மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை

புறா பாண்டி படம்: எஸ். தேவராஜ்

##~##

''தவசி முருங்கைச் செடியை வளர்த்து வருகிறோம். 'இது ஒரு மூலிகை’ என்று அறிந்துள்ளோம். ஆனால், அதன் பயன்பாடுகள் பற்றி அதிகமாகத் தெரியவில்லை. விளக்க முடியுமா?''

சி. கோபி, நாமக்கல்.

விழுப்புரம் மாவட்டம், பிச்சாண்டிக்குளம், மூலிகைப் பண்ணையைச் சேர்ந்த தி. ஞானசௌந்தர்யா பதில் சொல்கிறார்.

''தவசி முருங்கையை, ஆங்கிலத்தில் 'ஆல் விட்டமின் லீஃப்’ என்று சொல்வார்கள். இரும்புச் சத்துக்கு முருங்கை, மூட்டு வலிக்கு முடக்கற்றான்... என்று ஒவ்வொரு சத்துக் குறைப்பாட்டுக்கும் ஒவ்வொரு கீரையைச் சாப்பிடச் சொல்வோம். ஆனால், இந்த தவசி முருங்கைக் கீரையில் அனைத்து விதமானச் சத்துக்களும் உள்ளன. இதைச் சாப்பிட்டால், பத்து வகையான கீரைகளை ஒரே நேரத்தில் சாப்பிட்ட பலன் கிடைக்கும்.

சில பகுதிகளில் இந்தச் செடியை 'சன்னியாசி முருங்கை’ என்றும் அழைக்கிறார்கள். மருதாணி போன்று சிறு குத்துச்செடியாக வளரும். இது சாதாரணமாக அனைத்து மண்ணிலும் வளரும். குழந்தைகளுக்கு வரும் மாந்தம், தோஷம், வயிற்று உப்புசம், பொருமல், செரிமானக் கோளாறு, வயிற்றில் ஏற்படும் ஒருவகை வலி ஆகியவற்றைப் போக்கும் குணமுடையது. இதன் இலைச்சாற்றை உட்கொண்டால் மூக்கில் நீர்வழிதல், உள் நாக்கு இருமல், இளைப்பு... போன்றவை குணமாகும். ஆண்மை விருத்திக்கு அருமருந்தாக இந்தக் கீரை பயன்பட்டு வருகிறது.

நீங்கள் கேட்டவை

மணத்தத்தக்காளி, அரைக்கீரை, சிறுகீரை... போன்ற கீரைகளின் மகத்துவம் மக்களுக்கு ஓரளவு தெரியும். ஆகையால், அவற்றை வாங்கிப் பயன்படுத்தி வருகிறார்கள். இந்தத் தவசி முருங்கையின் மருத்துவக் குணம் மக்களுக்குத் தெரிவதில்லை.

சித்த, ஆயுர்வேத மருத்துவம் அறிந்தவர்கள் மட்டுமே இதைப் பயன்படுத்தி வருகிறார்கள். வீட்டுத் தோட்டத்தில் ஒரு முறை நடவு செய்து விட்டால், பத்து நாட்களுக்கு ஒரு முறை சுவையான கீரை கிடைக்கும். இந்தச் செடியை யாரும் தனிப்பயிராக சாகுபடி செய்வதில்லை. தவசி முருங்கையின் பலன் பற்றி விழிப்பு உணர்வு ஏற்படுத்தினால், இதை அதிகளவில் மக்கள் பயன்படுத்தத் தொடங்குவார்கள். தவசி முருங்கை மரம் எங்கள் மூலிகைப் பண்ணையில் உள்ளது. மேலும் மூலிகைகளைப் பற்றிய விவரம் தேவைப்பட்டால் எங்கள் பண்ணைக்கு வரலாம்.''

நீங்கள் கேட்டவை

தொடர்புக்கு: பிச்சாண்டிக்குளம் மூலிகைப் பண்ணை, நடுக்குப்பம், திண்டிவனம் தாலூகா, விழுப்புரம் மாவட்டம்.

''நாட்டுக்கோழிக்கு வரும் வெள்ளைக்கழிச்சல் நோயை இயற்கை முறையில் கட்டுப்படுத்த வழி இருக்கிறதா?''

கூ. மாண்ட்ரேக் பாலண்டர், புதுக்கோட்டை.

மதுரையைச் சேர்ந்த பாரம்பரிய கால்நடை மருத்துவர் ராஜமாணிக்கம் பதில் சொல்கிறார்.

