மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: சத்து நிறைந்த சர்க்கரைவள்ளியும் மதிப்பு மிகுந்த மரவள்ளியும்!

மண்புழு மன்னாரு: சத்து நிறைந்த சர்க்கரைவள்ளியும் மதிப்பு மிகுந்த மரவள்ளியும்!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு: சத்து நிறைந்த சர்க்கரைவள்ளியும் மதிப்பு மிகுந்த மரவள்ளியும்!

மாத்தியோசிஓவியம்: வேல்

ருதடவை உத்தரக் கர்நாடகம்னு சொல்ற, வடக்கு கர்நாடகப் பகுதியான ஹூப்ளிக்குப் போயிருந்தேன். அந்த நேரம் பார்த்து, ‘ஜோய்டா’ (Joida)ங்கிற ஊர்ல ‘கிழங்குத் திருவிழா’ நடக்குதுனு சேதி வந்துச்சு. சரி, ஒரு எட்டுப் பார்த்துட்டு வந்துடுவோம்னு கிளம்பினேன். அந்தப் பகுதி பத்திரிகை நண்பர்கிட்ட வழிக்கேட்டு, ஜோய்டாவுக்குப் போய்ச் சேர்ந்தேன். மலைகள் சூழ்ந்த, இந்தப் பகுதிக்குப் போக்குவரத்து வசதி அவ்வளவா கிடையாது.

எப்போதாவதுதான் பஸ் வந்து போகுது. மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்ல உள்ள, இந்த ஊருக்கு ஒரு பெருமை உண்டு. வேறு எந்தப் பகுதியிலேயும், இந்த அளவுக்குக் கிழங்கு வகைப்பயிர்கள் விளையறதில்லை. பாரம்பர்யமா இந்த மக்கள் கிழங்கு வகைப்பயிர்களைச் சாகுபடி செஞ்சு, அதை விற்று வர்ற வருமானத்துல, வாழ்க்கையை நல்லாவே நடத்துறாங்க.

சில வருஷங்களுக்கு முன்பு, கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள மத்தியக் கிழங்குப் பயிர்கள் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள், இந்தக் கிராமத்தைப் பத்தி கேள்விப்பட்டு வந்திருக்காங்க. கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, வெற்றிவள்ளிக்கிழங்குனு விதவிதமா விளைவிக்கிறதைப் பார்த்த விஞ்ஞானிகளுக்கு ஆச்சர்யம். அதன் பிறகு, இந்த ஊர் மீது, கிழங்குப் பயிர்கள் ஆராய்ச்சி நிலையமும் சில தன்னார்வம் கொண்ட அமைப்புகளும், சிறப்புக் கவனம் செலுத்த ஆரம்பிச்சாங்க. அதன் மூலமா, வெளி உலகத்துக்கு, இந்த ஊர் தெரியவந்துச்சு. பொதுவா மலைவாழ் மக்களுக்குத் தானியங்களைக் காட்டிலும், கிழங்கைத்தான் உணவா சாப்பிடுவாங்க. மலைச்சூழலுக்குக் கிழங்குப்பயிர்களும் திடமா வளரும்.

மண்புழு மன்னாரு: சத்து நிறைந்த சர்க்கரைவள்ளியும் மதிப்பு மிகுந்த மரவள்ளியும்!

என்னை மாதிரியே கிழங்குத் திருவிழாவைப் பார்க்க பல பகுதியில இருந்தும், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், இயற்கை ஆர்வலர்கள் வந்திருந்தாங்க. அந்த ஊர்ல இருக்கிற பள்ளிக்கூடத்துல இரவு தங்கினோம். இரவு உணவா, விதவிதமான கிழங்கு வகைகளைச் சமைச்சு கொடுத்து, திக்குமுக்காட வெச்சாங்க. எந்தவிதமான ரசாயனமும் போடாம, இயற்கையா விளைஞ்ச, கிழங்குகளோட ருசியும் மணமும் இன்னும் மறக்க முடியல. மறுநாள் பொழுது விடிஞ்சதும், சூடா கறுப்பு காபிக்குடிச்சிட்டு, இயற்கை அழகைக் காலார நடந்து ரசிக்கலாம்னு புறப்பட்டோம். ‘‘ஐயா, ஊரைத்தாண்டி தனி ஆளாகப் போகாதீர்கள். கரடி, காட்டெருமை நடமாட்டம் அதிகம்’’னு உள்ளூர் ஆள்கள் அக்கறையா சொன்னாங்க. வம்பு எதுக்குன்னு, நிகழ்ச்சி நடக்குற இடத்துக்கு நேரத்திலேயே போய் உட்கார்ந்துட்டேன்.

