மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: மாம்பழத்துக்கு வந்த மலையளவு சோதனை!

மண்புழு மன்னாரு: மாம்பழத்துக்கு வந்த மலையளவு சோதனை!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு: மாம்பழத்துக்கு வந்த மலையளவு சோதனை!

மாத்தியோசிஓவியம்: வேல்

ழை தூறிக்கிட்டு இருந்தது... சேலத்துல இருந்து, மாம்பழச் சாகுபடியில அனுபவம் வாய்ந்த குடும்பத்தைச் சேர்ந்த நண்பர் வந்தார். மாம்பழ சீசன் நேரத்துல கட்டாயம் சென்னைக்கு வருவார். ஒவ்வொரு நண்பரையும் தேடிப்போய் மாம்பழத்தைக் கொடுத்திட்டு மகிழ்ச்சியாகப் போவார். அதுவும் அவர் கொண்டு வருகிற ‘சேலம் மல்கோவா’ பழத்துக்காக ஒரு வருஷம் முழுக்க தவம் இருக்கிற ஆள்களும் உண்டு. சமீபத்துல அந்த நண்பர், மல்கோவா மாம்பழத்தோடு வந்தாரு. ஆனா, முகத்துல கவலை ரேகை தெரிஞ்சது. அதுக்கான காரணத்தை அவர்கிட்ட கேட்டுத்தான் தெரிய வேண்டியதில்லை. தினமும் செய்தித்தாளைத் திறந்தாலே, ‘சேலம்-சென்னை பசுமைவழிச் சாலைக்காக, சேலம் மாவட்டத்தில் மா மரங்கள் அழிக்கப்படும்’ங்கிற செய்தி அலற வைக்குது. இந்த நண்பரோட தோட்டமும், அந்தப் பசுமை வழிச்சாலைக்குள்ள அடிபடப் போகுது.

மண்புழு மன்னாரு: மாம்பழத்துக்கு வந்த மலையளவு சோதனை!

‘‘மாம்பழம்னு சொன்னா, சின்ன பிள்ளைங்ககூட, ‘மாம்பழமா மாம்பழம்... மல்கோவா மாம்பழம். சேலத்து மாம்பழம்’னு ராகம் போட்டுப் பாடுவாங்க. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களும் ஒரு காலத்துல சேலம் மாவட்டத்துல இணைஞ்சு இருந்துச்சு. மாம்பழச் சாகுபடி சேலம் மாவட்டத்தைக் காட்டிலும், இந்த ரெண்டு மாவட்டத்துல அதிகமா நடக்குது. இருந்தாலும், சேலம் பகுதியில விளையுற மாம்பழத்துக்குத்தான் மவுசு அதிகம். இப்போ அந்த மல்கோவா மாம்பழத்துக்குச் சோதனை வந்து நிக்குது. மல்கோவா மாம்பழம், மற்ற ரகங்களைப் போல, அதிகமா காய்க்காது. விளைச்சல் குறைவா இருக்கும். ஆனா, பழத்தோட அளவு பெரிசா இருக்கும். வீட்டுக்குள்ள மாம்பழம் இருந்தாலே, வீடு முழுக்க மணம் வீசும். நல்ல இனிப்புச் சுவையோடு இருக்கும். மற்ற ரகங்களை ஒப்பிடும்போது, தோல் கடினமா இருக்கும். அதனால, வெளியூர் அனுப்பினாலும், பழம் பாதிக்காது. இப்படி சேலம் மல்கோவா ரகத்தோட அருமை பெருமையைச் சொல்லிக்கிட்டேப் போகலாம்.

எங்க குடும்பத்துல, சுமார் மூணு தலைமுறையா மாந்தோட்டம் வெச்சிருக்கோம். ஒரு தலைமுறை 60 வருஷம்னு கணக்கு வெச்சாக்கூடா, சுமார் 150 வருஷமா எங்க தோட்டத்துல மாம்பழம் இருக்கு. எங்க தோட்டம் மட்டும் கிடையாது, ஜருகுமலை, போத்துக்குட்டை, எருமம்பாளையம், பனங்காடு, தேன்மலை, உடையபட்டி, வரகம்பாடி, வெள்ளாளகுண்டம், விலாம்பட்டி, கே.பள்ளபட்டி, குப்பனூர், ஆச்சாங்கு குட்டப்பட்டினு மாம்பழம் விளையுற பகுதியிலத்தான், பசுமைவழிச்சாலை வரப்போகுதாம். அதுக்கான வேலைகளும் ஜரூரா நடக்குது.  

