மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு: அதிகத் தானியம்... அதிகத் தட்டை! - ஆடிப்பட்டத்துக்கேற்ற கோ(எஸ்)-30 சோளம்

மரத்தடி மாநாடு: அதிகத் தானியம்... அதிகத் தட்டை! - ஆடிப்பட்டத்துக்கேற்ற கோ(எஸ்)-30 சோளம்
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு: அதிகத் தானியம்... அதிகத் தட்டை! - ஆடிப்பட்டத்துக்கேற்ற கோ(எஸ்)-30 சோளம்

ஓவியம்: வேல்

நிலக்கடலையை அறுவடை செய்றதுக்கு ஆள்களை வரச்சொல்லியிருந்தார் ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். அதிகாலையிலேயே தோட்டத்துக்குக் கிளம்பிய ஏரோட்டியுடனேயே வந்துவிட்ட ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி, நாளிதழ்களைப் படித்துக் கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் வந்த ‘காய்கறி’ கண்ணம்மா அவர்களுடன் இணைந்துகொண்டார்.

ஆடிமாத கூழைக் கொண்டு வந்திருந்த காய்கறி, இருவருக்கும் ஊற்றிக்கொடுத்துவிட்டுத் தானும் குடிக்க ஆரம்பித்தார். அதைப் பருகிக்கொண்டே ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டைத் துவக்கி வைத்தார், வாத்தியார்.

“நிலக்கடலையை அறுவடை செஞ்சவுடன் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்துல இருக்குற உலர்களங்கள்ல காய வெச்சுக்கலாமாம். அதுக்கு வாடகை கிடையாது. அதில்லாம ஆறு மாசம் வரை அங்க இருப்பும் வெச்சுகலாமாம். மார்க்கெட்ல விலை ஏறுற சமயத்துல நிலக்கடலையை விற்பனை செஞ்சுக்கலாம். தேவைப்பட்டா, இருப்பு வெச்சுருக்குற நிலக்கடலையோட அளவுக்குப் பொருளீட்டுக்கடனும் வாங்கிக்கலாமாம்னு ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்கள் விவசாயிகளுக்கு அழைப்புவிட்டுருக்கு. அறுவடை செஞ்சதும் வித்துப்புடாம, யோசனை பண்ணிச் செய்” என்று சொன்னார், வாத்தியார்.

மரத்தடி மாநாடு: அதிகத் தானியம்... அதிகத் தட்டை! - ஆடிப்பட்டத்துக்கேற்ற கோ(எஸ்)-30 சோளம்

உடனே காய்கறி, தான் கொண்டு வந்திருந்த நாட்டு நாவல் பழங்களை ஆளுக்குக் கொஞ்சம் கொடுத்தார். அதைச் சாப்பிட்டுக்கொண்டே அடுத்தச் செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார், வாத்தியார்.

“நீலகிரி மாவட்டத்தை ஒட்டி இருக்குற... வயநாடு கல்லிங்கரை, நென்மேனிக்குன்னு, ஆனங்குன்னு, சீரால்னு கேரள மாநிலத்தைச் சேர்ந்த பகுதிகள்ல, முன்னாடி நெல் சாகுபடி அதிகமா இருந்துச்சு. வழக்கமா இந்தப்பகுதிகள்ல, நெல் வயல்கள்ல நடவு வேலைகளைப் பழங்குடி மக்கள்தான் செய்வாங்க. ஆனா, பழங்குடி மக்கள் நாலஞ்சு வருஷமா வயல் வேலைக்கு வர்றதில்லையாம். அதனால, இந்தப்பகுதிகள்ல நெல் சாகுபடியும் குறைஞ்சு போயிருந்துச்சு. இந்த வருஷம், தென் மேற்குப்பருவ மழையால நெல் சாகுபடி செய்றதுக்குப் போதுமான அளவு இந்தப்பகுதியில தண்ணீர் கிடைச்சுருக்கு. அதனால, தஞ்சாவூர் பகுதிகள்ல இருந்து நெல் நடவுக்கு ஆள்களை அழைச்சுட்டுபோய் நடவு செஞ்சுட்டுருக்காங்க. தண்ணீர் இல்லாததால, தஞ்சாவூர் பக்கம் நெல் வயல்ல வேலை கிடைக்காத விவசாயத் தொழிலாளர்கள், இப்போ கேரளாவுக்குப் போக ஆரம்பிச்சிருக்காங்க. ஒரு குழுவாகக் கிளம்பிப் போற தொழிலாளர்கள், ஒரு ஏக்கர் நடவு செய்ய 5,500 ரூபாய்னு கட்டணம் நிர்ணயம் பண்ணிருக்காங்க. தமிழ் கிராமியப் பாடல்களைப் பாடிக்கிட்டே நம்ம மக்கள் நடவு செய்றதைக் கேரள சேட்டன்களும், சேச்சிகளும் கூட்டமா வந்து நின்னு வேடிக்கை பார்த்து ரசிக்குறாங்களாம்” என்றார்.

