மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு

இறந்து போன இலவச மாடுகள் !

##~##
ஓய்வூதியர் சங்கக் கூட்டத்துக்குச் சென்று திரும்பிய 'வாத்தியார்’ வெள்ளைச்சாமி, பேருந்தை விட்டு இறங்கி தோட்டத்தை நெருங்கினார். வயலில் வேலை செய்து கொண்டிருந்த 'ஏரோட்டி’ ஏகாம்பரம், தூரத்திலேயே வாத்தியாரைப் பார்த்துவிட, மேலேறி வந்து கை, கால்களைக் கழுவிக் கொண்டு தயாரானார். சரியாக 'காய்கறி' கண்ணம்மாவும் வந்து சேர... அமர்க்களமாக ஆரம்பமானது மாநாடு!

''என்னங்கய்யா... முல்லை-பெரியாறு பிரச்னைக்குத் தீர்வே கிடையாதா? சென்ட்ரல் கவர்மெண்ட்டும் கண்டுக்க மாட்டேங்குது... கோர்ட்டும் கண்டிக்க மாட்டேங்குது. அப்பறம் எதுக்குய்யா ஜனாதிபதி, கவர்னர், நீதிபதி பதவியெல்லாம்?'' என்று ரொம்பவே ஆவேசமாகக் கேட்டார் காய்கறி.

''அட... என்ன கண்ணம்மா வெவரம் தெரியாம இருக்குற! ஜனாதிபதியும், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியும் நினைச்சாங்கனா... ஒரு கையெழுத்துல மத்திய அரசைக் கவுத்தி நாட்டை ராணுவ கன்ட்ரோலுக்குக் கொண்டு வந்துட முடியும். அதுக்கெல்லாம் நம்ம அரசியல் சாசனத்துல வழி வகுத்துருக்காங்க. ஆனா, ஜனாதிபதி, கவர்னர்... இதுக்கெல்லாம் ஆளும் கட்சிக்காரங்கதானே வந்து உக்காருறாங்க. பிறகெப்படி... நீதியை நிலைநாட்டுவாங்க. அடிப்படையே தப்பு கண்ணம்மா. என்ன நடக்குதுனு பொறுத்திருந்து பாப்போம்'' என்று ஆதங்கப்பட்ட வாத்தியார்,

''காலையில ஒரு பேப்பர்ல ஒரு நியூஸ் படிச்சேன். எவ்வளவு வயித்தெரிச்சலா இருந்துச்சு தெரியுமா. இந்தியாவுல இருக்குற மொத்த தானியக் கிட்டங்கிகள்லயும் சேர்த்து, கடந்த ஆண்டு ஏப்ரல் மாசத்துல இருந்து, இந்த ஆண்டு செப்டம்பர் மாசம் வரைக்கும் ஒரு லட்சம் டன் தானியம் வீணாகியிருக்காம். இதைச் சொல்றது யார் தெரியுமா? மத்திய உணவுத்துறை அமைச்சர் கே.வி. தாமஸ் . இனிமே வீணாகாம இருக்க நடவடிக்கை எடுக்கப் போறாங்களாம். என்ன கொடுமை... ஒருவேளை சாப்பாட்டுக்குக்கூட வழியில்லாம எத்தனை பேர் செத்துக்கிட்டிருக்காங்க. இப்போதான் அவங்களுக்கு ஞானோதயம் வந்துருக்கு'' என்று கொந்தளித்தார்.

மரத்தடி மாநாடு

''அங்க வேலை செய்ற அதிகாரிங்களுக்கெல்லாம் மனசாட்சியே இருக்காதா?'' என்று சாபமிடும் குரலில் கேட்டார் காய்கறி.

