
ஓவியம்: வேல்
மகன் வெளிநாட்டிலிருந்து அனுப்பிய ‘டேப்லெட்’ என்கிற ‘கைக்கணினி’யை ‘ஏரோட்டி’ ஏகாம்பரத்திடம் காட்டி விளக்கிக் கொண்டிருந்தார், ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. அன்று சீக்கிரமே வியாபாரத்தை முடித்து, தோட்டத்துக்கு வந்துவிட்ட ‘காய்கறி’ கண்ணம்மா, “என்னாங்கய்யா... செல்போன் இம்மாம் பெரிசா இருக்கு” என்று கேட்டார்.

இது செல்போன் இல்ல கண்ணம்மா... இதுக்குப்பேரு டேப்லெட். சுருக்கமா ‘டேப்’னு சொல்வாங்க. இதுல சிம்கார்டு போட்டுப் பேசிக்கலாம். செல்போன்ல இருக்குறதைவிட இதுல திரை பெரிசா இருக்கிறதால, என்னை மாதிரி வயசானவங்களுக்கு எழுத்தெல்லாம் பெருசாத் தெரியும். இதுலயே எல்லா நியூஸ் பேப்பரையும் படிச்சுக்கலாம்.
இனிமே பேப்பரை எடுத்துக்கிட்டு வர வேண்டியதில்லை” என்று விளக்கம் கொடுத்தார்.
“அப்ப அதுல படிச்சு நாட்டு நடப்பையெல்லாம் எடுத்து விடுங்கய்யா” என்றார், காய்கறி. அதற்காகவே காத்திருந்தது போல ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டை ஆரம்பித்து வைத்தார், வாத்தியார்.
“விவசாயிகள், தங்களோட விளை பொருள்களை விற்பனை செய்றதுக்காகத் தமிழ்நாட்டுல ‘மெகா உணவுப்பூங்கா’க்களை, அமைக்கப்போகுது, மத்திய அரசு. இந்த மையங்கள்ல காய்கறிகள், பழங்கள், இறைச்சி, மீன் மாதிரியான, சீக்கிரமாகக் கெட்டுப் போகக்கூடிய பொருள்களைப் பதப்படுத்துறதுக்கும், மதிப்புக்கூட்டி விற்பனை செய்றதுக்கும் ஏற்பாடுகள் செய்யப்போறாங்க.
அந்தப் பொருள்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்றதுக்கும் வசதிகள் செஞ்சு தரப்போறாங்களாம். வேளாண்மைத் துறையோட ஒரு பிரிவான வேளாண் விற்பனை மற்றும் வணிகப் பிரிவு மூலமா இதைச் செயல்படுத்த போறாங்களாம். முதல்கட்டமா... திண்டுக்கல், தேனி, விருதுநகர், திருநெல்வேலி, விழுப்புரம், கடலுார், சேலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஈரோடுனு பத்து நகரங்கள்ல மெகா உணவுப்பூங்காவை அமைக்கப் போறாங்க. ஒவ்வொரு உணவுப்பூங்காவும் 10 ஏக்கர் பரப்பளவுல செயல்படுமாம்” என்றார், வாத்தியார்.
அடுத்த செய்தியைச் சொல்ல ஆரம்பித்த ஏரோட்டி, “டெல்டா பகுதிகள்ல குறுவைச் சாகுபடி செய்ற விவசாயிகளுக்கு 115 கோடி ரூபாய் மதிப்புல, பல்வேறு உதவிகளை வேளாண்மைத்துறை மூலமா தமிழக அரசு வழங்கியிருக்கு. அதோட, இயற்கைச் சீற்றம் உள்ளிட்டப் பல காரணங்களால, பிரச்னை வந்தா சமாளிச்சுக்குறதுக்காகப் பயிர் காப்பீடு தீட்டம் பத்தியும் பிரசாரம் செஞ்சுட்டுருக்கு, வேளாண்மைத்துறை. நெல் விவசாயிகள், ஒரு ஏக்கருக்கு 550 ரூபாய் பிரீமியம் கட்டிப் பயிர் காப்பீடு செஞ்சுக்கலாமாம். குறுவைப் பருவத்துல கிட்டத்தட்ட 1.50 லட்சம் ஏக்கர் பரப்புல நெல் சாகுபடி நடக்குமாம். மொத்த நெல் வயல்களையும் காப்பீட்டுத் திட்டத்துக்குள்ள கொண்டு வந்துடணும்னு வேளாண்மைத்துறை செயல்பட்டுட்டுருக்கு. ஆனா, பெரும்பாலான விவசாயிகள் காப்பீட்டுத்திட்டத்துல ஆர்வம் காட்டலையாம். கிட்டத்தட்ட 40 ஆயிரம் ஏக்கர் பரப்புக்குத்தான் இதுவரைக்கும் காப்பீடு செஞ்சுருக்காங்களாம். என்ன செய்றதுனு தெரியாம கையைப் பிசைஞ்சுட்டு இருக்காங்களாம், வேளாண்மைத்துறை அதிகாரிகள்” என்றார்.