''வெள்ளைக்கழிச்சல் நோய், ஆரோக்கியமான, நோய் எதிர்ப்புச்சக்தியுடன் வளர்க்கப்படும் கோழிகளைத் தாக்குவதில்லை. இந்த நோய் வந்த பிறகு வைத்தியம் பார்ப்பதைவிட, வரும் முன்பே தடுப்பதுதான் நல்லது. பாரம்பரிய மருத்துவத்தில் இந்த நோயைக் கட்டுப்படுத்த, பலவிதமான மருத்துவ முறைகள் சொல்லப்பட்டுள்ளன. எது உங்களுக்கு வசதியாக உள்ளதோ... அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ஆடாதொடா இலையை அரைத்து நெல்லிக்காய் அளவுக்கு எடுத்து ஒரு லிட்டர் நீரில் கரைத்து கோழிகளுக்குக் குடிக்கக் கொடுக்க வேண்டும். இதேபோல, சுழற்சி முறையில் துளசி, கீழாநெல்லி, முருங்கை... போன்ற மூலிகைகளை அரைத்து  மாதம் ஒரு முறை மாற்றி மாற்றிக் கொடுத்து வந்தால்... நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரித்து, பல நோய்கள் தடுக்கப்படும். ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 50 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து,  குடிதண்ணீருடன் கொடுத்தாலும் கோழிகளுக்கு நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரிக்கும்.

நீங்கள் கேட்டவை

நோய் கண்டபிறகு வைத்தியம் செய்யும் முறைகளைப் பற்றிப் பார்ப்போம்.  

1. கேழ்வரகு மாவை சிறு, சிறு உருண்டையாகச் செய்து, தின்னக் கொடுக்கலாம். இரண்டு நாட்களுக்கு காலை, மாலை என இரண்டு வேளைக்குக் கொடுத்து வந்தால் போதும்.  

2. வெல்வேல் மரத்தின் காய்களைப் பறித்து, அரைத்து உருண்டை செய்து தரலாம். இரண்டு நாட்களுக்கு காலை, மாலை என இரண்டு வேளைக்கு கொடுத்து வந்தால் போதும்.

3. ஏரி, குளத்து மீன்களை  பொடியாக நறுக்கிப் போடலாம். எந்த ரகமாக இருந்தாலும் பரவாயில்லை. இரண்டு நாளைக்கு இந்த முறையைப் பின்பற்றி வந்தால், வெள்ளைக் கழிச்சலைக் கட்டுப்படுத்தலாம்.''

நீங்கள் கேட்டவை

''7 ஏக்கர் நிலத்தில் கொய்யா சாகுபடி செய்துள்ளேன். அதிக மகசூல் எடுக்க, வழிகாட்டுதல் கிடைக்குமா?'

எம். ஜான், திண்டுக்கல்.

காட்டுப்பாக்கம், வேளாண் அறிவியல் மையத்தின் உதவிப் பேராசிரியர் வேல்முருகன் பதில் சொல்கிறார்.

''கொய்யாவில்... வைகாசி மாதம் முதல் ஆவணி மாதம் வரை ஒரு அறுவடை; ஐப்பசி மாதம் முதல் தை மாதம் வரை ஒரு அறுவடை என ஆண்டுக்கு இரண்டு முறை மகசூல் எடுக்கலாம். அதன்படி ஒரு மரத்திலிருந்து சராசரியாக ஆண்டுக்கு 120 கிலோ பழங்கள்  கிடைக்கும். இந்த அளவு மகசூல் கிடைத்தால்தான் பயிர், 'நல்ல முறையில் இருக்கிறது’ என்று அர்த்தம்.

கொய்யாவுக்கு அறுவடை முடிந்தவுடன் உரமிட வேண்டும். இப்படி செய்வதால், புதிய துளிர்கள், உருவாகி, அடுத்தப் பருவத்தில் நல்ல மகசூல் கிடைக்கும். இயற்கை உரங்களை இடும்போது மகசூல் கூடுவதோடு, பழங்களின் சுவையும் அதிகரிக்கும். ஒவ்வொரு முறை உரமிடும் போதும், ஒரு மரத்துக்கு மூன்று கிலோ தொழுவுரம், ஒரு கிலோ வேப்பம் பிண்ணாக்கு என்ற கணக்கில் இட வேண்டும். பிண்ணாக்கு இடுவதால், மரத்தை நோய்கள் தாக்காது. மரத்தின் தூரில் இருந்து ஒரு மீட்டர் தள்ளி மரத்தைச் சுற்றி மண்வெட்டி மூலம் சிறு பள்ளம் பறித்து அதனுள் உரத்தைப் பரவலாக இட்டு மூடி விட வேண்டும்.