காலையில ஏழு மணிக்கெல்லாம், சுத்துப்பட்டுல இருக்கிற விவசாயிங்க, திருவிழாவுல காட்சிப்படுத்த தங்களோட கிழங்குகளைத் தூக்கிக்கிட்டு வர ஆரம்பிச்சாங்க. கொஞ்ச நேரத்திலேயே, மத்திய கிழங்குப் பயிர்கள் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகளும் வந்து சேர்ந்தாங்க. ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிங்க மேல ஊர்மக்கள் நல்ல மரியாதை வெச்சிருக்கிறதைப் பார்க்க முடிஞ்சது. விஞ்ஞானி ஒருத்தர்கிட்ட, காலை உணவு நேரத்துல பேச்சுக் கொடுத்தேன், ‘‘கிழங்கு வகைப்பயிர்களோட மகத்துவத்தை மலைப்பகுதி மக்கள் நன்றாக அறிந்து வைத்துள்ளார்கள். இதனால்தான், பாரம்பர்யமாகக் கிழங்குப்பயிர்களைத் தொடர்ந்து பயிர் செய்து வருகிறார்கள்.

எங்களின் ஆராய்ச்சிபடி, தானியப்பயிர்களைப் போலக் கருணை, சேம்பு, மரவள்ளி, சர்க்கரைவள்ளி... போன்ற கிழங்கு வகைகளில் பல வகையான உணவுப் பொருள்களை மதிப்புக்கூட்டி தயாரிக்க முடியும். கிழங்குப்பயிர்களின் தனித்துவம், இதை ஊடுபயிராகவும், வரப்பு பயிராகவும்கூடச் சாகுபடி செய்யலாம். மண்ணுக்குக் கீழே இருப்பதால், பூச்சி, நோய் தாக்குதல் மிகக் குறைவாகத்தான் ஏற்படும். 10 மாத வயதுடைய கருணைக்கிழங்கு மூலம், ஏக்கருக்கு 1 லட்சம் ரூபாய் வருமானம் எடுக்க முடியும். ஊடுபயிராகச் சாகுபடி செய்தால்கூட, ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். நல்ல வருமானமும், சத்தான உணவையும் கொடுக்கும், கிழங்கு வகைப்பயிர்களை நம் விவசாயிகள் ஏறத்தாழ மறந்துவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். விவசாயிகளே மறந்துபோனால், அரசு மட்டும் என்ன செய்யும்? கேரளாவைத் தவிர, இந்தியாவில் கிழங்கு வகைச் சாகுபடியை ஊக்கப்படுத்தும் திட்டம் வேறு மாநிலங்களில் இல்லை. மலையாளிகளின் காலை உணவு கட்டன் சாயாவும், மரச்சீனிக்கிழங்கும் என்பதால், கிழங்கு சாகுபடியை ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.

மண்புழு மன்னாரு: சத்து நிறைந்த சர்க்கரைவள்ளியும் மதிப்பு மிகுந்த மரவள்ளியும்!

பசியைப் போக்க அரிசி, கோதுமை உணவுதான் பயன்படுத்த வேண்டும் என்று அவசியமில்லை. உதாரணத்துக்குச் சர்க்கரைவள்ளிக் கிழங்கில் ஏராளமான சத்துகள் உள்ளன. வைட்டமின் ஏ சத்துப்பற்றாக் குறைக்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு கண்கண்ட மருந்து. இதனால்தான், உலகச் சுகாதார நிறுவனம் (World Health Organization) ‘உணவு உத்தரவாதத்துக்குச் சர்க்கரை வள்ளிக்கிழங்கு கைகொடுக்கிறது. 120 நாள்களில், வைட்டமின் ஏ, இரும்பு, ஜிங்க்... போன்ற சத்துகள் நிறைந்த உணவை இது கொடுக்கிறது. எனவே, சர்க்கரைவள்ளிக்கிழங்கைப் பயிரிடுவதும், உண்பதும் அவசியமானது’ என வலியுறுத்தி வருகிறது.

