மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: லாபகரமான பால் பண்ணைக்கு வழிகாட்டும் தெலங்கானா!

மண்புழு மன்னாரு: லாபகரமான பால் பண்ணைக்கு வழிகாட்டும் தெலங்கானா!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு: லாபகரமான பால் பண்ணைக்கு வழிகாட்டும் தெலங்கானா!

மாத்தியோசிஓவியம்: வேல்

சில வருஷங்களுக்கு முன்ன, ஆந்திர மாநிலம் ஓங்கோல் நகருக்குப் போயிருந்தேன். அங்கவுள்ள தெலுங்கு நண்பரோட பேசிட்டிருக்கும்போது, பால் பண்ணை சம்பந்தமா பேச்சுத் திரும்புச்சு. ‘‘நீங்கள் கட்டாயம் தெலங்கானாவுல இருக்கிற முல்கனூர் போகணும்’’னு அக்கறையாகச் சொன்னாரு.

மண்புழு மன்னாரு: லாபகரமான பால் பண்ணைக்கு வழிகாட்டும் தெலங்கானா!

அடுத்து, ஆந்திராவுல கொஞ்சம் விவரம் தெரிஞ்ச விவசாயிகள்கிட்ட, பால்பண்ணைப் பத்திப் பேச்சை எடுத்தால் போதும், ‘‘நீங்கள் முல்கனூர் போய்ப் பாருங்கள்” என்று ஆலோசனை சொன்னார்கள்.

ஆந்திரா, தெலங்கானா மாநிலத்தில, இந்தப் பண்ணையைப் பத்திப் பேசாத ஆட்களும் இல்லை; எழுதாத பத்திரிகைகளும் இல்லை; படம் புடிக்காத டி.வியும்கூட இல்லைனு சொல்லலாம்.

‘இந்தியாவிலேயே முழுக்க முழுக்கப் பெண்களால் நடத்தப்படும் ஒரே பால் பண்ணை’ இது. இதன் அசுர வளர்ச்சியையும் அசத்தல் சாதனைகளையும் பற்றி முன்னாள் ஆந்திர மாநில முதல்வர் மறைந்த ராஜசேகர ரெட்டி தொடங்கி, இப்போதைய தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் வரையிலும் முல்கனூரைத்தான் முன்னுதாரணமாச் சொல்றாங்க. போன வருஷம் சந்திரசேகர்ராவ், முல்கனூர்ல நடந்த விழாவுல, பாதி விலைக்கு எருமை மாடுகளை வழங்கும் திட்டத்தை அறிவிச்சு அசத்தினாரு.

இவ்வளவு சிறப்புமிக்க ஊரைத் தேடி, ஒரு சுபயோக சுபதினத்துல போனேன். தெலங்கானா மாநிலம், வாரங்கல் நகரிலிருந்து முப்பதாவது கிலோமீட்டரில், இருக்கிற ஒரு பெரிய கிராமம் முல்கனூர். விவசாயப் பணிகள் பெரிய அளவில் இல்லாவிட்டாலும், ஊர் வளமையா இருந்திச்சு. இந்த வளமைக்கும், பெருமைக்கும் காரணம் ‘முல்கனூர் பெண்கள் கூட்டுறவுப் பால் பண்ணை’ (Mulukanoor Womens Co-operative Dairy)ங்கிறதை முழுமையா உணர முடிஞ்சது.

நம்ம சேலம், நாமக்கல் மாவட்டங்கள் மாதிரி, ஊரைச் சுத்திலும், சின்னதும் பெரிதுமா மலைக்குன்று இருந்திச்சு. வீட்டுக்கு வீடு எருமை மாடுகளும் இருந்துச்சு. ஏன் எருமை மாடுனு கேள்வி எழுந்துச்சு. அதுக்கான பதில், அந்த மக்களோடு பேசும்போது கிடைச்சது. ‘‘இது வறட்சியான பகுதி. பசு மாடுங்க அதிக வெப்பத்தைத் தாங்காது. அதை வளர்ப்பதற்குக் கூடுதல் அக்கறை காட்டணும். ஆனால், எருமை மாடு வளர்ப்பு எளிதாக உள்ளது. மாட்டுக்குத் தனியாகக் கொட்டகைகூடக் கிடையாது. மரத்தடியில் கட்டிப்போட்டால் போதும். வளர்ப்பது எளிது. இங்கு எருமைத் தயிர் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகம். அதனால், எருமைப் பாலுக்குக் கூடுதல் விலையும் கிடைக்குது”னு எருமை புராணத்தை, முல்கனூர் பெண் சுந்தரத் தெலுங்கில் சொன்னாங்க.

மண்புழு மன்னாரு: லாபகரமான பால் பண்ணைக்கு வழிகாட்டும் தெலங்கானா!

சரி, வந்த வேலைப் பார்க்கலாம்னு, பெண்களால் நடத்தப்படற அந்தப் பால்பண்ணையை நோக்கி நடந்தேன். பக்கத்தில் போகப்போக, எல்லாத் திசையிலும் பால் வாசம். ஒரு பக்கம், பெரிய கேனில் பால் வந்து இறங்கிக்கொண்டே இருந்தது. மறுபக்கம், பாக்கெட் பால், பக்கத்துல இருக்கிற நகரத்துக்கு வண்டியில புறப்பட்டுப் போறதுன்னு கண்கொள்ளாக் காட்சியா இருந்துச்சு.