தான் கொண்டு வந்திருந்த நாட்டு நாவல் பழங்களை எடுத்து ஆளுக்குக் கொஞ்சம் கொடுத்தார், காய்கறி. அதைச் சாப்பிட்டுக்கொண்டே ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார், வாத்தியார்.
“திண்டுக்கல் மாவட்டத்துல தாண்டிக்குடி, பண்ணைக்காடு, ஆடலுார், பன்றிமலை, சிறுமலை, பட்டிவீரன்பட்டி மாதிரியான மலைக்கிராமங்கள்ல பரவலா மிளகுச் சாகுபடி நடக்குது. இது மிளகு அறுவடை சீசன். போன வருஷம் இதே சீசன்ல ஒரு கிலோ மிளகு 700 ரூபாய் வரை விற்பனையாச்சு. ஆனா, இந்த வருஷம் 300 ரூபாய் அளவுலதான் விற்பனையாகுது. இந்த வருஷம் மிளகுல நல்ல விளைச்சலும் கிடைச்சுருக்கு. பூஞ்சண நோயில்லாம தரமா விளைஞ்சுருக்கு. அப்படியிருந்தும் விலை கிடைக்கலை. அந்தமான்ல இருந்தும், இலங்கையில இருந்தும் மிளகு அதிகளவுல வரத்தாகுதாம். அதனாலதான் உள்ளூர்ல விளையுற மிளகுக்கு விலை கிடைக்கலையாம். இலங்கை, அந்தமான்ல இருந்து வர்ற மிளகுல காரம் குறைவாத்தான் இருக்குமாம். அளவும் பெரிசா இருக்குமாம். ஆனாலும், வியாபாரிகள் அந்த மிளகைத்தான் அதிகமாகக் கொள்முதல் செய்றாங்களாம். அதனால, நிறைய விவசாயிகள் மிளகை விற்பனை செய்யாம இருப்பு வெச்சுட்டாங்களாம்” என்றார், வாத்தியார்.
“ஆமாய்யா... நானும் கேள்விப்பட்டேன். அதே மாதிரி பட்டுக்கூடுகளுக்கும் விலை இறங்கிப்போச்சய்யா” என்ற ஏரோட்டி தொடர்ந்தார்...
“தமிழ்நாட்டுல திருப்பூர், கோயம்புத்தூர், தஞ்சாவூர், திண்டுக்கல்னு கிட்டத்தட்ட 20 மாவட்டங்கள்ல வெண்பட்டுக்கூடு உற்பத்தியில விவசாயிகள் ஈடுபட்டிருக்காங்க. தமிழ்நாட்டுல ஒரு நாளைக்குச் சராசரியா 1,500 கிலோ வெண்பட்டுக்கூடுகள் உற்பத்தியாகுது. கர்நாடக மாநிலம் ராம்நகர்ல் இருக்குற மத்திய அரசோட கொள்முதல் மையத்துலதான், அதிக விவசாயிகள் வெண்பட்டுக்கூடுகளை விற்பனை செய்றாங்க. தமிழ்நாட்டுல தர்மபுரியிலயும், கோயம்புத்தூர்லயும் மாநில அரசு சார்பா கொள்முதல் மையங்கள் இயங்குது. இந்த மையங்கள்ல ஏல முறையிலதான் வெண்பட்டுக்கூடு விற்பனை நடக்குது. இந்த வருஷம் ஆரம்பத்துல இருந்தே வெண்பட்டுக்கூடுகளோட விலை அதிகரிச்சுட்டே இருந்துச்சு. அதிகபட்சமா ஒரு கிலோ 650 ரூபாய் வரை விற்பனையாச்சு. ஜூன் மாசம் வரைக்கும்கூட ஒரு கிலோ 500 ரூபாய்க்கு மேல விற்பனையாச்சு. இப்போ தென்மேற்குப் பருவமழை ஆரம்பிச்சதும் வெண்பட்டுக்கூடுகளோட விலை சரிய ஆரம்பிச்சுடுச்சாம். இப்போ கிலோ 300 ரூபாய் அளவுக்குக்கூட விற்பனையாகுறதில்லையாம். உற்பத்தி குறைஞ்சுருக்குற சமயத்துலயும் விலை அதிகரிக்காததால விவசாயிகள் கவலையில இருக்காங்க” என்றார், ஏரோட்டி.
அந்த நேரத்தில் காற்றும் மழையும் சுழன்று அடிக்க ஆரம்பிக்க... அத்தோடு மாநாடு முடிவுக்கு வந்தது.