''அதெல்லாம் உன்னையும் என்னையும் மாதிரி, அடுத்தவேளை கஞ்சிக்காக உழைச்சு சாப்பிடுறவனுக்குதான் இருக்கும்'' என்று சூடாகவே சொன்ன ஏரோட்டி,

''இதோ பாரேன்... 'கிராமப் பொருளாதாரத்தை உயர்த்துவோம்'னு சொல்லி, இலவசமா கறவை மாடு கொடுக்குற திட்டத்தைக் கொண்டு வந்திருக்காங்க முதல்வரம்மா. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலையில இருக்குற கும்பரையூர் கிராமத்துல கொடுத்த அம்பது மாடுல, ஒன்பது மாடுக வரிசையா செத்துப் போச்சு. பத்து, பதினஞ்சு கன்னுக்குட்டிகளும் செத்துப் போச்சு. 'மாடு வாங்கிக் கொடுத்ததுல மோசடி. ஏழெட்டு பல்லு போட்ட கிழட்டு மாடுகளையும் சீக்குப் பிடிச்ச மாடுகளையும் வாங்கிக் கொடுத்துட்டாங்க.

ஒரு மாடுகூட, ஒரு லிட்டருக்கு மேல பால் கறக்கல'னு அதிகாரிக மேல குத்தம் சொல்றாங்க மக்கள். 'பயனாளிகளையும் கூட்டிட்டுப் போய்த்தானே வாங்கிக் கொடுத்தோம். அவங்களுக்கான மாட்டை அவங்கதான் தேர்ந்தெடுத்தாங்க’னு மனசாட்சியே இல்லாம பதில் சொல்லிக்கிட்டிருக்காங்க அதிகாரிங்க'' என்று வேதனை பொங்கச் சொன்னார்.

''ஆமாய்யா.. கொடைக்கானல் மலையைப் பத்தியே இன்னொரு சேதியும் சொன்னாங்க. தாண்டிக்குடி மலையில கொஞ்ச வருஷத்துக்கு முன்ன காட்டை ஒட்டி இருக்குற தோட்டங்களுக்குள்ள காட்டு மாடு, பன்றியெல்லாம் வராம இருக்குறதுக்காக அரசாங்கமே சோலார் வேலி போட்டுக் கொடுத்தாங்க. இப்போ அதெல்லாம் செயல்படுறதே இல்லையாம். ரொம்பத் தரக்குறைவான சாமான்களைப் போட்டதால வேலியெல்லாம் பிஞ்சு போய்க் கிடக்காம். அதை வனத்துறை சரியா பராமரிக்கறதும் இல்லையாம். இப்போ கூட... திண்டுக்கல், தருமபுரி, ஈரோடு, திருநெல்வேலி மாவட்டங்கள்ல யானைகளுக்கான அகழி அமைக்க 5 கோடியே 19 லட்ச ரூபாய் பணத்தை வனத்துறைக்கு ஒதுக்கியிருக்காங்க முதல்வரம்மா. அதுல என்ன முறைகேடு நடக்கப் போகுதோ?'' என்று தன் சந்தேகத்தை முன்கூட்டியே எடுத்து வைத்தார் வாத்தியார்.

''என்கிட்ட இன்னொரு சேதி இருக்கு. அதை சொல்லிட்டு நான் கிளம்பணும்'' என்ற ஏரோட்டி,

''அரூர், கோபாலபுரத்துல இருக்குற சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நவம்பர் 25-ம் தேதி அரவையை ஆரம்பிச்சுருக்காங்க. இந்த ஆலையை நம்பி, 12 ஆயிரத்து 400 ஏக்கர்ல கரும்பு சாகுபடி பண்ணியிருக்காங்க. இப்போ அறுவடையும் நடந்துக்கிட்டிருக்கு. ஆனா, ஆலையில ஒரு டர்பன் மட்டுமே இருக்கறதால அரவைப் பணி ரொம்ப பாதிக்கப்பட்டிருக்காம். ரெண்டு டர்பன் இருந்தப்போ ஒரு நாளைக்கு 3 ஆயிரத்து 500 டன் கரும்பு வரை அரைச்சிருக்காங்க. இப்போ ஒரு நாளைக்கு 1,800 டன் வரைக்கும்தான் அரைக்க முடியுதாம். அதனால கரும்பை வெட்டறதுக்கு தாமதமாகுதாம். நொந்து போய்க் கிடக்குறாங்களாம், தருமபுரி மாவட்ட விவசாயிகள்'' என்றவர், எழுந்து செல்ல... மாநாடும் முடிவுக்கு வந்தது.