‘‘எங்கள் ஊரில் விவசாயத்தில் அவ்வளவாக வருமானம் இல்லை. அதனால், எங்கள் கிராமங்களில் உள்ள பெண்களுக்கெல்லாம் பால்மாடுதான் வருமானத்துக்கு ஒரே வெளிச்சமாக இருக்கிறது. நாங்களும் அதுபோல மாடு வளர்க்கலாம் என்றாலும், பாலை வாங்கி விற்பவர்கள்தான் லாபம் பார்த்தார்கள். எங்களுக்கு வறுமைதான் மிஞ்சியது. அந்தச் சமயத்தில், ‘நாம் உற்பத்தி செய்யும் பாலை நாமே விற்றால் என்ன?’ என்று ஊரில் உள்ள பெண்களெல்லாம் ஒரு குழுவாகச் சேர்ந்து பேசி முடிவு செய்து, சுற்றியுள்ள 62 கிராமங்களில் உள்ள பெண்களிடமும் சென்று விஷயத்தைச் சொன்னபோது, அவர்களும் உடனடியாக எங்களின் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்கள். ஊருக்குப் பத்துப் பெண்கள் என 620 பேர் சேர்ந்து, 1997-ம் வருடம் கூட்டுறவுச் சங்கப் பணிகளைத் துவங்கினோம். கொஞ்சம் கொஞ்சமாகப் பணிகளை முடித்து, 2002-ம் ஆண்டுப் பால் விற்பனையைத் தொடங்கினோம்.

பண்ணைத் தொடங்கிய முதல் நாள் கொள்முதல் செய்த பாலை, நாங்கள் அனைவரும் வாரங்கல் நகரில் வீடு வீடாகச் சென்று கொடுத்து, ‘பெண்களாகச் சேர்ந்து பால் பண்ணை தொடங்கியுள்ளோம். தண்ணீர் கலக்காத சுத்தமான பாக்கெட் பால்’ என்று விளம்பரப் படுத்தினோம். அடுத்த மூன்று நாள்களுக்கு 100 மில்லி பாலை ஒவ்வொரு வீட்டுக்கும் இலவசமாகக் கொடுத்தோம். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக வாரங்கல் நகரில் எங்களுடைய விற்பனையை அதிகப்படுத்தினோம். வாரங்கல் மட்டுமின்றிச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் விநியோகம் செய்கிறோம். ஆனாலும், மார்க்கெட் தேவைக்கு ஏற்ப எங்களால் சப்ளை செய்யமுடியவில்லை... பற்றாக்குறையாகத்தான் உள்ளது’’னு அந்தக் கூட்டுறவுச் சங்கத் தலைவி, சந்தோஷத்தோட அலுத்துக்கிட்டாங்க. (இந்தப் பகுதியில அஞ்சு நாள்கள் தங்கியிருந்து, பால்மாடு வளர்க்கும் பெண்களைச் சந்திச்சுப் பேசி, முல்கனூர் சுத்துவட்டாரத்தைச் சுத்திச் சுத்தி வந்ததெல்லாம், தனிக்கதை.)

‘‘அய்யா, நீங்கள் தமிழ்நாடா?’’னு குரல் கேட்ட பக்கம் திரும்பிப்பார்த்தேன். கூட்டுறவுச் சங்கத்தோட நிர்வாக அலுவலர்னு அறிமுகப்படுத்திக்கிட்டு, கூடுதல் தகவலைச் சொல்ல ஆரம்பிச்சாரு.

‘‘ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள கூட்டுறவுச் சங்கத்தில், பெண் உறுப்பினர்கள், தலைவர் உள்படப் பத்து பேரைத் தங்களுக்குள் தேர்ந்தெடுக்கிறார்கள். இந்தப் பத்து பேர் கொண்ட குழுதான் கிராமத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கத்தை நிர்வகிக்கிறது. கிராம கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர்கள் சேர்ந்து கூட்டுறவுப் பால்பண்ணைக்கு 12 பேர் கொண்ட குழுவைத் தேர்வு செய்கிறார்கள். இந்த 12 பேரும் தங்களுக்குள் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இப்படி ஆண்டுதோறும் தேர்தல் முறை மூலம் நிர்வாகக் குழுவைத் தேர்வு செய்கிறார்கள்.

ஆண்டு அறிக்கையில் ஒரு பைசா செலவு செய்த கணக்கு முதல் கோடி ரூபாய் லாபம் கிடைத்த விவரம் வரை அச்சடித்துப் புத்தகமாக அனைத்து உறுப்பினர்களுக்கும் கொடுத்துவிடுவோம். பால் மாடு வளர்ப்பு சம்பந்தமா, மாதந்தோறும் கூட்டம், கலந்தாய்வு, பயிற்சிப் பட்டறை என்று நடக்கின்றன. அப்புறம் சொல்ல மறந்துட்டோம். இந்தக் கூட்டுறவுப் பண்ணை தொடங்கிய சமயத்தில் வெற்றிகரமாகப் பால் மாடு வளர்ப்பது, லாபகரமாகப் பண்ணையை நடத்துவது... என்பது பற்றியெல்லாம், நாங்கள் கற்றுக்கொண்டது, சேலம், ஈரோடு பகுதி விவசாயிகள்கிட்டத்தான்’’ங்கிற தகவலைச் சொல்லி, என்னைத் திக்குமுக்காட வெச்சாரு, அந்தத் தெலங்கானா நண்பர்.