மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு: யானைகளைத் தடுக்கத் தேன்கூடு வேலி!

மரத்தடி மாநாடு: யானைகளைத் தடுக்கத் தேன்கூடு வேலி!
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு: யானைகளைத் தடுக்கத் தேன்கூடு வேலி!

ஓவியம்: வேல்

பருவமழை தொடங்கவிருப்பதால், தென்னை மரங்கள் மற்றும் மாமரங்களைச் சுற்றி வரப்பெடுக்கும் பணி நடந்து கொண்டிருந்தது, ‘ஏரோட்டி’ ஏகாம்பரத்தின் தோட்டத்தில். ஏரோட்டியுடனேயே செய்தித்தாள் சகிதமாகக் காலையிலேயே ஆஜராகிவிட்டார், ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. 

மரத்தடி மாநாடு: யானைகளைத் தடுக்கத் தேன்கூடு வேலி!

வெயில் சற்று ஏறியதும் தேநீர் குடிப்பதற்காக ஒதுங்கினர், பணியாளர்கள். அந்த நேரத்தில் ‘காய்கறி’ கண்ணம்மா வந்து சேர மரத்தடி மாநாடு கூடியது. வழக்கம்போல ஒரு செய்தியைச் சொல்லி மாநாட்டைத் துவக்கி வைத்தார், வாத்தியார். 

“உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டுல பிளாஸ்டிக் பொருள் பயன்பாட்டுக்கும், உற்பத்திக்கும், தடை விதிச்சு சட்டசபையில் அறிக்கை வெளியிட்டுருக்கார், முதலமைச்சர் பழனிசாமி. இந்தத் தடை 2019-ம் வருஷம் ஜனவரி 1-ம் தேதியன்னிக்கு முழு அளவில் அமலுக்கு வருமாம்.

பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் தேநீர் கப், பாட்டில்கள், கைப்பைகள்னு எதையும் இனிமே தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ, இருப்பு வைக்கவோ, பயன்படுத்தவோ கூடாது. அதே நேரத்துல, பால், தயிர், எண்ணெய், மருந்துப் பொருள்களுக்கு பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தலாம்னு முதலமைச்சர் சொல்லிருக்கார்” என்றார்.  “பரவாயில்லையே நல்ல விஷயமா இருக்கே. ஆனா, இதை அதிகாரிகள் நியாயமா செயல்பாட்டுக்குக் கொண்டு வரணும். லஞ்சம் வாங்கிட்டுக் கண்டுக்காம இருந்துடக்கூடாது” என்று சொன்ன காய்கறி, கூடையிலிருந்து ஆளுக்கு இரண்டு பலாச்சுளைகளை எடுத்துக் கொடுத்தார். அதைச் சாப்பிட்டுக்கொண்டே ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார், ஏரோட்டி.

“மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்குற கோயம்புத்தூர், பொள்ளாச்சி பகுதிகள்ல காடுகள் அதிகம் இருக்கு. இந்தக் காடுகள்ல இருந்து யானை, சிறுத்தைனு காட்டு விலங்குகள் உணவு, தண்ணீர் தேவைக்காக ஊருக்குள்ள வருது. இதனால, இந்தப்பகுதிகள்ல மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் அடிக்கடி மோதல் வரும். நிறைய மக்களும், விலங்குகளும் பலியாகியிருக்காங்க. குறிப்பா யானைகளுக்கும் மனிதர்களுக்கும்தான் அடிக்கடி மோதல் வரும். அகழி வெட்டுறது, சூரிய மின்வேலி அமைப்பதுனு பல முயற்சிகளை எடுத்தும் இதுவரை காட்டு யானைகள் வர்றதைத் தடுக்க முடியலை. இப்போ கென்யா, தான்சானியா, உகாண்டா நாடுகள்ல கடைப்பிடிக்கிற ஒரு வழிமுறையை இந்தப்பகுதியிலயும் செயல்படுத்த போறாங்களாம். கென்யா நாட்டுல நடந்த ஆராய்ச்சியில, தேன் கூடுகள் இருக்குற மரங்களுக்குப் பக்கத்துல யானைகள் போறதில்லைனு கண்டுபிடிச்சிருக்காங்க.  

