மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு: விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்த கர்நாடகம்!

மரத்தடி மாநாடு: விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்த கர்நாடகம்!
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு: விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்த கர்நாடகம்!

ஓவியம்: வேல்

காலை வேளையில், இதமாகக் காற்று வீசிக்கொண்டிருந்ததால், ‘பெஞ்ச்’சை எடுத்து மரத்தடியில் போட்டு அமர்ந்து நாளிதழ்களைப் படித்துக் கொண்டிருந்தார், ‘வாத்தியார்’ வெள்ளைச் சாமி. ‘ஏரோட்டி’ ஏகாம்பரம், வயல் வேலைகளை முடித்துவிட்டு வருவதற்கும், ‘காய்கறி’ கண்ணம்மா, வந்து சேர்வதற்கும் சரியாக இருந்தது.

“பேப்பர்ல என்னங்கய்யா விஷேச செய்தி” என்று கேட்டு அன்றைய மாநாட்டை ஆரம்பித்து வைத்தார், காய்கறி.

மரத்தடி மாநாடு: விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்த கர்நாடகம்!

“கர்நாடகா மாநில முதல்வர் குமாரசாமி, விவசாயக்கடனைத் தள்ளுபடி செஞ்சுருக்குறது தான் இப்போதைக்கு முக்கியமான சேதி. குமாரசாமி, முதல்வரா பதவியேத்த பிறகு முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்துச்சு. அதுல விவசாயக்கடன்களைத் தள்ளுபடி செஞ்சு அறிவிச்சுருக்கார், குமாரசாமி. அனைத்து வகையான விவசாயக் கடன்கள்லயும் ரெண்டு லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி செய்யப்படும்னு சொல்லிருக்கார். ரெண்டு லட்சம் ரூபாய்க்குக் குறைவா கடன் உள்ளவங்களுக்கு முழுசும் தள்ளுபடியாகிடும். அதுக்கு அதிகமா கடன் உள்ளவங்களுக்கு ரெண்டு லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி சலுகை கிடைக்கும். விவசாயக்கடன் வாங்கிட்டு, போன வருஷம் வரைக்கும் நிலுவையில்லாம கடனைத் திருப்பிக் கட்டுனவங்களுக்கு இருபத்தஞ்சாயிரம் ரூபாய் பரிசும் அறிவிச்சுருக்கார்” என்றார்.

“பரவாயில்லையே நல்ல விஷயமா இருக்கே” என்று சந்தோஷப்பட்ட காய்கறி, கூடையிலிருந்து ஆளுக்கு இரண்டு கொடை ஆரஞ்சுப்பழங்களை எடுத்துக் கொடுத்தார். “திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடி மலைப்பகுதி, தாண்டிக்குடி கீழ்மலைப்பகுதிகள்ல அதிகமா ஆரஞ்சு சாகுபடி நடக்குது. மழை கிடைக்காததால சரியான விளைச்சல் இல்லை. இப்போ கொஞ்சம் கொஞ்சமா மழை கிடைச்சுருக்குறதால ‘ஆஃப் சீசன்’ தொடங்கியிருக்கு. இன்னும் ரெண்டு மாசத்துக்கு இந்தச் சீசன்ல பழம் கிடைக்கும். இப்போ கிலோ எழுபது ரூபாய்னு விற்பனையாகுது” என்றார் காய்கறி. ஆரஞ்சுச் சுளைகளைச் சுவைத்துக் கொண்டே ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார், ஏரோட்டி.

“பொள்ளாச்சிக்குப் பக்கத்துல வடக்கி பாளையம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் செயல்படுது. இங்க வாராவாரம் புதன்கிழமை கொப்பரை ஏலம் நடக்கும். போன புதன்கிழமை (4.7.18) நடந்த ஏலத்துல, வடக்கிபாளையம், டி.நல்லிக்கவுண்டன் பாளையம், புரவிபாளையம், சூலக்கல்னு பக்கத்து கிராமங்கள்ல இருந்து 89 மூட்டைக் கொப்பரையை 37 விவசாயிகள் கொண்டு வந்துருந்தாங்க. அதுல 62 மூட்டை முதல் தரக் கொப்பரை. ஒரு கிலோ முதல் தரக் கொப்பரைக்கு 111 ரூபாய் 50 காசு வரை விலை கிடைச்சுருக்கு. ரெண்டாம் தரக் கொப்பரைக்கு 87 ரூபாய் 10 காசு வரை விலை கிடைச்சுருக்கு. அதேபோல ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துல நடந்த கொப்பரை ஏலத்துல 210 மூட்டை முதல் தரக் கொப்பரை ஏலம் போயிருக்கு. இங்க, ஒரு கிலோ முதல் தரக் கொப்பரைக்கு 114 ரூபாய் 15 காசு வரை விலை கிடைச்சுருக்கு. ரெண்டாம் தரக் கொப்பரைக்கு 107 ரூபாய் 75 காசு வரை விலை கிடைச்சுருக்கு. ஆனைமலையில நடந்த ஏலத்துக்கு 41 விவசாயிகள் 402 கொப்பரை மூட்டைகளைக் கொண்டு வந்திருக்காங்க. கொப்பரை வரத்து அதிகமாயிருந்த சமயத்துலயும் நல்ல விலை கிடைச்சதால விவசாயிகளுக்குச் சந்தோஷம்” என்றார், ஏரோட்டி.

அந்த நேரத்தில், தென்மேற்குப் பருவமழையின் உபயத்தால், சடசடவெனத் தூறல் விழ ஆரம்பிக்க, அன்றைய மாநாடு அதோடு முடிவுக்கு வந்தது. 

நெல் குவிண்டாலுக்கு 1,770 ரூபாய் உயர்வு!

கடந்த ஜூலை 4-ம் தேதி மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவசாய விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஒரு குவிண்டால் நெல்லுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை 1750-1,770 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோன்று ஒரு குவிண்டால் சோளத்துக்கு1,700 ரூபாயாகவும், கேழ்வரகுக்கு 2,897 ரூபாயாகவும், கம்புக்கு 1,950 ரூபாயாகவும், நிலக்கடலைக்கு 4,890 ரூபாயாகவும், உளுந்துக்கு 5,600 ரூபாயாகவும், துவரைக்கு 5,675 ரூபாயாகவும், பாசிபயறுக்கு 6,975 ரூபாயாகவும், பருத்திக்கு 5,150 ரூபாயாகவும், சூரியகாந்தி விதைக்கு 5,388 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 

மரத்தடி மாநாடு: விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்த கர்நாடகம்!

பூச்சியியல் அருங்காட்சியகம்!

கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைக்கழகப் பூச்சியியல் துறை சார்பில்... பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு பூச்சியியல் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, ஒரு லட்சத்துக்கும் அதிகமான பூச்சி இனங்கள், ஒட்டுண்ணிகள் ஆகியவை குறித்த அரிய தகவல்கள், இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரையிலும் இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிடலாம். இதற்கான கட்டணம், 50 ரூபாய். அடையாள அட்டையுடன் வரும் மாணவர்களுக்குக் கட்டணம் 30 ரூபாய் மட்டும்தான். இந்த அருங்காட்சியகத்துக்கு ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகள் விடுமுறை தினங்கள். இந்த அருங்காட்சியகத்தைக் காண விரும்புபவர்கள், ஆன்லைனிலும் கட்டணம் செலுத்தலாம். பூச்சியியல் அருங்காட்சியகத்தைப் பார்வையிட விரும்புவர்கள், http://tnau.ac.in/insect_museum/index.html என்ற, இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.