இதைச் சரியாகப் புரிந்துகொண்டு, புதுச்சேரி அருகில் உள்ள ஆரோவில் பகுதியில் வசிக்கும் வெளிநாட்டினர், சர்க்கரைவள்ளிக் கிழங்கைத் தொடர்ந்து சாகுபடி செய்வதை நிச்சயம் பாராட்ட வேண்டும். இவ்வளவு சிறந்த சர்க்கரைவள்ளிக்கிழங்கில் நாங்களும் ஆராய்ச்சி செய்தோம். அதன் மூலம் 85 நாள்களில் விளையும் ‘ஸ்ரீகனகா’ என்ற ரகத்தைக் கண்டுபிடித்து வைத்துள்ளோம். சர்க்கரைவள்ளிக் கிழங்கு மட்டுமல்ல, கருணை, சேம்பு... ஒவ்வொன்றிலும் புதிய ரகங்களை உருவாக்கி வைத்துள்ளோம். நீங்கள் தமிழ்நாட்டிலிருந்து இந்தக் கிழங்குத் திருவிழாவுக்கு வந்துள்ளதை வரவேற்கிறேன். 

மண்புழு மன்னாரு: சத்து நிறைந்த சர்க்கரைவள்ளியும் மதிப்பு மிகுந்த மரவள்ளியும்!

உங்களை மகிழ்ச்சி அடைய செய்யும் செய்தியும் உள்ளது. உலக அளவில் மரவள்ளிக்கிழங்குச் சாகுபடியில் தமிழ்நாடுதான் முன்னிலையில் உள்ளது. அதுவும், சேலம் மாவட்டத்தில்தான் அதிகமான மரவள்ளிக்கிழங்குச் சாகுபடி செய்யப்படுகிறது. இதனால்தான், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், மரவள்ளி ஆராய்ச்சி நிலையத்தைச் சேலம் மாவட்டத்தில் அமைத்துள்ளது. மரவள்ளிக்கிழங்கு மூலம் ஸ்டார்ச், ஜவ்வரசி, குளுக்கோஸ்... போன்றவை பெறப்படுகின்றன. இந்தத் தொழிலில் சேலம் பகுதிதான் கொடிக்கட்டிப் பறக்கிறது. தமிழ்நாட்டில் மரவள்ளிக்கிழங்கை வேகவைத்தும், வற்றல் செய்தும் உணவுக்காகப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், குஜராத், மேற்கு வங்கம்... போன்ற மாநிலங்களில், இதிலிருந்து சுவையான கிச்சடி உப்புமா செய்து அசத்துகிறார்கள். இப்படி கிழங்கு வகைகள் சம்பந்தமாக வண்டி வண்டியாகத் தகவல்கள் உள்ளன. அள்ளிக் கொள்ளத்தான் நம் விவசாயிகள் அக்கறை காட்டுவதில்லை. இதுதான் எங்களின் முகவரி, (மத்தியக் கிழங்குப் பயிர்கள் ஆராய்ச்சி நிலையம், திருவனந்தபுரம், கேரளா - 695017 தொலைபேசி: 0471 2598551/ 54. இணையதளம்: www.ctcri.org) கேரளா வந்தால் கட்டாயம் வர வேண்டும்’’னு கருத்துரை சொல்லி, அழைப்பையும் விடுத்தாரு அந்த விஞ்ஞானி.

கிழங்குத் திருவிழாவில் மஞ்சள், வெள்ளை, சிவப்பு... எனப் பலவகை நிறத்திலும் இருந்த கிழங்குகளைக் கண்டும் ருசித்தும், ஒருநாள் முழுவதும் கிழங்கு வகைகளைப் பார்த்து திரிஞ்சேன். இரவு நகரத்துக்குப் போகும் கடைசி பஸ்சில் ஏறும்போது, என் தோள் பை நிறைய கிழங்கு வகைகளும், நினைவுல கிழங்கு சம்பந்தமான தகவல்களும் நிரம்பி வழிஞ்சுது!