
ஓவியம்: வேல்
உழவு ஓட்டிவிட்டு வந்த மாட்டை வாய்க்காலில் ஓடும் தண்ணீரில் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார், ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். இதமாகக் காற்று வீசிக்கொண்டிருக்க, வரப்பில் கண்களை மூடி அமர்ந்திருந்தார், ‘காய்கறி’ கண்ணம்மா. சிறிது நேரத்திலேயே வந்து சேர்ந்தார், ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. அவரது வருகையைப் பார்த்த ஏரோட்டி, மாட்டைக் கட்டிவிட்டு வரப்பு மீது ஏறிவர, அங்கேயே அன்றைய மாநாடு கூடியது.

ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டைத் துவக்கி வைத்தார், வாத்தியார்.
“ஜூன் 12-ம் தேதி, குறுவைச் சாகுபடிக்காக மேட்டூர் அணையில தண்ணியைத் திறந்து விட்டுருக்கணும். ஆனா, தண்ணீர்ப் பற்றாக்குறையால இன்னமும் திறக்கலை. அதனால, இந்த வருஷமும் குறுவைச் சாகுபடி செய்ய முடியாம கஷ்டத்துல இருக்குறாங்க, டெல்டா பகுதி விவசாயிகள். இதையெல்லாம் கண்டுக்காம ஊர் ஊரா ‘காவிரி நதிநீர் மீட்புப் போராட்ட வெற்றி விழா’னு நடத்தி, விவசாயிகளோட வயித்தெரிச்சலைக் கொட்டிக் கிட்டுருக்குறாங்க, அ.தி.மு.க அமைச்சர்கள்” என்றார், வாத்தியார். அதைத் தலையாட்டி ஆமோதித்த ஏரோட்டி, “விழா நடத்தினதுகூட ஒருபக்கம் இருக்கட்டும்யா. என்ன பேசுறோம்னே தெரியாமப் பேசி, வெந்த புண்ல வேல் பாய்ச்சுறதைத்தான் விவசாயிகளால தாங்கிக்க முடியலை. கும்பகோணத்துல நடந்த ‘காவிரி நதிநீர் மீட்புப் போராட்ட வெற்றி விழா’ பொதுக்கூட்டத்துல பேசின வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு, ‘மேட்டூர் அணையில தண்ணி குறைவா இருக்குற நிலைமையில தண்ணீரைத் திறங்கனு எதிர்கட்சிக்காரங்க சொல்றது வேடிக்கையா இருக்குது.
இவங்க கேக்குறப்பெல்லாம் திறக்குறதுக்கு மேட்டூர் அணையை நான் பாக்கெட்லயா வெச்சுருக்கேன். இல்லை என்னோட வீட்டு தண்ணிக்குழாயா மேட்டூர் அணை’னு நக்கலாகப் பேசியிருக்கார். எதிர்கட்சிக்காரங்க மட்டுமா தண்ணி திறக்கச்சொல்லிக் கேக்குறாங்க. டெல்டா மாவட்டங்கள்ல இருக்குற ஒட்டுமொத்த விவசாயிங்களும்தான் கேக்குறாங்க. அத்தனை பேரோட கோரிக்கைகளையும் கொச்சைப்படுத்துற மாதிரி அமைச்சர் பேசியிருக்கார். இந்தப்பேச்சைக் கேட்ட டெல்டா பகுதி விவசாயிகள்லாம் கொந்தளிச்சுப் போய்க் கிடக்குறாங்க” என்றார்.
“அமைச்சர்களுக்கெல்லாம் நேரம் சரியில்லை போலிருக்குய்யா... சமீபத்துலதான் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ‘ஜெயலலிதா கொள்ளையடிச்ச பணத்தைத் திருடிதான் பதினெட்டு எம்.எல்.ஏக்களுக்குத் தினகரன் கொடுத்தார்’னு சொல்லிச் சர்ச்சையைக் கிளப்பினார். இத டி.வி நியூஸ்ல சொன்னாங்க” என்ற காய்கறி, கூடையிலிருந்து ஆளுக்குக் கொஞ்சம் நாவல் பழங்களை எடுத்துக்கொடுத்தார்.
அதைச் சாப்பிட்டுக்கொண்டே ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார், வாத்தியார். “ஒவ்வொரு மாவட்டத்துலயும் வேளாண்மைத்துறை மூலமா அமைச்சிருக்குற டெப்போ மூலமா மானிய விலையில விதை விற்பனை செய்வாங்க. இந்த வருஷம் நெல், நிலக்கடலை பயிர்கள்ல விவசாயிகள் விரும்பிக் கேட்குற விதைகள், டெப்போல இல்லையாம். நிறைய டெப்போக்கள்ல நீண்ட நாள் வயசுடைய நெல் ரகங்கள்தான் இருக்குதாம். தண்ணீர்ப் பற்றாக்குறையால குறுகிய காலத்துல விளையுற நெல் ரகங்களை விளைவிக்கலாம்னு நினைக்கிற விவசாயிகளுக்கு விதை கிடைக்கிற தில்லையாம்.