“விவசாய வேலைகளுக்கு வட மாநிலங்கள்ல இருந்து நம்ம தமிழ்நாட்டுக்கு ஆள்களைக் கூட்டிட்டு வர்றாங்க. நம்ம ஆளுங்க, அடுத்த மாநிலத்துக்குப் போய் வேலை பார்க்குறாங்க. முரண்பாடா இருக்கே” என்றார் காய்கறி.

“வேலைக்குப் போறதெல்லாம் அவங்கவங்க இஷ்டம். கட்டுபடியாகுற அளவுக்குக் கூலி கிடைக்கிற இடத்துல வேலை செய்றாங்க” என்ற ஏரோட்டி, அடுத்தச் செய்தியை ஆரம்பித்தார்.

“தானியம், தீவனத்தட்டை ரெண்டுக்குமே உபயோகப்படுற ‘கோ(எஸ்)-30’ங்குற சோள ரகம், இப்போ விவசாயிகள்கிட்ட பிரபலமாயிட்டுருக்கு. இதுல கிடைக்கிற சோளத்தட்டையை மாடுகள் விரும்பிச் சாப்பிடுதாம். வழக்கமான சோளத்தைவிட இதுல தானியமும், தட்டையும் அதிகமாகக் கிடைக்குதாம். இதை இறவை, மானாவாரி ரெண்டு முறையிலயும் சாகுபடி செய்யலாம். மானாவாரி நிலத்துல ஆடிப்பட்டம், புரட்டாசிப்பட்டம்னு ரெண்டு பட்டத்துலயும் இதை விதைக்கலாம். இறவைப்பாசன நிலம்னா... தைப்பட்டம், சித்திரைப்பட்டம்னு ரெண்டு பட்டத்துலயும் விதைக்கலாம். மானாவாரிச் சாகுபடியில ஒரு ஹெக்டேருக்கு 2,400 கிலோ தானியமும், 7,000 கிலோ தட்டையும் கிடைக்குமாம். இறவைச் சாகுபடியில ஒரு ஹெக்டேருக்கு 3,360 கிலோ தானியமும், 9,200 கிலோ தட்டையும் கிடைக்குமாம்.

ஆடிப்பட்டத்துல, இந்த ரகச் சோளத்தை விதைக்க விரும்புற மானாவாரி விவசாயிகளுக்கு மானியமும் உண்டு. வேளாண்துறை மூலமா, கோ(எஸ்) - 30 ரகச் சோள விதையை ஒரு கிலோ 30 ரூபாய்னு மானிய விலையில கொடுக்குறாங்க. ஒரு ஹெக்டேருக்கு 10 கிலோ விதை கொடுக்கிறாங்க. நுண்ணூட்ட உரம் தேவைப்படுற விவசாயிகளுக்குப் பன்னிரண்டரை கிலோ நுண்ணூட்டத்துக்கு 344 ரூபாய் மானியம் கிடைக்கும். திரவ உயிர் உரங்களுக்கு 150 ரூபாய் மானியம் கிடைக்கும். வேளாண்மைத்துறை மூலமா, இதுக்குக் கொள்முதல் விலையா, ஒரு கிலோவுக்கு 51 ரூபாய் 40 காசுனு விலை நிர்ணயம் பண்ணிருக்காங்க. ஒரு கிலோவுக்கு ஊக்கத்தொகையா 30 ரூபாயும் கிடைக்கும்” என்றார், ஏரோட்டி.

அந்தச் சமயத்தில், வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஆள்கள், தேநீர் வாங்கி வருவதற்காக ஏரோட்டியை அழைக்க... அத்தோடு அன்றைய மாநாடு முடிவுக்கு வந்தது.