் அடிப்பகுதியில், ஒரு பக்கம் அரைவட்டப் பாத்தி எடுத்து, அதில் உரங்களைப் போட்டு மூடணும். அடுத்த முறை உரம் கொடுக்குறப்போ எதிர்பக்கத்துல அரைவட்ட பாத்தி எடுத்து உரங்களைப் போடணும்’னு தென்னை வளர்ச்சி வாரிய அதிகாரிகள் சொல்லியிருக்காங்க” என்றார், வாத்தியார். “தென்னை வளர்ச்சி வாரியத்தைப் பத்தி என்கிட்டயும் ஒரு சேதி இருக்கு” என்ற ஏரோட்டி, “உடுமலைப்பேட்டை திருமூர்த்தி நகர்ல தென்னை வளர்ச்சி வாரியத்தின் நாற்றுப்பண்ணை மற்றும் ஆராய்ச்சி நிலையம் இருக்கு. இந்த ஆராய்ச்சி நிலையத்தை 2015-ம் வருஷம் ஆரம்பிச்சாங்க. மொத்தம் 102 ஏக்கர் பரப்புல ஆராய்ச்சி நிலையம் இருக்கு. அதுல 65 ஏக்கர் பரப்புல தென்னங்கன்றுகள் நடவு செய்யப்பட்டுருக்கு. இந்த ஆராய்ச்சி நிலையத்துல ரெண்டு வருஷமா தரமான தென்னங்கன்றுகள், விதவிதமான புதிய வீரிய ஒட்டு ரகங்களை உற்பத்தி செஞ்சு விற்பனை செஞ்சுட்டுருக்காங்க. ஆனா, ஆராய்ச்சி நிலையம்னு போட்டுக்கிட்டு இதுவரை ஆராய்ச்சிக்கான எந்த வேலைகளையுமே ஆரம்பிக்கலையாம். அதேபோலத் தென்னைக்குத் தேவையான பூச்சிக்கொல்லிகள், ஒட்டுண்ணிகள் எதையும் இங்க விற்பனை செய்றதில்லையாம். இங்க நாற்று வாங்கி நடுற விவசாயிகள் இந்த ஒட்டுண்ணிகளுக்காக ஆழியார்ல இருக்குற ஆராய்ச்சி நிலையத்துக்குப் போக வேண்டியிருக்குதாம்.

‘ஆழியார் ஆராய்ச்சி நிலையத்தைப்போல இங்கேயும் ஒட்டுண்ணி அட்டைகள், டானிக்குகளை விற்பனை செய்யணும். தென்னை விவசாயிகளுக்குத் தேவையான சாகுபடி தொழில்நுட்பங்களுக்கான பயிற்சிகளோடு... வெர்ஜின் ஆயில், தேங்காய் பவுடர், நீரா, இளநீர்பானம் மாதிரியான மதிப்புக்கூட்டல் பொருள்களைத் தயாரிக்கிறதுக்கான பயிற்சிகளையும் கொடுக்கணும்’னு விவசாயிகள் கோரிக்கை வெச்சிருக்காங்க” என்றார்.

அந்த நேரத்தில் வானம் இருட்டிக்கொண்டு மழை பெய்யும் சூழல் உருவானது. “மழை வர்ற மாதிரி இருக்கு. இன்னும் நாலஞ்சு வீடுகளுக்குக் காய்கள கொடுக்கணும்” என்று சொல்லிக்கொண்டே கூடையைத் தூக்கிக் கொண்டு காய்கறி கிளம்ப, அன்றை மாநாடு முடிவடைந்தது.