மரத்தடி மாநாடு: யானைகளைத் தடுக்கத் தேன்கூடு வேலி!

அதுக்கப்புறம் யானைகள் கிராமங்களுக்குள்ள வர்ற வழியில தேன்கூடுகளைக் கொண்ட வேலிகளை அமைச்சுப் பார்த்துருக்காங்க. அதுல நல்ல பலன் கிடைச்சுருக்கு. அதுக்கப்புறம்தான் தான்சானியா, உகாண்டானு மத்த நாடுகள்லயும் யானைகளைத் தடுக்க, இந்தத் தேன்கூடு வேலி முறையைப் பயன்படுத்த ஆரம்பிச்சிருக்காங்க. இந்தியாவுல, கேரளா, கர்நாடகா மாநிலங்கள்லயும் இந்த முறையைக் கடைப்பிடிக்கிறாங்களாம்.

தமிழ்நாட்டுல போலுவாம்பட்டி வனச்சரகத்துல யானைகள் நடமாட்டம் அதிகம் இருக்குற ஏழு இடங்கள்ல சோதனை அடிப்படையில தேன்கூடு பெட்டிகளை வெச்சுப் பார்த்துருக்காங்க. அதுல நல்ல பலன் கிடைச்சுருக்கு. அதனால, இப்போ யானைகள் நடமாட்டம் அதிகமிருக்குற பகுதிகள்ல, தமிழக வனத்துறை சார்பா தேன்கூடு வேலிகளை அமைச்சு யானைகளை விரட்ட முடிவெடுத்துருக்காங்க. அதுக்காகக் கோயம்புத்தூர் மாவட்ட வனத்துறைக்கு  1 கோடியே 28 லட்சம் ரூபாய் ஒதுக்கி இருக்காங்களாம்” என்றார். அந்த நேரத்தில் சடசடவென மழை பெய்ய ஆரம்பிக்க, அத்துடன் முடிவுக்கு வந்தது, அன்றைய மாநாடு.

வாத்தியார் சொன்ன கொசுறு: 

தென்மேற்குப் பருவமழைக்காலம்... கவனம்!


“கோயம்புத்தூர்ல இருக்குற தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இயங்குகிற காலநிலை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் பன்னீர்செல்வம், தென்மேற்குப் பருவ மழைக்காலத்துல விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் பத்திச் சொல்லிருக்கார். “மழைக் காலத்துல பயிர்களுக்கு வேர் அழுகல் நோய் தாக்க வாய்ப்பிருக்கு. அதனால, வயல்கள்ல தண்ணீர் தேங்காதபடி வடிகால் வசதியை அமைக்கணும்.

குறிப்பாக, கரும்பு, மக்காச்சோளம், நிலக்கடலை, மஞ்சள் மாதிரியான பயிர்கள் நடவு செஞ்சுருக்குற வயல்கள்ல, வடிகால் வசதி அமைக்க வேண்டியது அவசியம். நிலத்துல விழுற மழைநீர் முழுவதையும் பண்ணைக்குட்டைகளில் சேகரிக்க ஏற்பாடு செய்யணும். இதனால, மண் அரிப்பு தடுக்கப்பட்டு, வளமான மேல் மண் பாதுகாப்பா இருக்கும். மரப்பயிர்களைச் சுற்றி வரப்புகளைப் பலப்படுத்தியும் மழை நீரைச் சேமிக்கலாம். மழைக்காலங்களில், பூச்சித்தாக்குதல் அதிகரிக்குங்கிறதால விளக்குப்பொறிகளை அமைக்கணும். அதிகமா காத்து வீசுற பகுதிகள்ல கரும்பு, வாழை மரங்களுக்கு முட்டுக்கொடுக்கணும்.”