மண்புழு மன்னாரு: மாம்பழத்துக்கு வந்த மலையளவு சோதனை!

மாம்பழ மாவட்டம்னு செல்லமா சொல்ற சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர், முதலமைச்சர் நாற்காலியில உட்கார்ந்திருக்கிற சமயத்துல, மா மரங்களை வெட்டி எடுக்குற வேலை நடக்குறதை நினைச்சாத்தான் வேதனையா இருக்கு. எங்க தாத்தா, அப்பா, காப்பாத்தி வெச்ச பாரம்பர்யமிக்க மாந்தோட்டம், என் கண்ணு முன்னாடியே காணாமல் போகப்போகுதேங்கிற ஆதங்கம் தூக்கத்தைக் கெடுக்குது. எங்களோட தாய் மாமரத்துல இருந்து, இப்பவே ஒட்டுக்கட்டி, வேறு பகுதியில மா நடவு செய்யுற வேலைகளையும் ஆரம்பிச்சிட்டோம். எத்தனை தடைகள் வந்தாலும், விவசாயத்தை விட்டு ஓடமாட்டோம்’’னு உறுதியா சொல்லிட்டு, அடுத்த நண்பருக்கு மாம்பழம் கொடுக்கப் புறப்பட்டுப் போனாரு.

அடுத்தப்படியாகச் சொல்லப் போறதும் மாம்பழத் தகவல்தான். ரயில்வே துறையில, ஐ.ஆர்.டி.சினு ஒரு பிரிவு இருக்கு. இன்டர்நெட்டுல முன்பதிவு செய்றதுலாம், ரயில்ல பயணம் செய்யறவங்களுக்கு உணவு விற்பனை... பல வேலைகளைப் பார்க்குது இந்தத் துறை. சமீபத்துல ரயில் பயணத்துக்கு முன்பதிவு செய்ய, இன்டர்நெட்டைத் திறந்தா, ‘உனக்கு ஆர்கானிக் அல்போன்சா மாம்பழம் வேணுமா? ஒரு டஜன்(12) ரூ.470. இதுவும்கூடச் சலுகை விலைன்னு சொல்லிச் சந்தோஷப்பட வெச்சது.

சரி, இயற்கை முறையில மாம்பழம் சாகுபடி செய்யுற விவசாயிங்களுக்கு நல்ல விலைக் கிடைக்குதான்னு... ஒரு இயற்கை மாம்பழ விவசாயிகிட்ட  விசாரிச்சேன். ‘‘இயற்கை அங்காடிக்கு மாம்பழத்தை அனுப்பினா, நல்ல விலை கொடுக்குற அங்காடியும் உண்டு. சில அங்காடிக்காரங்க  நம்மகிட்ட  கிலோ ரூ.20, 25னு, அடிமாட்டு விலைக்கு வாங்கி, பொதுமக்கள்கிட்ட ரூ.180, 200னு விற்பனை செய்யுறாங்க. முன்ன பின்ன அறிமுகம் இல்லாத இயற்கை அங்காடிக்குக் கொடுத்துட்டு, அல்லாட முடியுல.

 ‘தெரியாத தேவதைக்குத் தெரிந்த பிசாசே மேல்’னு உள்ளூர் வியாபாரிகள்கிட்ட, இயற்கையில கஷ்டப்பட்டு விளைவிச்ச மாம்பழத்தை மனம் நொந்து கொடுக்க வேண்டிதாயிருக்கு. இயற்கை விவசாயம் செய்யுற பரப்பளவை மட்டும் அதிகரிச்சா போதாது. இயற்கை விவசாய முறையில உற்பத்தி செய்யுற விளைபொருளுக்கான சந்தையை அரசு உருவாக்கணும். அரசாங்கம் உருவாக்கலைன்னா, நாலு விவசாயிகள் சேர்ந்து உருவாக்கலாம். ‘தங்கம் செய்யாததை, சங்கம் செய்யும்’னு’’ தீர்வையும் சொன்னாரு அந்த விவசாயி.