டெப்போல இருக்குற விதைகளை மட்டும் விதைங்கனு வற்புறுத்துறாங்களாம். விவசாயிகள் அதிகமா விரும்பிக் கேக்குற ரகங்களைத் தனியார் விதை விற்பனையாளர்களுக்கு மொத்தமா வித்துக் கமிஷன் பார்க்குற வேலையும் நிறைய இடங்கள்ல நடக்குதாம்” என்றார்.
அடுத்த செய்திக்குத் தாவிய ஏரோட்டி, “தமிழ்நாட்டுல ரெண்டு பொதுத்துறை ஆலைகள், பதினாறு கூட்டுறவு ஆலைகள், இருபத்தஞ்சு தனியார் ஆலைகள்னு மொத்தம் நாப்பத்து மூணு சர்க்கரை ஆலைகள் இருக்கு. தமிழ்நாட்டுல இருக்குற கரும்பு விவசாயிகள் இந்த நாப்பத்து மூணு ஆலைகளுக்குத்தான் கரும்பை வெட்டி அனுப்புறாங்க. ஆனா, இந்த ஆலைகள், மத்திய-மாநில அரசுகள் கரும்புக்கு நிர்ணயிக்கிற விலையை விவசாயிகளுக்குக் கொடுக்குறதில்லை. ஒவ்வொரு வருஷமும் பாக்கி வெச்சுட்டே வந்ததுல... எல்லா ஆலைகளும் சேர்ந்து கிட்டத்தட்ட ரெண்டாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு விவசாயிகளுக்குப் பாக்கிப் பணம் தர வேண்டியிருக்குதாம்.
இப்படி நிலுவையில இருக்குற பணத்தைக் கேட்டு விவசாயிகள் ரொம்ப வருஷமா போராட்டங்கள் நடத்திட்டுருக்காங்க. இதுக்காக ஆலை நிர்வாகிகளை அழைச்சு ஏகப்பட்ட பேச்சுவார்த்தைகளும் நடத்திருக்காங்க. ஆனாலும் ஆலை முதலாளிகள் கண்டுக்கவேயில்லை.
வருஷக்கணக்குல பணம் நிலுவையில இருக்குறதால நிறைய விவசாயிகள் கொஞ்சம் கொஞ்சமா கரும்பு விவசாயத்தை விட்டு வெளியேறி வேற பயிர்களுக்கு மாற ஆரம்பிச்சுட்டாங்க. அதனால, கரும்பு உற்பத்தி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பிச்சுடுச்சு. முன்பெல்லாம் வருஷத்துக்குச் சராசரியா ரெண்டரைக் கோடி டன் அளவுக்குக் கரும்பு உற்பத்தியாச்சாம். இப்போ எழுபது லட்சம் டன் அளவுக்குக்கூட உற்பத்தியில்லையாம். அடுத்தடுத்த வருஷங்கள்ல இன்னும் குறையும்னு சொல்றாங்க. இப்படி அடிமடியில கைவைக்கவும் ஆலை முதலாளிகள் எல்லாம் ஆட்டம் காண ஆரம்பிச்சுட்டாங்க. கரும்பு வரத்து இல்லைன்னா, ஆலையை மூட வேண்டிய நிலை உருவாகிடும். கரும்பு இல்லைன்னா கூட்டுறவு ஆலைகளையும் மூட வேண்டிய சூழ்நிலை வந்துடும்ங்கிறதால, எப்படியாவது கரும்புச் சாகுபடியை அதிகரிக்கணும்னு முடிவெடுத்துருக்கு, தமிழக அரசு.
வேளாண்மைத் துறை அலுவலர்கள், கரும்பு விவசாயிகளைச் சந்திச்சுக் கரும்புச் சாகுபடி செய்ங்கனு சொல்லிட்டுட்டு ருக்காங்களாம். இதுக்காக வேளாண்மைத் துறை அலுவலர்களுக்கு இலக்கு நிர்ணயிச்சுருக்காங்களாம். ‘இதுவரைக்கும் சர்க்கரை ஆலைகள் மூலமாத்தான் ஊக்கத்தொகை கொடுத்துட்டுருந்தாங்க. இனிமே நேரடியா விவசாயிகளோட கணக்குலேயே வரவு வைக்கிறோம். இது மாதிரி இன்னும் பல நிறைய திட்டங்கள் இருக்கு. அதனால, கரும்புச் சாகுபடி செய்ங்க’னு அலுவலர்கள் விவசாயிகள்கிட்ட சொல்லிட்டுருக்காங்களாம். ஆனா, ‘விவசாயிகள் ஆளைவிட்டாப் போதும் சாமி’னு ஓடுறாங்களாம். என்ன செய்றதுனு தெரியாம வேளாண்மைத்துறை அலுவலர்கள் முழிச்சுட்டு இருக்குறாங்க” என்றார்.
அந்த நேரத்தில் மாடு கத்த ஆரம்பிக்க எழுந்து சென்றார், ஏரோட்டி. அத்துடன் அன்றைய மாநாடு முடிவுக்கு வந்தது.