நீங்கள் கேட்டவை

வாரம் ஒரு முறை பாசனம் செய்வது நல்லது. நல்ல முறையில் செழிம்பாக பாசனம் செய்ய முடியாதென்றால், கொய்யா சாகுபடியில் ஈடுபடக்கூடாது. ஒவ்வொரு முறையும் அறுவடை முடிந்த பிறகு,

20 நாட்கள் பாசனத்தை நிறுத்த வேண்டும். அந்த சமயத்தில் இலைகள் கொட்டுவதால், செடி ஓய்வு எடுத்துக் கொண்டு, தனது சக்தியை அதிகரித்துக் கொள்ளும்.  

மரம், அதிகமாகப் படராமல், குடை போன்ற வடிவத்தில் இருப்பது போல, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கவாத்து செய்ய வேண்டும். கிளைகளில் கற்களைக் கட்டித் தொங்கவிட்டு வளைத்தும் விடலாம். அப்போதுதான் சூரிய ஒளி நன்கு கிடைக்கும்.

நீங்கள் கேட்டவை

அதேபோல, அறுவடையின்போது, காய்ந்தக் குச்சிகள் மற்றும் மலட்டுக் கிளைகளையும் அகற்றி விட வேண்டும். ஒல்லியாகவும், நீளமாகவும் வளர்ந்தக் கிளைகளின் நுனிகளைக் கிள்ளி விட வேண்டும். இதனால், கிளையில் துளிர்கள் தோன்றி காய் பிடிக்கும். மாவுப்பூச்சிகள் தாக்கினால், அருகில் உள்ள வேளாண் அறிவியில் மையத்தை அணுகி ஒட்டுண்ணிகளை இலவசமாகப் பெற்றுக் கட்டுப்படுத்தலாம்.''

தொடர்புக்கு: இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் மையம், காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம்-603203.

''சீவல் செய்வதற்கு ஏற்ற பாக்கு ரகம் எது? பாரம்பரிய பாக்கு ரகங்கள் இருக்கின்றனவா?''

ஜி. சேகர், புளியஞ்சேரி.

பாக்கு மர சாகுபடியில் அனுபவம் வாய்ந்த சேலம் மாவட்டம், அபிநவம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் பதில் சொல்கிறார்.

''அந்தக் காலத்தில் பாரம்பரிய ரகமான 'ஊர்வசி’ ரகத்தில்தான் 'சீவல் பாக்கு’ தயாரிப்பார்கள். தற்போது, 'மங்களா’, 'சுப மங்களா’ ஆகிய வீரிய ரகங்களில் இருந்துதான் சீவல் தயாரிக்கிறார்கள். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதிகளில் இந்த ரகங்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.

நீங்கள் கேட்டவை

ஊர்வசி ரகம் சேலம் மாவட்டத்தில் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. வீரிய ரகங்கள், ஊர்வசி ரகத்தை விட தோற்றத்தில் பெரியதாக இருந்தாலும்... அந்த மரங்களின் ஆயுள் குறைவுதான். பாரம்பரிய ரகங்கள் சுமார் 60 ஆண்டுகள் வரை பலன் கொடுக்கக் கூடியவை. வீரிய ரகங்கள் 30 ஆண்டுகள்தான் தாக்குப் பிடிக்கும். பாரம்பரிய ரகங்களில் இருந்து 'காவி’ வண்ண இயற்கைச் சாயம் தயாரிக்கிறார்கள். பாரம்பரிய ரகங்கள் மூலம் ஒரு ஏக்கர் நிலத்தில் ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வருமானம் எடுக்க முடியும்.''  

நீங்கள் கேட்டவை

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே 'புறா பாண்டி' சும்மா 'பறபற'த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை

'நீங்கள் கேட்டவை'

பசுமை விகடன், 757,அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்கு தபால் மூலமும் pasumai@vikatan.com என்ற முகவரிக்கு

இ-மெயில் மூலமும்  PVQA (space)- உங்கள் கேள்வி (space) உங்கள் பெயர் டைப் செய்து 562636 என்ற எண்ணுக்கு செல்போன் மூலமும் அனுப்பலாம்.